இயற்கைவேளாண்மை -கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.

தங்கள் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த சூழ்நிலையில் உங்கள் செய்தி கிடைக்கப்பெற்றது இன்னும் சிறப்பு!
ஆரம்பத் திட்டம் ஆறடுக்கப்பணி என்று தொடங்க முன் செல்ல செல்ல தெரிந்தது ஒவ்வொரு அடுக்கும் ஒரு கதவு மட்டுமே ஒன்றுக்கு பின்னால் மொத்தம் ஆறு கதவுகள் திறக்கப்பட வேண்டுமென்று! ஊர்ந்து ஊர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம் திட்டப் பணிகள் முடிவடைந்தது, ஆறாம் திட்டப் பணிகள் தயார் நிலையில். இடையில் இருக்கும் நான்காம், ஐந்தாம் கட்டங்கள்தாம் அதிக திராணி கேட்கிறது அதைப் பற்றிய உரையாடலுடன் தான் அந்த நாள் முடிவடைந்தது.
மின்சாரம் இலவச வகை சாத்தியமில்லை என்றனர் சரி வேளாண் வகை (4 ருபாய்) பெற்றிடுவோம் என்று சென்ற வாரம் ஒருவரை அணுகினோம் அவர் ‘அண்ணே.. நீங்க மார்கழிக்குள்ள மரம் வச்சு அதுக்கு தண்ணி இரைக்கனுமுனா 5.80 பைசா வகைக்கு தான் போகணும் சீக்கிரம் கிடைச்சிடும். அப்பறம் மாத்திக்கிங்க.. அப்படியில்லைனா விட கட்டி அதுக்கு வாங்கிக்கங்க..’ இந்த தொடர் பணிகளில் நன்கு புரிந்தது இது சூழ்ச்சியான சிக்கல் பழுத்த அனுபவம் (எதை முன் செய்வது எதை பின் செய்வது) மட்டுமே கைகொடுக்கும் (அதுதான் நம்மிடமில்லையே ;)).
மற்றொரு புறம் வங்கிளில், ஒரு வங்கி சில காரணங்களை கூறி கடன் கொடுக்கயியலாது என்று மறுத்துவிட்டனர், மற்றொன்று (டிசம்பர்) மார்கழி கழித்து வாங்களேன் என்கிறது, மூன்றாவது சில சிபாரிசுகளுக்கு இடையில் எடுத்துக்கொள்ளப்பட்டு பின் 13% (!!) வட்டி என்றனர் – தந்தையிடம் இது கடினம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் (எனக்கு சுவாரசியமாகவேயிருக்கிறது இது போன்று தேவைகளுக்காக சேவை அளிப்பர்களை சந்திப்பதும் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவதும், அவர்கள் கேட்பதை நாம் தரயியலாது அல்லது காலத்துக்குள் முடியாது. திட்டமிட்டே விதிகள் அமைக்கப்படும் போல.. ;)). இந்த பேச்சுகளுடன் நிறைவடைந்தது அன்றைய நாள், சின்ன சோர்வு, இரவு சிந்தனைகளுக்கு பிறகு உறக்கம்.
என்றும் போல் இனிதான் அடுத்த நாள், நேற்று, வாடிக்கையான செயல், இணையத்தில் தாங்கள் அளித்த பதில் மடல் படித்ததும் ஒரு புத்துணர்ச்சி அந்த சோர்வை கேள்வி கேட்டது, களைந்தது. அன்றைய பொழுதை நல்ல சிந்தனைகளில் தேவையான சிந்தனைகளில் செலுத்தினேன். இரவு தந்தையிடம் பேசினேன் அவரிடமும் ஒரு உற்சாகம், மூன்றாம் வங்கி மேல்லாளர் அழைத்து உடனடியாக மறுத்துவிடவேண்டாம் 13% என்பது அதிகப்படி வரையான விகிதம் என்ற தகவலுக்காக  சொல்லப்பட்டது என்றும் பிராந்திய அலுவலகத்திடம் பேசிவிட்டு எப்படி செயல்படுத்துவது என்று சொல்வதாக பேசியுள்ளார். அடுத்ததாக மழையில்லாததால் தாமதமாகும் என்று நினைத்த (காடு அமைப்பதற்கு முன்) உழவு வேலை ஆரம்பித்துவிடலாம் என்றார் – நேற்று மழையாம்! மின்சாரம் தாமதமாகும் என்றால் டீசல் இயந்திரம் மூலம் நீர் இரைப்போம் பருவத்தை தவறவிடாமல் வேலைகளை முடிப்போம், அதற்குள் எப்படியும் மின்சாரம் பெற்றுவிடுவோம் என்றார். நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுது!
வங்கி மேலாளர் பேசியதும், மழை பொழிவதும் நடந்திருக்கும் ஆனால் அதற்கு முன்பாக தங்களது ஆசிர்வாத மடல் ஒரு புத்துணர்ச்சியை அளித்து செல்கிறது இதன் வழியாகவே தான் எனக்குள் நம்பிக்கையை கட்டமைத்துக்கொள்கிறேன்

மார்கழிக்குள் மரங்கள் நட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன். மீண்டும் கடிதம் எழுதுகிறேன்கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளவாவது ;)

நன்றி!
நாராயணன் மெய்யப்பன்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 17