எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் பழனியிலும் பின்பு திருவண்ணாமலையிலும் இருந்திருக்கிறேன். அந்த ஊரின் வெயிலும் வரண்டநிலமும் எனக்கு ஒவ்வாதாயின. அங்கு நான் இருந்த ஒரு சிறு காலகட்டத்தின் நினைவுகள் இனிதாயின.
திருவண்ணாமலைக்கு எண்பத்தொன்றில் என்னை மலையாளத்துச்சாமி என்று அழைத்த பாண்டிச்சாமி என்ற வயோதிகச் சாமியாரால் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து அவர் சிவசைலத்திற்கு கிளம்பிச் சென்றார். நான் திருவண்ணாமலையிலே சிலகாலம் இருந்தேன். பின் அங்கிருந்து துறவை உதறி வீடு திரும்பினேன்.
அங்கிருந்த நாட்களில் நான் எதையும் கவனிக்கவில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. ரமணர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதிகளில் அன்று நிறைய சைக்கிள் ரிக்ஷாக்கள் நின்றிருக்கும். கால்களும் கைகளும் குறைந்த தொழுநோயாளிகள் பலர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டினர். சொரசொரப்பான பருத்தி ஆடையும் உருத்திராக்கமும் அணிந்த மெலிந்த வெள்ளையர் பலர் கண்ணுக்குத் தட்டுப்படுவார்கள். மற்றபடி நான் அறிந்ததெல்லாம் ஆலயத்தின் முகப்பிலும் ரமணாசிரமத்திலும் சேஷாத்திரி சுவாமி ஆலயத்திலும் மலையைச்சுற்றிய பல சிற்றாலயங்களிலும் காவிகந்தலும் அணிந்து வரிசையாக அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பிச்சைக்காரர்களையும் தான்.
கிரிவலம் அன்று பிரபலமல்ல முள்ளும் புதரும் மண்டி துறவிகள் அன்றி பிறர் வலம் வர முடியாததாகவே அந்த மலைப்பாதை இருந்தது. அதன் ஓரங்களில் வெள்ளையர்கள் தற்காலிகமாக கட்டிய கூடாரங்களும் ஓலைக்குடில்களும் இருக்கும். அவர்கள் கைவிட்டுச் சென்றபிறகு சாமியார்கள் அங்கே குடியிருப்பார்கள். அன்றெல்லாம் நானே சாமியாராக இருந்தும் கூட சாமியார்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
விதவிதமான மனிதர்கள். கஞ்சாப் போதையில் கண்சொக்கி அமர்ந்திருப்பவர்கள். வரும் ஒவ்வொருவரையும் தொலைதூரத்திலேயே அளவிட்டு அழைத்து ஆசி வழங்கியும் அவசியமென்றால் சற்று மிரட்டியும் பணம் பெற்றுக் கொண்டு எண்ணி எண்ணி பைகளுக்குள் சேர்ப்பவர்கள். ஏதோ ஒரு கணத்தின் முடிவில் வீட்டை விட்டு வந்தவர்கள். லௌகீகத்தில் தோற்று ஓடி ஒளிந்தவர்கள். சாமியார் என்றொரு கதாபாத்திரமே கிடையாது. அது மனிதன் என்பது போல் ஒரு அடையாளம் மட்டுமே அதற்குள் முடிவற்ற வகைமாதிரிகள்.
எனது ஆச்சரியம் சாமியார்கள் மேல் சாமானிய மனிதர்களுக்கு வரும் அந்த பேரார்வம் எதனால் என்பதுதான். புதரடைந்த கிரிவலப்பாதையின் பாறைகளில் ,கல்மண்டபங்களில் ,அல்லது கூரை வேய்ந்த குடில்களில் அமர்ந்திருக்கும் சாமியார்களைத் தேடி எங்கிருந்தோ எல்லாம் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ கிடைக்கிறது என்று மட்டும் தோன்றும்.
ஒருமுறை நான் சட்டிச்சாமி என்ற சாமியாருடன் தங்கியிருந்தேன். அவர் உற்சாகமான சாமி .இரவும் பகலும் யாரோ ஒருவர் வந்து அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் மூட்டையைத் தலைக்கு வைத்து படுத்தபடி அதை அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவர்கள் சொல்லி முடித்ததும் உரத்த குரலில் “சம்போ சிவசம்போ!” என்று கூவியபடி விபூதிச்சாம்பலை அள்ளி அவர்கள் நெற்றியில் பூசி பிடரியில் ஓங்கித் தட்டி ”எடுத்தாச்சு! எல்லாத்தையும் எடுத்தாச்சு! போ! கெளம்பிப் போடா” என்று கூவுவார். எழுந்து செல்பவர்கள் முகங்களில் பரிதவிப்பும் கூடவே புரிந்து கொள்ள முடியாத ஒரு அமைதியும் இருப்பதை பார்க்கலாம்.
அப்போது யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலையில் ஒர் அலையும் துறவியாக இருந்தார். அந்நாளில் அவருக்குப் பெரிய அளவில் பக்தர்களோ தொண்டர்களோ இல்லை. ஆலயத்துக்கு அருகே இருக்கும் ஒரு திண்ணையில் இரவு தங்கிக் கொள்வார். பகலில் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று பிச்சை கொள்வார். எப்போதாவது திருவண்ணாமலை ஆலயத்தின் முகப்பில் கிரிவலப்பாதையில் இருக்கும் சில பாறைகளில் அமர்ந்திருப்பார்.
பலதருணங்களில் அவரை நோக்கி சிவநாமத்தை கூவியிருக்கிறேன். “My father Bless you” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு சகபிச்சைக்காரர் என அவரை நான் அக்காலத்தில் பார்த்தேன் பின்னாளில் ஒரு பெரிய அடையாளமாக அவர் எழுந்தபோது ஒருமுறை சென்று பார்த்துப் பேசியிருக்கிறேன். திருவண்ணாமலையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அவர் மாறியதை பிற்பாடு அறிந்தேன்.
அங்கு அவ்வப்போது பக்தர்கள் வந்து தங்கள் துயரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் விரித்த விழிகளுடன் சற்றே முகம் குனிந்து அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் விழிகளைக் கூர்ந்து பார்த்தால் அவரது ஒரு கண் சற்றுக் கலங்கி நீர் கோர்த்திருக்கும். அவ்வப்போது வெடித்துச் சிரிப்பார். கைகளால் தரையை அடிப்பார். திரும்ப எவருக்கும் எந்த பதிலும் அவர் சொல்வதில்லை. May my father wish you. My father bless you என்று வழக்கமான வார்த்தைகளை மட்டுமே அளிப்பார்.
திருவண்ணாமலை இன்று எனக்கு இனிதாவதற்குக் காரணம் எனது இனிய நண்பர் பவா செல்லத்துரை அங்கு இருப்பதுதான்.அங்கு ஒரு துண்டு நிலம் வேண்டும் என்பதற்காக ஒரு பண்ணை வீட்டை நண்பருகளுடன் சேர்ந்து இப்போது வாங்கியிருக்கிறேன். பவா செல்லத்துரையின் வீடு எனக்கு என்றும் இனிதானது. அவரது தந்தை காலத்திலிருந்து விருந்தினர் உபசரிக்கப்படுவதற்காகவே அமைந்த இல்லம் அது. அவரது அன்னை சமைத்த உணவை உண்டிருக்கிறேன். இன்று அவரது மனைவி சைலஜாவால் உபசரிக்கப்படுகிறேன்
பவா இப்போது இருக்கும் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த காலம். நான் தர்மபுரியிலிருந்து ஒரு பேருந்தில் திருவண்ணாமலைக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆளற்ற மதியப்பேருந்தில் கையில் பையுடன் ஒருவர் வந்து என் அருகே அமர்ந்தார். பையை முன்னால் எடுத்து வைத்து கம்பியில் முடிச்சிட்டுக் தொங்கவிட்டார். ரப்பர் செருப்பைக் கழற்றி வேட்டியைத் தளர்த்தியபடி சாய்ந்து அமர்ந்து என்னை நோக்கி புன்னகைத்தார். ஒடுங்கிய முகம், விரித்த கண்கள் தர்மபுரிக்கே உரித்தான நரைத்த அடர்தலை .அங்குள்ள ப்ளோரின் கலந்த நீரினால் கறை படிந்த பற்கள்.
”என்னா வெயிலு…,” என்று அவர் சொன்னார். அது தர்மபுரியின் வணக்கம் சொல்வதற்கு நிகரான வார்த்தை. நான் ”ஆமாம்” என்றேன். ”ஊத்தங்கரை வரைக்கும் போறனுங்க தம்பி” என்றார். ”அப்படியா?” என்று நான் கேட்டேன். அது என் பொதுவான வார்த்தை. ஊத்தங்கரையில்தான் அவருடைய மகளை திருமணம் செய்து கொண்ட குடும்பம் இருந்தது. அவர்களிடம் மீண்டும் ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என்று செல்வதாக அவர் சொன்னார். ஏழு பெண்கள் ஏழு பெண்ணை பெற்றவரின் எல்லா துக்கத்தையும் அவர் அனுபவித்திருக்கிறார். நான்காவது பெண்ணைத்தான் ஊத்தங்கரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
பெண்ணாகரம் பக்கம் அவருடைய கிராமம். அங்கிருந்த நிலத்தை விற்றுத்தான் மகளுக்குப் பத்து பவுன் நகை போட்டார். பட்டுபுடவையும் எடுத்து பெருமாள் கோவிலில் கௌரவமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார். சென்றதுமே பெண்ணின் நகைகளை வாங்கி விற்றுவிட்டார்கள். போய்க் கேட்டபோது காடு வாங்கி விவசாயம் செய்வதற்காகத்தான் என்று சொன்னார்கள். அது நல்லதற்குத்தானே? ஆனால் ஆறுமாதத்தில் பெண்ணுக்கு பைத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வந்து கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று ஆளனுப்பினார்கள்.
பெண்ணை அழைத்து வருவதற்காக அவர் சென்றால் “நான் வரமாட்டேன். இங்கிருந்து கிளம்பிச் சென்றால் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்” என்று அவள் கதறி அழுதாள். அவள் மாமியார் “கூட்டிச் சென்று விடுங்கள் இங்கேயே அவள் செத்துப்போனால் எங்களுக்குப்போலீஸ் வழக்கு வரும்” என்று . “நீ வந்து பத்து நாள் இருந்துவிட்டுப்போ தாயே. பெரியவர்களை வைத்துப்பேசிக் கொள்ளலாம்” என்று சொன்னதும் மகள் அங்கிருந்த ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “நான் வரமாட்டேன் என்னை இழுத்துச் சென்றாலும் நான் வரமாட்டேன்” என்று கூவி அழுதாள்.
“என்ன செய்றதுன்னு தெரியாம திரும்பி வந்திட்டேன் தம்பி. மறுபடியும் கூட்டிட்டுப்போங்கன்னு மாமியாக்காரி சொல்லி விட்டா. எப்டி கூட்டிட்டு வர்ரது? வரமாட்டா தம்பி. செத்திருவேன் செத்திருவேன்னு ஒரே அழுகை. மத்தபடி ஒரு பிரச்சினை இல்லை. சமைப்பா. எட்டூரு வேலையச் செய்வா. பாக்க அம்சமா இருப்பா தம்பி. இங்க இருக்கிறப்ப அவள எருமைக்கண்ணுக்குட்டீன்னுதான் எல்லாரும் சொல்லுறது…”
தன் மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் அவர் சென்றார். “வரமாட்டேன் இந்த வீட்டை விட்டு நான் வரமாட்டேன்” என்று மகள் கதறினாள். மெலிந்து கன்னமெல்லாம் ஒட்டி முடியெல்லாம் பஞ்சாகி நோயாளிபோலிருந்தாள். “கிறுக்குப்பெண்ணை எங்க தலையிலே கட்டிவைத்துவிட்டீர்களே” என்று மாமியார் சொன்னார். பெண் உடலெல்லாம் காயங்கள். “எல்லாம் அவளே செய்து கொள்வது. அடுப்புக் கொள்ளியை எடுத்து உடம்பெல்லாம் வைத்துக் கொள்கிறாள்” என்று மாமியார் கூறினார்.
எவ்வளவு அழைத்தும் அவள் வரவில்லை. அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று பயந்து கொல்லைப்பக்கத்துக்குச் சென்று விறகுப்புரைக்குள் புகுந்து கதவை மூடி அமர்ந்திருந்தாள். அவள் அருகே யார் சென்றாலும் அருகில் இருக்கும் தூணையோ கம்பியையோ கதவையோ இறுகப்பற்றிக் கொண்டாள். “எட்டுவாட்டி போய் பார்த்துட்டுவந்தேன். வரமாட்டேனுட்டா. கடைசியா ஒருநா கையைக் காலைக் கட்டி டெம்போ வெச்சு அவங்களே வீட்டுக்கு கொண்டு வந்து விட்ட்டுடாங்க. என்னையக் கொண்டுபோயி அங்க விட்டிருங்கன்னு அவ கதறி அழுதிட்டே இருந்தா”
கையில் கிடைத்த ஒன்றிரண்டு சேலைகளை எடுத்து சுருட்டிக் கொண்டு வீட்டைவிட்டு அவளே இறங்கி தெருவில் ஓடுவதும் பின்னால் சென்று முடியைப் பிடித்து பற்றி இழுத்து திரும்ப கொண்டு வருவதும் நடந்தது. அடிக்கடி ஓடிப்போக ஆரம்பித்ததும் கொல்லனிடம் சொல்லி சங்கிலி வாங்கி கட்டிப்போட்டார். “நமக்கும் காடு கரைன்னு சோலி இருக்கில்ல தம்பி? என்னத்த செய்றது?’ என்றார்.
ஒருவருஷத்துக்குள் அவள் செத்துபோனாள்.ஒவ்வொரு நாளும் “என்னை அங்கே கொண்டு விட்டுவிடுங்கள். என் புருஷன் கூடத்தான் வாழ்வேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவளை திரும்பக் கொண்டு விட்டவுடனே மாமியார்க்காரி மாப்பிள்ளைக்கு ஆறுமாதத்துக்குள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள். எட்டு மாதத்துக்குள் அந்தப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாள். அதன் பிறகு திருப்பத்தூர் பக்கம் எங்கெயோ சென்று மறுபடியும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அவள்தான் இப்போது வாழ்கிறாள். “அது ஒரு சீக்குக்காரி. அந்தப்பொம்புள அதையும் வாழவிடாது தம்பி” என்றார்
நான் பெருமூச்சுவிட்டேன். அந்த அம்மாளை என்னால் காணமுடிந்தது. தீங்கே உருவான சில பெண்கள் எங்குமுண்டு. “இப்ப கடைசிப் பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன். அந்த நகையைத் திருப்பிக் குடுங்கன்னு கேட்டுப்பார்த்தேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாதி நகையாவது திருப்பிக் கொடுங்க, இந்தப்பொண்ணை கரையேத்திடுவேன். இனி விக்கிறதுக்கு காடில்ல சாமீன்னு சொன்னேன். கிறுக்குப்பொண்ண கட்டிவச்சதுக்கு நீதான் காசுகுடுக்கணும்னு சொல்லிட்டுது அந்தம்மா”
“ஊர்ப்பஞ்சாயத்தில் போய் சொன்னேன். அஞ்சு பவுன திருப்பிக் குடுக்க அவங்க சொல்லிட்டாங்க. இந்தம்மா கால்ல விழுந்தாலும் குடுக்க மாட்டேங்கறாங்க. கல்யாணம் வெச்சாச்சுங்க. அந்த அஞ்சு பவுனையும் நம்பித்தான் வெச்சிருக்கேன். இன்னொரு வாட்டி கேக்கலாம்னு போறேன்” அவர் சொன்னார் “நகையை திருப்பி கொடுத்திடணும் இல்லீங்களா? நியாயம்னு ஒண்னு இருக்கு இல்லீங்களா ? சாமின்னு ஒண்ணு இருக்கு இல்ல்லீங்களா ?”
நான் “ஆம்” என்றேன். அவர் கண்கள் கலங்கின. என்னை நோக்கி கைகளை கூப்பியவாறு வைத்துக் கொண்டு “எல்லாம் நல்லபடியா முடியணும். இந்தப்பொண்னையும் கரையேத்திட்டன்னா கஞ்சியோ கூழோ குடிச்சுட்டு போய் சேந்துடுவேனுங்க தம்பி” என்றார். அவர் என்னிடம் பிரார்த்தனை செய்வது போலிருந்தது. அவர் கைகளைத் தொட்டு “எல்லாம் சரியாகும்” என்றேன். “ஆமங்க முடியணுங்க” என்றார்
எவனோ ஒரு வழிப்போக்னிடம் தன் வாழ்க்கையை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்கிறார் .ஆனால், வழிப்போக்கனிடம் மட்டும் தானே இவற்றை சொல்ல முடியும்? வாழ்க்கைக்குள் வந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் சுயநலங்களும் கணக்குகளும் இருக்கின்றன. அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. அவர்களின் அறம் திரிந்துவிட்டிருக்கிறது அவர்களால் சக மனிதர்களின் கையைப்பற்றிக் கொண்டு உண்மையான அன்புடன் ஒரு சொல் சொல்லமுடிவதில்லை. வழிப்போக்கன் வெறும்மானுடன் அல்லவா?அப்போது நினைத்துக் கொண்டேன் சாமியார்கள் நிரந்தரமான வழிப்போக்கர்கள் தானே என்று.
குங்குமம்/ முகங்களின் தேசம்