நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!

SR

அன்புள்ள ஜெ.,

நமது முகங்கள் வாசித்தேன்

நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல. அது ஒரு விளைவு. சில நகரப்பள்ளி-கல்லூரிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற எல்லா கல்விநிலையங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உருவகமாக, சில இடங்களில் உண்மையாகவே ஒரு தடுப்புச்சுவர் போடப்படுகிறது, அதை ஒழித்தாலொழிய இதை ஒழிக்க முடியாது.

ஆணும் பெண்ணும் ஒரே இருக்கையில் அமரக்கூடாது, ஆண் ஏறும் படிக்கட்டில் பெண் ஏறக்கூடாது, ஆண்விடுதி நோக்கி சாளரம் திறக்கும் பெண்விடுதி அறைகளில் ஜன்னலை மூடித்தான் வைக்கவேண்டும், இப்படி பல விதிகள் – என்ன தீட்டு படுமோ தெரியவில்லை. ஆணும் பெண்ணும் பேசி பிடிபட்டால் அம்மாணவர்களின் நடத்தையை வசைபாடி, பெற்றோரை கூட்டி வரச்சொல்லி, “என்ன புள்ள வளத்து வெச்சிருக்கீங்க, ஒழுக்கங்கெட்டத்தனமா,” என்று அறிவித்து, அபராதம் கட்டவைத்து, கல்லூரியில் ஒழுக்கம் நிலைநாட்டும் வரை விடமாட்டார்கள் நம் கல்வித்தந்தையர்

இதில் “ஒழுக்கம்” என்பதன் பொருள் – “வேற்று சாதி ஆண்மகனை காதலித்து விடாதே,” அவ்வளவே. சமூகத்தில் பலர், தங்கள் மகள் பொதுவெளியில் சாதாரணமாக சந்திக்கும் வன்முறைக்கு இணையான (அல்லது அதற்கும் மேலான) ஒரு அசம்பாவிதமாகவே இந்த “ஒழுக்கக்கேட்டை” பார்க்கிறார்கள். திருமணமாகாத ஒரு சராசரி தமிழ்ப்பெண் எதிர்நோக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு இந்த புள்ளியில் தொடங்கி இதிலேயே முழுமைபெறுவதாக எனக்குத் தோன்றுகிறது. என்னதான் படித்தாலும், வேலை பார்த்தாலும், பயணம் செய்தாலும் அவள் போய்ச்சேரும் புள்ளி என்பது “நல்ல” மாப்பிளையுடன் திருமணம், மனை, குழந்தைகள் – இந்த பாடம் தொடர்ந்து அவள் காதுகளில் ஓதப்படுகிறது. அதற்கு வழிவகுக்காத எதுவும் அவளுக்கு அவசியமில்லை; அது ஆதரிக்கப்படுவதில்லை.

இந்த எண்ணம் இல்லாமல் அன்பும், அரவணைப்பும் மட்டுமே பெற்றோரிடம் மேலோங்கினாலும், அவள் பாதுகாப்பற்றவள், பாதுகாப்பாக இருக்க வேண்டும், எந்த வம்பையும் நாடாமல் இருந்தால் நல்லது என்று எப்போதும் எச்சரிக்கை சூழலிலேயே அந்தப்பெண் சிறுவயது முதல் வளர்க்கப்படுகிறாள். “ஆறு மணி ஆகிவிட்டது, வெளியே வராதே,” “அங்கெல்லாம் தனியாக போகாதே” என்று அவள் பாதுகாப்பை கருதி போடப்படும் கட்டுப்பாடுகளின் பலனாக சில நேரங்களும், சில இடங்களும், அவளுக்கற்ற ஒன்றாக அடையாளம் கொள்கிறது. அவள் உடல்மொழி, அவள் இயங்கக்கூடிய வெளி, அவள் சிந்தனைக்களம் என்று எல்லாமே போன்சாய் மரங்கள் போல குறுக்கப்படுகின்றன.

இதன் விளைவுகள் இரண்டு. ஒன்று, பொது இடங்களில் ஒப்பீட்டளவில் அதிகம் பெண்கள் காணப்படுவதில்லை. இதனாலேயே அது பெண்களுக்கான வெளி அல்ல என்று மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இரண்டு, இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால், பொதுவெளிகளெல்லாம் ஆண்களுக்குச் சொந்தம், பெண்கள் அங்கு அந்நியர்கள் என்ற எண்ணம் பொதுவாக ஆண்மனதில் வேரூன்றுகிறது. அப்படி அவள் அங்கு வந்தாலும், அந்த இடத்தை போல, அவன் அருந்தக்கூடிய மதுவைப்போல, அவனை மகிழ்விக்கவே படைக்கப்பட்டு அவள் அங்கு வந்ததாக எண்ணிக்கொள்கிறான். அவள் அங்கு இருப்பதையே ஒரு மீறலாக அவன் மனம் கணக்கிடுகிறது.

பெண் ஒரு மனிதி, மனிதர்கள் மற்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே சில செயல்களை செய்யக்கூடும் என்ற புரிதல், அப்படிப்பட்டவன் மனதில் இருப்பதாக தெரியவில்லை. அவளது விடுதலையுணர்வு அவனை சீண்டுகின்றது. நீங்கள் சொல்வது போல அவன் தாழ்வு மனப்பான்மை நிறைந்தவன்; அவளைச் சீண்டி தன்னை அந்த இடத்தில் தாட்டான் குரங்காக தனக்கே நிறுவ முயல்கிறான். பொதுவெளியில் ஆண்துணை இல்லாமல் வரக்கூடிய பெண்களை ஒழுக்கம் சார்ந்து விமர்சிப்பதும், அவர்களின் நடத்தையை பற்றி மனதளவிலாவது ஒரு சித்திரம் கொள்வதும் நம் சமூகத்தில் மிக இயல்பான ஒன்று, அதுவும் தாழ்வுமனப்பான்மையுடன் சம்பந்தம் உடையது தான். இந்த மனத்திரிபுகளை குணப்படுத்தாமல் குற்றாலத் தடுப்புச்சுவரை நீக்கமுடியாது.

ஆணுக்கு இந்த தாழ்வுமனப்பான்மை இருக்கும் வரை பெண் பாலியல் துன்புறுத்தலை பற்றியோ வன்புணர்வை பற்றியோ உயிரை பற்றியோ பயம் இல்லாமல் இயல்பாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் என் பார்வையில், பெண் அந்த பயத்தை மீறி அவள் அளவில் அவள் முழுமை பெறுவது முக்கியமான, சமரசம் செய்யக்கூடாத ஒன்று. அது ஒரு உரிமை, ஒரு கடமையும் கூட.

மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்குச் செல்ல எனக்குப் பிடிக்கும். அந்த மலைகளின் அமைதியை தேடியே அங்கு செல்வேன், பெரும்பாலும் வீட்டுக்குத் தெரியாமல். தனியாக. பகலில் சிறு குழுக்களாக ஆண்கள் அமர்ந்து சீட்டாடுவதும், சில நேரங்களில் மது அருந்துவதும், போதை பொருட்கள் உட்கொள்வதுமாக அங்கே காண முடியும். பெரும்பாலும் எதுவும் நடந்ததில்லை என்றாலும், ஒரு ஓரக்கண் பார்வையை உணர்ந்தபடி மட்டுமே அங்கு உலாவ முடியும். இயல்பாக இருக்க முடியாது. ஓரிருமுறை கேள்விகள் வரும் – தனியா வந்திருக்கியா? லவ் பைலியரா? படம் எடுக்கப்போறீங்களா? என்னா ரேட்டு?

கல்லூரி படிக்கும் போது பயமே இல்லாமல் வாராவாரம் தனியாக மலைகளை நாடிச்செல்வேன். அந்த வயதில் அக்குறும்பயணங்களின் வழியே, அந்தத் தனிமையின் வழியே, அம்மலைகளின் வழியே, நான் அடைந்தவை ஏராளம். ஒரு மழைநாளில் மாடாக்குளம் கபாலிமலை மேல் நின்று காலுக்கடியில் மேகங்களை கண்டேன். சமண குகைகளும் மரங்களும் மலைகளும் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று எண்ணி விளையாடுவேன். மலை மேல் அமர்ந்து இசைகேட்பது, ஒருமலை மேலிருந்து இன்னொரு மலையை பார்ப்பது எல்லாம் பேரனுபவங்கள். நண்பர்கள் ஓரிருவரோடு சேர்ந்து சென்று மலைப்படிகளில் அமர்ந்து கதை பேசுவோம். நான் அந்த மலைகளிடம் கற்றுக்கொண்டது அதிகம். அந்தப்பாடங்களை கற்காமல் போனவர்களை நினைத்தால் ஒருவித அனுதாபம் கலந்த வியப்பு வருகிறது, அதில் என் சகவயது பெண்கள் நிறைய.

இப்போது நினைத்தால் அதிசயமாக இருக்கிறது, அந்நாட்களில் எனக்கு பெரும்பாலும் பயம் இல்லை. ஆனால் காலப்போக்கில் உடலில் எச்சரிக்கை உணர்வும் பயமும் எப்படியோ புகுந்துவிடுகிறது. புகட்டப்படுகிறது. இந்தியாவிற்குள் தனியாகவோ, ஓரிரு தோழிகளுடனோ பயணங்கள் மேற்கொள்ளும் போது பல எச்சரிக்கை உணர்வுகள். கையில் இருக்கும் காசை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்; அந்த ஊரில் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்களை கைவசம் வைத்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு நண்பரிடம் எங்கு இருக்கிறோம் என்று தொடர்ந்து ‘அப்டேட்’ செய்துகொண்டே செல்லவேண்டும்; கைபேசியில் ‘சார்ஜ்’ தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; டாக்சி, கார் எண்களை யாருக்காவது வாட்ஸாப்பில் அனுப்பவேண்டும் என்று தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

தனியாக பயணம் செய்தால், குறிப்பாக நகரங்களை தாண்டி எங்கு சென்றாலும், நாம் அணிந்திருக்கக்கூடிய உடை அந்த சூழலுக்கு ஏற்றதா என்று என்ன பெண்ணிய சிந்தனை வாசித்திருந்தாலும் ஒரு நிமிடம் மனம் யோசிக்கும். தங்கும் விடுதி அறைகளில் ஒழித்து வைக்கப்பட்ட காமரா இருக்குமோ என்று கண் தேடும். வட இந்தியா, தென்னிந்தியா என்று பாரபட்சமே இல்லாமல் தனியாக பயணம் செய்தாலோ, தோழியோடு இணைந்து பயணம் மேற்கொண்டாலோ, “தனியாகவா?” என்ற கேள்வி வரும்போது மனம் எச்சரிக்கை அடைகிறது. வெளிநாட்டு பயணங்களில் இந்த வகையான பயம் இருப்பதில்லை – திருட்டு பயம் உண்டு, ஆனால் அது உயிர் பயம் பெரும்பாலும் இருப்பதில்லை. மெல்ல மெல்ல அந்த பயத்தை ஓரளவாவது போக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் அந்த பயம் பயணங்களின் கட்டற்ற விடுதலையுணர்வுக்கு முதல் எதிரி அல்லவா?

கடற்கரையையோ அருவியையோ கண்டவுடன் இறங்கி குளித்து குதூகலிக்க கோருவது மனித இயல்பு. பெண்கள் அந்த இயற்ககை உணர்ச்சியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி, கண்ணுக்குப்படாத ஏதேதோ கண்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விழைவதை நான் சென்ற நீர்நிலைகளில் எல்லாம் கண்டுள்ளேன் (குடும்பத்தோடு பெருங்குழுவாக செல்லும்போது மட்டும் விதிவிலக்கு). என் அம்மாவிடம் அந்த இயல்பை நான் பார்த்துள்ளேன். கடலில் இறங்கும் போது புடவையை கணுக்கால் வரை மட்டுமே தூக்கி அலைவிளும்பில் நிற்பார்கள், பிறகு குதூகலம் கூட முன்னுக்கு வந்து முட்டிவரை புடவையை தூக்கிவிட்டுக்கொண்டு அலைவர ‘ஊ’ என்று கத்துவார்கள், இரண்டு நிமிடங்களில் ஏதோ எல்லையை மீறியதாக உணர்ந்து பின்வாங்கி புடவையை இறக்கிவிட்டுக்கொண்டு, “ஆடினது போதும், வா,” என்று உச்சுக்கொட்டி கூட்டிச்செல்வார்கள்.

நான் இன்று அம்மாவிடமிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன், இருந்தாலும் எங்களுக்குள் இருக்கும் இடைவெளி கூடவில்லை, குறைந்துவிட்டது. இப்போது நான் காணும் மலைகளையும் அருவிகளும் நகரங்களையும் பேருந்துகளையும் என் அம்மா என் கண்களின் மூலம் காண்கிறாள். என் அனுபவங்களை அவள் வாழ்கிறாள், அவள் வாழ்வதை நான் வாழ்கிறேன். அவர்களது தலைமுறை எனக்கு ஈன்ற பயத்தையும் ஐயத்தையும் தாண்டிச்செல்ல நான் முயற்சித்துக்கொண்டும் இருக்கிறேன்.

உண்மையில் நான் சென்ற பயணங்களில் மக்கள் பெரும்பாலானோர் அன்பானவர்கள் என்ற எண்ணமே வலுத்துள்ளது. ஓரிரு கசப்பான அனுபவங்களினால் எச்சரிக்கை எண்ணம் இருக்கத்தான் செய்கிறது, இருந்தாலும் பயணம் தேவைப்படுகிறது. “ஜாக்கிரதை, பார்த்துப்போ, போன் பண்ணு” என்று எல்லா எச்சரிக்கைகளை சொன்னாலும் இப்போது என் பெற்றோருக்கு எனக்கு பயணங்களில் கிடைப்பது என்ன என்று புரிந்துள்ளது, ஆத்மார்த்தமாக அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் எச்சரிக்கை உணர்வு இருக்கத்தான் செய்யும், அது போக நம் சமூகத்தில் உள்ள பல தடுப்புச்சுவர்கள் முதலில் இடிந்துடைய வேண்டும். என் தலைமுறையில் நடந்தால் நல்லது.

சுசித்ரா ராமச்சந்திரன்

கொற்றவையின் தொன்மங்கள் சுசித்ரா ராமச்சந்திரன்

தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்

வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30
அடுத்த கட்டுரைஇந்தியாமீதான ஏளனம் -கடிதம்