டிசம்பர் [2008] ஐந்தாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பி ராசிபுரம் நோக்கி பயணம். ஒரு மாருதிவேனில் நான் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா, தங்கமணி, பிரபு ஆகியோர் நண்பர் அசோக்குடன் அவரது சித்தப்பா வாழ்ந்த கிராமத்துக்குக் கிளம்பினோம். ராசிபுரத்திலேயே லட்சுமி கபேயில் சாப்பிட்டுவிட்டு ராசிபுரத்தை தாண்டி பட்டணம் என்ற ஊருக்கு வந்து அங்கிருந்தும் சென்று மதியம்தாண்டி அந்தக்கிராமத்துக்குச் சென்றோம். போதமலை என்று கிராமத்துக்குப் பெயர்.
போதமலை கிராமத்தை ஒட்டி செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை. மலையின் உடலெங்கும் பச்சை அடர்ந்த காட்டுப்பரப்பு. சிகரங்களுக்கு மேல் வெண்மேகத்துணுக்குகள். மழை பெய்து ஓய்ந்து இரண்டுநாட்கள்தான் ஆகியிருந்தன. தெளிந்த நீலவானம். மலையிலிருந்து பரவி வந்தது போல பச்சை நிறவயல்களில் பெரும்பாலும் மக்காச்சோளம் போட்டிருந்தார்கள். சில இடங்களில் மரவள்ளிக்கிழங்கு. மக்காச்சோள ஓலைகள் பளபளவென எண்ணைபூசப்பட்ட பச்சைநிற வாள்கள் போல காற்றில் ஆடின.
அசோக்கின் சித்தப்பா பழனிச்சாமியும் அவரது மனைவியும் மட்டும்தான் அந்த பண்ணைவீட்டில் இருந்தார்கள். நிறைய இடவசதிகொண்ட தாழ்வான கிராமத்துவீடு. எருமை, பசு, காளைகள் இருந்தன. பெரிய பம்புசெட். எருமையும் பசுவும் குட்டிபோட்டிருந்தன. பசுக்கன்று மிகச்சிறியது. நான்குவாரம் இருக்கும். எதைக்கண்டாலும் மிரண்டு துள்ளிக்கொண்டிருந்தது. எருமைக்கன்றுக்கு இந்த உலகம் மீது பற்று இருப்பதாகவே தெரியவில்லை. பாவமாக நின்று மிகமிக மெல்ல திரும்பிப்பார்த்தது.
வீட்டு முகப்பில் கயிற்றுக்கட்டிலைப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் படுத்துக்கிடந்தோம். நல்ல காற்று சுற்றிலும் செழிப்பான தென்னைகள். இளநீர் வெட்டி குப்பிகளில் அடைத்துக்கொண்டோம். புளிசாதம் எலுமிச்சை சாதம் பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டோம். மூன்று மணிக்கு, டீ குடித்துவிட்டு கிளம்பினோம்.
பழனிச்சாமிதான் வழிநடத்திக்கூட்டிச்சென்றார். இரண்டுகிலோமீட்டர் நடந்ததும் மலையை அடைந்தோம். பிறகு உருளைக்கற்கள் பரவிய காட்டுப்பாதை வழியாக செங்குத்தான மலை ஏற்றம். மலை ஏறும்போது முதலில் நம் இதயத்துக்கு அது பழக்கம் இல்லாத காரணத்தால் திடும் திடும் என்று அது அடித்து அவ்வப்போது குப்பென்று வியர்த்து தலைசுற்றும். அப்போது சற்று அமர்ந்து இளைப்பாற வேண்டும். மூச்சு திணறி மார்பு அடைத்து சற்றுநேரம் நுரையீரல் தொங்க வாயால் மூச்சுவிட்டால்தான் இளைப்பு ஆறும்.
ஆனால் இரண்டுமணிநேரம்தாண்டியதும் உடம்பும் நுரையீரலும் அந்த ஏறுதலுக்குப் பழகிவிட்டிருக்கும். அப்போது அதிக மூச்சுவாங்குவதில்லை, தலைசுற்றல் நின்றுவிட்டிருக்கும். கால்களில் நல்ல வலி இருந்தாலும் உடலெங்கும் ஓர் உற்சாகமும் இருக்கும். மலையேறுவதில் உள்ள ஆனந்தம் என்றாலே அந்த உற்சாகம்தான். அதன் பின் சிறிய இடைவெளி விட்டபடி பல மணிநேரம் மலை ஏறமுடியும்– இதயச்சிக்கல்கள் இல்லாமலிருந்தால். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள் அந்த தருணத்தில் உணரும் எடையின்மையை எப்போதுமே தங்கள் உடலில் உணர முடியாது.
நான்கரை மணிநேரம் மலையில் ஏறிச்சென்றோம். ஏறக்த்தாழ பன்னிரண்டு கிலோமீட்டர். ஊரிலிருந்து தெரியும் உயர்ந்த சிகரத்தை ஏறி அதன் பக்கவாட்டில் சர்ந்து சென்று மறுபக்கம் சென்று இன்னொரு சிகரத்தை ஏறி சற்றே இறங்கினால் கீழூர் என்ற ஊர் வந்துவிடுகிறது. கீழே விரிந்த வயல் வெளிகள் மாலை வெயிலில் கண்கூசச் சுடர் விரித்து, ஒளி ததும்பிய தொடுவானம் வரை நீண்டுக்கிடந்தன. எதிரே மலையடுக்குகள் பச்சை செறிந்த உடல்மடிப்புகளுடன் கண்களை நிறைத்து சூழ்ந்திருந்தன. மலையடுக்குகளில் உள்ள ஆழ்மௌனம் நம்முள் குடியேறும்போதுதான் நம் காட்டு அனுபவம் தொடங்குகிறது
வழியில் ஒரு காட்டு நீரோடை தொட்டால் மீன்னதிர்ச்சி போல குளிர் தாக்கும் தெளிந்த நீருடன் பாறைகள் நடுவே கொட்டி குறுக்காகச் சென்றது. தங்கமணியும் பிரபுவும் அதில் குளித்தார்கள். நான் வழியில் இருந்த புளியமரத்தில் புளியங்காய் பறித்து தின்றேன். இளம்பச்சைப்புளி. ஒரு இடத்துக்குச் சென்றதும் அங்குள்ள எதையாவது பறித்துத்தின்றால் அப்பகுதியுடன் ஒர் உறவு உருவாகிவிடுகிறது. அங்கிருந்து மேலே சென்றபோது வயல்கள் வர ஆரம்பித்தன.
போதமலைக்கீழூர் சேலம் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது. மலைஉச்சியில் இருக்கும் இந்த ஊரில் பழங்குடிகளும் காட்டுநிலம் திருத்தி விவசாயம்செய்யும் கவுண்டர்களும் குடியிருக்கிறார்கள். இந்த ஊருக்கு இப்படி மலை ஏறித்தான் வந்தாகவேண்டும். அந்த ஊர்க்காரர்கள் மூன்று மணி நேரத்தில் தலையில் கனத்த சுமைகளுடன் வேகமாக அத்தனை தூரம் ஏறிவிடுகிறார்கள்.
ஊரைச்சுற்றி அடுக்கடுக்காக மலைவயல்கள். அவற்றில் அதிகமும் மக்காச்சோளம்தான் பயிரிட்டிருந்தார்கள். ஊருக்கு மின்சார வசதி இல்லை. சூரிய சக்தி விளக்குகள் பல அமைக்கப்பட்டிருந்தன. இரண்டுவிளக்குகள் பஞ்சாயத்துக்குச் சொந்தமானவை. சில விளக்குகள் தனிப்பட்டவர்களால் அவர்கள் வீட்டுக்கு அமைக்கப்பட்டிருந்தன. சூரியசக்தியால் இயங்கும் பஞ்சாயத்து தொலைக்காட்சி ஒன்று ஊர் நடுவே சதுக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் தமிழ்த்திரையின் குத்துநடனங்கள் அலையடித்தன.
இருட்டுக்குள் வயல்கள் வழியாக தடுமாறி சதுக்கத்தை வந்தடைந்தோம். சூரியவிளக்குகளில் ஒன்றுதான் எரிந்தது. தொலைகாட்சி பார்க்க நாலைந்து கிராமவாசிகள் கனத்த போர்வையை முட்டாக்கு போல போர்த்திக்கொண்டு வந்து குந்தியிருந்தார்கள். பொதுவாக ஊரில் அதிக மக்கள் நடமாட்டம் இருப்பதாகத்தெரியவில்லை. இருளுக்குள் போர்வையுடன் நிழல்கள் போல சில பெண்கள் நடமாடினார்கள். சதுக்கத்தில் ஒரு மாரியயம்மன் கோயில். ஏற்ற இறக்கமான நிலமெங்கும் பாறைகள் போல புல்வேய்ந்த குடிசைவீடுகள்.
அதற்கு வடக்காக ஒரு பள்ளி. அது பழங்குடியினர் மற்றும் சீர்மரபினருக்கான உண்டு உறைவிடப்பள்ளி. ஆனால் அப்போது அதில் யாரும் உண்டு உறைவதாகத்தெரியவில்லை. பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை உண்டு. ஒரே ஒரு ஆசிரியர்தான். அவர் கீழே இறங்கிச்சென்றுவிட்டார். அங்கே பள்ளியின் சமையற்காரர் மட்டும் உள்ளே ஓர் அறையில் தங்கியிருந்தார். பள்ளிமுன் உள்ள அறிவிப்புப் பலகையில் அந்த ஊர்த்தலைவர் மாதப்பன், துணைத்தலைவி மணிமேகலை என்றும் கண்டேன். இருபது சூரிய விளக்குகள் இரு தொலைக்காட்சிகள் இயங்கும் ஊர் அது என்றது பலகை.
பழனிச்சாமி அங்கே தங்கியிருந்த சமையற்காரரைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து பள்ளியைத்திறந்தார். நல்ல இருட்டு. பள்ளியில் பெஞ்சுகள் ஏதும் இல்லை. பிள்ளைகள் எல்லாம் தரையில் அமர்ந்துதான் படிக்கவேண்டும் . ஐந்தாம் வகுப்புக்கு மேல் கீழே இறங்கிச்சென்று விடுதியில் தங்கிப் படிக்கவேண்டுமாம். அந்தப்பள்ளியில் இரவு தங்குவதென முடிவெடுத்தோம். கடும் குளிர். போர்வைகளால் நாங்களும் முட்டாக்கு போட்டுக்கொண்டோம்.
அந்த தொலைக்காட்சியை நிறுத்தினால் நன்றாக இருக்குமே என்றார் கிருஷ்ணன். இது அவர்கள் ஊர் , வந்ததுமே நீங்கள் அவர்கள் மீது உங்கள் ஆதிக்கத்தைக் காட்டவேண்டுமா என்று நான் சொன்னேன். இந்தக் குப்பையை எல்லாம் ஏன் இவர்கள் பார்க்கவேண்டும் இதை அவர்களிடம் நான் ஏன் சொல்லக்கூடாது என்று கிருஷ்ணன் வாதிட்டார். இந்த தொலைக்காட்சி மட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வெளியுலக வாசல் என்றேன் நான். ஆனால் பிறகு தெரிந்தது, அது தொலைக்காட்சி அல்ல, சிடி பிளேயர்தான். அதைவைத்து சினிமாப்பாடல்களும் சினிமாவும் தினமும் ஒளிபரப்புகிறது பஞ்சாயத்து.
முட்டாக்கு போட்டுக்கொண்டு ஒரு வயசாளி அருகே வந்து பவ்யமாக அமர்ந்துகொண்டார். நாங்கள் எது கேட்டாலும் பலவீனமான குரலில் வாய் பொத்து ‘தெர்லீங்’ என்று சொன்னார். உற்றுபார்த்துக்கொண்டே இருந்தார். வாய்பொத்தியிருப்பது அவர் குடித்திருப்பதனால் என்று தெரிந்தது.
பள்ளிக்குள் சென்றோம். முன்று பாய்கள்தான் கிடைத்தன. விஜயராகவன் அவருக்கு ஒற்றைத்தலைவலி என்று சொன்னார். இன்னொருபாய்க்காக சிவா ஊருக்குள் சென்றார். ஊரில் யாருமே வாசல் திறக்கவில்லை. பழனிச்சாமிக்கு தெரிந்த ஒருவர் ஒரு பாய் கொடுத்தார். நான்குபாய்களையும் சேர்த்து விரித்துக்கொள்வதென முடிவு செய்தோம். வெளியே விளக்கொளியில் அமர்ந்து புளிச்சாதமும் எலுமிச்சை சாதமும் கலர்து சாப்பிட்டோம். உள்ளே சென்று செல்போன் ஒளியில் அறைக்குள் பரவி அடுக்கியது போலச் சேர்ந்து படுத்துக்கொண்டோம். அசோக் ‘எங்கே செல்லும் இந்தப்பாதை?’ என்று சோகமாகப் பாடினார்.
படுத்தபோதுதான் உடம்பெங்கும் பரவியிருந்த களைப்பு தெரிந்தது. கணுக்கால்களும் கெண்டைச்சதைகளும் முதுகும் கடுமையாக வலித்தன. உடல்வலி காரணமாக ஒவ்வொருவரும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தோம். தரையில் இருந்து குளிர் உடம்பில் ஊறி ஏறி எலும்புகளை தொட்டது. ஆனால் கடும் களைப்பு காரணமாக நன்றாகவே தூங்கிவிட்டோம்.
நள்ளிரவில் நான் சிறுநீர் கழிக்க வெளியே வந்தேன். வெளியே மலைக்காற்று வீர் வீர் என்று கடும் குளிருடன் மரங்களை சுழற்றியபடி வீசியது. மிக அருகே தெரிவதுபோல நட்சத்திரங்கள் வானில் பரவி நடுங்கிக்கொண்டிருந்தன. கோள்கள் சிவப்பாக மலையுச்சி விளக்கு போல நல்ல ஒளியுடன் தெரிந்தன. கைநீட்டினால் தொட்டுவிடலாமென்பதுபோல பிரமை. தரையில் கேட்காத இரவின் ஒலி. சீவிடுகளின் சுருதியுடன் இணைந்தும் சட்டென்று எழுந்தும் ஒலிக்கும் காற்றின் ஒலி. அப்பால் ஒரு நீரோடையின் ஒலி. சட்டென்று விசித்திரமான ஒரு க்ராக்! பறவையா விலங்கா தெரியவில்லை.
குளிரின் உடலைக் குறுக்கியபடி வெளியே சென்றேன். சிறகுபோல போர்வை படபடத்தது. பனிமூடிய நிலவொளியில் வானம் ஆரஞ்சுநிற மேகங்களுடன் விரிந்திருக்க, மரங்கள் மற்றும் ஓலைக்கூரைகள் மீது பனிமூடிப்பரவியதனால் அற்புதமான ஒரு நீலநிறம் எங்கும் சூழ்ந்திருந்தது. காட்டிலிருந்து எழுந்து வந்த பச்சைஇலைவாசனை. தூரத்தில் ஆடு சினைப்பதுபோல ஒரு சத்தம்.
வானத்தைப் பார்த்தபின் தரையைப்பார்த்தபோது கண்தெரியவில்லை. நான் என் நோக்கியா செல்·போனை அழுத்தினேன். நீல ஒளிகண்டு அங்கே சுருண்டு கிடந்த கரிய நாய் எழுந்து பதறி ஊளையிட்டு அலறியபடி ஓடி தூரத்தில் நின்று குரைத்தது நான் சற்று அசைந்ததும் குலை பதறி மேலும் ஓடி நின்று குரைத்தது. அதன் கண்கள் ஒளிவிட்டன.
மறுநாள் காலையில் ஆறுமணிக்கு எழுந்தோம். மேகம் இல்லாததனால் நன்றாகவே ஒளி பரவியிருந்தது. கூரைவீடுகள் மீது சமையற்புகை பரவியது. ஊருக்குள் நடந்து மறுபக்கம் காட்டு விளிம்பை அடைந்தோம். ஒன்று கவனித்தேன், அது மிகமிகச் சுத்தமான ஊர். அதனாலேயே மிக அழகியது என்ற எண்ணமும் ஏற்பட்டது. தெரு என்ற அமைப்பு இல்லை. ஒவ்வொரு வீடும் நான்கு பக்கமும் முற்றங்களுடன், மண்சுவர்களும் புல்கூரைகளுமாக தனித்து நின்றன. ஒவ்வொரு வீட்டுமுற்றமும் ஒவ்வொரு உயரத்தில் பல தட்டுகளாக இருந்தன
செங்குத்தாக எழுந்த புல்கூரைகள் கருகி பாறைகள் போன்றிருந்தன. சில வீடுகளில் புதிய ஓடு. சுவர்கள் ¨கையால் கட்டப்பட்டு விரல்தெரிய சுண்ணாம்பு பூசப்பட்டவை. திண்ணைகள் பச்சைச்சாணிபூசப்பட்டவை. முற்றங்களெல்லாம் கூட்டி சுத்தமாக இருந்தன. நம் ஊர்களில் எங்கும் குவிந்துகிடக்கும் பாலிதீன், காகிதக் குப்பைகள் அறவே இல்லை. கண்பட்ட இடமெங்கும் துப்புரவாகக் கூட்டப்பட்டிருந்தது.
அந்தக்காலை வேளையில் நூறுவயதுகூட தோற்றமளித்த ஒரு பாட்டி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தாள். மூன்றுவயதுக் குழந்தை முற்றம் கூட்டிக்கோண்டிருந்தது. காலையில் ஊரைத் தூய்மைப்படுத்துவதை அத்தனைபேரும் சேர்ந்து செய்வதுபோல தோன்றியது. சாக்கடைகள் வழிந்து தேங்கியிருக்கவில்லை. நெருக்கமாக மக்கள் வாழும் நம் ஊர்களில் உள்ள முடைநாற்றமே இல்லை. அப்போதுதான் நேற்றிரவு கொசுவே இல்லை என்பதை நினைத்துக்கொண்டேன். இப்போது ஊட்டி போன்ற மலையுச்சிகளில்கூட கொசு பிடுங்கி எடுக்கிறது
வீடுகளில் சிறுகுழந்தைகளும் முதியவர்களும்தான் அதிகமாகக் கண்ணில்பட்டார்கள். இளையவர்கள் அனைவருமே அவர்களின் காட்டுநிலங்களில் வலைசெய்யப்போய் அங்கேயே தங்கிவிடுவார்களாம். ஊரைக்கடந்து காடுவரைக்கும் போனோம். வயல்களில் புஞ்சைநெல் விவசாயம்செய்திருந்தார்கள். அப்பகுதியில் காட்டில் பலாப்பழம் அதிகம். ஆனி ஆடி மாதங்களில் காடே பலாப்பழவாசனையால் நிறைந்திருக்கும் என்றார் அசோக்.
ஊருக்கு வெளியே கூட குப்பைமலைகள் காணபப்டவில்லை. அங்குள்ள மக்கள் பொட்டலமாக்கப்பட்ட பொருட்களையும் பாலிதீன் உறைபோடப்பட்ட பொருட்களையும் மிகக் குறைவாகப் பயன்படுத்துவதனால் வந்த சுத்தமாக இருக்கலாம். நமது ஊர்களில் அந்த குப்பைகளை என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நாகர்கோயிலில் அந்தக்குப்பைகளை அகற்ற எவ்விதமான ஏற்பாடும் அரசு சார்பில் செய்யப்படுவதில்லை.
திரும்பிவந்தோம். அந்த நூற்றுப்பாட்டி ஓர் உரலில் எதையோ இடிக்க ஆரம்பித்திருந்தாள். ஊரில் பொதுவாக வசதிகள் குறைவு இல்லை. தண்ணீர் தொட்டி இருந்தது. அடிபம்பு போடப்பட்டிருந்தது. ஊர்ச்சதுக்கம் சிமிண்ட் போடப்பட்டது. ஆனால் அங்கே கடை என்று ஏதும் இல்லை. ஒரு டீ குடிக்கக்கூட வழி இல்லை. வீடுகளில் கேட்டுப்பார்க்கலாமென்றால் அங்குள்ள மக்கள் எங்களை தவிர்ப்பது போல தெரிந்தது.
எட்டுமணிக்கு இறங்க ஆரம்பித்தோம். அங்குள்ள மக்கள் எங்களைக் கண்டு அஞ்சிவிட்டார்கள் என்றார்கள் நண்பர்கள். காரணம் அங்கே வெளியாட்கள் வருவது அனேகமாக வனத்துறையினரும் சாராயவேட்டைக்காரர்களும்தான். அவர்கள் அகப்பட்டவர்களை அடிப்பார்கள். மலைக்கிராமங்களில் ஓரளவு சாராயம் காய்ச்சும் தொழில் உண்டு, ஆனால் உண்மையாக சாராயம் காய்ச்சுபவர்களை எளிதில் பிடிக்க முடியாது. ஏழைப்பழங்குடிகளைப்பிடித்து வழக்குபோட்டு உள்ளே தள்ளுவதே போலீஸ் செய்வது. ஊர்க்காரர்கள் எங்களைக் கொஞ்சம்கூட வரவேற்காதது ஏன் என்று அப்போது புரிந்தது.
திரும்பிவரும் வழியில் ஓடையில் சிவாவும் தங்கமணியும் குளித்தார்கள். மலை இறங்குவதும் சற்றே சிரமமானதுதான். மதியம் பன்னிரண்டு மணிக்கு கீழே இறங்கிவிட்டோம். கீழே வெயில் கண்களைக் கூசியது. அதுவரை இருந்த குளிர் சில கணங்களிலேயே பொய்யாய் பழங்கதையாய் மாறி பின்னுக்கு மறைந்தது.
பழனிச்சாமியின் வீட்டில் மதியம் சாப்பிட்டோம். கொல்லையிலேயே பறித்த பூசணிக்காய், முருங்கைக்கீரை, காய்கறிகளால் சாம்பாரும் கூட்டும். புதியகாய்கறிகளுக்கே உரிய சுவை. நடந்த களைப்பில் ஒவ்வொருத்தரும் இரண்டு ஆள் கணக்குக்கு உருட்டி உருட்டி சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். கயிற்றுக்கட்டிலில் படுத்து அரைத்தூக்கம் போட்டோம். காற்று வீசும் மெல்லிய சலசலப்பு அல்லாமல் எந்த ஓசையும் இல்லை
சேலம் வானொலியில் பழைய பாட்டு போட்டார்கள். ”ரேடியோல்லாம் கிராமத்திலேதான் கேக்கணும் சார்”என்றார் கிருஷ்ணன். ”ஆமா, அதிலயும் நல்ல வெயில் அடிக்கிறப்ப மத்தியானத்துக்குமேலே கிராமத்திலே ஒரு அமைதி வரும் பாருங்க, அப்ப கேக்கணும்…ஒரு மாதிரி மயக்கமா இருக்கும்”என்றேன். பாட்டுகேட்டுக்கொண்டு கொஞ்சம் தூங்கிவிட்டேன்.
இரண்டரை மணிக்கு காரில் ராசிபுரம் திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு கோவை-நாகர்கோயில் ரயிலைப்பிடிக்கவேண்டும். காரில் பேசிக்கொண்டே வந்தபோது கிருஷ்ணன் ‘நாம இறங்கிவாரப்ப அந்த ஊர்க்காரங்க எவ்ளவுவேகமா ஏறிப்போனாங்க பாத்தீங்களா?” என்றார். அசோக் சிவாவிடம் ”போனவாட்டி அந்த கர்ப்பிணியைப் பாத்தமே” என்றார். ஒரு ஏழுமாத கர்ப்பிணி இடுப்பில் குழந்தையுடன் தலையில் மூட்டையுடன் மலைஏறி அந்த கிராமத்துக்குச் செல்வதை அவர்கள் கண்டார்களாம்.
”நாம மலை ஏறி ரசிச்சுட்டுவர்ரோம்…அங்க இருக்கிறவங்களை நெனைச்சா பாவமா இருக்கு”என்றார் சிவா. நான் அந்த நூற்றுப்பாட்டியின் ஆரோக்கியத்தையும், அந்த ஊரின் அமைதியையும் சுத்தத்தையும் நினைத்துக்கொண்டேன். அங்கே ஆரோக்கியமாக இல்லாத முதியவர்களே கண்ணில் படவில்லை. பரிதாப்பபடவேண்டியவர்கள் யார்?
============================================================
முதற்பிரசுரம் Dec 10, 2008 /மறுபிரசுரம்
====================================================