கருப்புப்பணம் -எதிர்வினைகள்

1

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 உங்கள் மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்”   பதிவுக்கான எனது எண்ணங்கள்.

 

# ”அது ஊடகங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு எடுக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் அதன் சேவகர்கள் மட்டுமே என்றும் உணர்கிறோம். அனைத்தையும் விட மேலாக அறிவுஜீவிகளை சல்லிவிலைக்கு அது வாங்கி அடியாட்களாக வைக்கும் என்றும் சமகாலம் நமக்குக் காட்டுகிறது.”

(உங்கள் கருத்தின்படி கீழ்கண்டவை நடைபெரும் என எதிர்பார்கலாம்)

*  இனிமேல் ஊடங்கள் அழிந்துவிடும் அல்லது தூய்மை அடைந்துவிடும். உண்மை செய்திகளை மட்டுமே அளிப்பார்கள்.

*  அறிவு ஜீவிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கருத்துகளை விலையில்லாமல் அளிப்பார்கள்.

 

#இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை.

  • நான் அறிந்த வரையில் அரசியல்கட்சித்தலைவர்கள், பொருளியலாளர்கள் கள்ளப்பணத்திற்கு (fake note) ஆதரவாக பேசவில்லை.
  • கருப்பு பணத்திற்க்கு ஆதரவகவும் பேச வில்லை அவர்க்ள் அரசு எடுத்த செயல் முறையை மட்டுமே விமர்ச்சித்து கொண்டு உள்ளார்கள்.

 

# அதிகம்போனால் ஆறுமாதம்

  • ஆரம்பித்தபொழுது இரண்டு நாட்கள் என்றார்கள் பிற்கு 50 நாட்களில் சரியாகும் என்றார்கள் இப்பொழுது 15 வருடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்கிறார்கள்.

 

# நான் இந்தக்கட்டுரையை அன்று மறுபிரசுரம் செய்வேன்

  • தாரளமாக செய்யலாம் அது உங்கள் உரிமை அதையும் நங்கள் படிக்கத்தான் போகிறோம் உங்களுக்கு எதற்க்கு இந்த சூழுரை.

 

# நம் வரிவிதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள். நம் பொருளியலில் வங்கிவழிப் பணப்பரிமாற்றம் மிகமிகக் குறைவு. பெரும்பாலும் காகிதப்பணப் பரிமாற்றம்.

  • இந்த முயற்சியினால் அனைத்து பரிமாற்றமும் வங்கிவழியாக நடைபெறுமா? இதற்கான் கட்டமைப்பு இன்று உள்ளதா? கட்டமைப்பை வ்லுப்படுத்தாமல் இது எப்படி சாத்தியம். ஒரு நல்ல நிர்வாகி ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்க்கு முன் அதன் செயல் முறை சிக்கல்களை களைந்துவிட்டு பிறகே செயல்ப்படுத்துவார். இன்று நடைமுறை என்ன? 85 % அதிக மதிப்புள்ள பணத்திற்க்கு 14% உள்ள குறைந்த மதிப்புள்ள பணத்தை வைத்து பரிவர்த்தனை செய்ய நினைத்து எவ்வளவு அறிவீனம்.

 

# சென்ற பத்தாண்டுகளாக கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்த லாபமே மறைமுக வட்டித்தொழிலாக

 

  • வட்டிதொழில் கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்தது என்பது உண்மையில் அறியாமையே. இதற்காக உங்களை நினைத்து வருந்துகிறேன். வட்டி தொழில் ஒவ்வொரு குக்கிராமத்திலும் நடைபெறும் முறைப்படுத்த படாத ஒரு வணிகம். இது நல்லதோ கெட்டதோ இங்கு இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் ஆன்மாவை அறிந்த அனைவரும் அறிவர். உங்களுக்கு இது தெரியாதது வருத்ததுக்குறியது.

 

# இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று என்பதை எவரும் உணரமுடியும். ஜன்தன் போன்ற திட்டங்கள் வழியாக  இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது.

 

  • கட்டாயமாக வங்கிக்கணக்கு என்பது முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம இது எரிவாயு மானியத்திற்க்காக உருவாக்கப்பட்ட்து. இதை அப்பொழுது எதிர்த்து அரசியல் செய்தவர்கள் தான் இவர்கள். இது தினசரி செய்திதாள் படிக்கும் அனைவரும் அறிவர். வ்ங்கி கணக்கு தொடங்கினால் போதுமா அதை பயன் படுத்த ஏடிஎம் வேண்டாமா? தமிழகத்தில். 3040 நபர்களுக்கு ஒரு ஏடிஎம் இதுவே பீகாரில் 13525 நபர்களுக்கு ஒரு ஏடிஎம். இது தான் இன்றைய இந்தியாவின் நிலை.

 

# ஜிஎஸ்டி அவர்களுக்கு மிகப்பெரிய கட்டாயத்தை அளிக்கிறது.

  • இதுவும் முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம் அப்பொழுது எதிர்த்தவர்க்ள் தான் இவர்க்ள். (என்னுடைய என்னப்படி இது அனைத்து பொருட்களுக்கும் இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை இது எப்படி கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும்)

 

# வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி

 

  • இந்த 20% க்காக 126 கோடி மக்களை துன்புறுத்துவீர்களா?

உண்மையில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களை சாதரன மக்களால் அறிந்து கொள்ள் முடிகின்ற பொழுது அரசால் முடியாதா

 

# எத்தனை கோடிரூபாய் நேரடியாகக் கணக்குக்குள் வந்துகொண்டிருக்கிறது

 

  • இந்த பணம் மாற்றுவதற்க்காக வ்ந்து கொண்டு இருக்கிறது வரி கட்டப்பட்ட பணம் தான் இப்பொழுது வந்து கொண்டு உள்ளது. இந்த பணம் வங்கியில் இருந்து விரைவில் எடுக்கப்பட்டு விடும் இதை செலுத்துபவர்கள் வைப்பு நிதியில் போடுவதில்லை சேமீப்பு கணக்கிலேயே வைக்கப்படுகிரது ஏடிம் வழக்கம்போல் இயக்கத்துக்கு வரும்போழுது இவை மீண்டும் வீடுகளுக்கே சென்றுவிடும்.

 

#  ‘அய்யோ பாவம், ஏடிஎம் வாசலில் நிற்கும் நிலை உனக்கு வந்துவிட்டதே’ என இவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்

 

  • இதை அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதை விட அங்கு போய் நிர்ப்பவர்களை கேளுங்கள். முத்ல் இரண்டு நாட்கள் இருந்த ஆதரவு பின்னர் இல்லாமல் போனது எதனால் இதனால் தான்.

 

# மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர்.

 

  • நான் இந்த மூன்று வகையிலும் சேராதவன்.கள்ள பணம் சேரவே வாய்ப்பு இல்லதவன். மோடியியை எதிர்க்க வேண்டிய அவசியம் அற்றவன். (தமிழக அரசியலில் மோடிக்கு இடம் இல்லை). என்னிடம் இருந்த சில செல்லாத பணம் என் தந்தையால் மாற்றி தரப்பட்டது. நான் இனைய பணபரிவர்த்தைனை செய்பவன். ஆனால் நான் அழுவலகம் வரும் பொழுதும் (வ்ங்கி வாசலில்) மாலை வீடு திரும்பொழுதும் (ஏடிஎம் வாசலில்) மக்கள் படும் துயறம் அறிந்தவன்.

இந்த நிலை தொடர்ந்தால் நானும் நேரடியான பாதிப்பை அடைவேன். சிறு மற்றும் குறு வியபாரிகள் தான் நம் நாட்டின் இயங்கு சக்தியாக பார்ப்பவன். நீங்கள் நம்பும் டாடாவை விட நான் இவர்களை தான் சாதரன மக்களின் தோழனாக பார்கிறேன். ஆனால் இன்றய சூழல் தொடர்ந்தால் நானும் இவர்களுக்கு விரோதமான் முடிவையே எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவேன். (உலவர் ச்ந்தை தெருமுனை கடைகளில் காய்கறி பழ்ம் வாங்குபவன். சில்லரை தட்டுப்பாட்டால் நானும் வங்கி அட்டை மூலம் வாணிபம் செய்பவர்க்ளை நோக்கி செல்ல வேண்டும் இதனால் எனக்கு சிரிய அளவில் பண்ம் நஸ்டம் ஆனால் அந்த வியபாரிக்கு வியபாரமே நஸ்டம் இதை யார் ஈடு செய்வார்கள்).

# ஐம்பதாண்டுகளாக வரிகட்டாமல் இயங்கிவரும் இந்தப்பெருச்சாளி உலகைக் கலைத்து அவர்களில் ஒருசாராரையாவது வரிகட்டக் கட்டாயப்படுத்தும் அரசு செய்வது தவறா?

  • இவர்களை உங்களால் வேறு முறையில் தடுக்க முடியாதது இந்த மக்கள் செய்த குற்றமா?

 

# ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்?

 

அரசு போதிய அளவு 100 அல்லது 500 புதிய நோட்டுகளை உருவக்கிவிட்டு செய்திருந்தால் என்ன ஆகிறுக்கும். கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் நாட்டை விட்டா ஓடி இருப்பார்கள்.

 

# மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.

  • இன்று வங்கிகளில் பணமே இல்லையே இதற்க்கு யார் பொருப்பு.

# தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒருகோடிபேராவது ஏடிஎம்மில் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால்கூட அது அரசுப்படுகொலை!

  • அரசுவின் வேலை மக்கள் அனைவரையும் காப்பது தான். அழிப்பது அல்லவே.

 

# ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே

 

  • இது போன்ற பார்வை பரதிய ஜனதா ஆதரவாளர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு கருத்து. எங்களின் பார்வையில் அப்படி தெறிவது இல்லை மேலும் இஸ்லாமியர்கள் மோடியை எதிர்ப்பது இயல்பானது. எப்படி பிராமனர்கள் திக வை ஆதரிப்பது இல்லையோ அது போன்றது தான் இதுவும்.

 

# ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம்பேரில் நாலுபேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன

 

  • * உங்களுக்கு 1000 பேருடைய கருத்தும் கிடைத்த்தாக நினைகின்றீர்களா அப்படி என்றால் அது தவறு. அத்தனை கருத்துக்கள் உங்களுக்கு கிடைத்து இருந்தால் ஏடிம் ல் கூட்டமே இல்லை என்று சொல்லி இருக்கமாட்டீர்கள்.

 

# அது பலன் தரலாம், தோல்விகூட அடையலாம்.

 

  • பலன் தராமல் போக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு திட்ட்த்தை செயல் படுத்துகிற அரசை எந்த அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிரீர்கள். மேலும்  மக்களை பாதிக்காத பல வழிமுறைக்ள் உள்ளதாக கருதபடுக்கின்ற திட்ட்த்தை 120 கோடி மக்களையும் பாதிக்கினற வகையில் இப்போழுதே அமுல்படுத்த வேண்டிய கட்டயம் மோடிக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏன்?

 

என்றும் அன்புடன்

ம.உமாசங்கர்.

 

அன்புள்ள ஜெ

நேற்று கட்டுரையில் மல்லையா தொடர்பான வாதங்களில் நிறைய விடுபடல்கள் இருப்பது  படிக்கும்பொழுதே உணர முடிந்தது…

நாம் ஒரு பொழுதும் அறிய முடிய கருப்பு பக்கங்கள் நிறைய உண்டு அவர்களிடம்.. நிச்சயம் மல்லையா ஏமாளியோ / பரிதாபப்பட வேண்டிய நபரோ அல்ல.. நமது வாதங்களையும் மீறி, அவர்களின் தில்லுமுல்லுகள் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்…

மல்லயாவிற்கும் / கார்ப்பரேட்டுகளுக்கும் வாதாடினால்,  அதையே சிறு வியாபாரிகளும் கேட்பார்கள்.. இந்த கட்டுரையின் அடிநாதமே கேள்விக்கு உள்ளாகலாம்…

நன்றி…

பிரசாத்..

அன்புள்ள ஜெ

தங்களின் மோடி,கருப்பு பண ஒழிப்பு, ஊடகங்கள் படித்தேன்.  ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கும் இடதுசாரித்தத்துவம் என்பதை ஐய்யகோ ஏழைகள் ஏடிஎம்மில் நிற்கிறார்களே என தொலைக்காட்சி விவாதங்களில் உணர்ச்சிவசப்பட்டு  ஷோ முடிந்த கையோடு இம்போர்ட்டட் காரில் ப்ராண்டட் ஷர்டோடு கேப்பிடலிசத்தை பின்பற்றும் இடதுசாரிகள் மற்றும் தாங்களே குறிப்பிட்ட தன் தலையில் தான் சுமையை ஏற்றுகிறார்கள் என்று புரியாத  உடன் சேர்ந்து சலிக்கும் மாத சம்பளக்காரர்கள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது.

நாங்கள் பதில் சொன்னால் பக்தாஸ் என முத்திரை குத்தப்படும். தங்களுக்கும் அந்த முத்திரை குத்தப்படப்போவது தெரிந்தும் தங்களை போன்ற ஒருவர் உண்மை நிலையை பேச முன்வருவது அளப்பரியா ஆனந்தம்.

இதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களுக்கு எப்போதுமே எதோ ஒருவகையில் அப்பாவி திராவிடரை நலிவுறுத்தி பார்ப்பதில் க்ரூர சந்தோஷம் என்று ஒரு பிரச்சாரமும் எப்போதும் போல தொடங்கியாகி விட்டது.
ட்ரம்பின் வெற்றியையே பார்ப்பன பிரச்சாரத்தின் வீரியம் என சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

இது போல ஒரு வலுவான அறிவிப்பை பார்த்தறியாத எதிர்ப்பார்க்காத அரசியல்வாதிகளும் கருப்புப்பண முதலைகளும் எப்போதும் போலவே முதல் நாள் ஆதரித்து அறிக்கை விட்டு மக்களை ஆழம் பார்த்து எப்படி சொன்னால் எப்படி மக்களை ஏமாற்றலாம் என இலக்கணம் மாறாமல் செய்கிறார்கள். முதல் நாள் திகைத்து பிறகு அணி சேர்ந்து விஷம பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்னமும் அந்த மூன்றாவது சாராருக்கு தன் தலையில் தான் சுமை ஏற்றப்படுகிறது என்றே புரியாமல் ஊரார் விமர்சனத்தை கேட்டு கழுதை மேல் ஏறாமல் கழுதையை தலையில் சுமந்து வந்த தந்தையின் மகனுமாகவே இருப்பதும் அவர்களை அப்படியே வைத்திருக்கும் ஊடகங்களின் சாமர்த்தியமும்  தான் வியப்பாக இருக்கிறது.

ப்ரியமுடன்
ஸ்ரீப்ரியா

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.

மோடிகருப்புப்பண ஒழிப்புஊடகங்கள் கட்டுரையை படித்தபிறகு ‘நிலைகொள்ளாமல் ‘அலைந்து கொண்டிருக்கிறேன்’,உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தையில்லை,அப்படியே பொங்கிவிட்டீர்கள்!.ஒரு உண்மையான எழுத்தாளனின் சமூகப்பங்களிப்பை மிகச் சரியான நேரத்தில் நமது தேசத்திற்காக நிலைநாட்டி விட்டீர்கள்!.கடந்த 12 நாட்களாக பெரும்பாலான காட்சி ஊடகத்திலும், செய்தித்தாள்களிலும் மோதி அவர்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையை கொஞ்சம்கூட நாக்கூசாமல் கள்ளத்தனமாக குறைகூறி அதை பார்த்து படித்து மனம் வெதும்பி வரும் நிலையில் உங்களின் கட்டுரை அருமருந்தாக உள்ளது.கீழ் கண்டவர்களின் ஆஷாடபூதித்தனத்தை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

 
முதலில் இடதுசாரிகள், மோதியை எதிர்ப்பதென்றால் எந்தவித கீழான நடவடிக்கைக்கும் செல்வார்கள் என்பது,இது ஒரு மிக அதிர்ச்சி அளிக்கும் அவலநிலை!அடுத்து செய்தியாளர்கள் சமஸ் போன்றவர்கள் மோதியின் தாயார் அவர்கள் வங்கிக்கு சென்று பணம் எடுத்ததைக்கூட மோதிக்கு எதிராக ‘கொச்சையாக’விமரிசித்து இருந்தார்கள்(எப்பேர்ப்பட்ட பத்திரிகையாளர்கள்!).அடுத்து ஹிந்து போன்ற “தேசிய நாளிதழ்!” தண்ணிக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு தவிப்பதுபோல் ATM க்காக மக்கள் தவிப்பது மாதிரி கருத்துக் படமும்,என்றும் இல்லாத விதத்தில் இது சம்பந்தமாக துணுக்கு தோரணங்களும் வெளியிட்டு தங்களின் ‘கோணப்பார்வைகளை பறைசாற்றினர்.அடுத்து முன்னாள் நிதியமைச்சர் தனது பதவிக்காலத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட வக்கிலாதவர் இதனால் ரூ.400 கோடி அளவுக்குத்தான் பலன் இருக்கும் என்று கூசாமல் புளுகினார்.இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நமது உச்சமன்ற தலைமைநீதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது இதனால் பொதுமக்களால் கலவரங்கள் கூட வெடிக்கலாம் என்று அருள்வாக்கு அருளினார்!(மறுநாள் எல்லாப் செய்தித்தாள்களிலும் இதுதான் தலைப்பு செய்தி.எப்பேர்ப்பட்ட தேச சேவை!) இது நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி “பெரிய அறவீழ்ச்சி” தான்.
 
இறுதியாக இக் கட்டுரையில் நீங்கள் மாய்ந்து மாய்ந்து ஒவ்வொருவரின் சுயரூபங்களை நேர்மையாகவும் சரியாகவும் தோலுரித்துக்காட்டினாலும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருமித்த குரலில் “விஜய்மல்லையாவை போன்றவர்களை” நீங்கள் தூக்கிப்பிடிப்பதாக நாளைக்கு உங்களுக்கு எதிராக கூறப்போகும் ‘வசைகள்’ இன்றே இப்போதே என் காதில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.
அன்புடன்,
அ.சேஷகிரி.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நான் தங்களின் சமீபகால வாசகன்.  உங்கள் இணையப் பக்கத்தில் வாசித்து ரசித்து விட்டு மௌனமாக இருந்து விடுவது என் இயல்பு.  பொதுவாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.  ஆனால் உங்களது மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை பற்றிய கட்டுரையை படித்த பிறகு நான் உங்களுக்கு எழுதியாகவேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.  என் நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு நற்செயலை – கருப்புப்பண ஒழிப்பு நல்லது என்றும் மனம் அறிந்தும் கூட ஆதரித்து எழுத ஊடங்களுள் நேர்மையாளர் ஒருவர் கூட இல்லையே என்ற வேதனை ஒருசில நாட்களாக என்னை வதைத்துக் கொண்டிருந்தது.  ஊடகங்கள் மக்களின் சில அசௌரியங்களை மிகவும் மிகைப்படுத்தி நாடகங்கள் நடத்துவத்திலே குறியாக இருகின்றன  என்பதும் அவற்றில் சில நேரடி திருடர்கள், மற்றவர்கள் ஊழல்வாதிகளிடம் காசு வாங்கிக்கொண்டு செயல்படுவோர் என்பதும் புரிந்தே இருக்கிறது.  சில நூறு உறுப்பினர்களை கொண்ட மகஇக அமைப்பு பற்றி ஒரு நண்பன் வாயிலாக சற்று அறிந்திருந்தேன். அவன் அந்த அமைப்பில் உறுப்பினர் அல்ல – அவர்களது பேசுக்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் அறிந்து கொள்பவன்.  “அவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள்.  மற்றபடி இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்மையிலே கம்யூனிஸ்ட்களே அல்ல போலி கம்யூனிஸ்ட்கள்” என்பான்.  இப்போது அவனும் கூட மகஇக-வினரின் பரிதவிப்பு கண்டு அதிர்ந்து போயுள்ளான்.  “பரவாயில்லை…..நீ ஒன்றும் நஷ்டப்படவில்லை…அவர்கள் ஒன்றும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல….நீ ஒன்றும் களம் புகுந்து காயங்கள் படவில்லை.  வெறும் பேச்சு தானே” என்று அமைதிப்படுத்தினேன்.  இன்று ஒரிசா மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்டைந்தனர் என்பது செய்தி.  காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது என்றும் செய்தி.  எல்லாமே கருப்புப் பணம் – ஊழல் ஆகியவை கொண்டே நடைபெற்று வந்தன போலும்.  இதில் நகைப்புக்குரியது என்னவென்றால் “மக்களால் கியூவில் நிற்பதால்” மிகவும் கவலைப்படும் இவர்கள் மாபெரும் வர்க்கப்போர் புரிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு கொண்டுவர பாடுபடுவதாக காட்டிக்கொள்வதுதான்.  ஊருக்கு முன்னால் நடிப்பது சரி…தங்கள் மனசாட்சியின் முன்பும் நடிப்பார்களா? “தன் நெஞ்சறிவது பொய்யற்க” என்பது?  அதுசரி அவர்களைப் பொறுத்தவரை மனசாட்சி உயிர் ஆத்மா என்பதெல்லாம் கிடையாதே.  வெறும் வெற்று அகங்காரங்களான, நேர்மையாளர்கள் போல் நடித்துவரும் இவர்களை தமிழ்மக்கள் மதிக்காமல் இருப்பது முற்றிலும் சரி.  உங்களுக்கு மீண்டும் என் நன்றி.விக்ரம்,
கோவை

இனிய ஜெயம்,

கடலூரில் பிரபலமான வணிகக் கடை  அது.   நிறைய பெண்கள் வேலை செய்வார்கள்.  பக்கத்து பெரிய துணிக் கடைகள் ஏஜண்டுகள் வழியே பேரம் பேசி, வேறு கடை பெண்களை அக் கடை வேலையை உதற வைத்து இக் கடையில் சேர்த்துக் கொள்வார்கள்.  ஒருநாள் வணிகக் கடை முதலாளி  தனது கடையில் இருக்கும் இருபத்து இரண்டு பெண்களையும் ஒரு விடுமறை நாளன்று சினிமாவுக்கு அழைத்து சென்றார். பெண்களுக்கு நம்ப முதலாளியா இப்படி என ஒரே ஆச்சர்யம்.   அவர் அழைத்து சென்ற படம்,   அங்காடித் தெரு.
மறுநாள் காலை முதலாளி அப் பெண்கள் வசம் அக்கறையாக சொன்னார் ”பொண்ணுங்களா பாத்துக்கங்க அவன் சொன்னான் இவன் சொன்னான்னு  துணிக்கடைக்கு வேலைக்கு போய்டாதீங்க, பாத்தீங்க இல்ல அதுதான் உள்ள நிலவரம்” என்றார்.   அத்தகைய முதலாளி   இரண்டு நாள் முன்பு  ”கவர்மெண்ட்டு சரியானதும்தான் சம்பளம் தரமுடியும்” என்று  ஒரு இரவு கடை சாத்தும்போது அறிவித்து விட்டு  அத்தனை பெண்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.
கடலூர் லான்ச்சடியில்  எப்போதுமே தலைமுறை தலைமுறையாக நடக்கும் வட்டித் தொழில். ஒருவர் வருவார் பைக் சைடு பாக்ஸில் லட்சங்கள் கிடக்கும்.  உள்ளூர்கூ டைக்கார பெண்கள் நூற்றுக்கணக்கில்  அவரிடம் ”ஒரு நாள் கடன்” வாங்குவார்கள். காலையில் வாங்கிய ஆயிரத்தை மாலை ஆயிரத்து நாற்பதாக தந்துவிட வேண்டும்.   லாஞ்சில் வந்து இறங்கும் லோடை அப்படியே ஒருவர் பேரம் பேசி அங்கேயே லாஞ்சுக்கு பணம் தந்து லோடை இறக்குவார். அவர் வசம் இந்த கூடைப் பெண்கள்  சில்லறைக்கு  மீன்  வியாபாரம் செய்ய  வாங்கிச் செல்வார்கள்.  கடந்த நான்கு நாட்களாக அங்கே எவரும் இல்லை.
அதிகாலை நான்கு முதல் ஆறு வரை  நடக்கும்  உழவர் சந்தை [இப்போது அது மொத்தமாக வேறு வணிகர்கள் கையில் கிடக்கிறது]  பூக்கடை வணிகங்கள் நான்கில் ஒன்றாக வந்து நிற்கிறது.  எதிர் கறிக்கடை பாய்,  ஆடுகள் கிடைக்காமல்  கடையை விடுமுறை விட்டு விட்டார்.   எங்கள் தெருவில் அடுத்தடுத்து மூன்று சாவு.  தெருமக்கள் கூடிப் பேசி  எங்கள் நகர் கோவில் உண்டியலை திறந்து, அந்த நாட்களை தாண்டினோம். கடலூரின் எந்த திரை அரங்கிலும் கட்டணம் நபருக்கு சாதாரண நாளில் நூறு ரூபாய்.  நட்சத்திரங்களின் நாளில்  பொதுமக்கள் வேட்கையை பொறுத்தது. கடந்து ஐந்து வருடங்களாக  எந்த அரங்கின் டிகட்டிலும் நகராட்சி முத்திரை காணக் கிடைக்காது. திரை அரங்க முதலாளிகளுடன் இணைந்து ஹோட்டல் முதலாளிகள் தாவங்கட்டையில் கை தாங்கி அமர்ந்திருக்கிறார்கள்.
தென்  மாவட்டங்களில்  தேங்காய் முதல்  மிளகாப்பத்தை வரை  விவசாயிகள்  விளைவிக்கும் எதற்கும் ஒற்றுமை என்றும் பலமாம்  எனும் கொள்கையில் ஒன்றிணைந்து அடிமாட்டு விலைக்கு அவற்றை வாங்கி, அதை பதுக்கி விற்றே பழகிய பிஸ்னஸ் மாக்னட்டுகள்  மண்டையை சொறிந்துக்கொண்டு நிற்கிறார்கள்.
நல்லதும் கெட்டதுமாக வெளிப்படப் போகிற  நாட்டுக்குத் தேவையான அதிரடி மாற்றம்தான்.  ஆனால் ஒவ்வொரு இடரிலும் காணாமல் போகும் ஒரு கூட்டம் உண்டு. கடலூரின் கைத்தறி விசை குடும்பங்கள் முன்னூறு. தானே புயலுக்குப் பின் ஒருவர் கூட மீள வில்லை.  வங்கிக் கட்டுப்பாட்டில் வராத அத்தனை வணிகமும்  அரசை கவிழ்க்கும் வணிகம் அல்ல.  திருட்டு டிவிடி விற்பவனும். எங்கள் கடல் கூடைக்கரப் பெண்ணும் ஒன்றல்ல.
இந்த மங்கள்யான் காலத்திலும் கடலூர் திரை அரங்கில், காக்காவ ககூஸ்ல போ என்று விளம்பரம் வழியே அரசு  போதிக்கிறது. எனில்  வங்கியின் பொருளாதார அலகுக்குள் வராத  ”பண்படாத சிவிலியன் ” வசம்  ஒரு மூன்று வருடமாவது  பிரச்சாரமாக  வங்கிப் பொருளாதாரம் குறித்து அரசு பேசி இருக்க வேண்டும்.     நமது பணி இடங்களின்  சுமட்டுத் தனங்களை  கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.   தமிழ்நாட்டைப் போல பரக்காவெட்டி மக்கள் உலகிலேயே வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். மைல் நீள யேடேஎம்  வரிசையில், கடைசியில் நிற்கும் பென்ஷன் முதியவர் பற்றி கவலையே இன்றி, முந்தி நுழைந்தவர்  நான்கு ஐந்து கார்டுகளை செருகி  மெஷினை காலி செய்தது வெளியேறுகிறான்.
என்தரப்பு என சொல்வதற்கு ஏதும் இல்லை. நாளைய பொன்னுலகம் அது நாளை மலரட்டும். ஆனால்   குடிக்கார கணவன், பள்ளி செல்லும் மகள்களுடன்  அதனை பேரையும் தாங்கும் ”பொருளாதாரப் பண்பாடற்ற” கூடைக்கரப் பெண், இந்த பாரத விரி நிலத்தில்  அதன் சாரத்தை கண்டடைய  அலையும், எதோ ஒரு  மண்ணில்  முடங்கிய ஏடிஎம்  முன் நிற்கும் ஒரு பயணி . நான் அவர்கள் பின்னே நிற்கிறேன்.  எல்லாம் கொஞ்ச நாளில் சீர்பெற்று விடும்  என அவர்களுக்கு மானசீகமாக சொல்கிறேன்.
கடலூர் சீனு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. நீண்ட நாட்களுக்கு பின் இந்த கடிதம்..

தங்கள் மோடி, கருப்பு பண ஊழல் ஒழிப்பு, ஊடகங்கள் பதிவை படித்ததும் இக்கடிதத்தை எழுதுகிறேன். பொருளாதாரம் தங்கள் துறை இல்லை என்று முன்பு கூறியிருந்தாலும், மிக கறாராக, விவரமாக எழுதியுள்ளீர்கள். ( கட்டுரை ஆரம்பத்தில், நீங்கள் மோடியின் இந்த முடிவை எதிர்ப்பீர்களோ என வியந்தேன்..).. என் எண்ணங்கள் சிலவற்றை பகிற்கிறேன்..

இன்று ATM இல் பணம் எடுக்கும் போது நீங்கள் கூறியது போல் 15 நிமிடங்கள் தான் ஆகியது, என் வீடு அருகே உள்ள ATM மையங்கள் அனேகமாக, நான் பார்க்கும் போதெல்லாம், அதிகப்படியாக 15 பேர்தான் காத்திருக்கிறார்கள்..இன்னும் சில நாட்களில் அதுவும் இன்னும் குறையும் கண்டிப்பாக.

சிந்தித்து பார்த்தால், இப்போது உள்ள தட்டுப்பாடும், அனேக மக்களின் தேவையற்ற பயத்தினால் தானோ என தோன்றுகிறது. இன்று வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கும் எத்தனை பேருக்கு பணம் கட்டாயமாக அன்றாடம் தேவை பட வாய்ப்புள்ளது ?. தினம் 2000 என்பது அனேகம் மக்களுக்கு தேவை இருக்காது என்றே தோன்றுகிறது. அதுவும், இத்தகைய தருணத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவமான செயலை வெற்றி பெற செய்ய, நாம் நம் செலவுகளை மேலும் கறாராக பரிசீலித்து செலவை குறைத்தால் ATM இல் பணம், உண்மையிலேயே தேவை படுபவர்களுக்கு கிடைக்க பெறும்..

ஆம் கண்டிப்பாக, சிறு வணிக, வியாபாரிகள் சில்லறை பணம் இல்லாததால் கஷ்ட படுகிறார்கள். மொத்த வியாபாரிகளிடம் எப்போதும் வாங்கும் சில்லறை வியாபாரிகள், கணக்கில் வைத்து வாங்க முடியும். ஆனால், பல பொருட்கள், சில்லறை வியாபாரிகளிடமே வாங்க முடிகிறது என்றும் அச்சமையத்தில் கணக்கில் வாங்குவது சிரமம் என்றும் அறிந்தேன்.. ஆனால் யாரும் வெறுப்பை உதிர்க்கவில்லை. ‘ புதிய 500, 1000 நோட்டுக்கள் அடித்து கொண்டு வந்தால், தேவையான நோட்டுக்கள் கொண்டு வர இன்னும் 7, 8 மாதங்கள் ஆகும் என்பதால், அரசு புத்திசாலித்தனமாக 2000 நோட்டை வெளியிட்டுள்ளது ‘ என்று கூலித் தொழிளாளி ஒருவர் வரிசையில் நிற்கும் போது கூறுவது கேட்கும் போது, மோடியின் இந்த அதிரடிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

செய்தி வந்த சில நாட்களிலேயே, ‘அரசுக்கு நெருக்கமான பெரு முதலாளிகள், ஏற்கனவே விஷயம் தெரிந்து அவர்களின் ரூபாய் நோட்டுக்கள் யாவற்றையும் மாற்றி விட்டார்கள், அம்பானியின் ஜியோ திட்டம், இந்த பிரச்சினையில் இருந்து தப்பத்தான், என்று பல செய்திகள், வதந்திகள்..யோசிக்காமல், ஆராயாமல் பரப்பப்படும் வதந்திகள்…

மிக வருத்தமான நிகழ்வு, இதை பயன்படுத்தி உருவாகி உள்ள பணத்தரகர்கள்.. 10, 20 % கமிஷனுக்கு, கருப்பு பணத்தை ஏழை, வங்கி கணக்கு உள்ள அடித்தள மக்களை பயன் படுத்தி வங்கியில் போட்டு எடுத்து கொடுப்பது, ஊழியர்களுக்கு 3 மாதம் ஊதிய முன்பணம் அளிப்பது, வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு அடையாள ஆதாரங்களை வைத்து அனுமதிக்கபட்ட அளவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது என்று மீண்டும் system ஐ ஏமாற்ற கிளம்பி விட்டார்கள்.. ஒரு விதி அல்லது கட்டளை விதிக்கப்பட்டால், அதை மதிப்பதை விட அதை எப்படி எல்லாம் உடைக்கலாம் என்றுதான் மக்கள் முனைப்பு காட்டுகிறார்கள்..

திரு மோடியின் இந்த அதிரடியை உடைக்க நூறு வழிகளை ஏமாற்றுபவர்கள் கண்டு பிடித்தாலும், 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அடியோடு அழித்ததிலும், வருமான வரி கட்டாமல் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்ததிலும், பங்கு சந்தையை விட பல மடங்கு பெரிதான இந்தியாவின் unorganized பொருளாதார உலகை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிலும், இந்த அரசுக்கு பெரிய வெற்றியே…

தங்கள் சிங்கப்பூர் அனுபவத்தை பற்றியும் ( சிங்கை இலக்கியம் பற்றி நீங்கள் எழுதியது தவிர), நீங்கள் எடுத்து பங்களித்த கல்வித்திட்டத்தை பற்றிய தங்கள் அனுபவம், கருத்து பற்றி அறிய ஆவல்.. அதை பற்றிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளதா ?

அன்புடன்

வெண்ணி

 

 

அன்புள்ள ஜெ,

 

கருப்புப்பணம் குறித்த தங்கள் பதிவை பார்த்தேன். ஆழமான வருத்தம் ஒன்றே ஏற்பட்டது. ஏற்கனவே இந்த ஊடக வெள்ளத்திற்குப்பின் நான் மதிக்கும் சில நண்பர்கள் கூட மோடி எதிர்ப்பு டெம்ப்ளேட் மனநிலைக்கு சென்றடைந்ததால் அவர்களுடன் விவாதித்து சோர்ந்திருந்தேன். வேறென்ன சொல்ல, சாமானியனுக்காக கண்ணீர் விடும் புரட்சியாளர்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

இந்த எதிர்மனநிலைக்கு ஊடகங்கள் மட்டும் காரணமாக நினைக்கவில்லை. பொதுவாக இந்தியாவில் வரி என்பதே கொடுங்கோலன் ஒருவன் தன் சுகபோகத்துக்காக மக்களிடம் (குறிப்பாக அன்றாடங் காய்ச்சிகளிடம்!) அடித்து பிடுங்கப்படும் ஒன்றாகவே  பெரும்பாலானவர்கள் நம்ப விரும்புகிறார்கள். இந்நிலையில் எவ்வித கண்காணிப்புமற்ற பொருளியலையும் ஊழலையும் தன் அன்றாட வாழ்முறையாக கொண்ட நம் மக்களுக்கு, இந்நடவடிக்கை ‘தன் ஊழலுக்கும்’ எதிராகத்தான் என்பதை அவர்களின் ஆழம் ஏதோ ஒரு புள்ளியில் உணர்கிறது. அதை மறைக்கவே ஊடகச் செய்திகளை பற்றுகோலாக கொள்கிறார்கள்.

 

இரண்டாயிரத்தை வாடகையாகக் கொடுத்துவிட்டு அதை எட்டாயிரமாக HRA வில் கணக்கு காட்டும் ஒருவன், ரசீதில்லாமல் கைபேசி வாங்குவதற்கு சில நூறுகளை லஞ்சமாக பெற்றுக் கொள்ளும் ஒருவன் பேஸ்புக்கில் அம்பானி குறித்து கேள்வி எழுப்பாவிடடால் தன் நேர்மையை வேறெப்படித்தான் நிறுவிக்கொள்வது?

 

இன்று கருப்புப்பணத்திற்காக குரல் கொடுக்கும் சாமானியர்கள் அனைவரும் இத்தனைநாள் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் வியாபாரிகளிடமும், தேர்தலின்போது அரசியல்வாதிகளிடமும் வாங்கிய லஞ்சப்ப பணத்திற்கு விசுவாசமாக குரல்கொடுக்கிறார்கள், அவ்வளவுதான். ஒருவேளை இந்நடவடிக்கையால் எதிர்காலத்திலும் தான் நியாயமாக ‘அனுபவிக்க வேண்டிய இச்சலுகைகள்’ பாதிக்கப்படுமா என்ற ஐயமே அவர்களை நிலையழிய செய்கிறது.

 

இது எவரிடமோ உள்ள கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக பலரும் நினைக்கவில்லை. ஓவ்வொருவரும் உள்ளூர தெளிவாகவே உணர்வார்கள் தன்னிடமுள்ள கருப்பு பணத்தைப் பற்றி. அளவில் சிறியதாக இருப்பதாலேயே எதுவும் செய்யாமலே அப்பணத்தை இந்நடவடிக்கையிலிருந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் பயப்படுவது வேறொன்றை குறித்து. தன் எதிர்கால பகற்கனவுகளில் அவர்கள் குவிக்க நினைக்கும் பெரும்பணத்தில் சிறுபகுதியை வரியாக கட்ட நேரிடலாம் என்பதே இவர்களுக்கு அச்சமாகவும்  சீண்டலாகவும் உள்ளது.

 

ஆனால் மோடிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்வதில் பெரும்வசதி உள்ளது. இதுவரை தான் அன்றாடம் ஈடுபட்டுவந்த ஊழல்குறித்த குற்றவுணர்வு கொள்வதோ அதற்கான பிழையீடு செய்வதோ தேவையில்லை. மாறாக அனைத்து பாரத்தையும் கடவுளிடம் இறக்கிவைப்பதை போல மொத்த பழியையும் மோடி, அம்பானி, அதானி வரிசைமேல் போட்டுவிட்டால் நிம்மதியாக உறங்கலாம். மேலும் டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து அல்லாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்காக குரல் கொடுக்கும் புரட்சியாள பிம்பமும் சுயதிருப்தியும் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்?

இப்படிக்கு,

தே.அ.பாரி

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் – விமர்சனங்கள் 13
அடுத்த கட்டுரைதற்பிரிந்து அருள்புரி தருமம்