நந்தன் ஸ்ரீதரனின் உடும்பு

q

இனிய ஜெயம்,

இந்த பதினைந்தாம் தேதி ஜன்னல் இதழில் கண்ணக்கரை தம்புராட்டிகள் கதை வாசித்தேன். இந்த தொடரில் வந்த கதைகளில் மிகுந்த அல்லலை அளித்த கதை. அடுத்ததடுத்து அவர்களை வந்து சாய்க்கும் துயரம். எந்த காரண காரியத்துக்குள்ளும் அடங்காத துயரப் பெருக்கு. ஊழ் என்று அதனை வகுப்பது எத்தனை பலவீனமான யத்தனம். அதனை வகுக்க இயலா மானுடம் எத்தனை பரிதாபமானது.

சருமத்தில் வெயில் படாமல் வாழும் சகோதரிகள் முதலில் பார்க்கும் வெளிக் காட்சியே கொடும் காடு. அதற்குள் ஊடுருவி அவர்கள் காண்பது, தங்கள் சகோதர சடலங்களை. செத்துக் அழுகிக் கிடக்கும் வளர்ப்பு ஜீவன்கள், மட்கிப் புதையும் இல்லம், துர்க்கனவுக்கு இணையான படிமங்கள்.

”கெட்டது எதுவும் அண்டாம இருக்கட்டும்” பதிட்டை செய்யப்பட்ட சகோதரிகள் வசம் வேண்டுதல். பிறரை அண்டும் அளவு கூட எஞ்சாமல், அத்தனை துயரங்களையும் சுமந்தவர்கள் வசம் வைக்கப் பட வேண்டிய சரியான வேண்டுதல்தான்.

அதே இதழில், நந்தன் ஸ்ரீதர் எழுதிய, என் அறையில் ஒரு உடும்பு இருக்கிறது கதை வாசித்தேன். சோறு மட்டும் போட்டு, போடாத சோற்றுக்கும், தராத சம்பளத்துக்கும் சேர்த்து வேலை வாங்கும் சீரியல் தயாரிப்பாளர்.

முன்பு அவரது அறையில் தங்கி எழுத்து வேலை பார்த்தவன். உருவெளித் தோற்ற மன நோய் முற்றி இறக்கிறான். [மன நோய் முற்றியவன் என்பது கூட சொரணையில் விழாமல் வேலை வாங்குபவர் அந்த சீரியல் தயாரிப்பாளர்] அந்த அறையும் வேலையும் கதை சொல்லிக்கு கிடைக்கிறது.

பால்யம் துவங்கி, இந்த நாள் வரை பசியை மட்டுமே அறிந்தவன். குறைந்த பக்ஷம் சோறு உத்திரவாதம் என்ற நிலையில் இந்த வேலைக்கு வருகிறான்.

முதலாளி முதல் மாரடைப்பு பார்த்தவர். எந்த ஊர்வனவும் அவருக்கு ஒவ்வாது. இவன் வேலைக்கு நுழையும் அன்று முதலாளி அறையில் இருந்து ஒரு பல்லி வேட்டையாடப் பட்டு பெருக்கி வெளியே தள்ளப் படுகிறது. ”ஐயையோ படபடன்னு வந்துருச்சி” என்றபடி வேர்த்து ஒழுகி நிற்கும் முதலாளிதான் அவனுள் விழும் முதல் சித்திரம்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாள் , அவனது அறைக்குள் ஐந்தடி நீள உடும்பு ஒன்றினை பார்க்கிறான். கீழே காவாலாளி வசம் சொல்கிறான். காவலாளி சிரித்தபடி ”அந்த அறையோட ராசி அது, இப்பவே நல்ல டாக்டரா பாருங்க” என்கிறான்.

நாட்கள் செல்ல ஒரு மாதிரி உடும்பும் அவனும் சகஜம் ஆகிறார்கள். சரியான நேரத்துக்கு அவன் அரை வழியே எங்கோ கடந்து செல்கிறது உடும்பு.

மாதக் கடைசியில் இவன் இடத்தை இடம் பெயர்க்க, இவனை விட ”மேலானவன்” வர இவன் வேலை போகிறது. வெளியே வருகிறான். வாசலில் வைத்து அறிகிறான். பக்கத்துக்கு முறைசாரா வைத்திய சாலையில் இருந்து மருந்துக்கென கொண்டுவந்திருந்த உடும்புதான் தப்பி ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது.

காவலாளி இப்போது பௌவ்யத்துடன் ”தம்பி நிஜமா நம்ப ரூம்ல உடும்பு பாத்தீங்களா?” வினவ,

அவனுக்கு பல்லிக்கே பதறும் முதலாளி முகம் நினைவில் எழுகிறது.

பசி குறித்த ஹான்டிங்க்கான வர்ணனைகள். இரக்கமே அற்ற அத்தை வசம் வளர அனுப்பப் படுகிறான். அத்தை சொத்து சொத்தென்று சாதம் போடுகிறாள்.

”ஏன்னா முழிக்கிற, இவ்ளோதான் சோறு, வேணும்ன்னா தின்னு, உனக்கு ஆக்கிப் போட்டே சொத்தெல்லாம் அழியுது,”

”சனியன் வெறுஞ்சோத்தயே என்னாவா திங்கிது பாரு, இருடா கொளம்பு ஊத்துறேன் பெனஞ்சு தின்னு”

பசித்த யானையைக் கொண்டு பிச்சை எடுப்பதைப் போல, இந்த வாழ்வு. பசி வந்தால் எது வேண்டுமானாலும் செய்வோம். பிச்சை கூட எடுப்போம் என்கிறான் கதை சொல்லி.

கண்ணீரின் உள் உறையும் வெம்மை போல, வயிற்றின் உள்ளே உறையும் பசி. பசியின் ஏழாவது நாளில் அவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது.

பசி என்னவெல்லாம் செய்யும் என வளர்ந்து, அப்படிபட்ட பசி எந்த நிலையிலும் எதை செய்யாது என்ற புள்ளியில் நிறையும் கதை. இக் கதையின் எந்த அலகும் வாசகனின் கேளிக்கைக்காக உருவாக்கப் பட்டத்தல்ல. இந்தக் கதை அக்கருவுடன் ஆழத்தில் ஆசிரியர் கொண்டுள்ள உறவாலும், மொழியாலும் வடிவத்தாலும் இலக்கியமாகிறது. இதில் உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு உரிய உட்சிக்கல் இல்லை. மறை பிரதி ஏதுமற்ற நேரடியான கதை.

”எனக்குள்ளும் ஓயாமல் உறுமிக் கொண்டிருக்கும் புலி இருக்கிறது. ஆனால் இந்தப் புலி பசித்தாலும் மனிதர்களைக் கொல்லாது” என்ற இறுதி வரியில் எல்லாமே சொல்லப் பட்டு விடுகிறது. ஆனால் இதில் உள்ள உண்மையும் தீவிரமும் இக் கதையை குறிப்பிடத்தக்க கதையாக உயர்த்திப் பிடிக்கிறது.

ஒரு மனிதனை அவன் வாழ்வின் இறுதி நொடி வரை அவனது அகத்தில்காலப் பழமையின் கல்லறை வாசம் படியாமல் வைத்திருக்கும் தகுதி ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே உண்டு. அது இலக்கியம். தினம் தினம் புதிய வாழ்க்கை ஒன்றுக்குள் விழித்தெழும் ஆசீர்வாதம் கொண்ட மனிதன் இலக்கிய வாசகன் மட்டுமே. இன்றைய நாளையும் புதிதாக்கி விட்டார் நந்தன் ஸ்ரீதர்.

கடலூர் சீனு

*

அன்புள்ள சீனு

நான் நீங்கள் சுட்டியபின்னரே அக்கதையை வாசித்தேன். நல்ல சிறுகதை. சில கதைகள் வாசித்தவுடன் அவற்றின் உட்குறிப்புகளால், வாசக இடைவெளிகளால் வளர்வதில்லை. அவை நம்முள் உருவாக்கும் அனுபவப்பதிவுகளால், எழுப்பும் நினைவலைகளால் வளர்கின்றன. அத்தகைய கதைகளுக்கும் முக்கியமான இலக்கிய இடம் உண்டு. இது அத்தகையது. எல்லாமே சொல்லப்பட்டுவிட்ட கதை, ஆனாலும் உடன் வருகிறது

நேரடியாக உணர்ச்சிகளைச் சொல்வதில் பெரிய கலைச்சிதறல் வந்துவிடும். மிகையாகச் சொல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு மொழி இல்லை. மொழியை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது எளிதல்ல. மொழி திகையாதபோது மிகைநாடுகிறோம். எளிய குறிப்புணர்த்தல்கள் வழியாகச் சொல்லிவிடும்போது அரிய அனுபவங்கள் சல்லிசாகிவிடக்கூடும்

அந்த இடரை இக்கதையில் நந்தன் ஸ்ரீதரன் கடந்திருக்கிறார்

ஜெ

 

நந்தன் ஸ்ரீதரன் சிறுகதைகள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
அடுத்த கட்டுரைகன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)