«

»


Print this Post

மொழியாக்கச் சிக்கல்களும் தமிழும்


A-R-Venkatachalapathy

 

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய்யப்பட்டு செல்லும் படைப்புகள் ஏன் பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை என்று பலமுறை எழுதியிருக்கிறேன். நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்பதே முதன்மையான காரணம். பலமுறை நான் சொன்ன உதாரணம்தான், ஹெமிங்வேயின் நாவலை மு.வரதராசனார் மொழியாக்கம் செய்தால் நம்மால் அதை வாசிக்கமுடியுமா? இலக்கணப்பிழை இருக்காதுதான். கூடவே நவீன புனைவுமொழியின் அழகும் இருக்காது. சிமெண்டில் செய்த ஆப்பிள் மாதிரி இருக்கும். நம் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும்போது நிகழ்வதும் இதுவே.

சமீபத்தில் சிங்கப்பூரில் ஓர் ஆங்கிலப்பதிப்பாளரை என்னைச் சந்திக்க கவிஞர் கனகலதா கூட்டிவந்தார். சிங்கப்பூர், மலேசிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார். அவரிடம் நான் இதைத்தான் விரிவாக விவாதித்தேன். எந்த ஒரு மொழிக்கும் பொதுவாக நவீனப் புனைவுமொழி ஒன்று உள்ளது. பத்தாண்டுகளுக்குள் தெளிவாக அடையாளம் காணும்படியாக மாற்றமடைந்துவிடுவது அது. அந்த மாற்றத்தை உருவாக்குபவை புனைவெழுத்துக்கள்.  அந்தப்புனைவுமொழியை தொடர்ந்த புனைவுவாசிப்பு வழியாக நன்கறிந்தவர்களே புனைவுகளை அம்மொழிக்கு மொழியாக்கம் செய்துகொண்டுசெல்ல முடியும். மொழியை இலக்கணசுத்தமாகக் கற்ற பேராசிரியர்களுக்கு அந்த தனிமொழி தெரிய வாய்ப்பில்லை.

இன்னொன்று, எல்லா மொழிகளுமே  தங்களுக்குரிய நுட்பமான ஒலிநயமும் சொல்நயமும் கொண்டவை. அது இலக்கணம் வழியாக உருவாவதில்லை. அதை அகராதிகள், கலைக்களஞ்சியங்களில் தேடமுடியாது. அது மக்கள் அம்மொழியை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதன் வழியாக உருவாவது. மொழி அனைத்து வாழ்க்கைத்தளங்களிலும் பயன்படுத்தப்படும்போது [ யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சொற்களில் use and abuse செய்யப்படும்போது]  உருவாகி வருவது. அதைப் பயில அம்மொழிச் சூழலில் வாழ்வது அவசியம். மக்களின் பேச்சுமொழியை தொட்டு எடுத்துச் சேர்த்துக்கொள்ளும் மொழிநுண்ணுணர்வு அவசியம்

ஆகவே சிங்கப்பூர், மலேசியப்படைப்புகளை தமிழோ மலாய்மொழியோ தெரிந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபின் ஆங்கிலச்சூழலில் வாழும், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட, ஆங்கிலப் புனைவிலக்கியம் எழுதும்திறன் கொண்ட இன்னொருவரைக் கொண்டு முழுமையாக மீண்டும் எழுதவைக்கவேண்டும் என நான் அந்தச் சிங்கப்பூர் பிரசுரகர்த்தரிடம் சொன்னேன். அப்போதுதான் அது ஆங்கிலம் மட்டும் அறிந்த வாசகனால் வாசிக்கும்படியாக இருக்கும்

நடைமுறையில் அது பெரிய சவாலும் அல்ல. லண்டனிலோ நியூயார்க்கிலோ எழுத்தாளர் ஆக விரும்பி முயன்றுகொண்டிருக்கும் இளைஞர்கள் பலநூறுபேர் உண்டு. அவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் அளித்தாலே தரமான மறுமொழியாக்கத்தைச் செய்துவிடமுடியும். அவர்களுக்கு பயிற்சியாகவும், முயற்சிக்காலகட்டத்தில் வருமானவழியாகவும் அது அமையும்.

தமிழ் தெரிந்த, கூடவே ஆங்கில நவீனப்புனைவுமொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர் நமக்கு இல்லை என்னும் சிக்கலை இப்படிக் கடக்கமுடியும் என்றேன். பதிப்பாளர் மிகுந்த உற்சாகத்துடன் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். இந்தியப்பதிப்பாளர்களும் இதைச் செய்யலாம். ஆனால் இங்குள்ள பதிப்பாளர்கள் பல்வேறு கல்விநிலையங்களை உத்தேசித்தே மொழியாக்கங்களைச் செய்கிறார்கள். அவை அனேகமாக வாசிக்கப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை

ஆ.இரா. வேங்கடாச்சலபதி செய்த ஜே.ஜே. சிலகுறிப்புகளின் ஆங்கில மொழியாக்கம் பற்றி ஆங்கிலக் கவிஞர் ஜெர்ரி பிண்டோ எழுதிய விமர்சனக் குறிப்பை ஒத்திசைவு ராமசாமி சுட்டி கொடுத்திருந்ததன் வழியாக வாசித்தேன். எனக்கே கூச்சமாகத்தான் இருந்தது, ஆங்கிலமொழிநுட்பங்கள் அவ்வளவாக எனக்குப் பிடிகிடைப்பதில்லை என்றாலும். சுட்டிக்காட்டப்பட்டிருந்த வரிகளை அபத்தமான மொழியாக்கம் என்றே சொல்லமுடியும். பாவம் சுந்தர ராமசாமி, இந்த மொழியாக்கத்தைப்பற்றி அவர் புளகாங்கிதத்துடன் பேசியதை நினைவுகூர்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் எத்தனைபெரிய ஏக்கத்துடன் எவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்கள்!

ஆ.இரா.வேங்கடாச்சலபதியின் பிரச்சினை முதலில் அவருக்கு புனைவுமொழி – எந்தமொழியிலும் – பழக்கமில்லை என்பதே. ஆகவே பேராசிரியர்களுக்குரிய இயந்திரத்தனமான மொழியாக்கம் அவரிடமிருந்து வந்திருக்கிறது. அதைவிட முக்கியமாகச் சுட்டவேண்டியது, அவரது அந்த அசட்டுத்தனமான சொற்றொடரமைப்புகளும் சொல்லாட்சிகளும் தமிழின் நடையமைதியை அப்படியே சொல்லுக்குச் சொல் ஆங்கிலமாக ஆக்கியதன் விளைவாக வருபவை. ஜே.ஜே.சில குறிப்புகள் போன்ற நடைவிளையாட்டுக்கள் கொண்ட நாவலை மொழியாக்கம் செய்யும்போதுதான் இந்த அபத்தம் மேலும் அதிகரிக்கிறது.

என்னைக்கேட்டால் தமிழ்ப்படைப்புக்கள் மொழியாக்கம் செய்யப்படாமலேயே இருப்பது மேல். இத்தகைய ஏளனப்பேச்சுக்களுக்கு ஆளாவது இந்தியச்சூழலில் தமிழிலக்கியம் மீதே அவநம்பிக்கையை உருவாக்கிவிடக்கூடும்

 

ஒத்திசைவு ராமசாமியின் குறிப்பு

இந்து நாளிதழில்  ஜெர்ரி பிண்டோவின் விமர்சனம்\

ஒத்திசைவு ராமசாமி ஜே ஜே சிலகுறிப்புகள் மொழியாக்கம் பற்றி

===========================================================

மொழியாக்கம் பற்றிய பழைய கட்டுரைகள்

மொழியாக்கம் பற்றி…

முள்வில்லில் பனித்துளி அம்புகள் -நாகார்ச்சுனனின் மொழியாக்கம் பற்றி

ஒளியை நிழல்பெயர்த்தல்

மொழியாக்கம் கடிதங்கள்

மொழியாக்கம் கடிதங்கள் 2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/92301

1 ping

  1. சலபதியின் ஆங்கிலம்

    […] […]

Comments have been disabled.