சிறுகதைகள் என் மதிப்பீடு -2

சிலசிறுகதைகள் 2  குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம்  புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம்  ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன்.

 

என் சிறுகதை விமர்சனத்தில் ஒரு சின்ன அத்துமீறல் உள்ளது. அது கதையை எப்படி எழுதியிருக்கலாம் என்று சொல்வது. விமர்சகன் அதைச் சொன்னால் ‘டேய் போடா’ என்றுதான் எழுத்தாளன் சொல்லவேண்டும். நான் சற்று ‘மூத்த’ எழுத்தாளன் என்பதனால் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறேன்.

 

அதேபோல விமர்சகன் எழுத்தாளனை நோக்கிப் பேசக்கூடாது. அவன் எவனாக இருந்தாலும் விமர்சகன் என்பவன் எழுத்தாளனின் நுண்ணுணர்வோ, அறிவாற்றலோ கொண்டவன் அல்ல. விமர்சகனின் பணி மேலான வாசிப்பை உருவாக்குவதே. அவன் இடம் தேர்ந்த வாசகன் என்பதுதான் அவன் சகவாசகனை நோக்கியே பேசவேண்டும். வாசகன் வாசிக்காத இடங்களை சுட்டி வாசிப்பை விரிவாக்கும் முதன்மை வாசகனே நல்ல விமர்சகன்.

 

ஆனால் நான் படைப்பாளியை நோக்கிப் பேசுகிறேன். இதுவும் அத்துமீறல்தான். இலக்கியமுன்னோடிகள்  வரிசை விமர்சனங்களில் வாசகனை மட்டுமே இலக்காக்குகிறேன். இங்கே கொஞ்சம் அத்துமீறுவதற்கான உரிமையையும்  ‘முன்னோடி’ என்பதனால் எடுத்துக்கொள்கிறேன்

 

அப்படியெல்லாம் இல்லை, அந்த இடத்தை எனக்கு அளிக்கப்போவதில்லை என்னும் வாசகர்கள் ,எழுத்தாளர்கள் இதைப்புறக்கணித்துவிடலாம்.

 

*

 

காளிப்பிரசாத்

 

 

காளிபிரசாத்தின் விடிவு அவரது முதல் கதை. முதல் கதை என்ற வகையில் இயல்பாகவும் தடையின்றியும் செல்லும் மொழிநடை அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும். சிறுகதை நவீன இலக்கியத்தின் ஒரு வடிவம் என்ற வகையில் அதன் தோற்றத்திலேயே புறவயமான ஒரு நடையை அடிப்படையான தேவையாகக் கொண்டுள்ளது. நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளின்மேல் எதிர்வினையாக எழும் எண்ணங்களையும் குறைந்த சொற்களில் வாசகன் ஊகிக்கும்படி வாய்ப்புகளை அளித்து சொல்வது அதனுடைய வழிகளில் முக்கியமானது.

 

சிறுகதை முன்னோடிகளாகிய ஓ.ஹென்றி, செக்காவ், மாப்பாசான் ஆகியோருடைய கதைகளில் இந்த புறவய நடை அமைந்தபிறகு இன்றுவரை சிறுகதையின் மைய ஓட்டமாக இருப்பதே இதுதான். ஜி.நாகராஜன் சிறுகதைகளைப்பற்றிப்பேசியபோது  ‘கதையில் என்ன எண்ணப்பட்டது என்பதை சொல்லவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னாலே போதுமானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த மைய ஓட்டத்திற்கு எதிர்வினையாக வெறும் எண்ணங்களே ஆன கதைகளும் உணர்வுகளைச் சொற்களாக நேரடியாக வெளிப்படுத்துவதை மட்டுமே செய்யும் கதைகளும் எழுதிப்பார்க்கப்பட்டன. மௌனியின் சிறுகதை ஒரு உதாரணம். இன்னொரு வகையில் கு.ப.ராஜகோபாலனின் விடியுமா போன்ற சிறுகதைகள் உதாரணம்.

 

காளிபிரசாத்தின் முன்னுதாரணமாக புறவய நிகழ்வுகளையும் அவற்றின் இயல்பான உள எதிர்வினைகளை மட்டுமே எழுதி கதையை நிறுவும் அசோகமித்திரன் இருப்பதைக் காண முடிகிறது. முதற்கதையிலேயே தமிழின் முக்கியமான முன்னோடி புனைகதை எழுத்தாளர் ஒருவரின் நேரடியான செல்வாக்கு இருப்பதும் வரவேற்புக்குரியதே.

 

இக்கதை இறந்து போன நண்பன் ஒருவனின் கதாபாத்திரத்தை பற்றி ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதை ஒரு கதைச் சரடாகவும் அவனுடைய இறப்பிற்கு பிந்தைய அரசுச் சடங்குகள் மற்றும் சட்ட சிக்கல்களைப் பற்றிய ஒரு சரடாகவும் பின்னிச் செல்கிறது. முதல் சரடு கதை சொல்லியின் நினைவிலும் இரண்டாவது சரடு அவன் எதிர்கொள்ளும் புற உலகிலும் இருக்கிறது. இவை பெருமளவு குழப்பமில்லாமல் பின்னப்பட்டிருப்பதும் சிறுகதையின் வடிவத்தில் ஆசிரியருக்கு உள்ள தேர்ச்சியைக் காட்டுகிறது .முதல் கதை என்னும் போது இது குறிப்பிடத்தகுந்த வெற்றியே

 

சிறுகதையின் வடிவு என்பது கூரிய தொடக்கம்,  மையம் கொண்ட கதை ஓட்டம், புறவயமான நடை, காட்சித்தன்மை, இறுதியில் உச்சமும் திருப்பமும் கவித்துவ உட்குறிப்பும் அமையும் இயல்பு – ஆகியவற்றைக் கொண்டது. இது இலக்கணம்

 

காளிப்பிரசாத்தின் இக்கதை இறுதி முடிச்சை நம்பி இருப்பது. இறுதி முடிச்சை நம்பி இருப்பதில் அதன் உடல் பகுதியில் அம்முடிச்சுக்கு நேர்மாறான கதை சித்தரிப்பை அளிப்பதும், அம்முடிச்சுடன் நேரடியாகத் தொடர்பற்ற தகவல்களை தந்து வாசகனுடைய கவனத்தை திசை திருப்புவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உத்தி அப்போதுதான் கதை முடியும்போது அந்த திருப்பம் வாசகனை ஒரு மெல்லிய அதிர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லவைக்கிறது. அவ்வகையில் சிறுகதையின் வடிவத்தையும் காளிபிரசாத் சிறப்பாகவே அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

 

கதை முழுக்க பலவகையிலும் புழங்கி வரும் ஏராளமான தகவல்கள் அக்கதை எப்படி முடியும் என்பதை வாசகன் ஊகிக்காதபடி அவன் கவனத்தை திசை திருப்பி விளையாடிச் செல்கின்றன. ஆனால் இச்சித்தரிப்பின் முக்கியமான குறைபாடாக இருப்பது இந்த திசைதிரும்பலுக்காகவும், சட்ட சிக்கல் உட்பட நடைமுறை வாழ்க்கையை சொல்லும் நோக்கத்திற்காகவும் தேவையற்ற மனிதர்கள்  மற்றும் தேவையற்ற தகவல்கள் உள்ளே கடந்து வருவது. இது சிதறலை உருவாக்குகிறது. சிதறல் என்பது ஒரு வடிவக்குறைபாடே.

 

உதாரணமாக இக்கதையில் கோதண்டராமன் போன்ற அலுவலக நண்பர்களைப்பற்றிய குறிப்புகள் அனைத்தும் இந்தக்கதை அவர்களை நோக்கிச் செல்கிறதோ எனும் எண்ணத்தையும், அல்லது ரவியுடன் வாழ்க்கையுடன் கோதண்டராமனுக்கு ஏதோ ஒரு நுட்பமான உறவிருக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குவதாக இருக்கிறது. சிறுகதையின் வடிவில் முடிவை வாசகனுக்குக் காட்டாத கைத்திறன் இருப்பது நல்லது. ஆனால் அது வாசகனை திட்டமிட்டு திசை திருப்புவதாகவோ அல்லது அவனது கவனத்தை கதையிலிருந்து விலக்குவதாகவோ அல்லது வேறு கதைகளை அவன் கற்பனை செய்யும் விதமாகவோ அமைவதென்பது சரியானதல்ல

 

ஆக இதன் புறவயச் சித்தரிப்பில் கோதண்டராமன் போன்று சம்மந்தமில்லாத கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் இல்லாமல் இருதிருந்தால் , ஏதோ வகையில் வெளியே நடக்கும் ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ரவியின் குணச்சித்திரத்திற்கு இயல்பான ஒரு ஊசல் சென்று மீண்டிருந்தால் கதை வடிவம் இன்னும் ஒழுங்காக அமைந்திருக்கும்.

 

இறுதியாக, இக்கதையின் முடிச்சு பழகிப்போனது . இன்று விகடன் உட்பட வணிக இதழ்களிலேயே இத்தகைய கதைகள் சாதாரணமாக வெளிவரத்தொடங்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அசோகமித்திரன் இத்தகைய கதைகளை எழுதும் போது அன்றாடத்தன்மையிலிருந்து ஒரு மெல்லிய பேருணர்ச்சி வெளிப்படுவது அழுத்தமான விளைவுகளை உருவாக்கியது.  ‘அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம்\ போன்ற அசோகமித்திரனின் ஆரம்பகால கதைகளிலேயே இதை அவர் முயன்றிருக்கிறார். இன்று அக்கதைகளையே பெரிய அளவில் நம்மால் சொல்ல முடியவில்லை என்னும் போது அதே பாணியில் எழுதப்பட்ட ஒரு புதிய கதை அதன் வீச்சை பெருமளவுக்கு இழந்து விடுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

 

மனிதர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் ஒரு குறிப்பிட்ட வகையில் எதிர்வினை ஆற்றுகிறார்கள்; சிலர் மட்டும் தன் ஆழத்தின் இயல்பால் மேலே சென்று  ஓர் மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய  கதாபாத்திரத்தைக் காட்டுவது  இக்கதையின் வடிவம். இது சிறுகதையின் பழகிப்போன கூறுமுறைகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டிருக்கிறது.  இதேபோல ஒருவனை ஐயப்படுதல், பின்பு அவன் எப்படிப்பட்டவன் என்று தெளிதல் இன்னொரு மாதிரிவடிவம்.

 

இப்படிச் சொல்லலாம். 1. ஒரு கதாபாத்திரம் மீதான தவறான புரிதலைக் களைதல் 2 தெரியாத ஒரு செய்தியை ஒரு கதாபாத்திரம் வெளிப்படுத்துதல் 2 எதிர்பாராதபடி ஒரு கதாபாத்திரம் வேறுவகையில் வெளிப்படுதல் ஆகியவை ஒரு வகை ‘டெம்ப்ளேட்டுகள்’

 

கதை எழுதத்தொடங்கும்போதே இயல்பாக இத்தகைய கதைகள் தான் எழுதத்தோன்றும். ஏனென்றால் இவை அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் நாம் நமது முன் தீர்மானங்களை வாழ்க்கை முறியடிக்கும்போதே வாழ்க்கையின் உணர்வு சார்ந்த உண்மையை அறிகிறோம். உடனே அதை எழுதும்படி நமது கைகள் பரபரக்கின்றன. நமது முன் தீர்மானத்தை கதையின் உடலாகவும் நமது அறிதலை கதையின் உச்சமாகவும் வைத்துக் கொண்டால் ஒரு சிறுகதை வடிவம் இயல்பாக வந்துவிடும்.

 

ஆனால் அது பழகிப்போன வடிவம் என்றும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சிறுகதை எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் கதைக்கருவை தேர்ந்தெடுப்பது ஒரு அறைகூவல். நூறு வருடங்களாக சிறுகதை எழுதப்பட்ட நம் மொழியில் வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் மேதைகளால் எழுதப்பட்டுவிட்ட பின்னர் புதிதாக ஒன்றை எழுதுவதென்பது எளியதல்ல.

 

ஆனால் இன்னொரு வகையில் அது எளிதுதான். ஏற்கனவே கதைகள் சொல்லப்பட்டுவிட்ட முறைமைகளை உணர்ந்து அத்தகைய கூறுகளை தவிர்த்து விட்டால் நம் வாழ்வில் எஞ்சுவது எதுவோ அது எல்லாமே புதிய விஷயமாகவே இருக்கும். காளிபிரசாத் அப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் விரும்புகிறேன்.

 

images (2)
சுனீல் கிருஷ்ணன்

*

 

சுனில் கிருஷ்ணனின் ருசி கதையும் ஓர் அன்றாட உண்மையை புனைவினூடாக சென்று தொட முயல்கிறது. இக்கதையின்முக்கியமான அம்சம் என்பது வாசகனை நம்பி கதையின் அந்த நுண்ணிய தருணத்தை குறைந்த அளவு மட்டுமே காட்டி நிறுத்தியிருக்கும் தன்னம்பிக்கைதான். வாசகனிடம் சொற்பொழிவாற்றவோ வாசகனிடம் தேவைக்கு மேல் உரையாடவோ தான் சித்தரிக்கும் வாழ்க்கையை அலகுகளாகப்பகுத்து முன்வைக்கவோ ஆசிரியர் முயலவில்லை.

 

இக்கதையில் இருப்பது ஒரு தருணம் மட்டுமே. கதை சொல்லி அத்தருணத்தை தன் உள்ளம் வழியாகவும் அவ்வுள்ளத்தால் வந்தடையும் புறச்சூழல் வழியாகவும் வந்தடைகிறான். இவ்விரு சரடுகளும் பெருமளவுக்கு நேர்த்தியாகவே சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இக்கதை இன்றுவரை தமிழ்ச்சிறுகதை வந்தடைந்த பாதையிலேயே உள்ளது. ஆகவே புதியதாக இல்லை. சிறுகதையில் நேற்றைய நேர்த்திக்கு மதிப்பில்லை. புதியதன்மை – novelty – தான் முதன்மைக்குணம். திறனும் முழுமையும் அதற்குப்பின்னரே

 

உதாரணமாக கதை சொல்லியை ஏமாற்றி சுரண்டி சென்றுவிட்ட ஒருவனைப்பற்றி கதை சொல்லி அடையும் ஆங்காரமும் கோபமும் கதைக்குள் வந்து கொண்டே இருக்கின்றன. ஜானகிராமன் கதைகளைப்பார்த்தால் கதைசொல்லியே தன் உடன் வரும் எவரிடமேனும் சற்று வளவளப்பு எனத் தோன்றத்தக்க உரையாடல் வழியாக நேரடியாக சொல்வது போல் அமைந்திருக்கும். அசோகமித்திரன் கதைகளில் வரும்போது அவனுடைய உள்ளத்தில் நிகழ்ந்த எண்ணம் வழியாகவே அது காட்டப்பட்டிருக்கும். இக்கதையில் ‘எப்படி ஏமாற்றிவிட்டான், மூட்டைப்பூச்சி போல் உறிஞ்சிவிட்டு ஏமாற்றிச் சென்றுவிட்டான்’ என்று  கதைசொல்லியின் உளக்குமுறலாக பல முறை திரும்ப வருகிறது. கதையே சிறிது எனும்போது இத்தனை முறை இது திரும்ப சொல்லப்படுவது வாசகனுக்கு தே வையற்றது.

 

இன்றைய ஓர் இளம் எழுத்தாளன் ஜானகிராமனோ அசோகமித்திரனோ அதை சொன்ன பாணியில் அன்றி வேறு எவ்வகையில் இதை சொல்லியிருக்க முடியும் என்றே யோசிக்க வேண்டும். ஒர் உரையாடலில் வரும் குறிப்பாக அல்லது ஒரு உருவகமாக  அல்லது இதுவரைச் சொல்லப்படாத வெவ்வேறு வகைகளில் அதைக் குறிப்பிட்டிருக்கலாம். அப்படி ஒரு புதிய பாதை கண்டடையும்போது மட்டுமே இக்கதை அடுத்த தலைமுறை எழுத்தாளனின் கதையாக அறியப்படும். இன்று அது அசோகமித்திரனின் கதைகளின் ஒரு மெல்லிய நீட்சியாகவே நின்றுகொண்டிருக்கிறது.

 

ஒரு கதை எழுதிய பின்னர் இது எவ்வகையில் அசோக மித்திரனிடமிருந்தோ ஜானகிராமனிடமிருந்தோ வண்ணதாசனிடமிருந்தோ மேலே செல்ல முடியும் என்று எண்ண ஆரம்பிக்கும் போதே அக்கதையில் உள்ள குறைபாடுகள் கண்ணுக்குத் தென்படும்.  இது இளம் எழுத்தாளனுக்கு ஒரு முக்கியமான சவால்

 

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். அந்தக் கதைசொல்லி ஒரு ரயில் நிலையத்தில் வாங்கும் அந்த மக்ரூனியுடன் அவன் சுரண்டப்பட்டதும் இணைந்திருந்தால் ,அவ்விரண்டும் ஒரே கூற்றாக கதைக்குள் இயல்பாக வந்திருந்தால், இக்கதை அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும். உள்ளத்துக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான், பின்னர் மக்ரூனி வாங்குகிறான் என்ற அளவிலேயே இப்போது நின்று விடுகிறது. அவற்றுக்கிடையே உள்ள உறவு இக்கதையில் இவ்வடிவில் இல்லை.

 

மக்ரூனியை தயாரித்து விற்கும் ஒரு தொழிற்சாலையை இவர்கள் நடத்தியிருக்கலாம். வாங்கி விற்கும் ஒரு கடையை நடத்தியிருக்கலாம். அல்லது மக்ரூனியுடன் அந்த நண்பன் எவ்வகையிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக மக்ரூனி என்பதே அவன் கைநடுங்க வைக்கும் ஒரு உணவாக இருந்திருக்கலாம்.

 

இன்று அவன் பிடிபட்டுவிட்டான் என்னும் போது ஒரு மக்ரூனியை வாங்கி இவன் உண்ணுகிறான் என்ற இடத்திலே கதை தொடங்கியிருக்கலாம். அதில் ஒரு துளியைக் கூட பங்கு வைக்க அவனுக்குத் தோன்றவில்லை என்பது அவனே உணரும்போது அந்தக் கதை முடிவுக்கு வருவது இயல்பாக அமைந்திருக்கும்.

 

அத்துடன் ருசி என்பதற்கும் அந்த ஏமாற்றப்பட்ட நிகழ்வுக்குமான உறவு கதைக்குள் வந்திருக்கவேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து சுவைத்த ஏதோ ஒன்றின் சுவையாக மக்ரூனி மாறியிருக்கலாம். அவர்கள் சேர்ந்து சுவைத்த நட்பு. அல்லது சேர்ந்து சுவைத்த பிறரது குருதி. எதுவோ. சுவைதான் கதை. ஆனால் அது எப்படி ஏமாற்றப்பட்ட உணர்வுடன் இணைகிறது என்பது வாசக உள்ளம் கோருவது.

 

இன்னொன்று ஒரு கதையின் அறஅடிப்படை என்பதும்  வாசகனுக்கு திருப்தியூட்டக்கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பொட்டலம் இனிய உணவை எவருடனும் பகிர்ந்துகொள்ள தனக்கு தோன்றவில்லையே என்பது கதை சொல்லிக்கு ஒரு குற்ற உணர்வையோ அல்லது தன்னைப்பற்றிய ஒரு புரிதலையோ உருவாக்குவது இயல்பானதே ஆனால் அதன் பொருட்டு தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்ட ஒருவனை முழுமையாக அவன் மன்னித்துவிடுவான் என்றால் அந்த அற தன்மை சமநிலை அடையவில்லை.

 

ஏனென்றால் இப்படிச்சொல்லலாம். ஏமாற்றிச் சென்றவன் செய்தது ஒரு  ’குற்றம்’. பிறருக்கு  கொடுக்காமல் உணவை உண்பது ஒரு ’பிழை’. இரண்டும் சமானமானவை அல்ல. இந்த அம்சம் தான் இந்தக்கதையை படிக்கும் போது வாசகனுக்கு நிறைவுணர்ச்சியை அளிக்காமல் இருக்கிறது.

 

இதை எப்படி சமன் செய்திருக்கலாம் என்பது ஆசிரியருடைய சொந்த நீதியுணர்ச்சியை சார்ந்த ஒன்று நான் என்ன செய்திருப்பேன்? கதைசொல்லியை ஏமாற்றிச்சென்றவனுடைய ஏமாற்றுதலில் தனக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கிறது,  அது பிறருக்குப் பகிராத தன்னியல்பால் தன்னை மட்டுமே சார்ந்து எண்ணும் தனது மனப்போக்கினால் தனக்குத் தானே இழைத்துக் கொண்ட  ஒரு குற்றம் என்று அந்தக் கதை சொல்லி உணர்வான் என்றால் ஓரளவுக்கு இந்த சமன்பாடு சரியாக வருகிறது.

 

கதையின் கலைக்குறைபாடு என்று முக்கியமாக இன்னொன்றைச் சொல்லவேண்டும். உள்ளத்து உணர்வுகளை எழுதும்போது அவ்வுணர்வுகளை நேரடியான சொற்களில் சொல்வதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது.  அதோடு அந்த உணர்வை வாசகன் அறிந்து கொண்ட பிறகும் கூட ஆசிரியன் சொல்லிக் கொண்டிருப்பான் என்றால் ஒரு சலிப்பை வாசகன் அடைவான்.

 

’ஆவேசமும் கோபமும் உள்ளூர நிறைத்து பொங்கின இரவெல்லாம் நினைவுகள் கற்பனைகள் அவனை விதவிதமாக சிறுமை செய்வது போல அவமதிப்பது போல பெரிய மனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல கெஞ்சி இறைஞ்சுவது போல…’ என்று சொல்லும் இடத்திலேயே அவ்வுணர்வுகள் வெளிப்பட்டுவிட்டன. அதைத் திரும்ப சொல்ல வேண்டியதில்லை.

 

உணர்வுகள் அல்லது எண்ணங்கள் கறாரான குறைந்த பட்ச சொற்களில் தான் சொல்லப்படவேண்டும். உணர்வுகளைப்பொறுத்தவரை அவற்றை நேரடியாக சொல்ல சொல்ல அவை வலுவிழக்கவே செய்யும்.  ‘உள்ளம் கொந்தளித்தது’ என்பது எந்த வகையிலும் உள்ளக் கொந்தளிப்பைக் காட்டாது. ’அழுகை வந்தது’ என்பது எந்த வகையிலும் துயரை காட்டாது. அவை சொற்கள். சொற்கள் பொருளை அளிப்பவை, உணர்வை அல்ல. ஆகவேதான் நாம் புனைவை எழுதத் தொடங்குகிறோம். அதற்குத்தான் படிமங்களையும் உருவகங்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்தினார்கள்.

 

இதன் போதாமை என்பது ஒரு வாசகனை அவன் அற உணர்வை தொட்டு நிலை குலையும் அளவுக்கு இதன் அறம் சார்ந்த வினா வலுவானதாக இல்லை என்பதே. அந்தக் கொந்தளிப்பு நிறைவூட்டும்படிச் சொல்லப்படவில்லை. அந்தக் கண்டடைதல் வாசகன் தன்னைக் கண்டடைவதாக ஆகவில்லை. ஆயினும் நுட்பமாகச் சொல்லப்பட்ட நல்ல கதை, ஆனால் முன்னோடிகளைக் கடந்து போகவில்லை என்றே சொல்வேன்.

 

சுனீல் கிருஷ்ணனின் ஆற்றல் புறவுலகை நுட்பமாகச் சொல்லும் திறன், அன்றாடவாழ்க்கையின் தருணங்களில் அறக்கேள்விகளை எழுப்பும் பார்வை ஆகியவை. அவை வளரட்டும்.

 

=========================================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

 

=================================================================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

முந்தைய கட்டுரைசுட்டி விகடனில்…
அடுத்த கட்டுரை2.0