‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33

[ 12 ]

அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை.

அவன் அக்கரிய கடலை அணுக மேலும் நான்கு நாட்களாயின. அது முற்றிலும் ஓசையற்றிருந்தது, எனவே தன்னைக் கடலென்றே காட்டவில்லை. பெருமலைகள் ஒளிந்து அமர்ந்திருப்பதை அவன் கண்டிருந்தான். கடல் ஒன்று பதுங்கியிருப்பதை அப்போதுதான் கண்டான்.

கரும்புகை என முதலில் தோன்றியது. விண்சரிவில் தீற்றப்பட்ட ஒரு கரிக்கறை என பின்னர் தெரிந்தது. மேலும் அணுகியபோது வாசல்களோ மாடங்களோ அற்ற பெருங்கோட்டை என விரிந்தது. பின்னர் அவ்வண்ணமே திசைமறைத்து நின்றது. அவன் அதை நோக்கியபடியே நடந்தான், துயின்றுவிழித்தான். காலையில் எப்படித் தெரிந்ததோ அப்படியே மாலையிலும் அமைந்திருந்தது. ஒளியின்மை. அசைவின்மை. பருவின்மை கொண்ட இருப்பு. இருப்பெனக் காட்டும் இன்மை.

கையிலிருந்த நீர் முற்றிலும் தீர்ந்துபோன அன்றுதான் அவன் உப்புப்படுகையை வந்தடைந்தான். கண்களை ஒளியால் நிறைத்து இமையதிர்ந்து சுருங்கவைக்கும் வெண்மை. வெண்ணிற நுரைபடிந்து வற்றியதுபோல் தெரிந்த விளிம்புக்கு வந்துசேர்ந்து அங்கே நின்றான். காலை வைத்து அந்த மென்மையை உடைக்க அவனுக்குத் தோன்றவில்லை. கொக்கிறகின் பீலிவரி. நீரில் மிதந்து வந்து கரையில் படிந்த இலவம்பஞ்சு.

அதற்கப்பால் உப்பு தடிமன் கொண்டு அலைகளாக ஆகியது. பனிப்பரப்பு. பளிங்குப்பரப்பு. உடலை சித்தத்தால் உந்திச்செலுத்தி அவன் முன்னால் சென்றான். கால் வைத்த உப்பு நொறுங்கியது. மேலும் கால் வைக்க உடல்கூசியது. மேலும் மேலுமென பலமுறை உடல் ஆயம் கொண்டபின்னரே காலை வைக்கமுடிந்தது. உப்பு நொறுங்கும் ஒலி. வஞ்சம் கொண்ட சிரிப்பின் ஒலி. கீழே குனிந்து நோக்கியபோது பற்களைக் கண்டான்.

பற்களின் பரப்பு. அவன் கண்களை மூடிக்கொண்டு அசைவற்று நின்று உடலில் ஓடிய அச்சத்தை உளவிசையால் நிகர்செய்துகொண்டான். அந்த மாபெரும் அரைவட்டத்தை ஒரு புன்னகை என அவன் கண்டான். பின்னர் வெறிகொண்டவனாக ஓடத்தொடங்கினான். கைகளை விரித்து கூச்சலிட்டபடி பித்தன்போல ஓடி உப்பில் கால்வழுக்கி விழுந்து புரண்டு எழுந்தமர்ந்து மூச்சிரைப்புடன் நோக்கினான். அவனைச் சூழ்ந்திருந்தது உச்சிவானின் ஒளி.

அவன் ஒளிமேல் நடந்தான். கண்விழிப் புள்ளிகள் சுருங்கி ஊசித்துளையென்றாகி அந்த ஒளிப்பரப்பை காட்சியாக மாற்றலாயின. இரவணைந்தபோது வானிருண்டு மூடிய பின்னரும் அவனைச் சூழ்ந்திருந்தது அதுவரை உப்புப்படுகை அள்ளி உண்டு உள்ளே தேக்கியிருந்த ஒளி. இரவெல்லாம் அந்த ஊமையொளி காலடியில் நிறைந்திருந்தது. அதன்மேலேயே படுத்துத் துயின்றான். வானில் முகில்கள் மேல் துயில்வதாக கனவுகண்டான்.

ஒரு மென்சரடில் சிலந்தியென காற்றில் மிதந்தலைவதாக உணர்ந்து விழித்துக்கொண்டபோது மேலே விண்மீன்கள் அதிர்ந்து நின்றன. அவனைச் சுற்றி இருந்த வெண்ணிற மென்பரப்பில் குளிரே ஒளியென்றிருந்தது. விடாய் அறிந்தே விழித்திருப்பதை உணர்ந்தான். நாவால் உதடுகளை நக்கியபோது உப்புப்பொருக்கு உள்ளே சென்றது. அதை துப்புமளவுக்கு வாயில் எச்சில் இருக்கவில்லை.

நாக்கு கோடையில் வற்றிய சுனையருகே பாறையில் உலர்ந்து ஒட்டியிருக்கும் நீரட்டை போலிருந்தது. வாய்க்குள் தசைப்பரப்புக்கள் தோலென நாவுரசின. தொண்டை மணலால் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உட்குழாய்களில் அனலோடியது. கீழே அடிவயிறு நீர் நீர் என எம்பித் தவித்தது. விடாய் கால்களை தளரச்செய்தது. கைவிரல்களை நடுங்கவைத்தது. மூச்சில் வெம்மையென ஓடியது. சித்தத்தில் நீர்க்காட்சிகளை உருவாக்கியது.

அப்பால் அப்பாலென மயலூற்றுக்கள் அழைத்தன. அலைகள். ஒளிகள். நெளிவுகள். குளுமைகள். நீர் ஒரு பூண் அணி. மணிமுடி, கல்லாரம், மேகலை.  நீர் ஒரு வாள். நீர் ஒரு கேடயம். நீர் ஒரு பட்டாடை. ஒரு திரை. ஒரு தாலம். ஓர் ஏடு. இரக்கமற்ற ஏதோ ஒன்று எழுதப்பட்டது. இரக்கம் எனப் பொருள் அளிக்கும் வரிகள் அவை.

வேண்டுமிடத்திற்கு வரும்பொருட்டே வழிவெனும் இயல்பைக் கொண்டுள்ளது நீர். மழையென இழிந்து அருவியெனப் பொழிந்து ஆறெனச் சரிந்து நதியெனப் பெருகி கிளையென விரிந்து கழனிகளில் நிறைகிறது. மண் நெகிழவைக்கிறது. இளஞ்சேற்றின் நெகிழ்வு. முலைகொண்ட அன்னை மகவுக்களிக்கும் முத்தம் என கண்கனிந்த தருணம். இளஞ்சேற்றின் மணம். முலைப்பால் குருதி. உருகிவரும் மென்கதுப்புத்தசை.

வேண்டுக, வந்தாகவேண்டும். விழைக, பொழிந்தாகவேண்டும். அறம்நின்று  ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன? முலையென ஊறுவது அன்னையின் சித்தம் கொண்ட உறுதி. கொலைக்கூர் வெண்தேற்றை கொண்ட பெரும்பன்றியின் முலைக்கொத்துக்களில் வெண்ணிறத்துளி என ஊறி நிற்பதும் அவ்வெண்தேற்றையென தன்னை எழுப்பிக்கொண்டதே  அல்லவா?

நீர்மையென்பது ஓர் அறிவுறுத்தல். ஒவ்வொருநாளும் வான் கனிந்தாலன்றி வாழ்க்கை இல்லை. அறியா வெளி அளித்தாலன்றி அமுதென ஒன்றில்லை. விசும்பு துளிகூராமல் பசும்புல் இல்லை. பசும்புல்லே, மழைகொண்ட உயிர்வடிவே, வான் வளர்க்கும் மண்ணே. பசுமையே. பசுமையென்பதுதான் என்ன? இளந்தளிர்களில் எத்தனை வண்ணங்கள்! பொன்னிறமென்மை, வெள்ளிக்கூர்மை, செம்புச்செம்மை. அனைத்தும் முதிர்ந்து பசுமை. பசுமையின் நீர்மையே தளிரா?

தேங்கி அலையடிக்கும் முடிவிலி என நீலம். நீர் நீலம் கொள்கையில் தன்னை விலக்கிக்கொள்கிறது. வேட்டைக்கு  குட்டிகளை விட்டு விலகிச் செல்கிறது அன்னைச்சிம்மம். நீலம் அளியின்மையின் நிறம். முடிவிலி என்பதே அளியற்றது. முடிவுகொண்டவை மட்டுமே மானுடனுக்கு அணுக்கமானவை. காலம் முப்பிளவு கொண்டு சூழ்ந்தவன் மானுடன். எல்லை வகுக்கப்பட்டவன். எல்லைகொண்டவை மட்டுமே மானுடனை அறியும். ஏனென்றால் எல்லைகொண்டவற்றை மட்டுமே மானுடன் அறியமுடியும்.

முடிவிலிகள் இரக்கமற்றவை. முடிவிலி என்பதே வகுக்கப்பட்டு இங்கென்றும் இன்றென்றும் இருப்பென்றும் ஆனவற்றை உறிஞ்சி உறிஞ்சி உண்ணும் அலகிலா விடாய்கள்தான். வானம் மண்ணை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. உயிர்களை உண்கிறது. இதோ இந்த உப்பை, அந்தக் கற்பாறையை நக்கிக்கொண்டிருக்கிறது. அங்கெங்கோ மலைகளை அது கரைத்துண்கிறது. பனித்துளிகளை சுனைகளை ஆறுகளை ஏரிகளை அருந்துகிறது. பெருங்கடல்களை வற்றவைக்கிறது.

மண்ணிலிருந்து நீர்மையை அள்ளிக்கொள்கிறது வானம். உருவழித்து அருவமாக்கி தன்னுள் வைத்துக்கொள்கிறது. வானென்று நாமறிவது இன்மையும் நீரும் ஊடுபாவென ஓடி நெய்தெடுத்தது. மண்ணமைந்த நீரெல்லாம் வானுக்குரியவை. சிறகுகொண்டு எழுந்து வானில் நிறைந்த பின்னரும் மண்நோக்கிக் கனிந்து குளிர்ந்துகொண்டிருக்கும் நீரே, நீயே அன்னை.

துளித்து கண்ணென ஆகி நோக்கி ஒளிர்கிறாய். பொழிந்து பல்லாயிரம்கோடி குளிர்முத்தங்களாகி மூடிக்கொள்கிறாய். தழுவிச்சிலிர்க்கிறாய். அமுதாகிறாய். வளைந்தோடி குருதிச்சரடாகிறாய். கடலை அடையும் நதிகளின் தயக்கம்தான் என்ன? மானுடனை நோக்கி கனிந்திருக்கும் தெய்வமென்பது நீர் மட்டுமேதானா?

விடாய், விடாய், விடாய். அதுவே சித்தம். அதுவே சித்தப்பெருக்கு. அதுவே இருப்பு. அதுவே இயக்கம். விடாய் என்பது ஓர் அறிவிப்பு. மிருத்யூதேவி வரும் காலடியோசை. விடாய் இனிது. அது தசைகளை மெல்ல சுருளச்செய்கிறது. அறம்பொருளின்பவீடென ஆன அனைத்தையும் ஒன்றெனச் சுருக்கி பிறிதிலாது ஆக்கி இலக்களிக்கிறது.

விடாய் வாழ்க! விடாய்கொண்டு மறைந்தவர் விண்புகுவர். அவர்கள் மண்ணுதிர்வதில்லை. விண் அவர்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. மண்ணில் அவர்களுக்கு கடன்களேதுமில்லை. கொடுத்தல், பெறுதல், அறிதல், இயற்றல், ஆதல் என ஏதும் எஞ்சுவதில்லை. அவர்கள் உண்ணாத நீர் உருவழிந்து செறிந்த விண்ணில் அவர்கள் மென்பஞ்சு முகிலென மாறி நீர் ஒற்றிஎடுத்து எடைகொண்டு கனிந்து அமர்ந்திருப்பர்.

விடாய், விடாய், விடாய். பிறிதொன்றுமில்லை. சொற்களை சிதறடிக்கிறது அது. அள்ளி அள்ளி வைக்கும் அத்தனை எண்ணங்களையும் விடாயெனும் ஒற்றைச் சொல்லாக உருமாற்றி விளையாடுகிறது. நாவறிந்து தொண்டை உணர்ந்து உடலாகி நின்ற விடாயை உளம் அறிந்துவிட்டபின் எங்கோ உயிர் அறிந்துவிடுகிறது. அக்கணமே அது உலகமைத்த விசைகளில் ஒன்றெனக் காட்டுகிறது.

நீரே பிறப்பு. விடாய் இறப்பு. நாதுழாவி இறப்பை நெருங்கும் முதியவர்களின் வாய்க்குள் செல்லும் இறுதிநீர் அறிந்த ஒன்று. இங்கிருந்து பெற்றுக்கொள்ளும் இறுதி. இங்கு வந்தபின் பெற்றுக்கொண்ட முதல்துளியின் மறுநுனி.

உடலென்றானது அனலும் அதை அவிக்கும் நீரும் கொண்டுள்ள நிகர். நீரழிகையில் உள்ளுறை அனலெழுந்து உண்ணத் தொடங்குகிறது அன்னத்தை. குருதி என்பது நீர்மைகொண்ட அனல். அனல் உறையும் நீர். குருதி எரிக்கிறது என் தசைகளை. குருதி புகைந்து கண்கள் நோக்கிழக்கின்றன. செவிமடல்களில் தழலாடத் தொடங்கிவிட்டது.

அவன் மயங்கி விழுந்திருந்ததை விழித்துக்கொண்டதும்தான் உணர்ந்தான். விழிக்கச்செய்ததும் விடாயே. உப்புவெளிக்கு அப்பால் அந்தக் கரிய நீர்க்கோட்டை எழுந்து வானளாவ நின்றிருப்பதை நோக்கியபடி அங்கேயே படுத்திருந்தான். எங்கு செல்கிறேன்? நுழையவிடாத அக்கருந்திரையை அணுகி என்ன செய்யப்போகிறேன்? மறு எண்ணம் எழவிடாமல் எழுந்து அதை நோக்கி தன்னை மீண்டும் செலுத்தினான்.

கால்கள் எங்கோ மிதித்துக்கொண்டிருந்தன. சித்தம் எங்கோ திரிகளாகப் பிரிந்துகொண்டிருந்து. உயிர் சிதையென்றாகி உடலை எரித்தது. உயிரால் உடலை எரித்தழிக்கமுடியுமா? பெருந்துயர் ஒன்று காட்டுகிறது பொருளற்ற துயர்களை உருவாக்கி ஆடி உவகைகொண்டிருக்கும் மானுட மடமையை. நீரே ஆகிய நீரென்றே எஞ்சிய நீரென்றே கனிகிற நீரன்றி பிறிதிலாத தெய்வமொன்று எழுக! அதைத் தொழுக தெய்வங்கள்!

மீண்டும் அவன் மயங்குவதை உணர்ந்தான். காட்சி அலையடித்தது. திசையென்றான வெண்ணொளி கொப்பளித்தது. விளிம்புததும்பும் கலமென   ஆடியது தொடுவான். விழக்கூடாது, விழமாட்டேன், விழுந்தால் இறப்பு. விழுவதே இறுதிக்கணம். ஆனால் விழவில்லை. அவன் காலூன்றி நின்றிருந்தான். அப்பால் ஒரு மென்குரல். அவன் திரும்பிப்பார்த்தபோது அவளைக் கண்டான்.

கொழுவிய உடலில் பெரிய முலைகள் ததும்பி அசைந்தன. உருள்தொடைகள் நடையில் இறுகி மீண்டன. அருகே வந்து புன்னகைத்தபோது அவள் உதடுகள் செந்நிறமாகக் கசிந்திருப்பதைக் கண்டான். “நானேதான்…” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அருந்துக!” என்றாள். “நான் விடாய் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அருந்துக!” அவன் குனிந்து அவள் முலைகளைப் பற்றி சுவைத்தான். அவை வறண்டிருந்தன. வெறிகொண்டவனாக அவளை அவன் இழுத்து உண்டான். அவள் வெறுமைகொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க நிமிர்ந்தான். அவள் விழிகள் நீல ஒளிகொண்டிருந்தன. “நீ யார்?” என்றான். “மூத்தவள். நான் மட்டுமே இத்தனை தொலைவுவரை வருவேன்.” அவள் உடல் தேய்த்த சந்தனமென ஒளிகொண்டிருந்தது. மலர்வரிகள் படிந்த தோல். முலைகளுக்குமேல் மணல்வரிகளென பருத்தமைக்கான வெண்விரிசல்கள். “நீ மிருத்யூ. வியாதி. நித்ரை” என்றான். “நான் ஸ்வப்னை, சுஷுப்தி, பூர்ணை” என்றாள் அவள். “கொள்க!” என தன் இதழ்களை நீட்டினாள்.

அவன் அதைக் கவ்வி உறிஞ்சினான். இனிய கனிபோல சாறு ஊற்றெடுத்து அவன் தொண்டையை நிறைத்தது.  அருந்த அருந்த மேலும் வெறிகொண்டு அவளை உறிஞ்சிக்கொண்டே இருந்தான். அவள் திமிறாமல் மெல்ல உடலமைந்து அவனுக்கு தன்னை அளித்தாள். அவள் குருதி இனிய குளிருடன் இருந்தது. அமுதென்பது குருதி. குருதி வெறும் நீரல்ல. அதில் ஓடுகின்றன எண்ணங்கள், விழைவுகள், கனவுகள். இத்தனை ஆழ்ந்தவளா? இத்தனை கூரியவளா? இவளை நான் இன்றுதான் அறிகிறேனா?

உண்டு முடித்து அவன் நோக்கியபோது தோலுறை நீர் இழந்து சுருங்கியதுபோல அவள் அவன் கையில் இருந்தாள். கைநெகிழ அவள் கீழே தளர்ந்து விழுந்து உப்பில் படிந்தாள். முதுமகள். நீண்ட பழுப்புநிறப் பற்கள். எலும்புகள் உந்திய முகம். ஒட்டிய கன்னங்கள். நரம்பெழுந்த கழுத்து. வறுமுலைகள். சுருங்கி வலிந்த வயிறு. எலும்பெழுந்த விலா. சுள்ளிக்கைகால்கள். அவள் உடல் அவன் கண்முன்னால் மட்கிக்கொண்டிருந்தது.

அவன் விழித்துக்கொண்டபோது உப்பில் கிடந்தான். எழுந்தமர்ந்தபோது குருதி மணத்தை உணர்ந்தான். வெண்ணிற உப்புப்பரப்பில் செங்குருதிச் சொட்டுகள் உதிர்ந்து இதழ் விரிந்திருந்தன. வீசியெறிந்த செந்நிற மலர்மாலை என. மறுகணம் அவன் தன் கையை நோக்கினான். அவன் கைநரம்பு உடைந்து குருதி வழிந்து உள்ளங்கையை அடைந்து விரல்நுனிகளில் திரண்டு சொட்டிக்கொண்டிருந்தது. கையைத் தூக்கி வாயில் வைத்து அதை சுவைத்தான். ஏற்கெனவே அக்குருதியை வேண்டுமளவு உண்டிருப்பதை உணர்ந்தான்.

அவன் தொண்டை ஈரமாகியது. நாக்கு சுவையறிந்து சுழன்றது. உடலுக்குள் பல்லாயிரம் நாக்குகள் எழுந்து அத்துளிகளை வாங்கிக்கொண்டன. தன்னை உறிஞ்சி அருந்தியபடி அவன் முன்னால் சென்றான். கால்கள் தள்ளாடின. கண்கள் ஒளியணைந்து மயங்கி மீண்டன. ஆயினும் நாவூறத்தொடங்கியது. அனல் அவிந்து தொண்டை அமைந்தது.

தன் குருதியை அருந்தியபடி அவன் நீர்க்கோட்டையின் அருகே சென்று நின்றான். உப்புப்படுகைக்கு அப்பால் விழிஎல்லை வரை கரியநீர் அசைவில்லாது தேங்கி நின்றிருந்தது. கருங்குழம்புபோன்ற நீர். நீர்ப்பாறை. குற்றலைகள் அதன் உடலை சிலிர்க்கச்செய்தன. மாபெரும் மீன் ஒன்றின் செதில். அவன் அதை நோக்கி நின்று சற்றுநேரம் சித்தம் அழிந்து அஸ்தினபுரியில் அம்பு பழகினான். வேர்கள் அலைபாய்ந்த நீர்ப்பரப்பினுள் நீந்தினான்.

பின் விழித்துக்கொண்டு அந்த நீர்ப்பரப்பை நோக்கினான். கருங்கல் உடைத்து எடுக்கப்பட்ட பரப்பு. வான்பொழிந்த ஒளியெல்லாம் அதன் ஆழத்திற்குச் சென்று மறைய மேல்பரப்பில் மெல்லிய கசிவு மட்டும் இருந்தது. உயிரில்லா நீர். நீருக்குள் குனிந்து நோக்க அங்கே நெளிவுகளைக் கண்டான். உயிரல்ல என சித்தம் உணர்ந்தது. அனல் அல்ல. நாகம் அல்ல. நெளிவு.

மெல்ல காலடி எடுத்து வைத்து அந்நீருக்குள் நுழைந்தான். இடைவரை சென்றபோது நீர் சேறென காலில் சிக்குவதை உணரமுடிந்தது. அள்ளி கையில் எடுத்தான். மதுத்தேறலின் அடியூறல் போன்ற வீச்சமும் எடையும் நிறமும் கொண்டிருந்தது. வாயில் விட்டதுமே துப்பிவிட்டான். உப்பு செறிந்த ஊன் மட்கிய சேற்றுக்குழம்பு. மேலும் சென்றபின் அவன் ஒன்றை உணர்ந்தான். நீர் அவனை வெளியே தள்ளியது. மூழ்க முயன்றாலும் அதன் ஆழம் ஏந்திக்கொண்டது.

நீர்நிலைகள் வாயில்களால் ஆனவை என்று அவன் அறிந்திருந்தான். அனைத்து கதவுகளையும் முழுமையாக மூடியிருந்தது அந்த நீர். உள்ளே ஆழ்ந்த இருட்டைக் கண்டான். இருட்டுக்குள் ஏதோ நெளிவுகள் தெரிந்தன. செல்லமுடியாத அந்த ஆழத்தில் அமைந்திருப்பது என்ன உலகம்? அதுதான் வாருணமா? மூச்சுக்கு மெல்ல அசைந்தபோது உதைத்து மேலே எழுப்பிவிட்டது ஆழ்நீர்ப்பரப்பு. மீண்டும் மீண்டும் மூழ்க முயன்று மேலே வந்துகொண்டிருந்தான்.

இது நீரல்ல. இது பாலையைப் பிழிந்தெடுத்த சாறு. வெந்நிலத்தின் குருதி. இது ஏதோ வஞ்சக்கொடுந்தெய்வம் வாற்றி எடுத்த மதுத்தேக்கம். அவனை வெறி கொள்ளச்செய்யும் அனைத்தும் இதில் கரைந்துள்ளன. இது பிறருக்கு நஞ்சு. நச்சுப்பெருங்கோப்பை. பாலையில் கனிந்த நச்சுப்பழம்.

[ 13 ]

அவன் மேல் பெரிய நீர்க்கொப்புளம் ஒன்று வந்து மோதியது. மீன் என நினைத்து அவன் விலகிக்கொண்டதும் பிறிதொன்று வந்தது . அவை மலர்வெடிக்கும் ஓசையுடன் நீர்ப்பரப்பின் மேல் விரிந்து வட்டங்களாகி அகன்றன. நீர்க்கொப்புளங்கள் சுழியென்றாகி உள்ளிருந்து மெல்ல ஒரு தலை எழுந்துவந்தது. நெற்றி, நீள்மூக்கு, குமிழுதடு, முகவாய், கழுத்துக்குழைவு, மார்புச்சரிவு, முலைஎழுச்சி. நீலநிறமான இமையாவிழிகளால் அவள் அவனை நோக்கினாள்.

அப்பால் எழுந்த குமிழிச்சுழியில் இன்னொருத்தி எழுந்தாள். அப்பால் பிறிதொருத்தி. ஏழு கன்னியர் அவனைச் சூழ்ந்துகொண்டனர். அவர்களின் நீண்ட செந்நிறக்கூந்தல்கள் நீலநீரில் செஞ்சேற்றுக் கீற்றுபோல அலைபாய்ந்தன. அவன் அவர்களை திகைப்புடன் நோக்க ஒருத்தி சிட்டுக்குருவி அலகுபோல பொன்னிற நகங்கள் நீண்ட விரல்கள்கொண்ட கையை நீட்டி “வருக!” என்றாள்.

அவன் “ஆம்” என்றான். அவர்கள் புன்னகையுடன் “வாருணத்திற்கு வருக, இளைய பாண்டவரே!” என்றனர். அவன் தன் கையை நீட்ட அதை பற்றிக்கொண்டனர். நீருக்குள் அவர்களுடன் அமிழ்ந்தபோது திரைகள்போல நீர்ப்படலங்கள் விலகி ஆழம் திறந்துகொண்டது. மூழ்கி நீருள் கண்திறந்ததுமே அவர்களின் இடைக்குக்கீழே மீனுடல் இருப்பதை அவன் கண்டான். பெரிய செதில்வால்கள் அசைந்தசைந்து துழாவின.

KIRATHAM_EPI_33

நீராழத்திலிருந்து மனிதமுகம் கொண்ட கரிய பெருநாகங்கள் நெளிந்தெழுந்து வந்து அவனைச் சூழ்ந்துகொண்டன. அவற்றின் மணிவிழிகளில் அவனை அறிந்த வெறிப்பு இருந்தது. அவன் உடலில் அவற்றின் வளைவுகள் உரசி தழுவிச் சென்றன. ஆழத்தில் அவன் கண்ட அனைத்து உடல்களும் நெளிந்துகொண்டிருந்தன. அவன் தன் கைகளை நோக்கினான். எலும்புகளற்றவையாக அவை நெளிந்தன. உடல் நாகமென வளைந்து சுழன்றது.

மேலும் மேலுமென அவன் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். திறந்து வந்தணைந்த ஆழங்களிலிருந்து நீரரமகளிரும் நீர்நாகங்களும் எழுந்து வந்து சூழ்ந்துகொண்டிருந்தனர். உடல்களாலான நெளியும் காடு ஒன்று அவனைச் சுற்றி பரவி உடன் வந்தது. அவன் விழிகள் மேலும் கூர்கொண்டபடியே வந்தன. கரிய மாளிகை ஒன்றை நீரின் இருளுக்குள் கண்டான். அது நீர்ப்பாவை என நெளிந்துகொண்டிருந்தது.

அதன் வாயிலை அடைந்ததும் நீரரமகள்கள் திரும்பி வருக என கைகாட்டி உள்ளே சென்றனர். மாளிகையின் வாயிலுக்குள் மேலும் குளிர் தேங்கியிருப்பதை உணர்ந்தான். உள்ளே பெருந்தூண்களும் உத்தரங்களும் நெளிந்தன. தரை அலையடித்தது. கூரை வளைந்தாடியது. படிகள் திரைச்சீலைகள் என ஆடின. அவன் மேலேறி இடைநாழிகளினூடாக நெளிந்து சென்று அரசவை ஒன்றுக்குள் நுழைந்தான்.

அங்கே நூறு அன்னையர் அமர்ந்திருந்த அவைநடுவே அரியணையில் அமர்ந்திருந்தவளை அவன் முன்னர் கண்டிருக்கவில்லை, ஆனால் அவளை நன்கறிந்திருந்தான் என உணர்ந்தது நெஞ்சு. ஒளிர்நீல மணிமுடியும் இளநீல ஆடையும் அணிந்திருந்தாள். வலக்கையில் வளைந்த முனைகொண்ட செங்கோலில் காகம் செவ்விழிகளுடன் சிறகு விரித்து அமர்ந்திருந்தது. அவள் உடல் விளக்கேற்றப்பட்ட நீர்த்தாலமென உள்ளொளி கொண்டிருந்தது. விழிகள் கனிந்து அவனை நோக்கின.

“அன்னையே, வணங்குகிறேன்” என்றான் அர்ஜுனன். “நல்லூழ் தொடர்க!” என்று அவள் சொன்னாள். “நான் ஜேஷ்டை. எழுவரில் முதலோள். திருமகளுக்கு மூத்தோள். அமுதுடன் பிறந்தேன். அனல்வண்ணன் மகளென்றானேன். இங்கு அரசியென்றமர்ந்திருக்கிறேன்.” அர்ஜுனன் வியப்புடன் “அன்னையே, விழிகொள்ளாப் பேரழகு கொண்டிருக்கிறீர்கள். மண்ணில் உங்களை அழகிலியாகவே அறிந்திருக்கிறோம்” என்றான்.

“அங்கு நான் அழகிலியே” என அவள் புன்னகைத்தாள். அக்கூடமே ஒளிகொண்டது அதன் அழகால். “உங்கள் விழைவுகளாலும் அச்சங்களாலும் காழ்ப்புகளாலும் திரிபடைந்த உருவையே நான் அங்கு சூடுகிறேன்.” அவன் பெருமூச்சுவிட்டான். “தன்னுருவில் உங்களை பார்க்கும் பேறுபெற்றேன்” என்றான். “நான் மெய்மகள். திருமகளைத் துறந்து கடந்தவர் அடையும் முழுமை” என்றாள் அவள்.

அருகிருந்தவர்களை நோக்கி “அவர்கள் துயர்களென நோய்களென தனிமையென மண்ணில் உங்களால் உணரப்படுகிறார்கள். இங்கு உண்மையென தெளிவு என துணிபு என அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். “இவன் ஆற்றலை அளிக்கும் பலன். என் முதல் மைந்தன். இவள் அழியா உவகையை அளிக்கும் சுரநந்தினி. இவள் களிமயக்கை அளிக்கும் சுரை. அங்கு நீங்கள் அறியும்தருணத்தில் எல்லாம் அடைவது என் இவ்விரு மகள்கள் அளிக்கும் உணர்வுகளையே.”

பெருந்தோள் கொண்ட பலன் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்து நின்றிருந்தான்.  இளநீல ஆடையணிந்த சுரநந்தினியும், சுரையும்  அவனை நோக்கி புன்னகை செய்தனர். “இவன் அதர்மகன்” என்று அவள் தன் இளைய மகனை சுட்டிக்காட்டினாள். கரிய உடல்கொண்டிருந்த அவன் விழிகள் மட்டும் வெண்மையாக தெரிந்தன. “நெறிகளென நீங்கள் உணர்வன அனைத்தையும் அழிப்பவன் இவனே. இவன் துணையின்றி எவரும் எதையும் முழுதறிய முடியாது.”

அர்ஜுனன் அவர்களை வணங்கி “இன்று மெய்யருளப்பட்டேன்” என்றான். “இளையோனே, என்னைக் கடந்தே எவரும் வாருணத்திற்குள் நுழைய முடியும். இவ்வாயிலை கடப்பதற்கு நான் அளிக்கும் ஆணைநெறி ஒன்றே. நீ பெற்றும் கற்றும் அறிந்த அனைத்து நெறிகளையும் அறங்களையும்  உதறுக! ஒன்றை மட்டும் கொண்டுசெல்ல நான் ஒப்புகிறேன். அதை மட்டும்  நெஞ்சில்கொண்டு இவ்வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். அங்கு உபவாருணம் உனக்கு வழிதிறக்கும்.”

அர்ஜுனன் தலைவணங்கி “அன்னையே, பெரும்பாலையில் முழுதுலர்ந்து அறிந்த ஒன்றுண்டு என்னுள். மெய்மைக்கு முன் முழுவெறுமைகொண்டு நின்றாகவேண்டும். நான் கொள்வதென நெறியேதுமில்லை” என்றான். மூத்தவள் புன்னகைத்து “நன்று, எந்நெறியை நீ கொள்ள விழைந்திருந்தாலும் அவ்வாயிலை கடக்க ஒப்பியிருக்கமாட்டேன்” என்றாள். அவன் அந்த அவையமர்ந்திருந்த தேவியரை வணங்கி நடந்து மறுபக்கம் சென்று அங்கிருந்த வாயிலினூடாக வெளியே சென்றான்.

அங்கே ஏழு நாகங்கள் அவனுக்காக காத்திருந்தன. முதன்மைநாகம்  வளைந்து தலைவணங்கி “வாருணத்தின் காவலர்கள் நாங்கள். எங்கள் தலைவர் தட்சசாவர்ணியிடம் உங்களை கொண்டுசெல்கிறோம்” என்றது. அவற்றுடன் நாகமென நெளிந்து மேலும் ஆழம் நோக்கி சென்றான்.  அங்கே பொன்னிறமான மாளிகை ஒன்று ஒளியாடியது. அதை அணுகி அதன் வாயிலினூடாக அவனை நாகங்கள் கொண்டுசென்றன.

நாகவளை போன்ற குகைவழிகள் பொன்னாலானவை. பொன்னொளியே வழிநடத்தியது. அதனுள் சென்றதும் நாகங்களும் அவனும் பொன்னுடல் கொண்டனர். வளைவழி சுருண்டு தேங்கி வளைந்து உருவான அரண்மனையின் ஆழத்திலிருந்தது கோளவடிவ அரசவை. அதில் புற்றுவடிவப் பீடங்களில் உடல் சுருட்டி அவையமர்ந்திருந்தன பெருநாகங்கள். நடுவே அரியணையில் பொன்நாகப் பேருடல்கொண்ட தட்சசாவர்ணி அமர்ந்திருந்தான்.

அர்ஜுனன் அவன் முன் சென்று நின்று வணங்கினான். “சொல் ஓதப்படும் அவைகளில் எல்லாம் நின்றிருக்கும் நாகங்கள் நாங்கள். நீரிலும் நெருப்பிலும் வளைபவர்கள். முதற்காவியம் கண்ட புற்றுறைமுனிவரை இங்கே நீ காண்கிறாய்” என்றான் தட்சசாவர்ணி. அவையமர்ந்திருந்த நாகச்சுருளுடல் கொண்ட முனிவரைக் கண்டு அர்ஜுனன் தலைவணங்கி “உங்கள் காவியத்தால் சொல்லென்பது துயருக்கு நிகர்வைக்கவேண்டியது என்று அறிந்தோம், முனிவரே. வணங்குகிறேன்” என்றான். வேடகவிஞர் கைதூக்கி அவனை வாழ்த்தினார்.

“இந்த அவையில் மண்ணிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் பொன்னொளி கொண்டு அமைந்துள்ளன, வீரரே” என்றான் தட்சசாவர்ணி. அவன் திரும்பி அங்கிருந்த நாகங்களை நோக்கினான். புற்றுறைமுனிவர் “நஞ்சென்பதெல்லாம் நீரில் கரைவதென்பதனால் வாருணமே நஞ்சுக்கு மையநிலை என்று அறிக! அமுதென்பதனாலேயே நீர் நஞ்சாகும் விழைவையும் தன்னுள் கொண்டது. பெருவிழைவுடன் நஞ்சை நாடுகிறது நீர். ஆழச்சென்றும் ஊறிக்கடந்தும் நஞ்சுகளை தான் பெற்றுக்கொள்கிறது.  தேங்குகையில் தன் தனிமையையே நஞ்சென்று ஆக்கிக்கொள்கிறது” என்றார்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “நீர் கொண்ட அனைத்து நஞ்சுகளையும் எண்ணுக! உண்ட நஞ்சுகள், தொட்டுக் குருதியில் கலந்த நஞ்சுகள், எண்ணிப்பெருக்கிய நஞ்சுகள், கற்றறிந்த நஞ்சுகள், கரந்த நஞ்சுகள் அனைத்தையும் முற்றிலும் இங்கு உதறி அந்த நீர்வாயிலைக் கடந்து மகாவாருணத்திற்குள் நுழைக!” என்றான் தட்சசாவர்ணி.

“முற்றுதறப்போவதில்லை, பொன்னாகரே” என்றான் அர்ஜுனன். “ஒரு துளி நஞ்சு எஞ்சாது மெய்மையை அறியமுடியாது. அந்நஞ்சையும் இழந்தால் அறிவதற்கொரு தன்னிலை எஞ்சாது எனக்கு. மெய்மையென்றே ஆவேன். மீண்டுவரமாட்டேன்” என்றான். தட்சசாவர்ணி “ஆம், உண்மை” என்றான். வால்மீகி புன்னகைத்தார்.

“கருவிற்குள் வந்து கடித்த பாம்பின் முதற்துளியை மட்டும் உடன்கொண்டு அங்கு செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். தட்சசாவர்ணியும் வால்மீகியும் வாழ்த்த தலைவணங்கி அடிவைத்து அவ்வாயிலை நோக்கிச்சென்று தொட்டுவணங்கி திறந்து கடந்தான்.

முந்தைய கட்டுரைமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் -10