நமது முகங்கள் -கடிதங்கள் -1

index

 

பெருமதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் “நமது முகங்கள்” படித்துவிட்டு எனக்குத் தெரிந்ததைப் பகிரவே இதை எழுதுகிறேன்.

கிருஷ்ணா என்பவரை ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக நான் பார்க்கவில்லை.

ட்விட்டரில் ஆறு வருடங்களுக்கு மேலே இருக்கிறேன். இது எனக்குப் பல கண்ணியமான பல நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இங்கு தகாதவர்களை எளிதாக புறந்தள்ளிவிட முடியும், எதையும் சகித்து எந்த எல்லைக்கும் போக வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை.

நூற்றுக்கு பத்து சதவீதம் இளைஞர்கள் நீங்கள் சொல்வது போல் இருக்கின்றனர், ஒரு சில வருடங்களில் திருந்திவிடக் கூடிய வயதுக் கோளாறுதான் அது.

நாட்டில் எத்தனையோ அருவிகள் இருக்க எங்கள் திருமூர்த்தி அணையைத் தவறாகப் பதிவு செய்தது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து கூடும் இடத்தில் நேரக்கூடிய நிகழ்ந்திருக்கக்கூடியது தான். ஆனால் இப்போது மது மற்றும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

அண்ணனாக இருந்தாலும் ஒரு வயதுக்கு மேல் தள்ளிநின்று பேச வேண்டும் என்று சொல்லித் தரும் நாட்டில் முன் பின் தெரியாதவர்களுடன் குளியல் போடும் பெண்களை ஒப்பிட்டுப் பேசி புளங்காகிதம் அடைவதைப் பற்றி எதுவும் தோன்றவில்லை.

நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்தே எழுதுகிறேன் என்று ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆகவே உங்கள் விளக்கத்தை எதிர்பார்த்தோ அன்றி அறிவுரை சொல்லும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.

நன்றி

உங்கள் வசீகர எழுத்துக்களின் வாசகி

ராஜஸ்ரீ

***

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பயணம் பற்றிய பதிவுகளை, எப்போதும் என்னை இழந்து படிப்பதுண்டு. நான் போகாத இடங்களை வெகு நெருக்கமாக உணர்ந்திருகிறேன்.

“நமது முகங்கள்” அப்படியல்லாது வேறு தளத்தில் என்னைச் சிதறடித்துவிட்டது. அதன் உண்மைகள் அப்படியென்று பிறகு உணர்ந்தேன். எனக்கு வெகுநாட்களாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒன்றை உங்கள் பதிவு மீண்டும் வெளிக்கொணர்ந்தது. இந்தக்கால தமிழ்நாட்டு இளைஞர்களை படிப்பு எந்த விதத்திலும் வித்தியாசப்படுத்தவில்லை. பள்ளிகளில் மாணவர்களின் மனவளர்ச்சியும் பெண்களைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலும் ஒரேமாதிரிதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஒரு தீவிரமான மனமாறுதலுக்கான வழிகள் அவசரமான தேவைக்குள்ளாகியிருக்கிறது. ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வரும் பெண்களுக்கெதிரான வயசு வித்தியாசமற்ற பாலியல் வன்முறைகளை படிக்க சகிக்கவில்லை.

மிக மோசமான மனவியாதிக்கு இளைஞர் சமூகம் ஆளாகியிருக்கிறது. உங்கள் பதிவில்., //இங்கு பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுடன் கலந்து விளையாடவோ பேசவோ பழகவோ வாய்ப்பில்லாமல் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பாலியல் வறட்சி கொண்ட விசித்திரமான மிருகங்களாகவே தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்.// என்ற வரிகளைத்தாண்டிச்செல்ல எனக்கு வெகுநேரம் பிடித்தது. சமீபத்தில் ஹரித்வார் போனபோது பெண்கள் குளிக்க பல இடங்களில் தனியான பகுதி இருந்தாலும், அனைவரும் வெகு இயல்பாக இருந்தார்கள். கண்டிப்பாக நீங்கள் எழுதியபடி இன்னும் ஒரு நூற்றாண்டுகாலமானாலும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு காட்சியைக் காணமுடியாதுதான். மனம் அந்த அளவுக்கு சிதைந்துவிட்டது.

மழை வெள்ளத்தில் முகம் தெரியாதவனுக்கு உணவுப் பொட்டலம் கொடுப்பதோடு முடிந்துவிடவில்லை மனித நேயம். அது தினமும் ஒழுகவேண்டிய ஒன்று. எங்கிருந்து இப்படி எல்லாவற்றிலும் போலியாக இருக்கக் கற்றுக்கொண்டோம்? ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணை காலை நேரத்தில் ஒருவன் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச்செல்ல முடிகிறது. ஆனால் கடற்கரையில் ஒரே மாதிரி டிஷர்ட் அணிந்துகொண்டு ஊர்வலம் போய் மெழுகுவர்த்தி ஏற்றி மறுநாள் அவரவர் வேலையைக் கவனிக்கச் செல்வது எப்படி இந்த மாதிரி குற்றங்களைக் குறைக்கும் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் பெண்களை மதிக்க பள்ளிகளிலும், பணியிடத்திலும் மதிக்க பழகிக்கொள்ளவேண்டாமா?

வீட்டில் சிறுவர்களை வளர்க்கும் பெற்றோர்கள், இளம் வயதிலிருந்தே இதற்கான ஒரு சூழலை உருவாக்கித்தர வேண்டாமா? நெல்லை கண்ணன் அவர்கள் ” ஈன்றபொழுதில், பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற குறளுக்கு விளக்கம் சொல்லும்போது, ஒரு பெண்மணி, ” அது ஏன் மகனை என்று வள்ளுவர் சொன்னார்? மகள் என்றால் ஆகாதா? பெண்களில் சான்றோர் இல்லையா? இது பெண்களை ஒதுக்குவதாக இல்லையா?” என்றதற்கு ” ஒரு ஊரில் ஒரு ஆண் சான்றோனாக இருந்தால், அங்கு இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். எனவே மகனை சான்றோன் என்று வள்ளுவர் கூறியிருகிறார்” என்று ஒரு விளக்கம் அளித்திருப்பார். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

உடற்கூறு அமைப்பிலேயே ஒரு ஆணாக இருப்பது எவ்வளவு சுலபம் என்றும் ஒரு பெண்ணாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் ஒரு வளரும் இளைஞனுக்கு சொல்லித்தரப்பட வேண்டாமா? முன்னெப்போதுமில்லாத ஒன்று இப்போது எதற்கு என்ற கேள்வி எழுமானால், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை தினசரி வாழ்வில் நடக்கிறதென்பதே பதிலாக அமையும். பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய செய்திகள் வராத நாட்கள் அபூர்வமாகிவிட்டன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு பெண்ணியமும் அதன் சுதந்திரமும் பற்றி தெளிவான புரிதல் இல்லை. விரும்பியதைச் செய்வதல்ல பெண்ணிய சுதந்திரம்.

எவ்வளவு இழிவாக ஒரு பெண்ணை திரையில் சித்தரித்தாலும் அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் எழுவதில்லையே? இயல்பாக பள்ளிகளிலும் வீட்டிலும் வாழ்க்கை முறையிலும் வளர்த்தெடுக்க வேண்டிய ஆளுமையை சிதைத்துவிட்டு பின்னர் தனியாக யாருக்கோ பணம் கொடுத்து ஆறுமாதம் படிப்பதால் மறுபடியும் தலையில் குப்பை கொட்டப்படுமே தவிர ஆளுமை வளரப்போவதில்லை. எறிந்தகல்லின் நீர்வட்டம்போல் ஒரு பொது அறத்தினின்றும் வெகுவாக விலகிச்செல்ல இயல்பாக கற்றுவிட்டோமா? புரியவில்லை…….

தங்கள் நேரத்திற்கு நன்றி. எழுத்துப்பணி தொடர இறைவன் உங்களை நலமுடன் காக்கட்டும்.

அன்புடன்,
சந்திரசேகரன்.

 

================

அன்புள்ள ஆசானுக்கு,

நமது முகங்கள் வாசித்தேன், மனவருத்தம் தரும் பதிவு, நீங்கள் முன்னரே “தமிழகத்தின் கேரளத்தின் மோசமான அனுபவங்களை தனிதனியாக பதிவு செய்யாமல் தவிர்ப்பதை விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தீர்கள், இங்கும் தவிர்த்திருக்கலாம் என தோன்றியது, உண்மை தான் என்றாலும் வலிக்கிறது.

கொல்லிமலையில் நான் உங்களிடம் கேட்ட “மனிதம் அழிவு பாதையில் செல்கிறதா” என்ற கேள்விக்கு எனக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகவே பதிலளித்தீர்கள், ஆனால் பிரிக்ஸிட் சம்பவத்தின் போது தமிழ் இந்துவில் “மானுட பெருங்கனவு கலைகிறதா ” என்ற வரி என்னை உடைத்துவிட்டது.

தமிழக ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் என ஆராய நம் நண்பர்களில் பத்து பேரின் குணாதசியத்தை ஆராய்ந்தால் போது என தோன்றுகிறது, ஆண்கள் பெண்களை விட மேலாகவும், சபலத்தை தீர்க்கும் காதிதமாகவும் எண்ண முக்கிய காரணம் தாயை, குடும்பத்தை விட நண்பர்களே என தோன்றுகிறது. ஒரு பெண்ணை மதிக்க, அவளின் உயர்வில் மகிழ, தாழ்வில் உதவ நல்ல நட்பை பேண சற்றேனும் நுண்ணறிவு வேண்டும் என நினைக்கிறேன். அதில்லாதவர்கள் வசவு, பாலியல் வர்ணனையில் ஆழ்மன சீண்டல்களை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் .இது போன்ற கலாச்சாரம் பரவ நட்பே மூலாதாரம்.

நட்பளிக்கும் சுதந்திரம் அலாதியானது, பால்ய நண்பனின் நினைவு என்றும் எனக்கு இன்பமளிப்பது, ஆனால் அதன் பின் வந்த பல நண்பர்கள் நினைத்தாலே உடல் கூசவைப்பவர்கள். சுயம் உணர்ந்த சில வருடங்களிளேயே பிறர் மனம் புண்படும் வார்த்தைகளையும் வசவு சொற்களையும் முழுமையாக தவிர்த்தவன் நான், ஆனால் சக பள்ளி தோழிகளை வர்ணித்தும், கேவலபடுத்தியும் சக மாணவர்கள் பேச அருகே அமர்ந்து கேட்க வேண்டியிருந்தது, பின்பு அப்பெண்களை சந்திக்கும் தருவாயில் மனம் கூசியதும் உண்டு. கடுமையான மனஉறுதி இல்லையென்றால் இவர்களால் பாதிப்படையாமல் வெளிவர இயலாது, பெண்கள் கேவலபடுத்த வேண்டியவர்கள் என்ற எண்ணம் எப்போது இவர்களுள் தோன்றயது தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு கணமும் தலைமுறைகளில் பரவிக்கொண்டிருக்கிறது.

காதலிக்காத பெண்ணின் முகத்தில் திராவதம் வீசுவது, கத்தியில் வெட்டுவது போன்ற துயரங்கள் உற்ற தோழனின் உயரிய சிந்தனையால் விளைந்தவைகளே, நேரடியாகவோ, மறைமுகமாகவோ நட்பே இதற்கு காரணம்.

பள்ளி இறுதியாண்டில் ஒரே ஆண்டில் பிறந்த அண்ணனும் தங்கையும் என்னுடன் படித்தனர், உயிரியல் வகுப்பில் அவன் பெண்களை பற்றி பேசுவதை நண்பர்கள் ஆர்வமாக கேட்க, அருகே முணுமுணுத்தாலே கேட்கும் தூரத்தில் அவன் தங்கை அமர்ந்திருப்பாள், எவ்வளவு சொன்னாலும் நிறுத்த மாட்டான் .பள்ளியில் இறுதி தேர்வில் அவன் பெற்றது 1100 க்கு சற்று அதிகம், மருத்துவ லட்சியம் பெற்றிருந்தான். சில வருடம் கழிந்து அப்பெண்ணை பார்த்தேன் இந்த சம்பவங்கள் நினைவு வந்ததால் பேச துணிவு வரவில்லை. ஒருவன் தன் திறமை, கலை, ஞானம் அகியவற்றை கடந்து இச்சேற்றில் உலழுகிறான் என்பது நிச்சயம் ஒன்றுபட்டோம் என மகிழ தோன்றவில்லை.

எனது சந்தேகங்கள்

1- சைதன்யாவை மலையேற்றத்திற்கு பெண்கள் குழுவோடு செல்ல பரிந்துரைத்தீர்கள், பனிமலையேற்றம் வருடத்தில் சில மாதமே தக்க சூழல் அமைந்து குழுக்கள் அனுமதிக்க படுகின்றன, ஆண்கள் நிரம்பிய குழு ஒன்று பெண்குழுவை சந்திக்கும் வாய்ப்பில்லை என நம்புகிறீகளா?? குழு நிச்சயம் பாதுகாப்பானதா?.

2- எத்துணை சொன்னாலும் வடக்கு மாநில மக்கள் தமிழகத்தை விட பெண்களை மதிப்பவர்களாகவும், சீண்டாதவர்களாகவும் இருப்பார்கள் என்பதை ஏற்க முடியவில்லை, நான் தமிழ் என்பதாலா தெரியவில்லை, ஆனால் நிச்சயம் அவ்வகை சீர்கேடானவர்கள் மிக நம்மை விட சற்றே குறைவென வேண்டுமானால் கூறலாம் என நினைக்கிறேன், நிச்சயம் அவர்களனைவரும் ராமன் இல்லை.

3 கிருஷ்ண பிரபா கூறியதை போல், என்னுடன் பேருந்தில் பயணிக்கவிருக்கும் ஒரு பெண் என்னை சந்தேகப்பட்டால் அதற்கு யார் காரணம்??, தமிழகத்தின் சில ஆயிரம் பேரை கூட பார்த்திராத, சில நூறு பேரை கூட முழுதாக அறியாத ஒரு பெண் தமிழினத்தின் மீது பூசும் அவதூறு அவர் பூசுவதல்ல என உணர்கிறேன், உண்மையில் இந்த பொறுப்பு யாரைச் சேர்கிறது. பீகாரின் கிராமத்து கிழவியோ, உத்திரபிரதேசத்தின் நாகரீக மங்கையோ தன் மக்களை இந்த அவதூற்றால் பழிக்க மாட்டாளா??.

வரலாற்றின் எந்த கணம் இப்பிளவு எற்பட்டது என அறியேன், ஆனால் அது நிச்சயம் வரலாற்றின் இருண்டகாலம் தான்.

சிங்கம் சிவா

 

நமது முகங்கள்

 

நமதுபிரச்சினை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல சுசித்ரா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் – 9