சிறுகதைகள் கடிதங்கள் -12

download

 

அன்புள்ள ஜெ

 

நான் சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையை ஆரம்பத்தில் கொஞ்சம் வாசித்துவிட்டு விட்டுவிட்டேன். மேலோட்டமான கதை என நினைத்தேன். அதன் தொடக்கமும் கதையோட்டமும் வழக்கமாகக் கணையாழி இதழில் அந்தக்காலத்திலே வந்துகொண்டிருந்த சம்பிரதாயமான கதைகளைப்போல இருந்தன. ஒரு பிடிப்பான தொடக்கம் இல்லை. நீங்கள் சொன்னபின் வாசித்தேன் முக்கியமான சிறுகதை என்று தோன்றியது. ஆனால் ஆசிரியர் இன்றைக்குச் சிறுகதை வாசிப்பு அடுத்தகட்டத்துக்குச் சென்றுவிட்டது என்பதை அறிந்திராமல் சம்பிரதாயமாக மெல்ல தொடங்கிவிட்டார் என நினைக்கிறேன்

 

சங்கரநாராயணன்

 

 

அன்புள்ள ஜெ,
சிறுகதைகளைப்பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சிறுகதைகளை வாசித்துவிட்டேன். ஆனால் இந்தக்குறிப்புகளை வாசித்தபின்னர் அக்கதைகளைப்போய் வாசிக்கையில்தான் நான் என்ன விட்டுவிட்டேன் என்று தெரிகிறது. உதாரணமாக ராம் செந்திலின் கதையில் நான் அந்தப்பெண்கள் பாவனைதான் செய்கிரார்கள் என்பதைப்புரிந்துகொள்ளவே இல்லை.
அதேபோல இந்த விமர்சனங்கள் ஒரு கதையில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதோடு மட்டும் அல்லாமல் அவைகளை எப்படிச் சமாளித்துச்செல்வது என்பதையும் காட்டுகின்றன. பலகதைகளில் நீங்கள் சொன்ன உத்திகள் அற்புதமான்வை. உதாரணமாக லண்டன் கதையில் அந்த இலங்கைக்கதாபாத்திரம் முன்னாடியே சொல்லப்பட்டிருக்கலாம் என்பது ஒரு நுணுக்கமான குறிப்பு
சினிமாவில் இதைச்செய்வார்கள். யார் கதைக்கு முக்கியமோ அவர்கள் கதைக்குள் முன்னாடியே வந்துவிட்டிருப்பார்கள்
ஆர். எஸ். மோகன்
senthilஅன்புள்ள ஜெ,
நலம்தானே?
மடத்துவீடு சிறுகதை பற்றி உங்களுக்கு கடிதம் எழுதியபோது, நீங்கள் தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று நினைக்கவில்லை. ஒரு துவக்கநிலை எழுத்தாளனுக்கு இவ்வளவு விரிவான விமர்சனங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கவில்லை. உங்களாலயே அது சாத்தியமானது.  கடிதம் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மிகுந்த உற்சாகத்தை இது தந்திருக்கிறது.
கதையில் வரும் படிமங்கள் குறித்து அனிஷ்கிருஷ்ணன், சிவா ஆகியோர் எழுதியிருந்தனர். ப்ரியம்வதா விரிவாக தனது கோணத்தை எழுதியிருந்தார். நண்பர் கடலூர் சீனு உட்பட நிறைய பேருக்கு, அந்த பெண்கள் எப்படி பாலியல் சீண்டல்களை அனுமதிக்கிறார்கள் என்கிற கேள்வி இருந்தது. மற்றொரு நண்பர், அப்படி இயல்பாக பேச முடிகிறதென்றால் அது குறித்த பின்னணியை எழுதவேண்டாமா? என்றும் கேட்டிருந்தார்.அந்த பெண்களின் சூழல் தான் பின்னணி என்று எழுதியிருந்தேன்.
இந்த மையத்தை நீங்கள் விரிவாக தொட்டெடுத்து காட்டியபோது,  மிகவும் மகிழ்வாக உணர்கிறேன், ஜெ. நன்றி.
வீடு பற்றிய விரிவான வர்ணனை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தபோதே, கற்பனையில் அந்த பெண்பொம்மைகளும், வீடும் ஏறிக்கொண்டது. புதியவர்களுக்கான கதைகள் எழுதியபோதும், வீடு பற்றி மிகவிரிவாக எழுதியிருந்ததை, ஜாஜா குறிப்பிட்டு, கதையை ஜிம்மில் சேர்க்கும்படி கூறியது ஞாபகமிருக்கிறது. மனிதர்கள் என்றாலே, வீடு எப்படியிருக்கும் என்றே யோசிக்கமுடிகிறது. இனி கவனத்தில் கொள்கிறேன்.
தொடர்ந்து ஆலோசனை கூறி, பிரசுரித்து ஊக்கமளித்த பாஸ்கர், சிவா கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் நன்றி.
அன்புடன்
ராம் செந்தில்
images (2)

அன்புள்ள ஜெ,

முதலில் இந்த கதைகளை நீங்கள் வாசித்து இத்தனை நீண்ட விமர்சனம்/ ஆலோசனை எழுதியிருக்க வேண்டியதே இல்லை. எனினும் பொருட்படுத்தி அக்கறையுடன் எழுதி இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது, இக்கதைகள் சுட்டியளித்து வெளிச்சம் பாய்ச்சியதும் நிச்சயம் ஒரு கவனத்தை அளித்துள்ளது.
‘வருங்கால எதிரி’ எனும் பதத்தை வாசிக்கும் போது முதலில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. விமர்சனங்களை எதிர்பார்த்தே உங்களுக்கு அனுப்பியிருந்தேன்எ. கறாரான நிராகரிப்பாக இருந்தாலும் சரிதான். நான் எனது ஆளுமையை அகங்காரத்தை இறுக்கி கொள்ளாமல் முடிந்தவரை அதிலிருந்து விடுபட்டு, என்னை சிதறடித்து, படைப்பூக்கத்தை பெற முடியுமா என பார்க்கிறேன், காந்தியோ அல்லது இயல்போ, அல்லது போதிய துணிவின்மையோ அல்லது இவற்றின்கலவையோ தெரியவில்லை. ஆகவே எனக்கு இந்த சொற்கள் பெரிதாகப்படவில்லை. ஆகவே அவை என்னை எந்த அளவிலும்பாதிக்கவில்லை. நீங்கள் ஒருமுறை சொன்ன நித்யாவின் கதை இன்றளவும் என்னை வழிநடத்துகிறது. நித்யா ஒரு ஹிப்பி பெண்ணிடம் முத்தம் பெற்ற கதை. ‘it is human’. உங்களுக்கு இதையெல்லாம்எழுத தேவையில்லை, ஆனால் எங்கே நான் புன்பட்டிருக்கிறேனோ என நீங்கள் எண்ணிவிட கூடாது என்பதால். சீனு எழுதியதில் காளி புண்பட்டுவிட்டார் ஏனெனில் கதை வரிசைப்படி அவர் தாம் மூன்றாமவர் நான் நான்கமவராக்கும்:)
வாசுதேவனோடு சேர்த்து இதுவரை பனிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். எல்லாமே இணைய இதழ்களில் வெளியானவை தான். நண்பரின் தளத்தில் வெளியான ஒரு கதையும், உங்கள் தளத்தில் வெளியான கதையும் தவிர்த்து மீதி பத்து கதைகளில் எட்டு பதாகையிலும் இரண்டு சொல்வனத்திலும் வெளியாகியுள்ளன. பதாகை எனக்கு ஏதுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் எடிட்டோரியல் வழிமுறை. நானொரு கதை அனுப்பினால், அதை பதாகை எனது பெயரை நீக்கிவிட்டு பதாகைக்கு கதை எழுதும் வேறு நான்கு எழுத்தாளர்களுக்கு அனுப்பும். அவர்கள் இக்கதை பிரசுரிக்கதக்கதா என சிபாரிசு செய்வார்கள். அடுத்த கட்டமாக அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்படும். எந்தெந்த கருத்துக்கள் எவர் கூறியது என கூறாமல், அவை எனக்கு அனுப்பப்படும். பிரசுரிக்கலாம், அல்லது திருத்தங்களுடன் பிரசுரிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம் என மூன்றில் ஏதோ ஒன்றை சொல்வார்கள். அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளை கருத்துக்களை ஏற்கவோ நிராகரிக்கவோ எனக்கு உரிமை உண்டு. உறுதியாக என் கதை குறைந்த பட்சம் நான்குபேரால் அக்கறையுடன் வாசிக்கபடுகிறது என்பது தான் முதன்மை காரணம். இணைய இதழ்கள் ஒர்வகையில் சிற்றிதழ்கள் போலத்தான். சில நூறுகளுக்கு மேல் அதன் வாசகர் பரப்பு கிடையாது. பெரும்பாலும் அவையும் ஓரிருவரின் தனிப்பட்ட ஆர்வம்/ உழைப்பின் மீது தான் நடக்கிறது. பதாகை, கபாடபுரம், இன்மை போன்ற இதழ்களை கூறலாம். சொல்வனம், வல்லினம் போன்ற இதழ்கள் சற்றே பெரிய அமைப்பு கொண்டவை. அச்சிதழ்களில் காலச்சுவடு, உயிர்மையுடன் ஒப்பிடலாம். வாசகர்எண்ணிக்கை சில ஆயிரங்களை தொடலாம்.  இணைய இதழ்களில் நம் படைப்பை காண அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது மற்றொரு வசதி. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி தரமற்ற ஆக்கங்கள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வரவே செய்கின்றன. என்ன செய்ய சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.
ருசி 2014 ஆம் ஆண்டு எழுதிய கதை. அதையெல்லாம் ஒரு சாக்காக கொள்ள முடியாது தான். இந்த கதையை அதற்காக துறக்கவும் முடியாது.அது நான் எழுதிய கதை தானே. ஏனெனில் அதே ஆண்டு வேறு நல்ல கதைகளும் எழுதியதாக நம்புகிறேன்.. அதற்கு பின்னர் எழுதியவைகளில் திருப்தி அளிக்காதவையும் உண்டு. நீங்கள் சுட்டியளித்த பின்னர் இந்த கதையை வாசித்த போது இதன் பிழைகளை ஓரளவு புரிந்துகொண்டேன். மோசமான கதையல்ல ஆனால் நன்றாக வந்திருக்க கூடியது.உங்கள் விரிவான விமரிசனம் எங்கெல்லாம் இது அழுத்தமாக இருந்திருக்கலாம் என சுட்டிகாட்டியது. சிங்கப்பூர் கதைகளின் மீதான விமரிசனங்களும், இக்கதைகளின் மீதான விமரிசனங்களும் இளம் எழுத்தாளனாக எனக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்கும். முக்கியமான ஒரு விஷயத்தையும் கற்று கொண்டேன், பொறுமை. கதையை அவசரப்பட்டு பதிப்பிக்க கூடாது. அதிலிருந்து நமது பிணைப்பை துண்டித்துக்கொண்டு, அது நமது கதை என்பதை மறந்துவிட்டு வாசித்து பார்க்க வேண்டும். அப்போதும் கதை தேறினால் பிரசுரத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த சுய மதிப்பீட்டை பழகிக்கொள்ள முயல்கிறேன்.
நன்றி
சுனில்
Madhavan_Elango
மிக்க நன்றி, ஜெயமோகன்.
எனக்கு மிகவும் நெருங்கியவர்கள்கூட, “நீங்கள் என்னென்னவோ எழுதிப் பகிர்ந்துகொண்டிருப்பதை பார்க்கிறேன். ஆனால் வாசிக்க நேரமிருப்பதில்லை” என்று கூறுமளவிற்கு, ‘வாசக எதிர்வினையற்ற’ என்று மட்டுமல்லாமல் ‘வாசிப்பு வாசமே இல்லாத’ சூழலில், அதற்கும் மேலாக பிறருக்காக ‘நேரமே இல்லாத’ ஒரு நிலையில், நீங்கள் ‘வெண்முரசு’ எனும் மாமலையைத் தோள்களில் சுமந்துகொண்டு, இடையறாத இலக்கியச் செயல்பாடுகள், பயணங்கள், திரைப்படத்துறை என்று பல திறக்குகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தாலும், இடையே என் போன்ற எளியவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, சிரத்தையோடு பதிலளித்துக்கொண்டும், தொடர்ந்து உரையாடல்கள் நிகழ்த்திக்கொண்டும் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
சமீபத்தில் என் கல்லூரி நண்பர்கள், “‘உன்னுடைய நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய். எங்களுக்கெல்லாம் நேரமே போதவில்லை!” என்று வாட்சேப்பில் கேட்டார்கள். இதற்கெல்லாம் பதிலே சொல்ல முடியாது எனினும், உண்மையில் நான் செய்துகொண்டிருப்பது ஒன்றுமே இல்லை. உங்கள் ஆவணப்படத்தில் நீங்கள்  தட்டச்சு செய்யும் வேகத்தை அவர்கள் பார்த்திருக்கவேண்டும். உங்களின் அந்த உழைப்புக்கு என் வந்தனங்கள். என் மீதான அக்கறைக்கும் நன்றிகள்.
என்னுடைய அலுவலகத்தில் மாதத்துக்கு ஒருமுறை மொத்த அணியினரையும் ஒன்றுகூட்டி ஆய்வு சந்திப்புகளை நடத்துகிறேன். சந்திப்பின் துவக்கத்தில் அனைவரிடமும் பச்சை, சிவப்பு மற்றும் நீலம் என்று மூன்று வெவ்வேறு வண்ணத்தாள்களை (post-it) தந்து அவர்களுக்கு பத்து நிமிடங்கள் வழங்குவேன்.
1. பச்சை நிறத் தாள்களில் அணியில் ‘நன்றாக’ சென்றுகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும். அவற்றை ‘எந்திரங்கள்’ (engines) என்று அழைக்கிறேன். இவைதான் நம்மை முன்நகர்த்திக் கொண்டு செல்பவை. அவற்றை எப்பாடுபட்டேனும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.
2. சிவப்பு நிறத்தாள்களில் அணியில் ‘மோசமாக’ செயல்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றியும், எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் இடர்களைப் பற்றியும் எழுதவேண்டும். அவற்றை ‘நங்கூரங்கள்’ (anchors)  என்று அழைக்கிறேன். இவைதான் நம்மை விடாமல் பற்றிக்கொண்டு பின்னிழுத்துக் கொண்டிருப்பவை. அவற்றை எப்பாடுபட்டேனும் களைய முயற்சிக்கவேண்டும்.
3. நீல நிறத்தாள்களில் ‘பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளையும், புதிய யோசனைகளையும்’ எழுதச் சொல்கிறேன்.
பச்சை, சிவப்பு, நீளம் என மூன்று அமர்வுகளாக சந்திப்பு  நடக்கும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் அவர்கள் எழுதியிருப்பதை வாசித்து விளக்கிவிட்டு வெள்ளைப்பலகையில் ஒட்டிவிடவேண்டும். அது சார்ந்து விவாதங்கள் சீரிய முறையில் நிகழும். ஒவ்வொரு மாதமும் நிகழும் இந்தச் சந்திப்பு என்னளவில் மிகவும் முக்கியமானது. எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். இந்த சந்திப்பை எந்த காரணத்துக்காகவும் விலக்குவதை நான் விரும்புவதில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல வீட்டிலும் இதைக் கடைப்பிடிக்கிறேன். கடந்தமாதம் என் மகன், “நீ அதிகமாக வாட்சேப் உபயோகிக்கிறாய். எனக்கான நேரம் ஒதுக்குவதில்லை’ என்று கோபப்பட்டான். அதன் காரணமாகவே வீட்டில் ‘no device day’ என்கிற விதியை அறிமுகப்படுத்தினோம். அதிகமான ‘ரெட் கார்டுகள்’ அவனிடமிருந்துதான் வரும். அதுவும் எனக்காகத்தான் இருக்கும். :-)
உங்கள் விமர்சனத்தை நான் வாசிக்கும் பொழுது இந்த ஆய்வு சந்திப்புதான் எனக்கு நினைவுக்கு வந்தது. முடி சிறுகதையை ஆழமாக வாசித்து உங்கள் மதிப்புரையை விரிவாக பச்சை, சிவப்புத் தாள்களில் எழுதி ஒட்டியிருந்தீர்கள். பச்சையைவிட சிவப்புத்தாள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததையும் கண்டேன். தமிழ் இலக்கிய உலகில் முதன்மையானவர்களில் ஒருவரான உங்களிடமிருந்து வரும் இந்த மதிப்பீடு என்னளவில் மிகவும் முக்கியமானது. ‘இது எனக்குப் பொக்கிஷம்’ என்று க்ளீஷேவாக சொல்லிவிட்டுப் பூட்டி வைத்துவிடாமல், கையிலேயே வைத்துக்கொண்டு என்னைத் திருத்திக்கொள்ளவே விரும்புகிறேன். இனி நான் நீலத்தாள்களை கையிலெடுக்கவேண்டும்.
“தேவையற்றவை விழுந்தால்தானே சிலையொன்று உருவாகும். அது வேண்டாம் என்றால் நான் கல்லாக இருக்கவே விரும்புகிறேன் என்றாகிவிடும்.” என்று நான் உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். நான் கல்லாக இருக்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே என்னுடைய முந்தைய கடிதத்தை உங்களுக்கு எழுதியதும். வெங்கட் சாமிநாதன் அவர்கள் என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையைப் பற்றி ஒருமுறை பேசும்போது, “நல்ல கதை. ஆனால் இந்த melodrama சமாசாரங்களை விட்டு விடு மை டியர் மாதவன்” என்று கூறினார். அதன் பிறகு, அதற்கான பயிற்சியாகவே ‘முடி’ மற்றும் இன்னும் சில கதைகளை எழுதினேன். அவர் குறிப்பிட்ட melodrama அம்சங்களைப் பொருத்தவரை, அந்தப் பயிற்சியில் ஓரளவுக்கு  வெற்றியும் பெற்றேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இதை அவர் சொல்லாமல் விட்டிருந்தால் அவை இன்னமும் என்னோடு ‘உணர்ச்சிக் கொந்தளிப்புகள்’ தொடர்ந்து வந்திருக்கும். என்னுடைய எல்லா கதைகளையும் பொறுமையாக வாசித்து விட்டு வாழ்த்திய  திலீப்குமார், உங்களைப் போன்றே பல கருத்துக்களை வழங்கினார். அவருடைய கடிதமும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் கதைகள் எழுதவே இல்லை. இடைப்பட்ட நேரத்தில் கதைகளுக்கான கருக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அதில் சிலவற்றை எழுத ஆரம்பித்து பாதியிலேயே விட்டுவிட்டேன். சிலவற்றை முடித்து விட்டேன், ஆனால் திருப்தியில்லை. எழுதவே இல்லை என்பதை விட பிரசுரத்துக்கு அனுப்பவில்லை என்பதுதான் சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் வெ.சா அவர்களின் நினைவு நாள் அன்று ஒரு சிறுகதை எழுதினேன். அது என்னளவில் ஓரளவிற்கு திருப்தியளித்த கதை. நான் ‘முடி’ கதையில் முயன்ற ஒரு விஷயம் இதில்தான் முழுமையாகக்  கைக்கூடியிருக்கிறது என்று நினைக்கிறேன். முடி கதை வாசித்தவர்களில் என் தம்பி மட்டுமே அந்த முயற்சியைப் பற்றி பேசியிருந்தான். ஆனால், அதைப் பற்றி (நீங்கள் உட்பட) வேறு யாரும் பேசாததிலிருந்து, அது சரியாகக் கையாளப்படவில்லை என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். எனக்கும் அப்போது அதில் முழு திருப்தி இருக்கவில்லைதான். முந்தைய கடிதத்தில் கூறியிருந்தது போல சில மணிநேரங்களில் எழுதி உடனே அனுப்பிவிட்டேன். இதை தேர்ந்த எழுத்தாளர்கள் செய்யலாம். என்னைப் போன்ற மாணவர்கள் செய்யக்கூடாது. செய்தால் அது அசட்டுத்தனமே அன்றி வேறில்லை.
இரண்டு விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாசிப்பைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மையில் நான் வெகுஜன இதழ்களில் வரும் கதைகளைவிட, தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகளையே அதிகம் வாசித்திருக்கிறேன்; விரும்புகிறேன். ஆனால், நீங்கள் கூறியுள்ளது போல் ஆழமான இலக்கிய எழுத்தின் பாதிப்பு முடியில் இல்லை என்பதுவும் முற்றிலும் உண்மை. பொதுவாக நான் என் மனதின் ஓட்டத்தைத் தொடர்ந்து சென்று எழுதுகிறேன். ‘பார்வையை மாற்றி’ ஓரிருமுறை வாசித்து, திருத்தியிருந்தால் அவற்றைக் களைந்திருக்கலாம். அப்படிச் செய்யாததற்குக் காரணம் நான் மேலே கூறிய அதே அசட்டுத்தனம்.
Something else –
ஆனால், ஏன் என் மனம் அப்படி செயல்படுகிறது? ஏன் அது ஆழத்தைத் தொட முயலவில்லை? நான் ஏன் ‘பார்வையை மாற்றி’ என்று கூறுகிறேன்? இது உளவியல் சார்ந்தது. என் ஆளுமை சார்ந்தது. அதற்கு நான் காரல் யுங் பற்றியும் மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் பெண்கள் உருவாக்கிய எம்.பி.டி.ஐ (MBTI) பற்றி பேசவேண்டும். காரல் யுங் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் MBTI பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் எனக்கு நினைவிலில்லை. MBTI-யை பற்றி என்னுடைய பெல்ஜியம் ஆசான் யோஸ் மோன்ஸ் அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். இரண்டு வாரப் பயிற்சி. இதைப் பற்றி அறிந்துகொண்ட நாள் புத்தனானதைப் போல் உணர்ந்தேன். இது பற்றி அவரிடம் சொன்ன பிறகு வியந்து என்னை மதிய உணவுக்கு அழைத்தார். மதிய உணவுக்கு சென்றவன், இரவு உணவுக்கு பிறகே வெளியே வந்தேன். கிட்டத்தட்ட பத்து மணிநேர உரையாடல். மிகையில்லை.
நான் யாரென்பதே எனக்கு அப்போதுதான் புரிந்தது. என் மனைவி யாரென்று புரிந்தது. என் தந்தையின் பார்வையில் என் தாயும், என் தாயின் பார்வையில் தந்தையும் ஏன் அப்படித் தெரிகிறார்கள் என்று புரிந்தது. என் தம்பியைப் புரிந்துகொண்டேன். உலகில் உள்ள அத்தனை சச்சரவுகளும் இதுவே காரணம் என்று தோன்றியது. என் உடன்பணிபுரிபவர்கள் உட்பட நானறிந்த அத்தனைப் பேரும் அன்றிலிருந்து வேறு மனிதர்களாகத் தெரிந்தார்கள். நான் பறந்துகொண்டே இருந்தேன். அது ஒரு பரவச மனநிலை. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக உணர்ந்த தருணமது.
நீங்கள் யாரென்பதைக்கூட உங்கள் (கட்டுரை, புனைவு அல்ல) எழுத்தின் மூலமாக ஊகித்து வைத்திருக்கிறேன். சுஜாதா யாரென்பதும், எஸ்ரா யாரென்பதும், சாரு, மனுஷ்யபுத்திரன், ஞாநி இவர்களெல்லாம் யாரென்பதையெல்லாமும் ஊகித்து வைத்திருக்கிறேன். உங்களை நேரில் சந்திக்கும் போது இதுகுறித்தே முதலில் பேச விரும்புகிறேன். இதைப் பற்றி விரிவாகவே எழுத இருக்கிறேன். இப்போதைக்குச் சுருக்கமாகச் சொன்னால் நானொரு ‘Extroverted-iNtuition’ வகையறா. ஆழமான, தீவிர இலக்கியங்கள் ‘Introversion-Sensing’ எழுத்தாளர்களுக்குக் கைவந்தக் கலை. அது அவர்களுக்கு இயல்பாக வரும். என்னைப் போன்றவர்களால் முடியாதென்பதில்லை. அதற்கு நாங்கள் மெனெக்கெட வேண்டும். வேறொரு கண்கொண்டு பார்க்கவேண்டும். சுயத்தை இழக்கவேண்டும். இவற்றைப் பற்றி அறிந்திருப்பதால், அவர்களைப் போல வாழ்க்கையைப் பார்க்க ‘முயல்வதன்’ மூலம், ‘எழுதப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம்’ அவ்வாறு படைக்க முடியும். ஆனால், அது ஒரு போலச் செய்தலே. அப்படிச் செய்வதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் வணிக இலக்கியங்கள் விரும்பி வாசிக்கப்படுவதும், ஐரோப்பிய நாடுகளில் தீவிர இலக்கியங்கள் வாசிக்கப்படுவதற்கும்கூட காரணம் இருக்கிறது. இந்தியா ஒரு ‘Extroverted-iNtution-Feeling’ dominated society. ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ‘iNtroverted-Sensing-Thinking’ societies. அவ்வளவு தூரம் எதற்குப் போகவேண்டும். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும்கூட இந்த வேறுபாடுகள் பொருந்தும். மேலும் ‘வணிக’ இலக்கியம் என்று அழைப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. உதாரணத்துக்கு பெல்ஜியத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக விற்கப்படுகிறது என்பதற்காக அதை ‘வணிக இலக்கிய’ வகையில் சேர்க்க முடியுமா?  ஒரு சமூகத்தில் பெரும்பான்மையோர் ‘உளவியல் ரீதியாக’ ஒன்றை விரும்புவதால், அது மற்றெனையவற்றைவிட மிக எளிதாகவே விற்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பான்மையானோர் அப்படி எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் காரணம் வணிக ரீதியானது அல்லவே. வணிகத்தைப் பற்றி வணிகர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். வணிக எழுத்து எழுதுபவன், வணிக எழுத்து வாசிப்பவன் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ‘வெகுஜன’ அல்லது நீங்கள் கூறியது போல் ‘பொதுவாசக’ என்பது கூடப் பரவாயில்லை. ஆனால், அதுவும் சரியான இலக்கிய வகைமைப்படுத்தல் இல்லை. இது பற்றி என்னுடைய ஆசான் யோஸ் மோன்ஸிடமும் விவாதித்திருக்கிறேன்.
வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் பற்றி இதுவரைப் பேசிய யாருமே (நீங்கள் உட்பட) இதை உளவியல் ரீதியாக அணுகவில்லை என்பது வேதனையான உண்மை.  இலக்கியம் மட்டுமல்ல, எந்தக் கலையும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்படுவதற்கு காரணம், ஒவ்வொருவிதமாக ரசிக்கப்படுவதற்கும் உலவிய காரணம்தான்.  மீண்டும் சொல்கிறேன். இது காலை, இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல. It’s a broader subject.
இந்தச் சிக்கல் குழந்தை வளர்ப்பிலும் இருக்கிறது. ‘introverted’ குழந்தையை ‘ஊமைக்கொட்டான்’ என்று ஒதுக்குவது, ‘extroverted’ குழந்தையை ‘வாயாடி’ என்று நையாண்டி செய்வது. இரண்டு ‘extroverted’ பெற்றோருக்குப் பிறந்த ‘introvert’ குழந்தை படும்பாட்டை என் கண்ணால் கண்டிருக்கிறேன். அதற்குப் பின்னால் அவர்களுக்கு MBTI வகுப்பு எடுக்கவேண்டியதாய்ப் போயிற்று. எனவே எல்லாப் பெற்றோர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று இது. கடந்த முறை இந்தியாவுக்கு வந்த பொழுது ஒரு கல்லூரியில் MBTI வகுப்பு எடுத்தேன்.  வகுப்பின் முடிவில், ஒரு பெண் என்னிடம் வந்து, “சார், நீங்கள் இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள்? இன்னும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்து நடந்திருக்காது” என்று கூறினார். பெற்றோர் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்கவேண்டிய ஒன்று. நானே அலுவலகத்தில் presentation செய்வதாக இருந்தால், அது யாருக்கு என்று தெரிந்துகொண்ட பிறகே தயாரிக்கிறேன். ‘sensing’ ஆசாமிகளாக இருந்தால் நிறைய facts & figures போட்டு presentation முழுக்க bulletin points-ஆக இருக்கும். ‘intution’ ஆசாமிகளுக்காகவென்றால், presentation முழுக்க படங்களாக இருக்கும். ஒரு வீடியோ நிச்சயம் இருக்கும். மாற்றி செய்தால் முடிந்தது கதை. இரண்டும் கலந்து செய்துவிடுவது எப்போதும் நல்லது. இப்படிப் பதினாறு வைகையான மனிதர்கள். அதற்கு மேலும் இருக்கலாம் ஆனால் தனித்துவமாக பதினாறு. அது சார்ந்து இன்னும் பல நுட்பமான விஷயங்களும், உதவிக்குறிப்புகளும் இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் என் பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும். ;-) அல்லது  இது குறித்து என்னிடமிருந்து ஒரு நீண்ட கட்டுரையை நீங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இப்போதைக்கு ஒரு ஜோக்:
– – –
ஒரு intution திருடனும், sensing திருடனும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திருடச் சென்றார்களாம். பதிமூன்றாவது மாடியில் ஒரு வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டதாம். இருவரும் நடுங்கி விட்டார்களாம். sensing திருடன் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவந்து, “நாம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோம். வீட்டுக்காரர் வந்துவிட்டார்” என்றான்.
உடனே intution திருடன், “வேறு வழியில்லை. வா. ஜன்னல் வழியே கீழே குதித்து விடலாம் ” என்றான்.
அதற்கு sensing திருடன், “விளையாடுகிறாயா? நாம் இப்போது 13-ஆவது தளத்தில் இருக்கிறோம்.” என்று கோபப்பட்டானாம்.
அதற்கு intution “Come on. This is not the time to be superstitious.”என்றானாம்.
– – –
இதுதான் பிரச்சினையே. பார்வைகள் வேறு. இன்னும் எத்தனையோ இருக்கிறது இதுபற்றி பேச.
மன்னிக்கவும். உங்களுக்கு எழுத ஆரம்பித்தால், எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விடுகிறேன். அதற்குக் காரணம், கட்டுக்குள் இருப்பதற்கு நான் sensing அல்ல. கட்டற்ற intution வகையறா. எனவே லா.ச.ரா-வை போன்று நீங்கள் குறிப்பிட்ட ‘நினைவோட்டல்’ முறையில் அலைபாய்ந்திருக்கவேண்டும். உண்மையில் என்னுடைய ஆளுமைக்கு நான் லா.ச.ரா போல்தான் முடியை எழுதியிருக்கவேண்டும்.  இப்போது யோசித்துப் பாருங்கள் ஒரே நேர்க்கோட்டில் முடியை எழுதுவதற்கு நான்  எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்று ;-). ஆம். லா.ச.ரா ஒரு intution மனிதர்தான். அசோகமித்திரன் ‘sensing’. மன்னிக்கவும் இவற்றுக்கெல்லாம் நல்லதொரு தமிழ் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கே சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பது என் கருத்து (உதாரணம்: judging மற்றும் perceiving). இதில் உங்கள் உதவி நிச்சயம் எனக்குத் தேவை.
அன்பும் நன்றியும்,
மாதவன் இளங்கோ

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
அடுத்த கட்டுரைநீர் நிலம் நெருப்பு -கடிதங்கள்