ஒரு தெருவை எப்படி வர்ணிப்பது? தமிழிலக்கியத்தின் பிரபலமான வர்ணனைகளை நினவுகூரலாம். புதுமைப்பித்தன் ஒற்றையடிப்பாதை இட்டுச்செல்லும் திருநெல்வேலி சிற்றூர்களை வர்ணித்திருக்கிறார். தி.ஜானகிராமன் காவேரிக்கரையை காட்டியிருக்கிறார். சுந்தர ராமசாமி புளியமரத்து சந்திப்பை விவரித்திருக்கிறார். கி.ராஜநாராயணன் கரிசல்காட்டை பிரியமாக சித்தரித்திருக்கிறார்
இந்த சித்தரிப்புகளுக்கு உள்ள பொது அம்சம் என்னவென்றால் இவையெல்லாமே அபூர்வமானவை என்பதே. அல்லது இக்கலைஞர்கள் அந்த யதார்த்ததில் இருந்து ஓர் அபூர்வத்தன்மையைக் கண்டடைந்தது அதை முன்வைத்து அந்தச் சித்திரத்தை நம் மனதில் அழியாமல் உருவாக்குகிறார்கள். இலக்கிய விவரிப்பின் நுட்பமே அதுதான். ஒரு சூழலில் உள்ள அசாதாரணமான ஒன்றை சுட்டிக்காட்டி அதன் தனித்தன்மையை உணர்த்துவது. அந்த அசாதாரண விஷயத்தை வாசகன் ஏற்கனவே அறிந்த சாதாரண விஷயமொன்றில் இருந்து அவன் தன் கற்பனைமூலம் வந்தடையக்கூடியதாக ஆக்குவது.
ஆனால் அந்த வசதி இயல்புவாதத்துக்கு இல்லை. அது அனைத்தையும் சர்வசாதாரணமாகக் காட்டுவதையே தன் கலையாகக் கொண்டிருக்கிறது. அது வாசகனின் கற்பனையை மேலே எழ விடுவதில்லை, தன்னைச்சுற்றிப் பரவ விடுகிறது. எந்த மன எழுச்சியையும் அது கவனமாக விலக்கவே முற்படுகிறது. அந்நிலையில் அது ஒவ்வொன்றையும் அதன் அன்றாடநிலையில் வைத்து காட்டுவதன் மூலமே சித்தரித்தாகவேண்டும்.
ஆ.மாதவனின் கதைகளில் சாலைத்தெரு விவரிக்கப்பட்டிருக்கும் விதம் இயல்புவாதச் சித்தரிப்பின் சிறந்த உதாரணம். தெருவைப்பற்றிய கவர்ச்சியான வர்ணனைகள் அனேகமாக இல்லை. தெருவின் ஒட்டுமொத்தமான எளிய வரைபடச்சித்திரம் சிலகதைகளில் உள்ளது. அதன்பின் வெறும் இடப்பெயர்கள் மட்டுமே. தெருவை பார்ப்பதன் காட்சிவிவரணைகூட இல்லை.
’தைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு ‘சர்’ வென்று நடந்து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை’ [சாத்தான் திருவசனம்] தைக்காடு மைதானம் தாணாமுக்கு அம்மன்கோயில் என்ற இரு இடங்களின் பெயர்களுடன் வர்ணனை முழுமைபெற்றிருக்கிறது.
இப்படி சொல்லலாம். தெரு என்பது எங்கும் ஒன்றுதான். சந்திப்பிள்ளையார் என்று சொன்னால் எங்கும் அது ஒரேபிள்ளையார்தான். முக்குத்தெரு அம்மன் என்றாலும் அப்படித்தான். சொல்லும் விதத்தில் ஒரு சரளத்தன்மையை கொண்டு வருகிறார் ஆ.மாதவன். சாலைவழியாக செல்லும் ஒருவனின் கண்பட்டுபட்டு செல்லும் வேகத்துடன். அந்த வேகமே ஒரு கடைத்தெருவை பார்க்கும் அனுபவத்தை அளித்துவிடுகிறது. நாம் பார்த்திருக்கும் எந்த ஒரு கடைத்தெருவுக்கும் சமானமானதே அது. நாமறிந்த கடைத்தெருக்களின் துணுக்குகள் நம் கற்பனையில் அச்சொற்கள் வழியாக தொகுக்கப்பட்டு சாலைத்தெரு நம்முள் உருவம் கொண்டு விடுகிறது.
‘கமுகுவிளாகம் முடுக்கில் பெரிய புகையிலைக்கடைக்கு கிட்டங்கியின் சிமிண்டு திண்ணையில் உடுத்திய அழுக்கு வேட்டியை தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு ழ போல படுத்திருக்கிறான் உம்மிணி’ [ உம்மிணி] ‘கச்சேரி முக்கில் மைல்கல்பக்கத்தில் பெட்டியை அவிழ்த்து பிளாஸ்டிக் காகிதத்தை பரப்பி அதில் மிச்சமிருந்த பாச்சா வில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்து சீசாக்களையும் எழுத்து வைத்தான். ரோட்டில் வண்டி, கார்கள், மாடிபஸ், ஸ்கூட்டர், விதவிதமான ஆட்கள் போகிறார்கள் வருகிறார்கள்.’ [தூக்கம் வரவில்லை] என்ற வகையில் சாதாரணமாக சாலைத்தெருவை கதைவழியாக அல்லது கதாபாத்திரம் வழியாகச் சொல்லிச் செல்கிறார் ஆ.மாதவன்
இந்த சாதாரணத்தன்மையை கவனித்தால் ஒன்று தெரியும், இந்த இயல்பு காரணமாகத்தான் சாலைத்தெரு அங்கே வாழும் ஒருவரால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது. அந்தத்தெருவுக்கு புதியதாக வரும் ஒருவர் அடையும் ஆச்சரியமோ அவர் கவனிக்கும் நுட்பங்களோ ஆசிரியர் கண்ணுக்குப் படுவதில்லை. அவருக்கு கமுகுவிளாகம் முடுக்கு என்றால் அங்கே புகையிலைக்கிட்டங்கி இருக்கும் அவ்வளவுதான். ஒருபோதும் புதுமைவியப்பு [Exoticness] ஆசிரியரில் உருவாவதேயில்லை. சாலைத்தெரு என்றால் ஒரு கடைத்தெரு அவ்வளவுதான்.
இந்தவகைச்சித்தரிப்பை ஆசிரியர் எங்கேயிருந்து பெற்றுக்கொண்டார் என்பதை சிலகதைகளின் உள்ளே கதைமாந்தரின் பார்வையில் சாலைத்தெரு விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது ஊகிக்க முடிகிறது. அந்த விவரணைகள் எப்போதும் சாதாரணமான தகவல்களாகவே இருக்கின்றன. ஏனென்றால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு சாலைத்தெரு என்பது ஒரு வசிப்பிடம் ஒரு பிழைப்பிடம். வசிக்கவும் பிழைக்கவும் உதவக்கூடிய தகவல்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்கள் அங்கே எந்த அபூர்வத்தையும் உணர்வதில்லை.
‘அப்போ முக்கிலே இப்போ கச்சவடம் செய்யக்கூடிய சாமிசெட்டியாகே அப்பன் பட்டன் செட்டியாருக்கு பலசரக்குக் கச்சவடம். ஓல்சேலும் சில்லறை வியாபாரமும் உண்டு. நமக்கு அங்கேதான் சொமட்டு ஜோலி…’ என்ற நினைவுகளாக ‘தம்பானூர் பஸ்ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன், பொறவு புத்தன்சந்தை பாளையம், ஜனரல் ஆசுபத்திரிமுக்கு, பட்டம், உள்ளூர், சாஸ்தமங்கலம், மகாராஜா கொட்டாரமெல்லாம் இருக்கிற கவடியார், பேரூர்க்கடைச் சந்தை, மேட்டுக்கடை, கரமனை, தைக்காடு எல்லா இடமும்…’ என்று சாளைப்பட்டாணி திருவனந்தபுரத்தைச் சுருக்கிச் சொல்கிறான் [சாளைப்பட்டாணி]
இந்த விவரிப்பில் வெறும் இடப்பெயர்கள் மட்டும் உள்ளது என்று பட்டாலும் அது உண்மையல்ல. இடங்களில் ஒரு தேர்வுள்ளது. சுமட்டுதொழிலாளியாகவும் பின்னர் கடை ஊழியராகவும் இருந்த அவனுக்கு தேவையான இடங்களால் மட்டும் ஆனதாக உள்ளது திருவனந்தபுரம். பேருந்து நிலையம், ரயில்நிலையம்,சந்தை. பின்னர் அவனுக்குத்தேவையான ஆஸ்பத்திரி. ஒரே வேறுபாடு அவன் ஒரு மலையாளி என்பதன் தடையம் மகாராஜா அரண்மனை பற்றிய அவனது தனிக்கவனம்.கிட்டத்தட்ட இதேபாணியில்தான் ஆ.மாதவனும் ஆசிரியர்கூற்றாக வரும் சித்தரிப்புகளில் திருவனந்தபுரம் நகரையும், சாலைத்தெருவையும் சித்தரிக்கிறார் என்பதை காணலாம்.
ஆ.மாதவன் கதைகளில் வரும் திருவனந்தபுரத்தின் சித்திரத்திலும் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. ஒரு ஒப்புமை தோன்றுகிறது. திருவனந்தபுரத்தை எழுதிய இரு படைப்பாளிகள். ஒருவர் நீலபத்மநாபன். அவரது ‘பள்ளிகொண்டபுரம்’ திருவனந்தபுரத்தையே களமாகவும் ஒருவகையில் பேசுபொருளாகவும் கொண்ட நாவல். தன் இல்லறச்சிக்கல்களை எண்ணியபடி நகரில் அலையும் அனந்தன்நாயரின் அகப்புறக்கொந்தளிப்புகள் வழியாக ஓடிமுடிகிறது தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்றான இந்நாவல்.
நீலபத்மநாபன் காட்டும் திருவன்ந்தபுரம் தெருக்கள் மற்றும் வீடுகளால் ஆனது. ஒரு வீட்டில் இருந்து கிளம்பி நகரில் அலையும் பிரக்ஜையால் சொல்லப்படுவது. ஆகவே வீடுகளின் தொகுதியாக, வீட்டின் பிரம்மாண்டமான நீட்சியாக உள்ளது அந்த நகரம். ஆனால் ஆ.மாதவன் காட்டும் திருவனந்தபுரம் ஒரு கடைத்தெருவில் இருந்து கிளம்பி நகரைச் சுற்றிவருவதாக உள்ளது. கடைத்தெருவின் விரிவாக நாம் அறியும் நகரமே ஒரு பெரும் கடைத்தெரு என்ற பிரமை எழுகிறது.
உண்மையில் ஆ.மாதவனின் கதைகளின் எண்ணிக்கையில் கடைத்தெருவை நேரடியாகக் களமாக்கியவை ஒப்பீட்டளவில் குறைவே. பாதிக்கும் மேல் கதைகளில் திருவனந்தபுரம் நகரமே கதைக்களனாக ஆகியிருக்கிறது. ஆனால் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் காரணமாக அக்கதைகளும் கடைத்தெருவின் ஒரு விரிவாக்கத்தில் நிகழ்வதான பிரமை வாசகனுக்கு உருவாகிறது. கடைத்தெரு நகரமாக உருவம் காட்டுவதைப்போல நகரமும் ஒரு கடைத்தெருவாக தோற்றமளிக்கிறது.
‘கோட்டை, சிட்டி பஸ்நிலையம் முதல் மேலப்பழவங்காடி ஓவர் பிரிட்ஜ் வரையில் உள்ள மெயின்ரோடு வட்டாரம், பிள்ளையார்கோயிலின் முன்புற மைதானம், கோட்டையினுள் சுவாமிகோயில், குளக்கரை, ஆனந்தாஸ்ரம சுற்றுவட்டம், அரசமரத்தடி இதெல்லாம் கோமதியின் சாம்ராஜ்ய ஆதிக்கத்தில் சேர்ந்தது..’ [கோமதி] என்று விரியும் சித்தரிப்பில் நகரின் மையம் முழுக்க வந்துவிடுகிறது. ஆனால் சாலைபஜாரின் ஒரு பசுவின் வாழ்விடம் இது. கோமதி சதாரணமாக சாலையில் இருந்து கிளம்பி இங்கெல்லாம் வட்டமிட்டு மீள்கிறாள். ஆகவே இவையும் ஒருவகை சாலைபஜார்களே. திருவனந்தபுரம் ஆ.மாதவனின் கதைகளில் பெரும்பாலும் இப்படித்தான் சித்திரம் கொள்கிறது.
ஆ.மாதவனின் பிரக்ஞையில் கடைத்தெருவுக்கு இருக்கும் முக்கியத்துவம் நகரத்துக்கு இல்லையோ என்ற எண்ணம் வாசகர்களுக்கு உருவாகும்.அவர் தன்னை சாலைத்தெருவின் பிரஜையாக உணர்கிறார். ஆனால் திருவனந்தபுரம் அவருக்கு மலையாளிகளின் அன்னியமான நகரமாகவே இருக்கிறது. சாலைத்தெரு சொந்தத்துடன் சாதாரணமாகச் சொல்லப்படும்போது திருவனந்தபுரம் எப்போதும் ஒரு எளிய நக்கலுடன் மட்டுமே விவரிக்கப்படுகிறது.
அல்லது சாலைத்தெருவின் எளிய பிரஜை ஒன்றுக்கு நகரம் அளிக்கும் அன்னியத்தன்மை என்று அதைச் சொல்லலாம். பெரிய கட்டிடங்கள், ஓயாத போக்குவரத்து கொந்தளிப்பு, விதவிதமான மனிதர்கள், போலீஸ், அதிகாரம், நிர்வாகம். சாலைத்தெரு அந்த உலகில் இருந்து விலகி தனக்கென சொந்தமாக நியதிகளும் விதிகளும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் தனி உலகம் அல்லவா? சாலைத்தெருவில் இருந்து நகருக்குள் நுழைந்தால் சாலைப்பட்டாணி கொள்ளும் அன்னியத்தன்மை ஆ.மாதவனின் சித்தரிப்பில் எங்கும் பொதுவாக நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று படுகிறது.
சாலைத்தெரு குறித்த சித்தரிப்புகளில் ஆ.மாதவனின் பிரக்ஞை எங்கே படிகிறது, எவற்றையெல்லாம் தவிர்த்துவிடுகிறது என்ற பார்வை பலவகையான திறப்புகளை அளிக்கக்கூடியது. சாலைத்தெரு பெரும் மொத்தவணிகம் நிகழும் இடம். அதன் பேரங்கள், ஒப்பந்தங்கள், துரோகங்கள், நம்பிக்கைகள், முதலாளிகளின் எழுச்சிகள், திடீர் வீழ்ச்சிகள் எவையும் ஆ.மாதவன் கதைகளில் இல்லை. சொல்லப்போனால் ஆ.மாதவனின் கடைத்தெருவில் வணிகம் நிகழ்கிறது என்ற தகவல் மட்டுமே உள்ளது. அதன் விவரிப்பே இல்லை.
மொத்தவணிகம் ஆ.மாதவன் கதைகளில் எப்படி வருகிறதென்பதை கவனிக்கலாம். பெரும் கிட்டங்கிகளைப்பற்றிய விவரணைகள் வருகின்றன. அவற்றுக்கு காவலாக இருக்கும் முஸ்தபா போன்ற காவலர்களின் சித்திரங்கள் வருகின்றன. மொத்தவணிகத்துக்காக சரக்குகள் வந்திறங்கும் நாட்களில் சாலைத்தெருவில் வந்துசெல்லும் வாகனங்களால் உருவாகும் நெரிசலும் சந்தடியும் வருகின்றன. சில இடங்களில் வந்திறங்குபவை அரிசி என்று சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். வந்திறங்கும் சரக்குகள் என்ன, அவை எங்கிருந்தெல்லாம் வருகின்றன, எங்கே செல்கின்றன, அந்த வணிக உலகின் விதிகளும் விதி மீறல்களும் என்ன – எந்த சித்திரமும் இல்லை.
ஆ.மாதவனின் கடைத்தெருவில் முதலாளிகளே இல்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று. சில சில்லறைக் கடை உரிமையாளர்களின் வாழ்க்கை உள்ளது. அப்பளக்கடை கோபால பட்டர் [காளை] போல சிலரை நாம் காணமுடிகிறது. இந்த விடுபடல் ஆச்சரியமான ஓரு புனைவியல்பை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முதலாளிகளின் வாழ்க்கை, அவர்களின் வணிகச்சதுரங்கத்தின் வெற்றிதோல்விகள் ஒருநவீனகால இதிகாசத்துக்குரியவை. அந்தப்பக்கமே ஆசிரியரின் கவனம் செல்வதில்லை.
இந்த விடுபடல் காரணமாகவே சாலைத்தெருவின் வரலாற்றை நோக்கியும் ஆ.மாதவனின் கவனம் செல்வதில்லை என்று ஊகிக்கலாம். இந்த தெருவுக்கு ஒரு தொன்மையான வரலாறு உள்ளது. இது சரித்திரப்புகழ்பெற்ற காந்தளூர்ச்சாலை என்று சொல்லப்படுகிறது. ஆ.மாதவன் சித்தரிக்கும் இடங்களுக்கு சற்று அப்பால்தான் சாலை மகாதேவர் ஆலயம் உள்ளது. அதற்கு காந்தளூர் மகாதேவர் ஆலயம் என்று பெயர். அவை எதுவுமே இப்புனைவுலகில் இல்லை. ஏன், சாலை என்ற பெயர் ஏன் வந்தது என்பதையே நாம் இப்புனைவுலகில் காணமுடியாது. ஒரு வேதபாடசாலையாக, கல்விச்சாலையாக, இருந்த இடம் எப்படி ஒரு வணிகச்சாலையாக ஆகியதென்பது ஒரு புனைவெழுத்தாளனின் கற்பனையை தூண்டி எரியவிடக்கூடிய ஒன்று. அதில் ஆசிரியர் கவனம் கொள்வதில்லை.
ஏனென்றால் ஆ.மாதவனின் கவனம் சாலையின் நிகழ்காலத்தில் மட்டுமே குவிகிறது. நிதர்சனம் என்பதே இயல்புவாதத்தின் இலக்கு. நிதர்சனம் என்ற சொல்லின் பொருள்படி கண்ணுக்குமுன் நிகழ்வது. அதன் நேற்று என்பது நினைவுகளில், நூல்களில் உள்ளது. அது கண்முன் இல்லை. அதேபோலத்தான் அங்கே நிகழும் பெருவணிகமும். அது எங்கே எவ்வகையில் நிகழ்கிறதென்பது சாலைத்தெருவில் நின்றால் காணக்கூடிய யதார்த்தம் அல்ல. காணக்கூடிய யதார்த்தம் என்பது கிட்டங்கிகளும் நெரிசல்களும் மட்டுமே.
ஆம், கண்ணால் உருவாகி வரக்கூடிய யதார்த்தத்தைப்பற்றி மட்டுமே ஆ.மாதவனின் புனைவு கவனம் கொள்கிறது. ஆராய்ந்தோ விசாரித்தோ அறியும் யதார்த்தம் அல்ல. ஊகித்தறியும் யதார்த்தமும் அல்ல. அந்த யதார்த்தம் என்பது சாலையின் எளிய மக்களால் ஆனது. அவர்களின் அன்றாட வாழ்க்கையினால். அந்த யதார்த்தம் காமத்தினாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தும் பிடுங்கியும் வாழும் ஆட்டத்தினாலும் ஆனது.