படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?

 

images

 

 

ஜெ..
மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்…
அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம்.
ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப் படாது என்றே தோன்றுகிறது
காரணம், அப்படி செய்தால் , அதில் சுரா தான் தெரிவார்… டால்ஸ்டாயோ தாஸ்தயேவ்ஸ்கியோ தெரிய மாட்டார்கள்
சோவியத் மொழி பெயர்ப்புகள் அவற்றுக்கே உரிய சில சொற்கள் வாக்கிய அமைப்புகளால் ஒரு வகை அன்னியத்தன்மையுடன் இருப்பதும் அழகாகவே இருப்பதாக தோன்றுகிறது
இலக்கியப் புலமை என்பது ஒரு தகுதி அல்ல என தோன்றுகிறதே….
என்றென்றும் அன்புடன்’
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
அது ஒரு பொதுநோக்கில் உண்மை. ஆகவேதான் இரண்டாம்நிலை எழுத்தாளனே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும் என நான் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமான பெரிய எழுத்தாளர்கள் மொழியாக்கங்கள் செய்வதில்லை. அவர்கள் எழுதிக்கண்டுபிடிக்கவே நிறைய எஞ்சியிருக்கும். [கடைசியில் கண்டடையமுடியாமையின் உளச்சுமை மிஞ்சும்]
ஆனால் இளமையில் அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பார்கள். அம்மொழியாக்கம் வழியாகவே அவர்களின் நடை உருவாகி வந்திருக்கும். சுந்தர ராமசாமி மொழியாக்கத்தில் செம்மீன், தோட்டியின் மகன் இரண்டுமே மொழியாக்கத்தில் கிளாஸிக்குகள்தான்
ஆனால் அவர் சுந்தர ராமசாமி என்னும் நடையாளராகத் தெளிந்தபின்னர் அவர் மொழியாக்கம் செய்த அண்டோனியோ மச்சடோ , ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் கவிதைகள் எல்லாமே சுந்தர ராமசாமித்தனமாக இருப்பதைக் காணலாம்
நல்ல எழுத்தாளனால் தன் எழுத்தை மாற்றிக்கொள்ள முடியும். மொழியாக்கம் வழியாக அவனும் உருமாறலாம். உண்மையில் அப்படி வலுவான இன்னொரு மொழிப்படைப்பாளியை மொழியாக்கம் செய்வது தன் மொழிநடையை திசைமாற்றிக்கொள்ள அவனுக்கு உதவும்.
விஷ்ணுபுரத்திற்குப்பின் என் நடையை மாற்றிக்கொள்ள நான் அறிவியல் கட்டுரைகள், செய்திக்கட்டுரைகள் என ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்தேன். ஆம், பணத்தேவையும் இருந்தது. ஆனால் நடையை மாற்றிக்கொள்ளமுடிந்தது.

 

தாஸ்தயேவ்ஸ்கியே நிறைய மொழியாக்கங்கள் செய்தவர்தான். கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸும் மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். மொழியாக்கங்களை மொழிப்பயிற்சிக்காகவே செய்துபார்க்கலாம். மொழிகள் சந்திக்கும் புள்ளி புனைவெழுத்தாளனுக்கு மிக ஊக்கமூட்டும் திறப்புகளால் ஆனது.
ஆகவேதான் பலமொழிகள் அறிந்திருப்பது எழுத்தாளனின் தகுதி என்று டி எஸ் எலியட் சொல்கிறார். ஒரு தொன்மையான மொழியும் ஒரு சமானமான மொழியும் ஒரு நவீன முன்னோடிமொழியும் தெரிந்திருப்பது நல்லது என்கிறார்
ஆனால் சுந்தர ராமசாமி, சுஜாதா போல மாறாத சொந்த நடை, சொந்தச் சொல்லாட்சிகள் கொண்டவர்களுக்கு அது எளிதல்ல
ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 16
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42