திரு ஜெய மோகன்
மீண்டும் நான. தீபாவளி என் வரையில் சமண வேர் கொண்டது. ஒரு நிஜமான நிகழ்ச்சி அன்று நடந்தது. மகாவீரரின் மகா பரி நிர்வாணம் அன்று தான் நிகழ்ந்தது.
நரகாசுர வதம் புராண கதை. சாக்தமும் புராண கதையையே சொல்கிறது. தமிழ் சமணம் வலைப் பதிவில் எழுதி வரும் பானு குமார், சமணத்தின் மிச்ச மீதி அடையாளத்தைத் தொலைக்கவே இந்த புராணக் கதை வேண்டுமென்றே வெள்ளாளர்களாலும் , பிராம்மணர்களாலும் பரப்பப் பட்ட சதி என்றே வாதிட்டு வருகிறார். இதில் உண்மை சற்று இருப்பது போல் தோன்றுகிறது. வட நாட்டிலும் மகாவீர நிர்வாண நாள் அது தான். சமணம் தமிழகத்தில் மறைந்த பின் இந்த தினத்தை வேறு விதத்தில் கொண்டாட நம் முன்னோர் முடிவெடுத்திருப்பார் போலும்.
நரகாசுரன் கதை தென்னாட்டில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே பரவலாக வழங்கப் பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அது ராமர் வன வாசம் முடித்து திரும்பி வந்த நாளாக கொண்டாடப் படுகிறது. கேரளாவில் தீபாவளி இல்லவே இல்லை. விடுமுறை கூட இல்லை.
வேங்கடசுப்ரமணியன்
அன்புள்ள வெங்கட சுப்ரமணியன்,
உங்கள் வரலாற்று ஆய்வுக்கோணத்தில் உள்ள முக்கியமான சிக்கல் என எனக்குப்படுவது சமூக இயக்கத்தை ஒன்றை ஒன்று உண்ணும் வேட்டைக்காடாக மட்டுமே பார்க்கும்பார்வைதான். அது நம்மை வேட்டையாட வந்த வெள்ளையர் உருவாக்கியளித்த பார்வை . பலசமயம் அது உண்மைக்கு வெகுதொலைவில் உள்ளது.
சிலப்பதிகாரத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சமணனான கோவலன் மணிவண்ணன் கோட்டத்திலும் சிவபெருமான் ஆலயத்திலும் அருகன் கோட்டத்திலும் ஒரேசமயம் வழிபட்டுச்செல்வதைக் காணலாம். அதில் எந்த பிழையையும் அவன் காணவில்லை. மட்டுமல்ல பலகாலம் ஒருசெவ்வியல் நூலாக இருந்த சிலம்பில் உள்ள இந்த தகவல் எங்கும் ஓர் அபூர்வமான நிகழ்வாகச் சுட்டப்படவும் இல்லை
இந்தியச்சூழலில் இந்த மதங்கள் நடுவே பெரும் பூசல்கள் நடந்தமைக்கு ஆதாரம் இல்லை. ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம்தான். ஆனால் இம்மங்கள் ஒரேசமயம் நீடித்தன. மக்கள் ஒரேசமயம் பல மதங்களை நம்பினர். சமணர்களாக இருக்க இந்து மதத்தை உதறவேண்டியிருக்கவில்லை. சமணத்தின் பஞ்சமகாவிரதங்களை மட்டும் ஏற்ற எவரும் சமணக்குரவர்களுக்கு உணவிடலாம். அந்நிலையில் அவர்கள் சமணர்களும்கூட.
சமணம் எவரையும் தங்கள் மதத்தை உதறிவிட்டு வரச்சொல்லவில்லை. அதாவது நாம் கிறித்தவ இஸ்லாமிய மதங்களில் காணும் மதமாற்றம் அன்று இல்லை. சமணம் சில நெறிகளை மட்டுமே பரப்பியது. இன்றைய மதமாற்றங்களை வைத்து அன்றைய மதச்சூழலை உருவகிக்கக் கூடாது. மதப்பூசல்கள் அன்று மதக்கோட்பாட்டாளர்களின் செயல்களாகவே இருந்தன. அவை பெரும்பாலும் வாதங்களுடன் முடிந்தன. மதங்களுக்குள் பெரும் சண்டைகள் நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் அனேகமாக ஏதுமில்லை.
ஆகவே பெருவாரியான மக்கள் சமணத்துக்குள் வந்தபோது சமணத்துக்குள் பல குலதெய்வ வழிபாடுகள் நுழைந்தன. நாட்டார்பண்டிகைகள் நுழைந்தன. நாக வழிபாடு ஓர் உதாரணம். அது நாட்டார் மரபில் இருந்து சமணத்துக்குள் சென்று மீண்டும் இந்து மதத்துக்குள் வந்த ஒரு வழிபாடு. நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் சமணக்கோயில்தான். நாயர்களின் சர்ப்ப வழிபாடு சமணர்களிடம் இருந்து வந்ததே.
தீபாவளிக்கும் அப்படி ஒரு வரலாறு இருந்திருக்கலாம் என ஊகிப்பதே சரியானது. தீபாவளிக்கு சமணம் அல்லாத பல வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. சமணம் அதை உருவாக்கவில்லை. மதங்கள் பண்டிகைகளை புதிதாக உருவாக்க இயலாதென்பது ஒரு சமூகவியல்தகவல். ஏற்கனவே இருந்த கொண்டாட்டங்களை அவை உருவம் மாற்றமட்டுமே முடியும். ஏசு கிறிஸ்து பிறந்த நாளாகக் கொள்ளப்படும் கிறிஸ்துமஸ் கூட பாகன்களின் சூரியவழிபாட்டுநாளின் மறுவடிவமே. ஏசுவுக்கும் பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் பிறந்த மகாவீரரின் பரிநிர்வாணநாள் என்ற ஒன்று திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருந்தது, நாடெங்கும் கொண்டாடப்பட்டது என்பது வரலாற்றுக்கு பொருந்த்தமான ஊகம் அல்ல
தீபாவளி சமணத்துக்கு முன்னரே பழங்குடி வரலாற்றில் உள்ள பண்டிகை என்பதற்கு ஆதாரமே சமண அறிமுகமே இல்லாத பழங்குடிகளிடம் தீபவரிசை ஏற்றும் சடங்கும் பண்டிகையும் உள்ளது என்பதுதான். அந்த கொண்டாட்டம் சமணத்துக்குள் சென்றிருக்கலாம்.
அதேசமயம் அந்தக் கொண்டாட்டம் சாக்தம் , வைணவம், பௌத்தம் முதலிய மதங்களிலும் இணையாக நீடித்தது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. மிகச்சிறந்த ஆதாரம் கேரள கோயில்களில் உள்ள தாலப்பொலி என்ற சடங்குதான். அதைநான் சுட்டிக்காட்டியிருந்தேன். தீபாவளி இன்றிருக்கும் வடிவில் இபப்டியே இதே பேரில் இதே நாளில் சாக்த, வைணவ மரபுகளில் கொண்டாடப்பட்டது என்றுதான் சொல்லமுடியாது. ஆனால் ஒவ்வொரு மதங்களிலும் அது ஒவ்வொரு வகையில் உருவம் கொண்டது என்றே கொள்ளவேண்டும். கார்த்திகைதீபம் தீபாவளியின் சைவ வடிவம்.
நீங்கள் சொல்லும் பானுகுமார் கூறும் வாதங்களை அவர் ஒரு மதக்காழ்ப்பின் அடிபப்டையில் வரலாற்றைப்பார்க்கிறார் என்று காட்டுகின்றன. அது சமணத்தின் மனநிலையே அல்ல. பொதுவாக இந்த சதிக்கோட்பாட்டை சொல்லும் ஆசாமிகளை நான் பொருட்படுத்துவதில்லை. வரலாறே சதிகளின்வழியாக முன்னகர்கிறது என்று ஊகித்துக்கொள்கிறார்கள். அதற்கான தேவை ஒன்றே. ‘மாற்றாரை’ கட்டமைத்தல். அதன் வழியாக வெறுப்பை திரட்டிக்கொள்ளுதல். அந்த வெறுப்பின் வழியாக தங்கள் பலவீனங்களையும் சரிவுகளையும் மறைத்துக்கொள்ளுதல்
வரலாற்றை அப்படி ‘சதி’செய்தெல்லாம் எவரும் மாற்றியமைத்துவிட முடியாது. வரலாறெங்கும் அதிகார மோதல்களும் பண்பாட்டு ஆதிக்கங்களும் உள்ளன என்பது உண்மையே. ஆனால் அவற்றின் விளைவாக எப்போதுமே ஓர் உரையாடல்மட்டுமே உருவாகிறது.படையெடுப்புகள்கூட பண்பாட்டு உரையாடல்களை உருவாக்குவதையே நாம் வரலாற்றில் காண்கிறோம்.
சமூக இயக்கத்தை தெரிந்ததும் தெரியாததுமான பல்வேறு நுண்மையான பண்பாட்டுவிசைகளின், பொருளியல்காரணிகளின் முரணியக்கமாக உருவகிக்கும் பார்வையே ஆரோக்கியமானது. அப்படி ஆராயக்கூடிய நிதானமும் முழுமைநோக்கும் கொண்ட ஆய்வாளர்கள் வந்தால் நம் பண்பாட்டு வரலாறு இன்னமும் துலக்கமாகும். இந்த மாதிரி முதிரா ஆய்வாளர்களின் காழ்ப்பு வரலாறுகளில் இருந்து விடுதலை கிடைக்கும்
ஜெ
அன்புள்ள ஜெ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை பற்றிய துவேஷமும் வெறுப்புணர்வும் கலந்த பிரசாரத்தை ஏதோ சிறு குழுக்கள் செய்தால் பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு தமிழக முதல்வராக இருப்பவரே செய்து வருகிறார், அங்கீகரிக்கிறார் என்பது கொடுமையான, வெட்கத்திற்குரிய விஷயம் அல்லவா?
இந்த 2010ம் வருடத்திலும் தமிழக மக்களுக்கு இவர் தீபாவளி வாழ்த்துச் சொல்லவில்லை. இரண்டு வருடம் முன்பு கூட ’தீபாவளி தமிழன் கொல்லப் பட்ட நாள்’ என்று பேசியிருக்கிறார் (அப்போதைய எனது எதிர்வினை இங்கே). புராணங்களே கூட நரகாசுரன் இன்றைக்கு அஸ்ஸாம் எனப்படும் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற ஊரை ஆண்டவன் என்று தான் சொல்கின்றன. எல்லா அசுரர்களையும் திராவிட இயக்க “வரலாற்றுப் பார்வை” தமிழர்களாக சுவீகரித்துக் கொண்டு விட்டது!
மாநில முதல்வரே இப்படி இருக்கும் தமிழகத்தில், ஒரு தலைமுறையே தீபாவளி பற்றிய இந்த விஷ(ம)த்தனமான பிரசாரத்தை உள்வாங்கி வளர்ந்து விட்டிருக்கிறது என்பதைத் தான் உங்களுக்கு வந்த கடிதம் காட்டுகிறது. இந்த சூழலில் தீபாவளி பற்றிய உங்கள் விளக்கம் தெளிவாகவும், சமநிலையுள்ளதாகவும் இருக்கிறது. பல தமிழ் வாசகர்களின் குழப்பத்தை அது தீர்க்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜடாயு