சலபதியின் ஆங்கிலம்

 

116

 

அன்புள்ள ஜெயமோகன்,

சலபதியின் மொழியாக்கம் குறித்து இன்று நீங்கள் எழுதியதைப் படித்தேன். சலபதியை இங்குப் பலரும் கொண்டாடுவது எனக்குப் புரியாதது. அவரின் “கவிஞனும் காப்புரிமையும்” குறித்து நான் விரிவாக விமர்சித்துள்ளேன். தப்பும், தவறும் மலிந்த மிகச் சாதாரண நூல் அது () . அது குறித்து எழுதும் போது தான் சலபதி ஆங்கிலத்தில் ஜெயகாந்தன் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்தது 

“Dandapani Jayakanthan, 71, was pushing forty when he received the Sahitya Akademi award for in 1972”. ஜெயகாந்தன் சாஹித்ய அகாதமி வாங்கியது 1972-இல், 38-ஆவது வயதில். மேலும் “pushing forty” என்பது ஒரு சரித்திர ஆசிரியர் ஞானபீடம் வென்ற இலக்கியவாதியைப் பற்றி எழுதும் போது சரியான சொற்றொடர் அல்ல. ஆங்கிலம் அறிந்தோர் அப்படி எழுத மாட்டார்கள்.

“When literary writing in Tamil was getting ghettoised in the little magazines” — இப்படியா எழுதுவார்கள்??? ‘ghettoized’ என்ற வார்த்தையின் பிரயோகம் தெரியாமல் எழுதி இருக்கிறார்.

“Jayakanthan soon graduated from short stories to novels” — இது என்ன கர்மம். மீண்டும் மீண்டும் பொருத்தமில்லாத சொல்லாட்சி.

“It is difficult to imagine today the furore caused by the short story Agni Pravesam in which an orthodox mother, without any moralising, exonerates her seduced daughter” — அந்தக் கதையில் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதாகத் தான் பலரும் அர்த்தம் கொண்டார்கள், தன் வசமிழந்ததாக அல்ல. அவள் கற்பழிக்கப் பட்டாளா, தன் வசமிழந்தாளா என்பது வேறு விவாதம். ஆனால் சலபதி அதைக் கூடச் சரியாக எழுதவில்லை.

“once even took on Periyar E.V. Ramasamy who smilingly acknowledged the young man’s diatribe” — ஜெயகாந்தன் பெரியாரை மறுத்து திருச்சி எழுத்தாளர் மாநாட்டில் பேசியதை ‘diatribe’ என்கிறார். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். அந்த உரை பெரியாருக்கு மரியாதையுடன் தன் தரப்பு வாதங்களை ஒரு இலக்கியவாதியாக முன் வைத்த மிகப் பண்பான உரை. அதைப் போய்…..

அண்ணாதுரையின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டது குறித்து ‘Economic Times’ பத்திரிக்கையில் சலபதி எழுதிய பத்தி அபத்தக் களஞ்சியம்.

“in the aftermath of the nationalization of Bharathidasan’s works” என்று எழுதுகிறார். ‘aftermath’ என்பது ‘negative connotation’ உள்ள வார்த்தை. ‘in the aftermath of the earthquake” போன்றப் பிரயோகத்தில் வர வேண்டியதை…….

“All works more so of great people, are eminently social products. Ultimately, its ownership should vest with the people, intellectual property rights and GATT notwithstanding” — ஒரே வாக்கியத்தில் பாங்கில்லாத வாக்கியத்தை நொந்துக் கொள்வதா இல்லை அபத்தமான கருத்தை நொந்துக் கொள்வதா என வாசகனைத் திண்டாட வைக்கிறார். அந்தக் கட்டுரை உள்ளடக்கிய இவரின் கவிஞனும் காப்புரிமையும்காப்புரிமைப் பெற்றது தான்.

மொழிமாற்றம் செய்வது என்பது வெறும் துபாஷி வேலை என்று சலபதி போன்றோர் நினைக்கிறார்கள். சலபதி எழுதாமல் இருந்தால் ஆங்கிலமும், சரித்திரமும் பிழைக்கலாம். (என் தமிழை விட சலபதியின் ஆங்கிலம் பெட்டர் என்று அவர் ஆதரவாளர்கள் குதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்).

அரவிந்தன் கண்ணையன்

A-R-Venkatachalapathy

 

அன்புள்ள அரவிந்தன்,

நீங்கள் இந்த இணைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம். உங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு நண்பர் தமிழ்விமர்சகரான நாகார்ச்சுனன் செய்த மொழியாக்கம் பற்றி அனுப்பியது. [முள்வில்லில் பனித்துளி அம்புகள்]தமிழில் ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹெஸ், கார்லோஸ் புயண்டஸ் போன்ற சிக்கலான மொழிநடை கொண்ட எழுத்துக்களைப்பற்றி அதிகம் பேசியவர் நாகார்ச்சுனன்.

எனக்குள்ள சிக்கல்களில் ஒன்று, இது வேறு தமிழ் எழுத்தாளர்களுக்கும் இருக்கலாம், தமிழின் சொற்றொடரமைப்பு என் சிந்தனையின் தாளமாக உள்ளது என்பதுதான். அதன் ஓசை முக்கியமாக. ஆகவே இன்னொரு மொழி தமிழின் மாற்று வடிவமாகவே வரும். நான் ஆங்கிலத்தில் ஒரு நல்ல சொற்றொடரை வாசித்தால் அதை பின்னர் தமிழ்ச்சொற்களாகவே நினைவிலிருந்து எடுக்கிறேன் என்பதை கவனித்துள்ளேன்.

அதாவது இயல்பாகவே நான் தமிழாக்கம் செய்தே வாசிக்கிறேன். ஆகவே ஆங்கிலத்தில் வாசித்த நூல்களைப்பற்றி எழுதும்போது நடை என்னும் அம்சத்தைப்பற்றி நான் கருத்தே சொல்வதில்லை. அது என் தலைக்கு அப்பாற்பட்டது. ஆங்கிலம் மட்டும் அல்ல என் தாய்மொழியான மலையாளமே எனக்கு மிக அன்னியமொழியே. தமிழ் அல்லாது எம்மொழியிலும் என்னால் தேர்ச்சி பெறமுடியாதென இப்போது உணர்கிறேன்.

மேலும் சமீபமாக பழைய இந்தியவியல், தத்துவவியல் நூல்களை வாசித்து நவீன ஆங்கிலமே கொஞ்சம் அன்னியமாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் பென் ஓக்ரியின் ஃபேமிஷ் ரோட் ஐ கொஞ்சம் வாசித்தபோது திகைப்பு வந்தது. இங்குள்ள மொழியாக்கக்காரர்களுக்கும் இச்சிக்கல் இருக்கலாம்

ஜெ

 

பி-கு

ஒரு ஜோக். திருவனந்தபுரத்தில் ஒர் மலையாளி தமிழ் அச்சகம் நடத்திவந்தார். ஓரளவு தமிழ் எழுத வாசிக்க தெரியும். ஒரு உத்தரக்கிரியை பத்திரிகை அடிக்கவேண்டும். வாடிக்கையாளர் எழுதிக்கொடுத்திருந்த தாள் தொலைந்துவிட்டது. நல்லவேளையாக செத்தவர் பெயரும் விலாசமும் வாடிக்கையாளர் பெயரும் எல்லாம் தெரியும். ஒரே தெருக்காரர்கள். ஆனால் செத்துப்போனார் என்பதை எப்படி தமிழில் மங்கலமாகச் சொல்வது?

வாசலில் மூட்டைதூக்கும் கருப்பசாமி இருந்தார். நெல்லைக்காரர். ஏலே உங்கப்பன் செத்தா என்னன்னுலே சொந்தக்காரங்களுக்குச் சொல்லுவீக?” என்றார். என்னா சாமி, இன்னமாதிரி எங்கப்பாரு மண்டைய போட்டாரு சாங்கியத்துக்கு வாருங்கன்னு சொல்லுவோம்என்றார் கருப்பசாமி

அந்தமாதிரியே போட்டு பத்திரிகை அச்சிடப்பட்டது!

சலபதியின் மொழியாக்கம் பற்றி

முள்வில்லில் பனித்துளி அம்புகள்

முந்தைய கட்டுரைகெய்ஷா -கடிதங்கள் -4
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் -11