[ 7 ]
பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான்.
நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் நீர்கொண்டுசென்றனர். ஒவ்வொருவருக்கும் உரிய நீர் அன்றுகாலையிலேயே வழங்கப்பட்டது. எரிக்கும் வெயிலில் அதை துளித்துளியாக அருந்தியபடி முன்சென்றனர். கையில் நீர் இருக்கும் எண்ணமே கடும் விடாயை தாங்கச்செய்யும் விந்தையில் திளைத்தனர். அதில் சிறுபகுதியை மறுநாளைக்கென சேர்த்துவைத்தவர்கள் பற்களைக் காட்டி மகிழ்ந்து நகைத்தனர். இரவில் துயில்வதற்கு முன் அந்த நீரை நாவில் விட்டுச் சுழற்றி அமுதென சுவைத்தனர்.
நீர்த்துளியை விரல்நுனியில் தொட்டு கண்முன் தூக்கி நோக்கினான் அர்ஜுனன். அதன் ஒளியும் ததும்பலும் முழுப்பும் நெஞ்சை ஆட்கொண்டன. அதன் வளைவுகளில் பாலைநிலப்பரப்பு வளைந்து சுருண்டிருந்தது. விழிகளைச் சந்திக்கும் விழிமணி. விழியே நீரென்றாகியதா என்ன? சொட்டுவதும் வழிவதும் தேங்குவதும் பெருகுவதும் விரைவதும் பொழிவதும் அலைகொள்வதும் திசையென்றாவதுமான விழியா அது?
கடக்கும்தோறும் பாதை நீண்டு வர கால்கள் தன்விழைவால் நடந்தன. நடப்பதே அவற்றின் இருப்பு என்பதுபோல. துயிலிலும் கால்கள் நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான். அதுவரை அவன் கொண்டிருந்த நடையே மாறலாயிற்று. புதையும் மணலுக்குள் முழுக்காலையும் பதியவைத்து சிறிய அடிகளாக தூக்கி வைத்து சீரான விரைவில் நடக்கவேண்டியிருந்தது. நடைமாறுபட்டதும் நடப்பதும் எளிதாயிற்று. ஒருகட்டத்தில் அத்திரிகளும் ஒட்டகைகளும்கூட அப்படித்தான் நடக்கின்றன என்று தோன்றியது.
நாள் செல்லச்செல்ல ஒவ்வொரு நோக்கிலும் பாலையின் வடிவங்கள் பெருகின. இன்மையென, வெறுமையென, மாற்றமின்மை எனத் தெரிந்த வறுநிலம் மெல்ல தன் உயிர்க் களியாட்டத்தை காட்டலாயிற்று. பொருக்கு என எழுந்த சிறுகூடுகளுக்குள் வெண்ணிற எறும்புகளின் உலகம் கலைந்து பரவியது. சிதல்வரிகளுக்குள் ஆழ்ந்த பாதைகள் இருந்தன. நொதித்த மாவில் என மென்மணலில் விழுந்த சிறுதுளைகளிலிருந்து கரிய எறும்புகள் கசிந்தவைபோல் எழுந்து நிரைவகுத்துச் சென்றன. கற்களின் அடியிலிருந்த விரிசல்களில் இருந்து சிற்றுயிர்கள் எட்டிப்பார்த்தன. ஒட்டகக் குளம்போசையின் நடுவே விரைந்து உட்புகுந்து மறைந்தன.
சாறே அற்றவைபோல, மறுகணம் பற்றிக்கொள்வனபோல தெரிந்த முட்புதர்கள் அனைத்திலும் புழுதிபடிந்து மண்வடிவெனத் தோன்றிய இலைகள் உயிருடனிருந்தன. அவற்றை உண்ண இருளுக்குள் விழிமின்ன எலிபோன்ற சிறு விலங்குகள் வந்தன. அவற்றை பிடிக்க பட்டுநாடா போன்ற வண்ணப்பட்டைகளுடன் பாலைநாகங்கள் பாறைகளுக்கிடையே இருந்து வளைந்து எழுந்தன.
உலோகமென மயல் காட்டிய கூர்முட்களில்கூட உயிர் இருந்தது. புலரியில் அந்த முள்முனைகளில் மென்மயிர் நுனியில் என பனித்துளிகள் நடுங்கின. அத்துளிகளை சிறு சிப்பியளவே இருந்த குருவிகள் வந்து அமர்ந்து கோதுமை மணிகள் போன்ற அலகுகளால் கொத்தி உறிஞ்சி உணடன. சாம்பல்நிறச்சிறகுக்கு அடியில் கொன்றைமலர் வண்ணம் கொண்ட அடிவயிறுள்ளவை. வெண்பஞ்சு நெஞ்சும் இளநீலவரிகொண்ட சிறகுகளும் கொண்டவை. கோவைப்பழம்போல் சிவந்தவை சிலவற்றின் சிறகுகள். பழுத்த மாவிலைபோல் பொன்மின்னியவை சில.
முள் மட்டுமேயாகி, கீழே வலையென நிழல்விரித்து நின்றிருந்த மரங்களுக்குள் மலர்செறிந்ததுபோல் நூற்றுக்கணக்கில் சிறிய குருவிகள் அமர்ந்து சலங்கைகள் குலுங்குவதுபோல் ஒலி எழுப்பி பேசிக்கொண்டிருந்தன. காலடியின் ஓசை கேட்டு அவை காற்று அள்ளி வீசிய மலர்கள் என எழுந்து சுழன்று பறந்து அமைந்தன. தொலைவில் வண்ணப் பட்டுத்துவாலை ஒன்று பறந்தலைவதெனத் தோன்றியது.
அனலென நாக்கை நீட்டிப்பறக்க வைத்தபடி சாலையோரப் பாறையொன்றில் அமர்ந்து நடுங்கி வண்ணம் மாற்றிக்கொண்டது உடும்பு. ஓசை கேட்டு வால் வில்லென வளைய கன்னச்செதில்கள் சிலிர்த்து விடைக்க தலையை மேலும் கீழும் அசைத்து நெருப்பொலியை எழுப்பியது. வண்ணமணித்தொகை என தன் வாலை சிலம்பொலியுடன் ஆட்டிக்காட்டி மணலுக்குள் தலைபதித்துக் கிடந்த நச்சு நாகம் ஒன்றை காவல்வீரன் நீண்ட கழியால் அள்ளி எடுத்து வீசினான். மென்மணல் சரிவில் அலைவடிவை வரைந்தபடி அது வளைந்து சென்று மணலுக்குள் தலை பதித்து தன்னை இழுத்து உள்ளே பதுக்கிக்கொண்டது.
மணல்மேல் கால்பரப்பி நடந்த வெண்சிறு சிலந்திகள் துளைகளுக்குள் சென்று மறைந்தன. முட்புதர்களுக்குள் பனி நிற வலைச்சுழிகள் அழகிய உந்திக்குழிகள்போல் இருந்தன. பொன்னிறக் கூழாங்கற்கள்போல வண்டுகள் சிறகுகள் ரீங்கரிக்க சுற்றிவந்தன. அவற்றை உண்பதற்காக மணலில் கால்பதிய வாலசைத்து எம்பி அமர்ந்து நடந்தன நீளவால்கொண்ட குருவிகள்.
“உயிர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், நீரின் சாயல் காற்றிலிருந்தால் போதும், அங்கு உயிர் இருக்கும்” என்றார் போ என்னும் பெயர்கொண்ட முதுபெருவணிகர். “வீரரே, நீர் என்பது உயிரின் மறுபெயர்.” வெந்துவிரிந்த வறுநிலம் நோக்கி “இங்கு மழை பெய்வதுண்டா?” என்றான் அர்ஜுனன். “மழைக்காலம் என்று ஒன்றில்லை. பல்லாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதேனும் பெய்யலாம். ஆனால் காற்றில் நீர் உண்டு. குளிர்ந்து காலையில் அவை இலைகள் மேல் பரவுகின்றன. இச்சிற்றுயிர்களுக்கு அந்த நீரே போதும்.”
“இங்கு பெரிய உயிர்களும் உள்ளன” என்று அர்ஜுனன் இரும்பாலான கவசமணிந்த புரவிபோல அவர்களின் பாதையைக் கடந்துசென்ற ஒரு பெரிய எறும்புதின்னியை நோக்கியபடி சொன்னான். “இளையபாண்டவரே, குருதியும் நீரல்லவா?” என்றார் போ. அச்சொல்லாட்சி அவனை ஒரு கணம் திகைக்கச் செய்தது. உடனே புன்னகைத்து “ஆம்” என்றான்.
முகிலற்றிருந்த நீலவானத்தின் தூய்மை ஒரு அழியா இருப்பென தலைக்கு மேல் ஏறி எப்போதும் தொடர்ந்தது. நிற்கும்போதெல்லாம் அதை அண்ணாந்து நோக்காமல் இருக்க முடியவில்லை. பாலையில் நுழைந்ததுமுதல் வானத்தின் முகிலின்மை அளித்து வந்த மெல்லிய பதற்றம் நாள்செல்லச் செல்ல விலகியது. அளியின்மை எனத் தோன்றியிருந்த அது மாசின்மை எனத் தோன்றத்தொடங்கியது.
இளைப்பாறுவதற்காக பாலைச்சோலைகளில் படுக்கும்போது வான் முழுமையாகத் தெரியும்படி முள்மர நிழல்களைத் தவிர்த்து பாறையடிகளில் அவன் மல்லாந்தான். வானை நோக்கிக் கொண்டிருக்கையில் அங்கிருந்து ஒலியின்மை வழிந்து தன்னைச் சூழ்ந்து மூடிக்கொள்வதை அவன் விழிகளால் பார்த்தான். உள்ளமென்று அவன் உணர்ந்த சொற்பெருக்கு ஓய்ந்து துளித்துச் சொட்டி மறைய முற்றிலும் இன்மையில் ஆழ்ந்து விழிதிறந்து கிடந்தான்.
விண்ணிலுள்ளது தூயநீர்ப்பெருக்கு என்கின்றது வேதம். மாமழை அக்கடலின் ஒரு துளிக்கசிவே. வருணன் அத்துளியின் காவலன். வருணனைப்போன்ற துளிகள் சென்று சேர்ந்தெழுந்த பெருங்கடல் ஒன்று அங்குள்ளது. இவ்விண்மீன்கள் நீர்த்துளிகளா என்ன? சுட்டுவிரல்முனையில் பழுத்துத் ததும்பி சொட்டத்துடிக்கும் விழிகளா? எவரேனும் தொட்டு உசுப்புகையில் துடித்து வந்து அள்ளிப்பற்றிக்கொண்டு எரித்துக் கொழுந்தாடத் தொடங்கியது காலம்.
கழுகின் உகிர்க்கால்கள் போல புழுதிப்பரப்பை அள்ளிநின்ற வேர்ப்பற்றும் யானைக்கால்கள் போன்று கருமைகொண்டு முரடித்த அடிமரங்களும் கொண்ட மரங்கள் குறுகிய கிளைகளை நீட்டி குற்றிலைகளும் முட்களுமாக செறிந்திருந்த சோலைகள். தெற்கிலிருந்து நிலைக்காது வீசும் காற்றுக்கு வடபுலம் நோக்கி சீவப்பட்ட மயிரென வளைந்து நின்றிருந்தன அவை. சருகுகள் மென்மணலால் மூடப்பட்டிருந்தன. கால்கள் வைக்கையில் அழுந்தி ஆழங்களில் தீப்பற்றிக் கொள்ளும் ஓசை எழுப்பின.
“சருகுகளின் மேல் கால்வைக்க வேண்டாம்” என்று வணிகர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர். “நாகங்கள் உள்ளிருக்கும், கருதுக!” காலில் தோல் உறையிட்ட அத்திரி ஒன்றின்மேல் ஏறி ஒருவன் சரிவிலிறங்கிச் சென்று குவிந்த ஆழத்தில் சேறு தேங்கிய வளையத்தின் நடுவே சந்தனச்சட்டத்திற்குள் ஆடி என வானொளி ஏற்று நடுங்கிக் கொண்டிருந்த நீர்ப்பரப்பு வரை சென்று வழி உருவாக்கினான். முன்னும் பின்னும் சென்று அவன் உருவாக்கிய அவ்வழியினூடாக மட்டுமே பிறர் நடந்து சென்றனர்.
மூங்கில் குவளைகளில் நீரள்ளி முதலில் போவுக்கு அளித்தனர். அதை வாங்கி தலைவணங்கி தெய்வங்களுக்கு வாழ்த்துரைத்தபின் அவர் அருந்தினார். பின்னர் அர்ஜுனனுக்கு அதை அளித்தார். “இனிது… நீரளவு இனிதென ஏதுமில்லை புவியில்.” வரிசையாக அனைவருக்கும் நீர் அளிக்கப்பட்டது. ஓர் ஆழ்ந்த இறைச்சடங்குபோல அவர்கள் அமைதியுடன் நீர் அருந்தினர். நீரை உடல் ஏற்றுக்கொள்ளும் ஒலி எழுந்தது. அவி ஏற்கும் அனலின் ஒலிபோல. உயிர் மண்ணை உணரும் ஒலி என அர்ஜுனன் நினைத்தான்.
மானுடர் அருந்திய பிறகு அத்திரிகளுக்கும் இறுதியாக ஒட்டகைகளுக்கும் நீரளிக்கப்பட்டது. மணற்காற்று ஓலமிட்டுக் கொண்டிருந்த இரவில் வெடித்துச் சாய்ந்தும் காற்றில் அரித்து ஊன்போல உருக்காட்டியும் நின்ற பாறைகளுக்கு அடியில் காற்றுத்திசைக்கு மறுபக்கம் அவர்கள் தங்கினர். அப்பால் பாறைமேல் மணலை அள்ளி வீசி மழையோ என ஓசையிட்டுக்கொண்டிருந்தது காற்று. தோலாடைகளால் முற்றிலும் உடல் மறைத்து முகத்தை மட்டும் காற்றுக்கு வெளியே நீட்டி அமர்ந்தபடியே துயின்றனர்.
[ 8 ]
மழை என ஒவ்வொருநாளும் மயல்காட்டியது பாலை நிலம். ஒவ்வொருநாளும் காலையில் கடுங்குளிரில் உடல் நடுங்கி பற்கள் கிட்டிக்கத்தான் போர்வைக்கூடாரத்திற்குள் அவன் விழித்துக்கொண்டான். குளிர் குளிர் குளிர் என உள்ளம் ஓடிக்கொண்டிருக்கும். குளிரில் தோள்கள் இறுகிக்கோட்டியிருக்கும். கழுத்துத் தசைகள் எடைதூக்குவதுபோல இறுகி நிற்கும். கைவிரல்பூட்டுகள் எலும்பு ஒடிந்தவைபோல உளையும். கால்விரல்கள் மரத்து உயிரற்றிருக்கும். காதுமடல்கள் எரியும்.
உள்ளே கம்பளியும் வெளியே தோலும் வைத்து தைக்கப்பட்ட அந்தப்போர்வை அவன் உடலின் மூச்சையும் வெம்மையையும் உள்ளே சேமிப்பது. பின்னிரவில் அந்த வெம்மை கருப்பை போலிருக்கும். எந்த அணைப்பிலும் அந்த ஆழ்ந்த அன்பை உணர்ந்ததில்லை. விடியலின் இருளுக்குள் அந்த வெம்மையை விண்மீன் மினுங்கும் கரியவானம் அள்ளி உண்டுவிடும். உடல் உயிரென எஞ்சியிருக்கும் வெம்மையை மூச்சினூடாக வெளியே அனுப்பிக்கொண்டிருக்கும். சற்று நேரத்திலேயே நடுங்கி அதிரத்தொடங்கும்.
பின்னர் சூரியனுக்கான தவம். கணம் கணம் என. எண்ணம் எண்ணம் என. விண்மீன் விண்மீன் என. அலையலையென காற்றில் காலம் அள்ளி வரப்பட்டு அவனைச்சூழும். அள்ளிச்செல்லப்பட்டு அடுத்த அடுக்கு வந்தமையும். காற்றில் எப்போதும் ஒரே மணம். புழுதி. ஆனால் வந்தபின் அந்த மணத்தின் வேறுபாடுகளை காணப்பழகிக்கொண்டான். காலைப்புழுதியில் குளிர்ந்த பனியின் ஈரம் கலந்திருக்கும். பின்னர் நீராவி. பின்னர் வறுபடும் மணல். பின்னர் மணலுமிழும் அனல். பின்னர் வெந்த சுண்ணம். பின்னர் மெல்லிய கந்தகம். பின்னர் இருளுக்குள் இருந்து முள்மரங்களின் மெல்லிய தழைமணம்.
ஒளியெழுந்ததும் கண்கள் வழியாகவே உடல் வெப்பத்தை அள்ளிப்பருகத் தொடங்கும். உடல்தசைகள் நீர்பட்ட களிமண் என இறுக்கம் அழிந்து குழைந்து நீளும். கைகால்கள் சோர்வு கொண்டு இனிமையடையும். கண்கள் சொக்கி மீண்டும் ஓர் இன்துயில் வந்து எடையென உடல்மேல் அமையும். சித்தம் ஒளியுடன் குழைந்து மயங்கும். குருதிக்கொப்புளங்கள் அலையும் செவ்வெளியில் சூரியக்கதிர்கள் அதிர்ந்துகொண்டிருக்கும். உடலெங்கும் குருதி உருகி கொப்பளிப்பு கொள்ளும். செவிமடல்களில் குருதியின் துடிப்பை உணரமுடியும்.
எழுந்து நோக்கும்போது முள்முனைகளில் எல்லாம் பனித்துளிகள் ஒளிவிட்டுக்கொண்டிருக்க அருமணிகள் கனிந்த வயல் எனத் தெரியும் பாலை. விண்சுரந்த நீர். விண்ணில் வாழ்கின்றன பெருங்கடல்கள். ஆனால் நோக்கி நிற்கவே அவை உதிராது காற்றில் மறையும். பின்னர் நீள்மூச்சுடன் பாலைநிலம் வெம்மைகொள்ளத் தொடங்கும். வானிலிருந்து வெம்மை மண்ணை மூடிப்பொழிந்துகொண்டிருக்கும். பின்காலையாகும்போது மண்ணிலிருந்து வெம்மை மேலெழத் தொடங்கும். பின்னர் வானிலிருந்து வரும் காற்று மண்ணின் அனலை அவிப்பதாகத் தெரியும்.
உச்சிப்பொழுதே பாலையில் பெரும்பொழுது. அறத்தின் துலாமுள் என கதிரவன் அசைவற்று நின்றிருக்க நிழல்கள் தேங்கிய பாறைகள் வெம்மைகொண்டு கனலுண்டு கனலுமிழ்ந்து உருகுநிலையை நோக்கி செல்வதுபோலிருக்கும். பின்மாலையில் வெம்மை இறங்குகிறதா இல்லையா என உள்ளம் ஏங்கும். அப்போது மென்மையாக காதை ஊதும் நீராவி மழை என்று சொல்லும். மழை என உள்ளம் குதித்தெழும். ஆம், மழையேதான். மழைவிழுந்த வெம்புழுதியின் தசைமணம். மழைக்காற்றின் மென்குளிர். அது மயலா மெய்யா? இல்லை உணர்கிறேன். உண்மையே அது. மழை.
“மழை!” என அவன் அருகே வந்த வணிகரிடம் சொன்னான். “மழையேதான்.” அவர் இதழ்கோட்டிய புன்னகையுடன் “அதன் பெயர் மாயாவருணன். மழையெனக் காட்டுவான். மழைத்துளிகளைக்கூட உதிர்ப்பான். மழைக்காக ஏங்கும் உயிர்களுடன் விளையாடுவான். வருணனை வெறுக்கச்செய்யும்பொருட்டே அவன் தோன்றுகிறான்.” அர்ஜுனன் விண்ணை நோக்கினான். தென்கிழக்கே முகில்கள் தெரிந்தன. “முகில்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான்.
“ஆம், அவை நீர்சுமந்த கடல்முகில்கள் அல்ல. மண்ணில் இருந்து எழுந்தவை. மேலெழுந்து குளிர்ந்து குடையாகின்றன. அவைதான் மாயாவருணனின் கருவிகள்.” அர்ஜுனன் அவர் சொன்னதை நம்பவில்லை. மழை மழை என உள்ளம் தவிக்க முகில்களை நோக்கிக்கொண்டிருந்தான். முகில்கள் காற்றில் புகை எனக்கரைந்து வானில் மறைந்தன. மேலும் மேலும் நீராவி சுமந்து தோலை வியர்க்கவைத்த காற்று மீண்டும் வெம்மைகொள்ளத் தொடங்கியது. மூச்சுத்திணறல் வந்தது. கண்ணிமைகள் வியர்த்து விழிகளுக்குள் உப்பு சென்றது. விடாய் எழுந்து உடலகம் தவித்தது.
“நீர் அருந்தலாகாது. மழைவருமென எண்ணி நீரை அருந்தவைக்கும்பொருட்டே மாயாவருணன் இதை செய்கிறான்” என்றார் வணிகர். “பாலையில் தவித்து இறக்கும் மானுடர் அருகே வந்திறங்கி அவன் நடனமிடுகிறான். வெள்ளெலும்புகளைச் சுற்றி அக்காலடிகளை காணமுடியும்.” அர்ஜுனன் அந்த மழைமயக்கு மெல்ல விலகி சூரியன் மேலும் ஒளிகொள்வதையே கண்டான். மெல்ல அந்தி. இருள்மயக்கில் மீண்டுமொரு நீராவிப்படலம் வந்து செவிதொட்டு ஏக்கம் கொள்ளச்செய்தது.
மாயாவருணனை அறிந்த தேர்ந்தவணிகரும் கூட ஏமாற்றம்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஒருமுறை நன்றாகவே வான் மூடிவிட்டது. திசைகள் மயங்கும் இருள். ஆடைவண்ணங்கள் மேலும் ஆழம் கொண்டன. “மழை” என்றான் அர்ஜுனன். “பார்ப்போம்” என்றார் போ. மேலும் மேலும் இருட்டிவந்தது. வெம்மை முழுமையாக மறைந்து குளிர் காதுகளைத் தொட்டது. உடல் சிலிர்ப்பு கொண்டது. “ஆம், மழையேதான்” என்றான். “பார்ப்போம்” என்று போ சொன்னார்.
முதல்மழைத்துளியின் ஓசையைக் கேட்டதும் அவன் உடல் அதிரத் தொடங்கியது. சிற்றம்பு வந்து மென் தசையை தைப்பதுபோல மீண்டுமொரு மழைத்துளி. “ஆம், மழை” என்று அவன் கூவினான். “மழை! மழை!” பலர் கூவத்தொடங்கினர். இளைஞர் கைகளை விரித்து கூச்சலிட்டபடி ஆடலாயினர். “மழைதான்…” என்றார் போ. ”பாணரே, சொல்க! இது மழையா?” என்றான் ஒருவன். பீதர்நாட்டுப்பாணன் சுருங்கிய கண்களுடன் நகைத்து “ஆம், மழை” என்றான். “அனைத்துக்குறிகளும் மழை என்கின்றன.”
மழைத்துளிகள் கூடை கவிழ்த்து கொட்டியதுபோல விழுந்தன. அக்கணமே மண்ணிலிருந்து எழுந்த நீராவிக்காற்று அவற்றை அள்ளிச் சிதறடித்தது. வானிலெழுந்த முகில்பரப்பு விரிசலிடலாயிற்று. சூரிய ஒளி அதனூடாக வந்து மண்ணில் ஊன்றி நின்றது. அதில் செந்நிறமாக புழுதிகலந்த நீராவி ஒளியுடன் அலையடித்தது. வானம் பெரும் பெட்டகம்போல் திறக்க பாலை செந்நிற ஒளிகொண்டபடியே வந்தது.
சற்றுநேரத்திலேயே முகில்பரப்பு இரண்டு பகுதிகளாகப்பிரிந்து தெற்கும் மேற்குமென வளைந்தது. பாலை முன்பிருந்ததுபோலவே வெயில்படர்ந்து விழிகூசச் சுடர்ந்தது. வணிகன் ஒருவன் குனிந்து புழுதியில் இருந்து நீர்த்துளி விழுந்து உருவான உருளையை கையில் எடுத்தான். “பனிப்பழமா?” என்றான் ஒருவன். “இல்லை நீர்தான்” என்றான் அவன்.
போ தன் ஆடையிலிருந்த மண்ணைத் தட்டியபடி “முகில் என நின்றது புழுதி” என்றார். புழுதியை மண்ணில் இருந்து எழும் வெங்காற்று மேலே கொண்டுசென்று முகிலீரத்துடன் கலந்துவிடுவதைப்பற்றி ஒருவன் சொன்னான். “வானில் ஒரு சேற்றுச்சுவர் அது” என்றார் போ. பெருமூச்சுடன் தனக்குத்தானே என “எத்தனை அறிந்தாலும் மாயாவருணனிடமிருந்து எவரும் முற்றிலும் தப்பிவிடமுடியாது” என்றார்.
பாணன் உரக்க நகைத்து “அத்தனை தெய்வங்களுக்கும் மாயவடிவங்கள் உள்ளன, பெருவணிகரே” என்றான். மூச்சிழுக்க முடியாதபடி காற்று எடை கொண்டதாகத் தோன்றியது. குருதி அழுத்தம் கூடி உடலை உடைத்துத் திறக்க விரும்பியது. “ஒரு மழை… ஒருமழை இல்லையேல் இறந்துவிடுவேன்” என முதல்முறையாக வந்த இளவணிகன் ஒருவன் கூவினான். தலையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி “வாழமுடியாது…. என் உடல் உருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.
“இந்த நீர்த்துளிகள் நச்சுக்கு நிகரானவை” என்றார் போ. “மாயாவருணன் உமிழ்வது இந்த நச்சுமழை.” பாதையின் ஓரத்தில் சிற்றுயிர்கள் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர். சிறிய ஓணான்கள் பல்லிகள் வெண்வயிறுகாட்டி எஞ்சிய உயிர் வயிற்றில் பதைக்க விரல்கள் விரிந்து சுருங்க வால்நுனி அசைய கிடந்தன. ஒருநாகம்கூட நாவீசியபடி நெளிந்துகொண்டிருந்தது. “நூறு மாயாவருணன்களைக் கடந்தே வருணனை அடையமுடியும்” என்றான் பாணன்.
[ 9 ]
பாறைகளற்று நெடுந்தொலைவு வரை அலையலையாகக் கிடந்த ஊஷரத்தைக் கடப்பதற்கு நெடுநாட்களாயிற்று. அங்கு கிடைத்த நீர் உப்பு மிகுந்திருந்தது. அதை வடிகட்ட அரிப்புகளை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். மென்மணலை சுண்ணத்துடன் பிசைந்து அழுத்திச்செய்த மணற்பலகை அரிப்புகளினூடாக முதலில் நீர் ஊறி கீழே வந்தது. பின்பு மூங்கில் சக்கைகளும் படிகாரமும் கலந்து உருவாக்கப்பட்ட அரிப்புகளில் பலமுறை வடிகட்டி எடுக்கப்பட்டது. அதன்பின்னும் அது மெல்லிய உப்புச்சுவையுடன் இருந்தது.
“குருதிச்சுவை” என்று அர்ஜுனன் அதைக்குடித்தபடி சொன்னான். “கண்ணீரின் சுவையும்கூட” என்றார் போ. இளையவணிகன் ஒருவன் “ஏன் கன்னியின் இதழ்ச்சுவை என்று சொல்லக்கூடாதா?” என்றான். வணிகர்கள் நகைத்தனர். “மைந்தனின் சிறுநீரின்சுவை” என்றார் போ. பீதர்நாட்டில் இளமைந்தரின் சிறுநீரின் சிறுதுளிகளை தந்தையர் அருந்துவதுண்டு என்றான் பீதர்நாட்டுச் சூதன். “அது தன் குருதியை தானே அருந்துவது.”
உப்பரித்த நிலம் வழியாக நிழல் தொடர நடந்தனர். பின் நீளும் நிழலை நோக்கி சென்றனர். உப்பு விரைவிலேயே காற்றை வெம்மை கொள்ளச்செய்தது. நிலத்தில் இருந்து எழுந்த வெம்மை காதுமடல்களை, மேலுதடுகளை, மூக்குவளைவை, இமைகளை எரியச்செய்தது. மணல் இளகி கால்களை சேறென உள்வாங்கியதால் நடப்பதும் கடினமாக இருந்தது.
நெடுங்காலத்திற்கு முன் ஏதோ நீர் தேங்கி பின் வற்றிவிட்டிருந்த குட்டைகள் விளிம்புகளில் அலையலையாக உப்புப்படிவு இதழ்கள் போல் ஒன்றன்மேல் ஒன்றென பதிந்திருக்க மாபெரும் மலர்போல் விரிந்து தெரிந்தன. “அவற்றை மண்மலர்கள் என்கிறார்கள். வான்மழையை அளிக்கும் தெய்த்திற்கு மண் மலர்படைத்து வரவேற்கிறது” என்றார் போ. பீதர்நாட்டுச் சூதன் “புன்னகைகள்” என்றான்.
எப்போது முளைத்தன என்று தெரியாத மரங்கள் அக்குட்டைகளைச் சூழ்ந்து நின்றிருந்தன. தொலைவிலிருந்து பார்க்கையில் சற்றுமுன் காட்டு நெருப்பு எழுந்து எரிந்து எஞ்சிய அடிமரங்கள் அவை எனத் தோன்றின. அருகணைந்தபோதுதான் அவை மட்கி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியிருக்கக்கூடும் என்று தெரிந்தது. விழுந்து கிடந்த மரங்கள் கல்லென மாறிவிட்டிருந்தன. சில மரங்கள் வெண்ணிற உப்பாக உருக்கொண்டிருந்தன.
வணிகர்கள் உப்புப்பரப்பை உடைத்துக் கிளறி உள்ளே புதைந்திருந்த உலர்ந்த மீன்களை வெளியே எடுத்தனர். உப்பில் அமைந்திருந்தமையால் அவை கெடா ஊனுடன் இருந்தன. “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை” என்றான் ஏவலன். ஆனால் சற்றுமுன் உயிரிழந்தவை போலிருந்தன. அர்ஜுனன அவற்றின் விழிகளை நோக்கியபோது மெல்லிய துயில் ஒன்றுக்கு அப்பால் அவன் பார்வையை அவை உணர்ந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. மீன் விழிகள் நீர்ச்சொட்டு போன்றவை. நீர் விழிகள் என மீன்களைச் சொல்லும் கவிதைவரியை நினைவுகூர்ந்தான்.
“இங்கு பறவைகள் மீன் கொள்ள வருவதுண்டு” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். “நீள் அலகால் அவை மீன்களை கிளறி எடுக்கின்றன. எனவே ஆழத்தில் உப்பில் சிக்கிக்கொண்ட மீன்களை மட்டுமே மானுடர் எடுக்கமுடியும். இப்பாலைப்பரப்பில் செல்பவர்களுக்கு அது நல்லுணவு. ஆனால் மிகை உப்பால் விடாய் கூடி வரும். உப்பு நீரிலேயே இவற்றை பலமுறை கொதிக்கவிட்டு செறிந்துள்ள உப்பை அகற்ற வேண்டும். மீண்டும் நன்னீரில் கொதிக்கவிடவேண்டும்.”
“சுழல்காற்று எழுகையில் இவை உப்புடன் எழுந்து வானுக்குச் சென்றுவிடுவதுண்டு. அங்குள்ள நீராவியில் உப்பு உருகிக்கரைய இவை மழையெனக் கொட்டியதாகவும் கதைகள் உண்டு. இறையருளால் வானிலிருந்து உணவு பொழியும் என்கிறார்கள் இங்குள்ளோர்” என்றார் போ. உப்புநீரை அள்ளி யானங்களிலாக்கி அங்கிருந்த சுள்ளிகளைக்கொண்டு தீமூட்டி வாற்றி நீர் எடுத்தனர். அதில் மீன்களை வேகவைத்து உலர்ந்த கோதுமைத்தூளுடன் உண்டனர்.
அதன் பின் காற்றோ வானோ உயிர்க்குலங்களோ ஓசை எழுப்பாமையால் முற்றிலும் அமைதிகொண்டிருந்த விமூகமென்னும் பாலையைக் கடந்து சென்றனர். “அதற்கப்பால் உள்ளது லவணம். அதை சுற்றிக்கொண்டுதான் நாங்கள் செல்வோம். லவணம் இறந்தவர்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார் போ. “அங்கு ஒரு கடல் இறந்து கிடக்கிறது என்கிறார்கள்.”
அர்ஜுனன் புருவம் சுருக்கி நோக்கினான். “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேறு வகையான மானுடர்கள் வாழ்ந்ததாகவும் விண்ணிலிருந்து அனல் வடிவ இறைவனால் அவர்கள் அனைவரும் உப்புச் சிலைகளென மாற்றப்பட்டதாகவும் இங்குள்ள தொல்கதைகள் சொல்கின்றன. முற்றிலும் உப்பாலானது அந்நிலம். உப்புச் சுவருக்கு அப்பால் உப்பு செறிந்த நீரால் உயிர்கள் வாழா கடல் ஒன்று உள்ளது என்றும் அங்கே ஆழத்தில் நீரின் தேவன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்” என்றார் பீதர்குலத்துப் பாணர்.
“அந்த இடத்தை நாடியே நான் வந்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் அறிந்து எவரும் அங்கு சென்றதில்லை. சென்று மீண்டேன் என்று ஒரு சொல்லும் காதில் விழுந்ததில்லை” என்றார் போ. “நான் அதை வெல்லும் பொருட்டே வந்தவன்” என்றான் அர்ஜுனன். “தெய்வங்களை அறைகூவலாகாது, வீரரே. இப்பெரும்பாலையைப் பார்த்தபின்னருமா மானுடம் என்னும் நீர்க்குமிழியை நம்புகிறீர்?” என்றார் பாணர். போ புன்னகையுடன் “சில மானுடர் தெய்வங்களால் தங்களை அறைகூவும்பொருட்டு தெரிவுசெய்யப்படுகிறார்கள் பாணரே” என்றார்.