அஸாமின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்று மாஜிலி என்னும் நதித்தீவு. பிரம்மபுத்திரா இரு பகுதிகளாகப்பிரிந்து மீண்டும் சென்று இணையும்போது நடுவே சிக்கிக்கொண்ட நிலம். உண்மையில் பிரம்மபுத்திராவின் வண்டலால் உருவான மேடு இது. அடிக்கடி பெருவெள்ளம் எழுந்து இந்தத்தீவை மூழ்கடிக்கிறது. வெள்ளத்தால் பயிர்களும் கால்நடைகளும் இறப்பது என்றும் உள்ள அபாயம்.
ஆனாலும் அங்குள்ள வளம் மிக்க மண் அங்கே மனிதர்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது. மிக மக்கள்ச்செறிவுள்ள பல கிராமங்கள் இங்குள்ளன. வீடுகள் பெரும்பாலும் உயரமான மூங்கில் கழிகளின் மேல் அமைக்கபபட்டவை. கால்கொண்ட வீடுகள். அவற்றின் சுவர்கள்கூட இங்குள்ள யானைப்புல் எனபடும் மூங்கில்புல்லால் ஆன தட்டிகளைக்கொண்டோ மூங்கிலைக்கொண்டோ அமைக்கப்படுபவை. அவர்களின் வாழ்க்கையே வரப்போகும் வெள்ளப்பெருக்கை கருத்தில்கொண்டு அமைந்ததுதான்.
மாஜிலி இன்று ஒரு சுற்றுலா மையமாகப் புகழ்பெற்று வருகிறது. காரணம் இங்கே உள்ள தனித்தன்மை கொண்ட வைணவம். 16-ஆம் நூற்றாண்டில் இங்கே ஸ்ரீமந்த சங்கரதேவர் என்ற துறவி வந்து தங்கி ஒரு மடத்தை அமைத்தார். சங்கரதேவர் என பெயர் இருந்தாலும் அவர் ஒரு வைணவர். அவரும் அவருடைய முதல் மாணவரான மாதவதேவரும் அமைத்த மடங்கள் சத்ராக்கள் எனப்படுகின்றன.
நம் மொழியில் சொல்லப்போனால் சத்திரங்களேதான். அக்காலத்தில் அவை இலவசமான உணவும் கல்வியும் அளிக்கும் இடங்களாகவும் மருத்துவசேவை நிறுவனங்களாகவும் இருந்தன. புத்தமதத்தின் மடாலயங்களின் பாணியில் அமைந்தவை. இன்றைய கிறித்தவசேவை நிறுவனங்களுக்கெல்லாம் நாநூறாண்டுக்காலம் முந்தையவை.
இங்கே இளமையிலேயே இளைஞர்களை தங்கவைத்து வைணவக்கல்வி அளித்து நாடெங்கும் அனுப்புகிறார்கள். அவர்கள் துறவிகளாக இருக்கவேண்டும், விரும்பும்போது மணம் செய்துகொள்ளலாம். இன்று அறுபதுக்கும் மேற்பட்ட சத்திரங்கள் உள்ளன.
இந்தநிலம் முழுக்கமுழுக்க வைணவர்களால் ஆனது. இன்றும் செழித்துள்ள மிக விரிவான ஒரு நவவைணவப்பண்பாடு இங்குள்ளது. சங்கரதேவர் புஷ்டிமார்க்க மரபிலிருந்து வந்தவர். ஆகவே கிருஷ்ணவழிபாடே முதன்மையாக இவர்களால் அனுசரிக்கப்படுகிறது. வைணவத்துறவிகள் மஞ்சள் ஆடை அணிகிறார்கள். இந்தவகையான ஒரு நவீன மடாலய அமைப்பு இந்தியாவில் வேறெங்கும் வைணவத்திற்கு கிடையாது.
உலகப்புகழ்பெற்ற ஹரேராமா ஹரேகிருஷ்ணா அமைப்பு [இஸ்கான்] இந்த சத்ராக்களைத்தான் முன்மாதிரியாககொண்டது. ஆகவே இன்று உலகமெங்கிலுமிருந்து வைணவர்கள் இந்தச் சின்னத்தீவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
நான் நண்பர்களுடன் 2015 பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி மாஜிலிக்குச் சென்று இறங்கினேன். நாலைந்து சத்ராக்களைச் சென்று பார்த்தேன். பொதுவாக அவை எளிமையான கட்டிடத்தொகைகள்தான். மூங்கில்கட்டிடங்களில்தான் அவை நெடுங்காலம் இருந்துள்ளன. ஓட்டுக்கட்டிடங்களாக எடுத்துக்கட்டியதெல்லாம் நூறாண்டுகளுக்குள்.
பொதுவாக சிற்பங்கள் என ஏதுமில்லை. கட்டடக்கலையும் பெரிதாக இல்லை. இங்குள்ள சிறப்பு என்பது ராசலீலா எனப்படும் பெரும் திருவிழா. அனைவரும் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடமிட்டு ஆடிப்பாடி களிக்கும் மூன்றுநாள் திருவிழா இன்று பெரிய சுற்றுலாக்கவர்ச்சியாக உருவாகி வருகிறது.
ராசலீலாவின் மிகப்பெரிய அழகு என்பது முகமூடி நடனம். மாஜிலிக்கே உரிய தனிக்கலை என்றால் அதுதான். ஷாமாகுரி என்னும் ஊரிலிருந்த சத்ரா அருகே முகமூடிகள் செய்யும் ஒரு கலைகிராமம் உள்ளது என்றனர். சத்ராவை பார்த்துவிட்டு விடுதிக்கு வந்து காலையுணவை உண்டுவிட்டு அதைப்பார்ப்பதற்காக சென்றோம்.
சுமார் ஐம்பது வீடுகள் கொண்டது இந்தக்கிராமம். மத்திய சங்கீதநாடக அக்காதமி மற்றும் லலித் கலா அக்காதமியால் பேணப்படுவது. அஸ்ஸாமிய பாரம்பரிய மூங்கில் வீடுகள். ஆனால் அனைவருமே வசதியானவர்கள் என தெரிந்தது.
இப்போது அந்த கிராமம் ஹேமசந்திர கோஸ்வாமி என்பவரால் தலைமைதாங்கி நடத்தப்படுகிறது. அவர் முகமூடிகள் செய்வதிலும் அணிந்து ஆடுவதிலும் பெரும்புகழ்பெற்ற முதல்தரக் கலைஞர். அவர் வந்து எங்களை வரவேற்று இந்தியில் அந்தக்கலை அங்கே உருவான விதம்பற்றி சுருக்கமாகச் சொன்னார். புஷ்டிமார்க்க வைணவம் வங்கத்திலிருந்து அங்கே வந்தது. அதனுடன் இணைந்து முகமூடிக்கலையும் வந்தது. ஆனால் அது அஸாமின் பழங்குடிக்கலையுடன் இணைந்து தனித்தன்மையுடன் வளர்ந்தது
ஹேமச்சந்திர கோஸ்வாமியின் மாணவரான அனந்த கலிதா என்ற இளைஞர்தான் முகமூடிகளை எடுத்துக் காட்டினார். பார்வைக்கு மிக சிறிய உருவம். வாயில் பான்பராக் போட்டிருந்தமையால் பேச்சு அனேகமாக இல்லை. நாங்கள் செல்லும்போது ஒரு முகமூடியைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்.
விதவிதமான முகமூடிகள் சுவர்களில் தொங்கின. உருவாக்க நிலையில் இருந்தவை தரையில் வெயிலில் காய்ந்தன.பகாசுரன் போன்ற அரக்கர்கள், கருடன், மோகினி என விதவிதமான முகமூடிகள். இவை கண்களும் வாயும் அலகும் அசையக்கூடியவகையில் மூங்கிலாலும் புல்லாலும் செய்யப்பட்டு தாள் ஒட்டி மேலே வண்ணம் பூசப்பட்டவை.
இவை பழங்குடித்தன்மை கொண்ட முகமூடிகள். எனக்கு நமீபியாவில் நான் பார்த்த விதவிதமான ஆப்ரிக்கப் பழங்குடித்தெய்வங்களின் முகமூடிகள் நினைவுக்கு வந்தன. ஆப்ரிக்காவில் தெய்வமுகமூடிகளை அணிந்துகொண்டு பூசாரிகள் ஆடி குறிசொல்வது கலையாகவும் மதச்சடங்காகவும் மிகமுக்கியமான ஒரு நிகழ்வு. ஆப்ரிக்கமுகமூடிக்கலை பற்றி ஏராளமாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன
பழங்குடிக்கலை என்பது உக்கிரம், பயங்கரம் என்பதை நோக்கிச் செல்லக்கூடியது. மென்மை ,அழகு என்பவற்றுக்கு அதில் பெரிய இடமில்லை. தெய்வங்கள் வெளிப்படும் புள்ளி அது. தெய்வம் மண்ணுக்கிறங்கும்போது அதைத்தாள விரிசடைக்கடவுளின் ரௌத்ரம் தேவைப்படும். ஆப்ரிக்கதெய்வங்கள் கனவுகளில் எழுந்துவருபவை போலிருக்கும். அவை எழுப்பும் பெரும் கர்ஜனையை நம் அகச்செவிகேட்கும்.
ஆனால் செவ்வியல்கலைகளுக்குரிய நுட்பங்களும் கொண்டவை மாஜிலியின் முகமூடிகள் என்று தோன்றியது. இங்குள்ள பழங்குடிகளின் முகமூடிகளில் ரௌத்ரம் மட்டும் இருந்திருக்கலாம். வைணவம் நளினத்தின் நுட்பத்தின் மதம். அது இங்கே மென்மையை நுணுக்கத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். அசுரர்களும் அரக்கர்களும் வெறித்த விழிகளும் கூர்ப்பல் எழுந்த வாயுமாக வரிசையாக அமைந்திருக்க நடுவே இனியமுகத்துடன் மோகினிமுகம் தெரிந்தது
முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடுவதுதான் ராசலீலாவின் மிகக்கவற்சியான அம்சம். அது சாதாரணமான வேடமிடல் அல்ல. நாடகமும் நடனமும் ஓவியமும் கலந்து முயங்கும் ஒரு புள்ளி அது. அந்த ஆடலுக்கென்றே அசைவுகள் உருவாகியிருக்கின்றன. சட் சட்டென்று திரும்புதலையும் மெல்ல அசைந்தாடுதலையும் அதன் அழகியலில் முக்கியமான அம்சங்களாகச் சொல்லலாம்
அனந்த கலிதா எங்களுக்காக முகமூடிகளை அணிந்து சில அசைவுகளை செய்துகாட்டினார். அவர் கருட முகமூடி அணிந்த போது பருந்தின் அசைவுகள் அவரில் கூடின. சட் சட் என தலை திருப்பினார். இறகு விரித்துக்கொண்டார். அரக்க முகமூடிகள் அணிந்தபோது சிம்மம் பிடரி சிலிர்ப்ப்து போல உடல் அசைய பேரோசையுடன் கர்ஜனை செய்தார்.
ஒருமனிதன் தெய்வமாக ஆவதைக் கண்முன் கண்டோம். கலைவழியாக ஏறி அவர் நாம் செல்லமுடியாத ஒர் இடத்தை அடைந்தார். அங்கே நின்றபடி அவர் எங்களை நோக்கியபோது அந்தக்கண்களில் நாங்களெல்லாம் எறும்புகள் புழுக்கள் என்று தோன்றியது. அவரால் எங்களுக்கு அருளமுடியும், அழிக்கவும் முடியும் என்று நெஞ்சம் மயங்கியது
அனந்த கலிதா மீண்டும் மனிதனார். முகமூடியைக் கழற்றிவிட்டு பணிவுடன் சிரித்தார். அவர் ஏன் பேசுவதில்லை என்று தெரிந்தது. அவருள் இருக்கும் அனைத்து உணர்வுகளும் அம்முகமூடிகள் வழியாக வெளிப்படுகின்றன. மனிதனாக அவருக்கு இவ்வுலகுடன் சொல்வதற்கொன்றும் இல்லை
அவருக்குப்பிடித்தமான வேடம் எது என்று கேட்டோம். மோகினி என்றார். விஷ்ணு அமுதத்தை பரிமாற எடுத்த பேரழகியின் தோற்றம். அந்த மோகினி அசாமிய முகம் கொண்டவளாக இருந்தாள். “ஆடமுடியுமா?” என்று கேட்டோம். “ஆம்” என்று அதை எடுத்து அணிந்துகொண்டார். மெல்ல நடை மாறுபட்டது. இடை ஒசிந்தது. தோள்கள் குழைய கைகள் நெளிந்தன. அவர் உடலில் மோகினி எழுந்துவந்தாள்.
தன் கூந்தலை கையால் அளைந்தபடி ஓரக்கண்ணால் நோக்கியும் நெளிந்தும் வளைந்தும் அவர் நடந்தபோது சில கணங்களுக்குள் பேரழகி ஒருத்தியை நம் கற்பனை கண்டுவிடுகிறது. அதன்பின் நம் நினைவு ‘இது ஆண்’ என்றும் ’இது நடிப்பு’ என்றும் சொல்லிக்கொண்டே இருந்தாலும் சித்தம் கண்முன் நின்றிருக்கும் அழகியின் மோகமூட்டும் அசைவுகளில் ஆழ்ந்துவிடுகிறது.
முகமூடிகளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அவை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகர கணத்தில் உறைந்தவை என்பதே. முகம் நடிப்பில் மாறுவதுபோல அவை மாறுவதில்லை. அந்த நிலைத்த உணர்ச்சியை உடலசைவுகள் மூலம் விரிவாக்கம் செய்தபடியே செல்லமுடியும். மோகினி மோகமூட்டும் ஒருபாவனை கொண்டிருந்தாள். அந்த பாவனை கல்லில் செதுக்கியதுபோல அப்படியே நிலைத்திருக்க அவரது அசைவுகள் அதை வளர்த்துச்சென்றன
முகமூடி போட்டு ஆடும் கலை உலகம் முழுக்க உள்ளது. கேரளத்தில் தெய்யம் என்பது முகமூடி ஆட்டம்தான். சீன முகமூடிக்கலையையும் நான் கண்டிருக்கிறேன். முகமூடி ஒரு சிற்பம். ஆனால் அதனுள் மனிதன் இருக்கிறான். ஆகவே உயிரூட்டப்பட்டது அது.நடனமிடும் சிற்பம். சிற்பம் நம்மை உற்றுநோக்கி அசையாமலிருக்கிறது. அந்த அசைவின்மை வழியாகத்தான் நம்முடன் பேசுகிறது. நடனமிடும் சிற்பம் அசைவற்றது என ஒருகணமும் அசைவது என மறுகணமும் நம்மிடம் மாயம் காட்டுகிறது
அனந்த கலிதாவிற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். அவர் அந்த மோகினி முகமூடியை சுவரில் மாட்டினார். கருடன், அசுரர்கள், அரக்கர்கள், பேய்கள், பூதங்கள் என பயங்கரவடிவம் கொண்ட முகமூடிகள் நடுவே இனிய புன்னகையுடன் அது அமைந்திருப்பதைக் கண்டபோது அஸாமைப்புரிந்துகொண்டதாகத் தோன்றியது
குங்குமம் முகங்களின் தேசம்
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 7, 2016