சிரிக்காத புத்தர்

hes

 

சித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி’க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து வந்த நீண்ட பாதை நினைவுக்கு வந்தது போலும். ஞானத்திற்கான தேடலின் தவிப்பையும் தத்தளிப்பையும் மையப்படுத்தக்கூடிய நாவல் அவருடைய `சித்தார்த்தா’. திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது. பிறகு இதன் மலிவுப்பதிப்பை `ராணிமுத்து’ நிறுவனம் வெளியிட்டது. தமிழினி பதிப்பகம் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

சித்தார்த்தா இந்திய ஞானச்சூழல் குறித்தும் இந்தியாவின் மெய்மை தரிசனம் குறித்தும் பேசக்கூடிய நாவல். ஆனால் அடிப்படையில் இது ஒரு மேற்கத்திய நாவலேயாகும். இதன் சித்திரிப்பிலும் சரி, தரிசனத்திலும் சரி, இந்தியத்தன்மை அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்திய வண்ணங்களால் தீட்டப்பட்ட ஒரு மேற்கத்திய ஓவியம் இது. அவ்வகையில் இது முக்கியமான புனைகதையேயாகும்.

சித்தார்த்தா’வின் கட்டமைப்பில் மேற்கத்திய முன்னுதாரணங்களின் பாதிப்பே அதிகம். அதில் ஒன்று தாந்தேயின் `டிவைன் காமெடி.’ யுலிசஸின் நரக யாத்திரை என்ற பயணம் கிறிஸ்தவ மரபில் ஆழ வேரூன்றியது. அதுவே ஜான் பன்யனின் `பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்’ என்ற புகழ்பெற்ற நூலின் முன்னோடி. முக்கியமான மேற்கத்திய விமர்சகர் ஒருவர் சித்தார்த்தாவில் டான் குவிசாட்டின் பாதிப்பும் உண்டு என்று கூறியிருக்கிறார். அது சற்று அதிகப்படியான ஊகம். தேடலின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டும் படைப்பு டான் குவிசாட். அவ்வகையில் தேடல் குறித்த எந்தப் படைப்பிலும் அதன் சாயலைக் காணலாம். சித்தார்த்தாவில் டான் குவிசாட்டில் உள்ள அங்கதம், சுய எள்ளல் அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஜெர்மனியச்சூழலில் இந்திய பேரிலக்கியங்கள் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பரவலாக அறிமுகமாயின. அப்போது ஜெர்மனி தத்துவத்தின் விளைநிலமாக இருந்தது. ஹெகல், நீட்சே போன்றவர்களின் காலம் அது. தர்க்கபூர்வமாக மானுட இருத்தலையும் அதற்கு வரலாற்றுப்பெருக்கிலும் பிரபஞ்ச பேரமைப்பிலும் உள்ள இடத்தையும் வகுத்துரைக்கும் முயர்சிகள் ஓர்மூச்ச எல்லையை அடைந்து திகைத்து நின்ற காலகட்டம். அப்போது அறிமுகமான இந்திய தத்துவநூல்களும் பேரிலக்கியங்களும் அவர்களில் ஒருசாராருக்கு ஆழமான மனநகர்வை அளித்தன. ஜெர்மானிய ஆசிரியர்கள் பலரும் இந்தியஞானமரபின் தாக்கமுள்ள ஆக்கங்களை எழுதியிருக்கிறார்கள்.புகழ்பெற்ற உதாரணம் தாமஸ் மன் எழுதிய மாற்றிவைக்கப்பட்ட தலைகள்.

ஆனால் இந்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் உண்மையில் இந்திய ஞானமரபுக்குள் நுழையவேயில்லை என்றே சொல்லவேண்டும். அவர்களுக்கு அங்கே இருந்த தேடலுக்கு இந்திய இலக்கியமரபையும் ஞானமரபையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்திய மரபு அளிக்கும் மாற்று வழிகளுக்குள் வர அவர்கள் முந்நூறாண்டுகளாக ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாக்கி அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஞானமரபை கழற்றிவிட்டு கீழ்த்திசை நோக்கிக் காலடி எடுத்து வைக்கவேண்டும். அது பெரும்பாலும் நிகழவில்லை. இந்திய- கீழைநாட்டு ஞானமரபுள் வந்து எழுதிய எந்த ஐரோப்பிய இலக்கியவாதியும் இல்லை என்பதே உண்மை.

உண்மையில் அவ்வாறு வருவதற்கு மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளவர் ஹெர்மன் ஹெஸ்தான். அவரது தாய்வழித்தாத்தா ஹெர்மன் குண்டர்ட் கிறித்தவ மிஷனரியாக கேரளத்துக்கு வந்து பலவருடங்கள் இங்கேயே வாழ்ந்தவர். மலையாள மொழிக்கு முதல் நவீன அகராதியை தயாரித்தவர். வாழ்நாளின் இறுதியில் அவர் கிறித்தவ மதநம்பிக்கைகளில் இருந்து வெகுவாக விலகி கீழைநாட்டு மதங்களின் ஆழ்ந்திருந்தார். ஹெர்மான் ஹெஸ் அவரது இளமைக்காலத்தில் தாத்தாவுடன் பழகி வாழ்ந்தவர்.தாத்தாவின் வீட்டில் இருந்த இந்தியச் சிற்பங்களாலும் ஒவியங்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவர். அவரது சுயசரிதையில் அவர் இளம்வயதிலேயே உபநிடதங்களாலும் கீதையாலும் கவரப்பட்டதை நாம் வாசிக்கலாம்

ஆனால் ஹெர்மன் ஹெஸ் இந்தியா வந்ததில்லை. அவர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போதுகூட இந்தியா வர திட்டமிடவில்லை. இந்தியா பற்றிய தன் கனவுகளை யதார்தம் கலைத்துவிடக்கூடும் என அவர் அஞ்சினார். இந்த தயக்கம் அவருக்கு தத்துவத்திலும் இருந்திருக்கிறது. இந்தியாவை அவர் ஒரு கனவுத்தளத்தில் வைத்திருந்தார். அழகிய குறியீடுகளை உருவாக்கியளிக்கும் ஒரு விளைநிலமாக மட்டும் அதை தனக்குள் கொண்டு சென்றார். அதுவே அவரது புனைகதைகளின் இயல்பைத் தீர்மானித்த அம்சமாகும்.

ஹெர்மன் ஹெஸ் தத்துவார்த்தமாகப் பார்த்தால் இருத்தலியர். வேறெந்த தத்துவஞானியைவிடவும் மார்ட்டின் ஹைடெக்கர்தான் அவரை ஆழமாக பாதித்திருக்கிறார். ஹெஸ்சியின் ஆன்மாவை நாம் காண்பதற்கு மிக உகந்த நூல் என்பது ஸ்டெப்பி ஓநாய் [Steppan wolf] வாழ்நாள் முழுக்க தன்னந்தனிமையில் இருக்கும் ஸ்டெப்பி ஓநாயைப்போன்ற ஒரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள் செல்கிறார் ஹெஸ்ஸி. அது அவருக்கு மிகப்பழக்கமான அகம், அவருடைய சொந்த அகம். தன்னந்தனிமையில் தன் பிறவிக்குணத்தால் முகர்ந்து முகர்ந்து வழிதேடி அலையும் ஸ்டெப்பி ஓநாயின் இன்னொரு வடிவமாகவே அவர் சித்தார்த்தனை உருவாக்கியிருக்கிறார். அது இந்தியா கண்ட சித்தார்த்தன் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா கண்ட சித்தார்த்தன்.

பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிந்திக்கும் ஐரோப்பிய மனம் உலகசிந்தனைகள் அனைத்தையும் தன்முன் குவித்துப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. விரிவான காலனியாதிக்கம் மூலம் உலகமெங்கும் இருந்து கலைகளும் இலக்கியமும் தத்துவமும் ஐரோப்பாவை வந்தடைந்தன. அந்த பெரும் குவியலை துழாவிக்கொண்டே இருக்கும் ஐரோப்பிய மனம் தேடியது, எனக்கான வழி எது? எனக்கான மீட்பு எது? எனக்கு மட்டும் உரிய பதில் எது? இந்த தேடலை அக்காலத்தின் பல ஆக்கங்கள் பலவகைகளில் சொல்கின்றன. இந்த வினாவே இருத்தலியமாக உருவம் கொண்டது. சித்தார்த்தன் வழியாக ஹெஸி முன்வைக்கும் தேடலும் இந்த ஐரோப்பிய நிகழ்வேயாகும்.

தமிழ்ச்சூழலில் நாம் சித்தார்த்தாவுடன் உடனடியாக ஒப்பிடவேண்டிய படைப்புகள் பல. முதன்மையானது மணிமேகலை. ஓர் எல்லைவரை நீலகேசி. இப்புராதன நூல்கள் ஞானத் தேடலின் பயணத்தைச் சித்திரிப்பவை. மணிமேகலையின் தேடல் மிக விரிவானது. வாழ்வின் அனைத்து தளங்களையும் தொட்டு பரவுவது. காதல், கருணை என்று உன்னதத்தின் படிகளை ஏறி அவள் துறவின் அரியணைமீது அமர்கிறாள். ஆணாகவும், பெண்ணாகவும் அந்தத் தேடல் நீள்கிறது.

இந்தத் தேடலுடன் சித்தார்த்தனின் தேடலை ஒப்பிட்டுப் பார்த்தால் உடனடியாகத் தென்படும் வித்தியாசம் விதி என்னும் கருத்துதான். மணிமேகலையின் ஞானத்தேடல் அவளுடைய பயணம் அல்ல. ஊழ் அவளை இட்டுச் செல்கிறது. அவள் அந்த பயணம் வழியாக சுத்தீகரிக்கப்பட்டு, பூச்சுகள் களையப்பட்டு தன்னுடைய சாரத்தைக் கண்டடைவாள் என ஊழ்விதி உள்ளது. ஆகவே அவள் பெறும் அனுபவங்கள் அனைத்துமே பயனுள்ளவை, தெளிவான இலக்குள்ளவை. எவையுமே பொருளற்றவை அல்ல.

ஆனால் சித்தார்த்தனோ தன்னுடைய ஒவ்வொரு பாதங்களையும் மிகுந்த பிரக்ஞையுடன் எடுத்து வைக்கிறான். விதி என்பதை இத்தகைய புனைவு வெளியில் `தவிர்க்க முடியாமை’ என்றோ `நமக்கு அப்பார்ப்பட்ட வல்லமைகள் என்றோ எடுத்துக் கொள்ளலாம். வாழ்வைப் பற்றிப் பேசும்போது இந்த அதீத அம்சம் எப்போதும் கணக்கில் கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால் சித்தார்த்தாவில் சித்தார்த்தனை மீறியதாக ஏதும் நிகழவில்லை. ஆகவேதான் உலகப்புகழ் பெற்ற இந்த படைப்பு அதன் அனைத்து அழகுகளுடன் இந்தியப் பார்வையில் ஒரு `சிறிய படைப்பு’ என்று கூறும் நிலையில் உள்ளது.

தன் வாழ்வை ஒரு தேடலாகவும் பயணமாகவும் மாற்றிக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால் அவனுடைய வாழ்வின் மீது அவனுடைய கட்டுப்பாடு என்பது பல சமயம் மிகமிக மேலோட்டமான ஒன்றேயாகும். அவனை மீறிய, அவனால் ஒருபோதும் புரிந்து வகுத்துவிட முடியாத, ஆழ் நீரோட்டங்களினால் அலைகடல் துரும்பென அவன் அடித்து செல்லப்படுகிறான். அந்நிலையில் அவனுடைய பயணம் ஒருபோதும் நேர்கோடாக இருக்க முடியாது. தன் வாழ்வின் இறுதியில் தன் பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில் தேடல் குறித்த தன் இளமைக்கால கற்பனைகளின் அபத்தம், வாழ்வின் அடியோட்டமாக உள்ள மகாநதிகளின் பேரொலி, அவனை அடையும்.

download

ஹெஸியின் சித்தார்த்தா துல்லியமான ஒரு நேர்கோடு. பிராமண இளைஞனாகிய சித்தார்த்தன் மிக இளம் வயதிலேயே ஞானத்தின் புயலை கிளப்பும் முதல் பெருவினாவை எதிர் கொள்கிறான். சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் ஞானம் வழியாக உலகியலின் அலைகளினூடாக அவனுடைய தேடல் ஊடுருவிச் செல்கிறது. இறுதியில் கங்கையில் ஒரு படகோட்டியாக அவன் தன்னை உணர்கிறான். நட்சத்திரங்கள் கண்களாக மலர்ந்த வானகப் பெருக்கு போல வழியும் மகாநதியில் தன் தேடலின் விடை அவனுக்கு கிடைக்கிறது. மறை பொருளான அந்த மெய்ஞானம் நதிக்கரையில் இறந்து கிடக்கும்போது அவன் உதடுகளில் ஒரு மெல்லிய முறுவலாக தேங்கி நிற்கிறது.

ஒரு மேற்கத்திய மனம் இந்திய ஞான மரபு குறித்து செய்து கொண்ட விருப்பக் கற்பனை இது. இந்திய ஞான மரபில் சித்தார்த்தனுக்கு இணையான பயணம் ஒன்று சித்திரிக்கப்பட்டிருக்குமெனில் அது இவ்வாறு நேர்கோடான பாய்ச்சலாக இருக்காது. அதன் ஒவ்வொரு கணமும் தராசு போல சமன்படுத்தப்பட்டிருக்கும். அகம் பிரம்மாஸ்மி என்று அமர்ந்த ஞானியின் அருகே கற்சிலையைக் கண்ணீரால் நனைத்து அதே மெய்ஞானத்தை அடைந்த ஞானியும் அமர்ந்திருப்பார். சித்தார்த்தன் உதறியவற்றின் மூலமே முழுமையின் மெய்மையை அடைந்தவர்களும் அதே நாவலில் ஊடாகப் பரவியிருப்பார்கள். அவன் அடைந்தவற்றை முற்றாக நிராகரிக்கும் ஒரு பயணமும் அவனுடன் இணையாக நிகழ்ந்து அதே உச்சத்தில் சென்று தொட்டிருக்கும்.

ஹெர்மன் ஹெஸியின் சித்தார்த்தன் ஒவ்வொரு தருணத்திலும் அதுவரை அவன் அடைந்தவற்றை நிராகரித்து அடுத்த தளம் நோக்கிச் செல்கிறான். அந்த அனுபவங்களில் இருந்து அவன் பெற்ற ஞானம் என்பது அந்த அனுபவங்களுக்குச் சாரமில்லை என்பதே. சாரமான, முழுமையான உண்மை என்பது முன்னால் எங்கோ உள்ளது என்ற எண்ணமே அவனை வழி நடத்துகிறது. அதை அவன் இறுதியில் கண்டடைகிறான். அது சர்வசாதாரணமாகவும் மகத்துவம் கொண்டதாகவும் உள்ளது.

ஆனால் புத்தர் அவ்வாறு நிராகரிக்கவில்லை. ஒன்றை அடைந்தபின்னர் அந்த அனுபவத்தின் முழுமையின் உச்சியில் இருந்தே அவர் அடுத்த உச்சம் நோக்கிச் செல்கிறார். அவரது வழி என்பது மத்திம மார்க்கம். அல்லது சமன்வயம். இணைத்தும் தொகுத்தும் கொண்டு மேலே செல்லுதல் அது. நிராகரிப்பினூடாக அல்ல செரித்துக்கொள்ளுதலினூடாகவே புத்தர் அவரது மெய்ஞானத்தை நோக்கிச் செல்கிறார்.

ஹெஸியின் நாவலில் சித்தார்த்தனுக்கும் கமலாவுக்குமான உறவு அதிகமாக அழுத்தப்பட்டிருக்கிறது. இருத்தலியல் சார்ந்த எல்லா சிந்தனையாளர்களுக்கும் காமம் ஒரு பெரும் சிக்கலாக இருந்திருக்கிறது. காமத்தின் பாவ உணர்ச்சியும், காமம் உருவாக்கும் உறவுச்சிக்கல்களும் அவர்களுடைய இருத்தலியல் கோட்பாடுகளை பரிசீலிப்பதற்கான முக்கியமான களம். ஹெர்மன் ஹெஸியின் இந்த சித்தரிப்புடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது நிகாஸ் கஸந்த் ஸகீஸின் கிறிஸ்துவின் கடைசி சபலம் [Last temtation of Christ] நாவலில் மேரி மக்தலீனாவுக்கும் கிறிஸ்துவுக்குமாந உறவு சித்தரிக்கப்பட்டிருக்கும் விதமே. கிறிஸ்து தானடைந்த மெய்ஞானத்தை மேரியுடனான உறவை வைத்தே மதிப்பிட்டு பார்க்கிறார்.

ஆனால் இந்திய காவியமரபில் காமம் அந்த வகையான தத்துவச்சிக்கல்களை உருவாக்குவதில்லை. அந்த வினாக்கள் வெகுநாட்களுக்கு முன்னரே கடந்து செல்லப்பட்டுவிட்டன. காமம் என்பது உலகியல் உறவு. உலகியலுக்கு அப்பல் செல்ல வேண்டும் என்று உன்னும் ஒரு பிரக்ஞை அதை துறந்து மேலே செல்லவேண்டும், அவ்வளவுதான். அதில் குற்றவுணர்ச்சியை இந்திய மனம் படியவைப்பதில்லை.

ஹெர்மன் ஹெஸின் சித்தார்த்தனின் பயணம் ஒற்றைப்படையானது. அம்புபோல அவன் ஒரு இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். அவனுடைய வினா என்பது இருத்தலின் உண்மையைப்பற்றியதே. இருத்தல் மட்டுமே இருத்தலின் ரகசியம் என்று அவன் கண்டடைகிறான் எனலாம். கேள்விகளற்ற, தன்னுணர்வற்ற எளிமையான இயல்பான இருத்தல். அது ஒரு முழுமைநிலை என்று ஹெஸ்ஸியின் பிரக்ஞை கண்டடைகிறது. அதை சித்தார்த்தன் மேல் ஏற்றிச் சொல்கிறார்.

images (19)

ஆனால் தர்க்கஞானத்தால் வாழ்க்கையையும் காலவெளியையும் அள்ளி அள்ளிச் சோர்ந்துபோன இருத்தலியளாரின் அந்தரங்க பகற்கனவு மட்டும்தான் அது. பிரக்ஞை விழிப்பு கொண்ட ஒருவன், அப்பிரக்ஞையின் விழிப்புநிலையை ஒரு வதையாக உணரக்கூடிய ஒருவன், அதைக் கழற்றிவிட்டு எளிய வெறுமையின் நிம்மதியை எய்தி நிற்க ஆசைப்படுகிறான். இந்த விழைவையே ஹெஸ்ஸி மெய்ஞான முடிவாக முன்வைக்கிறார். இருத்தலியல் படைப்பாளிகளில் பலர் வந்தடைந்த முடிவுதான் இது

இதற்கு ஒரு ஐரோப்பிய பின்னணி உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தத்துவமும் மதமும் மறுமலர்ச்சி அடைந்தபோது மதமற்ற தத்துவமற்ற ஒரு வாழ்க்கைக்கான பகற்கனவு சில கவிஞர்களின் மனதில் எழுந்து மெல்ல தத்துவத்தில் வேரூன்றியது. ‘கள்ளம்கபடமற்ற’ மேய்ச்சல் வாழ்க்கைக்கான கனவு. அக்கனவை வேர்ட்ஸ்வர்த் போன்றவர்கள் கவிதையில் நிலைநாட்டினர். ரூஸோவும் தோரோவும் தத்துவத்தில் நிலைநாட்டினர். அந்த Pastoral யதார்த்ததையே இந்நாவலில் ஹெஸ்சியும் சித்தார்த்தனின் முக்திநிலையாக முன்வைக்கிறார்.
மீண்டும் நிகாஸ் கஸந் ஸக்கீஸின் படைப்புடன் இந்த நாவலை ஒப்பிடலாம். ஹெஸ்ஸியின் சித்தார்த்தன் வந்தடைந்த புள்ளியில் ஏற்கனவே சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் ஸோர்பா.

ஆனால் பௌத்தமும் அதன் வழிவந்த ஞான மரபுகளும் முன்வைக்கும் முக்தி நிலை இதுவா? தேடலின் பொருளின்மையை உணர்ந்து அதை கழற்றிவிட்டுவிட்டு இயற்கையைச் சரணடைந்து கொள்ளும் எளிய நிம்மதியா அது? அப்படிச் சொல்ல முடியாது. பௌத்தம் முன்வைப்பது சூனியத்தை. அறியமுடியாமையின் எல்லையின்மையை அறிதலாக ஆக்குவதே சூனியம். அந்த அறிதல் அளிக்கும் நிறைவே பௌத்தம் சொல்லும் நிர்வாணம். அது கேள்வியின்மையின் நிம்மதி அல்ல அல்ல பதிலின் நிறைநிலை.

ஆகவேதான் கீழை ஞானத்தில் அபத்தத்திற்கு, அங்கதத்திற்கு எப்போதும் இடமிருக்கிறது. தன் ஞானத்தை நோக்கி சிரிப்பவனே ஆகப்பெரிய ஞானியாக இருக்கிறான். சித்தார்த்தனிடம் சிரிப்பே இல்லை. சித்தார்த்தன் வந்தடையும் புள்ளியை நிராகரித்து மேலே செல்லும் ஒரு வாசகன் சித்தார்த்தனை நிராகரிக்க நேரும். அந்நாவலை முழுமையாக கடந்து செல்ல நேரும். அதனாலேயே அது ஒரு நிரந்தரமாக பெரும்படைப்பாக இல்லாமல் ஒருகாலகட்டத்தின் படைப்பாக உள்ளது.

[சித்தார்த்தன் _ ஹெர்மன் ஹெஸ்ஸே, தமிழில்: திருலோக சீதாராம்; முதல் பதிப்பு வெளியீடு: 1957, மூன்றாம் பதிப்பு வெளியீடு: 1999; தமிழினி பதிப்பகம், 342 டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014)

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய் உரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36