பிறிதொரு உலகம்

6-candles2

 

 

என் அனுபவங்களின் மறுஆக்கம் என் கதைகளில் பெரும்பாலும் இருக்கும். என் எழுத்துக்களை முழுமையாக வாசிப்பவர்கள் எங்கோ ஓரிடத்தில் என் கதைகளில் நேரடி அனுபவங்கள் உருமாறி மறைந்திருப்பதைக் காணமுடியும். ஆனால் சினிமாக்களில் அப்படி அல்ல. அவை பெரும்பாலும் அந்த இயக்குநரின் சிருஷ்டிகள். இயக்குநருக்கு கதைக்கருவைச் செப்பனிட உதவுவது மட்டுமே என் பணி.

விதிவிலக்கு என சில சினிமாக்களைச் சொல்லமுடியும், அதிலொன்று ஆறுமெழுகுவத்திகள். துரை இயக்கத்தில் ஷ்யாம் நடிப்பில் வெளிவந்த அந்தப்படம் அவ்வருடத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால் மிகக்கருமையான ஒருவாழ்க்கைச்சித்திரம் அதிலிருந்தமையால் பெருவாரியான பெண்கள் அதை விரும்பிப்பார்க்கவில்லை. அதில் என் வாழ்வனுபவம் ஒன்று வளர்ச்சியடைந்த நிலையில் அல்லது உருமாறிய நிலையில் உள்ளது.

முப்பதாண்டுகளுக்கு முன் நான் மும்பைக்கு மங்களூர் வழியாகச் சென்றிருந்தேன். அன்றெல்லாம் மும்பை மங்களூர் மேற்குக் கடற்கரை ரயில்பாதை –கொங்கண் ரயில்வே]  இல்லை. அது பின்னர் மங்களூரின் மைந்தனாகிய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவர்களால் வி.பி.சிங்  அரசவையில் அவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் பெரிய அழுத்தம் அளிக்கப்பட்டு  கொண்டுவரப்பட்டு 1998ல் வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.  இன்றும் இந்தியாவின் மிக அழகான ரயில்பாதை இதுவே

ஆனால் அதற்குமுன் மங்களூரிலிருந்து கோவா வழியாக பஸ்ஸில் மும்பை செல்வதென்பது ஓர் அரிய அனுபவம். அப்பகுதிக் கடற்கரை மலைகள் கடலுக்குள் இறங்கிநீண்டிருக்கும் அமைப்பு கொண்டது. பக்கவாட்டில் அலையலையாக வளைந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான குடாக்கடல்கள் வந்துகொண்டே இருக்கும். தலைசுற்றாது என்றால் பன்னிருமணிநேரம் ஒரு அரிய காட்சியனுபவம் அமையும்.

அன்று நான் கேரளமாநிலம் காசர்கோட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கிருந்து ஒருமணிநேரம்தான் மங்களூர். வருடத்தில் இருமுறை மும்பைசெல்வேன். சும்மா சுற்றிவிட்டு ரயில்நிலையத்தில் குளித்து திரும்ப பஸ்பிடிப்பேன். அப்படி மும்பையில் சுற்றிக்கொண்டிருந்தேன். மும்பையை கொஞ்சம் சுற்ற ஆரம்பித்தால் எவர்கண்ணுக்கும் படாமல் தூங்குவதற்கான பல இடங்கள் நம் கண்ணுக்குப்படும். பலர் அங்கே முன்னரே தூங்கிக்கொண்டிருப்பார்கள்

அன்று நான் இரண்டு சினிமாக்கள் பார்த்தேன். ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்திப்படம். மிதுன் சக்கரவர்த்தி நடித்த இன்னொருபடம். திரும்ப மங்களூருக்கு பஸ் பிடிக்கவேண்டும், அது மறுநாள் அதிகாலையில். ஆகவே இரவு பன்னிரண்டரை வாக்கில் மும்பை ரயில்நிலையம் வந்தேன். பாந்த்ரா ரயில்நிலையம் என நினைவு

ரயில்நிலையத்திற்குள் நுழைய பல ரகசியப்பாதைகள். அதனூடாக மையச்சாலை அளவுக்குப் போக்குவரத்து உண்டு. அங்கே உள்ளே நுழைந்து கழற்றிப்போடப்பட்டிருக்கும் ஏதாவது பெட்டிக்குள் ஏறிப்படுத்துக்கொள்ளமுடியும். கதவுகள் உள்ளே மூடியிருக்கும். ஆனால் பின்பக்கம் வழியாக உள்ளே செல்ல வழி இருக்கும்.

நான் உள்ளே சென்ற பெட்டிக்குள் பலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சாராயவாடை. பழைய பெட்டிகள் சாக்குப்பைகள் கிடந்தன. ஓர் இடத்தைப்பிடித்து படுத்தேன். பணத்தை கால்சட்டைப்பையின் தையலுக்குள் செருகியிருப்பேன். ஆனாலும் ஓரினப்புணர்ச்சியாளர்களின் தொந்தரவு இருக்கும். கையில் அதற்கென்றே ஒரு பிளேடு வைத்திருப்பேன்

சற்று தூங்கியிருப்பேன். யாரோ கூச்சலிடும் ஒலி கேட்டுக் கண்விழித்தேன். என்ன ஏது என்று புரியவில்லை. ரயில்பெட்டிக்குள் ஒரு கும்பல் கைகளில் டார்ச் விளக்குடன் தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஏழெட்டுபேர் இருக்கும். பீடா குதப்பிய வாய்கள். பிகாரி உச்சரிப்பு கொண்ட இந்தி. [மர்கயா என்பதை மருகயா என்பார்கள்] சீட்டுகளுக்கு அடியில் எல்லாம் விளக்கை அடித்துத் தேடினார்கள். தூங்கிக்கொண்டிருந்த சிலரை உதைத்து எழுப்பி கெட்டவார்த்தை சொல்லி அடிக்கக் கையோங்கினர்

அங்கிருந்த அனைவருமே எளிய பொறுக்கிகள். ஆகவே அவர்கள் அடிவாங்கும்பொருட்டு உடலைக்குறுக்கமட்டுமே செய்தனர். நான் எழுந்து ஓரமாக நின்றேன். அவர்கள் வெற்றுக்கூச்சலிட்டபடி தேடிக்கொண்டு கடந்துசென்றனர். ஆறுதலுடன் மீண்டும் படுத்துக்கொண்டேன்.

சட்டென்று ஒரு குரல்  கூவி அழுவது கேட்டது. ஆணா பெண்ணா குழந்தையா என்றெல்லாம் தெரியவில்லை. என்னருகே இருந்த ஒருவன் ‘பிடித்துவிட்டார்கள்’ என்றான். எழுந்துசென்று பார்க்கலாமா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் தைரியமில்லை. கால்கள் வெடவெடவென நடுங்க பேசாமலேயே அமர்ந்திருந்தேன். அவர்கள் கூச்சலிட்டு கெட்டவார்த்தை சொல்லி சிரித்தார்கள். அந்தக்குரல் நெஞ்சை அறுப்பதுபோலக் கேட்டது

குரல்கள் ஓய்ந்தன. நான் மெதுவாக படுத்துக்கொண்டேன். கால் அப்போதும் தன்னிச்சையாக நடுங்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்து வந்த ஒருவன் “சின்னப்பெண், பத்துவயது இருக்கும்” என்று என்னிடம் சொன்னான். என்னருகே இருந்தவன் “இங்கே எப்படி வந்தாள்?” என்றான். அவன் அமர்ந்து இவனிடம் ஒரு பீடி வாங்கி பிடித்தபடி “ஒளிந்துகொண்டிருக்கிறாள்” என்றான்

“யார் அவள்?” என்றேன். “தெரியாது…. வீட்டைவிட்டு ஓடிவந்திருக்கலாம்” என்றான். “நாம் என்ன செய்வது?” என்றேன். “என்ன?” என்றான். “போலீஸில் சொல்லலாமா?” அவன் என்னை கையில் பீடியுடன் சிலைத்து சிலகணங்கள் நோக்கிவிட்டுச் சிரித்து “போலீஸா?” என்றான் மேலும் அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டு “போலீஸா?” என்றான். எனக்கே அந்தக்கேள்வியின் அபத்தம் புரிந்தது

அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. எழுந்து பேருந்துநிலையம் வந்து நின்றுகொண்டிருந்த பேருந்துகளில் அவை கிளம்பும்வரை மாறி மாறி அமர்ந்தேன்.பேருந்திலேறி தூங்கிக்கொண்டே காசர்கோடு வந்தேன். வந்துசேர்ந்தபோது அந்நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். தூங்கியதே அந்த நிகழ்ச்சியை மறக்கும்பொருட்டுதான்

ஆனால் அது உள்ளே இருந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆறுமெழுகுவத்திகள் கதையை விரிவாக்கம் செய்யும்போது அக்காட்சியை எழுதினேன். கதைநாயகன் தன் மகனை சென்னைக் கடற்கரையில் இழக்கிறான். அவனைத் தேடிச் சென்றுகொண்டே இருக்கிறான். சென்னை ஆந்திரா மத்தியப்பிரதேசம் என மகன் கடத்தப்பட்ட வழியைப் பின் தொடர்ந்து செல்கிறான்.

மனைவிகூட ஒருகட்டத்தில் ”எனக்கு நீ வேண்டும், திரும்பி வா” என்கிறாள். “எங்கோ என் மகன் எனக்காகக் காத்திருக்கிறான். அவன் அங்கே அப்பா வருவார் என நம்பிக்கொண்டிருப்பது வரை நான் திரும்பிவந்து எளிய வாழ்க்கையில் பொருத்திக்கொள்ளமுடியாது.  அவன் சடலம் கிடைத்தால்கூட போதும், வந்துவிடுவேன்” என்கிறான்

கடைசியில் மகனை கண்டுபிடிக்கிறான். அவனைக் கடத்திச்சென்று விற்பனைக்காக வைத்திருக்கும் குற்றவாளிக்குழுவினரிடம் அவனை மீட்க பேரம்பேசுகிறான். வெளியே சென்று பணம் எடுத்துவருகிறான். அவன் மகனின் குரலை கேட்டுவிட்டான். மகனைத் திரும்பக்கொண்டுவந்து விடப்போகிறார்கள். அப்போது ஒரு பெண்குழந்தை ஓடி அவனை அணுகி “மாமா என்னைக் காப்பாற்று” என அழுகிறது

அதைப்பிடிக்கவருகிறார்கள் அந்தக்கும்பலைச் சேர்ந்தவர்கள். மறு எண்ணமே இல்லாமல் அவன் அந்தப்பெண்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அதை கொண்டுசென்று ஒரு நாளிதழ் அலுவலகத்தில் விட்டுவிட்டுத் திரும்பி அங்கே வந்தால் அங்கு எவருமே இல்லை. அனைவரும் மறைந்துவிட்டனர். மகனை இழந்துவிட்டான். விழுந்து கதறி அழுகிறான்

ஆனால் அந்த நல்லுள்ளமே இறுதியில் அவன் மகனை அவனுக்கு மீட்டுக்கொடுக்கிறது.  உண்மையில் அன்று நிகழ்ந்தது  எனது பெரிய அறவீழ்ச்சி. அன்று எளியவனாக இருந்த என்னால் அந்த அநீதிக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை. எல்லா எளியமனிதர்களையும் போல வசதியாக மறந்துவிட்டேன்

ஆனால் அந்த முள் அகலவில்லை. அதை நான் கதாநாயகனாக மானசீகமாக நடித்து கடந்துசென்றேன். நமக்குச் சினிமா அளிக்கும் ஆறுதலும் இதுதான். நாம் நம் தோல்விகளை எல்லாம் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மாய உலகமே சினிமா என்பது.

ஆகவே இந்திய சினிமா என்பது இந்தியாவின் கண்ணாடிப்பிம்பம் என்று சொல்வேன். இந்தியாவின் முகங்கள்தான் சினிமாவிலும் உள்ளன. ஆனால் நேர்மாறாகத் திரும்பித்தெரிகின்றன.

 

 

முந்தைய கட்டுரைஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47