இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்

critic_ostrich

அன்பு ஜெயமோகன்,

சிறுகதைகள் குறித்த தங்கள் கடிதங்களை வாசித்தேன்.

இந்த வரிசையில் வெளிவந்துள்ள 12 கதாசிரியர்களும் என்னுடைய ‘எதிர்கால எதிரிகள்’ என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை, 90% எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதிலாவது எனக்காக 10% இடத்தை விட்டுவைத்தீர்களே.

ஆனால் இந்த ‘எதிர்கால எதிரிகள்’ பட்டியலில் என்னை ஏன் சேர்த்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது வெறும் புள்ளியியல் விவரமே ஆயினும், ‘பகை’, ‘எதிரி’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுவதிலிருந்து, எனக்கு சில விஷயங்கள் புரிகிறது. இதற்கு முன்பு அவ்வாறு பலர் நடந்துகொண்டு, அதனால் நீங்கள் மனம் புண்பட்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகவே பகை வந்துவிடக்கூடாது, நண்பர்கள் எதிரிகளாகிவிடக்கூடாது என்று தயக்கமும், அச்சமும் கொள்கிறீர்கள்.

ஆனால் உங்களைப் பல நாட்கள் வாசித்து வருபவன் என்கிற முறையில் இந்தத் தயக்கம் எனக்கு வியப்பளிக்கிறது. உண்மையாகவே உங்களுக்கு இந்த தயக்கமும், அச்சமும் இருக்கிறதா என அறிய விரும்புகிறேன். உண்மையெனில், உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும், இந்த விஷயத்தில் நான் எதிரியாகிவிடுவேன் என்கிற அச்சம் உங்களுக்கு வேண்டாம். நான் இதுவரை உங்களுக்கு எழுதிய கடிதங்களில் இருந்தே என்னைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றிய என்னுடைய கருத்தையும் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். என் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் நான் எதிரியாக வேண்டுமென்றால் என்றால் முதலில் என்னுடைய தந்தைக்கே நான் எதிரியாக வேண்டும். நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது வேறு யாராவது பார்த்தால் மிரண்டுபோவார்கள். நான் அவருக்கு விமர்சகன். அவர் எனக்கு விமர்சகர். அது போலவே நீங்களும். எதைப் பற்றியும் மீதான என்னுடைய பார்வையை எடுத்துரைப்பேன். எடுத்துரைப்பது எதிரியாவது ஆகாது. அப்படியே இருந்தாலும், எதிர்திசைக்கு அர்ஜுனன் சென்று விடுவானோ என்கிற அச்சம் துரோணருக்கு எதற்கு?

இலக்கிய உலகில் இருக்கும் குழுக்களையெல்லாம் அறிவேன். நான் எந்த குழுக்களிலும் இருக்க விரும்பாதவன். குழு தரும் அடையாளம் என்னைச் சிறைப்படுத்திவிடும். என் சுதந்திரத்தையும் பறித்துவிடும். என்னைக் குருடனாக்கிவிடும். அடையாளமற்று இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் உங்களுக்கு கடிதம் எழுதுவதன் காரணமாகவே என்னை உங்களின் அடிவருடி என்றும்கூட சிலர் அழைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு அணுவும் தெரியாது என்றே அர்த்தம். வேண்டுமானால் அவர்கள் நான் சமீபத்தில் எழுதிய ‘பயணி’ கட்டுரையை வாசிக்கலாம்.

“Criticisms are like chisels; They can make a beautiful sculpture out of a stone. Only when they are used by Sculptors.” – சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதியது. நீங்கள் அத்தகையதொரு சிற்பி என்பதால்தான் என்னுடைய சிறுகதையை அனுப்பினேன். வாசகர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விமர்சனம் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதுவும் நல்லதற்கே. உங்கள் நோக்கமும் புரிந்தது. நீங்களே கூறியதுபோல் வாசக எதிர்வினையற்ற சூழலில் அது ஒரு பெரிய திறப்பு. பல உளிகளைப் பார்க்கவும் சந்தர்ப்பம் கிட்டியது. அவற்றில் எத்தனை உண்மையிலேயே சிற்பிகள் கையாண்டவை என்பதும் நன்றாகவே தெரிந்தது.

சினம் கொள்ளவேண்டாம். இதுவரை இருபது கதைகளாவது எழுதியிருப்பேன். ஒரு வாசகனாக அதில் எத்தனை ‘உண்மையிலேயே’ சிறுகதைகள் என்பதையும் நன்றாக அறிவேன். நான் வெறும் வாசகன் மட்டுமே. எழுத்து என் கிளைவிளைவே. ஆறு வருடங்களுக்கு முன்பு உங்களுடைய நேர்காணல் ஒன்று சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருந்தது. அதில் நீங்கள் இவ்வாறு கூறியிருந்தீர்கள்:

“மனிதர்கள் புலம்பெயரும்போது வெகு தீவிரமான அகச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். திடீரென்ற தனிமை, புதிய சூழல் இவை, அதுவரை மனிதனின் மனதில் மூடிக்கிடந்த புனைகதையின் வாசலைத் திறந்து விடக்கூடும்.”

நான் எழுத ஆரம்பித்தது இப்படியே. திலீப்குமார் ஒரு சில கதைகளைப் பற்றி சொல்லும்போது, இவை எல்லாம் monologic-ஆக இருக்கிறது என்று கூறினார். அதற்குக் காரணமும் இந்த திடீர் தனிமையே. நான் ஒரு ‘extrovert’. எனக்குப் பேசுவதற்கு ஆட்கள் வேண்டும். அவர்களிடமிருந்தே எனக்கான சக்தியை நான் பெறுகிறேன். ஆனால் இங்கு ஆத்ம நண்பர்களும், ஒத்த சிந்தனையாளர்களும் கிடைப்பது ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாயிருக்கவில்லை.

எனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத்து நான் என்னுடனேயே பேசிக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட வழிவகை எனலாம். இவற்றையெல்லாம் சிறுகதையாக எழுதவேண்டும் என்று முனைந்து எழுதவில்லை. இவை வெறும் எண்ணப்பதிவுகளே. வெறும் thoughtful responses. That’s it. என் பெல்ஜிய நண்பர் ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு அழுதது இன்னும் என் கண்களிலேயே இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வெளிவர முடியாமல், ஆற்றாமையினாலேயே ‘முடி’ சிறுகதையை ஒருநாள் நள்ளிரவு வேளை எழுத ஆரம்பித்து மூன்று மணிவரை எழுதி முடித்துவிட்டு, தாங்கவியலா துக்கத்தினால் காலை வரை உறங்கவில்லை. அப்படியே அதை என்னுடைய நண்பர் பாஸ்கருக்கு அனுப்பிவிட்டேன்.

‘அம்மாவின் தேன்குழல்’, ‘அமைதியின் சத்தம்’ போன்ற கதைகளை வெங்கட் சாமிநாதன் விமர்சித்திருக்கிறார். ‘அம்மாவின் தேன்குழல்’ கதையில் கடைசி பாராவை எடுத்துவிட்டால் அது நல்ல கதை என்றார் வெ.சா. வல்லமை இதழில் வெளியான அந்தக் கதையை அந்த வருடத்தின் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நாஞ்சில் நாடன் அதைப் பற்றி, ‘பதாகை’ இதழில் வெளியான தன்னுடைய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“கொஞ்சம் நெட் ரைட்டிங் வாசனை இருக்கு. காப்பியை பித்தளை டம்ளர்ல குடிக்கிறதுக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர்ல குடிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு.”

அதைக் குறிப்பிட்டு நீங்களும் உங்கள் தளத்தில் பதில் எழுதியிருந்தீர்கள். ஆனால் அப்போது உங்களுக்கு என்னைத் தெரியாது.

நாஞ்சில் பேட்டியில் ஒருவிஷயம் சொல்கிறார், அவர் மட்டுமே சொல்லக்கூடியது அது. இணைய எழுத்தைப்பற்றிச் சொல்லும்போது காபியாக இருந்தாலும் அதை பிளாஸ்டிக் டம்ளரில் குடித்தால் நன்றாக இல்லை, வெண்கலக் கோப்பையில்தான் குடிக்கவேண்டும் என்கிறார். உண்மையில் அந்த வேறுபாடு அழகியல் சார்ந்தது.

நான் புன்னகைப்பதைக் கண்டு அஜிதன் என்ன என்று கேட்டான். ‘புரட்சியாளர்கள் புதுமையை நாடுவது எப்படி ஒரு இயல்பான இணைவோ அதைபோல அழகியலாளர்கள் கொஞ்சம் பழமைவாதிகளாக இருப்பதும் இயல்பான இணைவுதான். என்ன சொல்கிறாய்?” என்றேன்

பதினாறு வருடங்களுக்கு முன்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நான் ஒரு greenhorn-ஆக சேர்ந்த பொழுது, அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் சேர்ந்து peer programming செய்வார்கள். அருகே அமர்ந்து அவர்கள் program செய்வதை நாங்கள் அவதானிக்கவேண்டும். கேள்விகள் இருந்தால் கேட்கவேண்டும். நாங்கள் எழுதும்போது அவர்களும் கவனித்துப் பல நுட்பங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அபிலாஷ் சந்திரன் போன்றவர்கள் உங்களைப் போன்ற துரோணர்களுடன் அருகே இருந்து உரையாடிப் பெற்றுக்கொண்டதைப் பற்றியெல்லாம் அர்ஜுனர்களாய் கம்பீரமாக நின்று கூறும்போதெல்லாம் வெளியிலிருந்து ஏக்கத்துடன் ஏகலைவனாய் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என் போன்றவர்களுக்கு.

இன்றைக்கு உங்களைப் போன்று வாசகர்களுடனும், எழுத்துலகிற்குள் புதிதாய் நுழைந்தவர்களுடனும் அன்றாடம் உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் குறைவு. அதிலும் என் போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அதெல்லாம சாத்தியமே இல்லை. இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. வல்லமை, சொல்வனம் போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகே பல பேருடன் தொடர்பு கிடைத்தது. எனக்கு வேண்டியதெல்லாம் அனுபவம் மட்டுமே. ஏனையவை ஏதாவது கிளைவிளைவாகக் கிடைத்தால் மகிழ்ச்சி.

அதேசமயம் எதைச் செய்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன்தான் செய்ய விரும்புகிறேன். கற்றுக்கொள்ள முயல்கிறேன். பயிற்சி செய்கிறேன். மா.அரங்கநாதனின் ‘சித்தி’ கதையில் வரும் ஓட்டக்காரனைப் போல் ஓடுவதற்காகவே, ஓட்டத்தை ரசித்துக்கொண்டே, ஓடிக்கொண்டிருக்க விரும்புகிறேன். விழாமல் ஓடுவதற்கு சொல்லிக்கொடுங்கள். எதிரியாகி விடமாட்டேன். ஆனாலும் என்ன? நேரிடையாகவே மோதுவேன். மறைந்திருந்து தாக்கமாட்டேன். தாக்கினாலும் தகர்ந்துவிடவா போகிறீர்கள்?

அன்புடன்,

மாதவன் இளங்கோ

அன்புள்ள மாதவன்,

நீங்கள் நினைப்பதுபோல ஒன்றுமில்லை. நான் சொன்னவை எப்போதும் இருப்பவை, எழுதவந்த காலம் முதல் பார்த்துக்கொண்டிருப்பவை. அதனால் நான் புண்பட்டுவிடுவதோ அல்லது குறைந்தபட்சம் சீண்டப்படுவதோகூட இல்லை. என் இயல்பென்பது முழுமையாகப் புறக்கணித்து மேலே செல்வதே. நான் இத்தனை எழுதுவது, இவ்வளவு வாசிப்பது, இவ்வளவு செயல்படுவது அவ்வியல்பால்தான்.

அதை நானே முயன்று கற்றுக்கொண்டேன். ஒரு மனிதரை, ஒரு நிகழ்வை என் உள்ளத்திலிருந்து முழுமையாக அழிக்க அதிகபட்சம் ஒருமணிநேரம் போதும். ஒரு புன்னகை, முற்றாக என்னை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும் ஒரு வேலையில் ஈடுபடுதல் அல்லது ஒரு பயணம் . குளியல்போல. மீண்டும் நினைக்கையில் நெடுந்தொலைவில் இருக்கும் அனைத்தும். இங்கு நான் ஆற்றவேண்டியது எதுவோ அதை மட்டுமே முதன்மையானதாகக் கருதுகிறேன்.

ஆகவே நான் இக்கருத்துக்களை கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வதற்கான காரணம் இப்படி ஒரு விஷயம் நம் சூழலில் உள்ளது என்பதைச் சுட்டுவதற்காக மட்டுமே

*

என் ஆற்றலை என் கலையின் வெற்றிதோல்விகளை நான் நன்கறிவேன். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அது தெரியும். ஏதேனும் தளத்தில் ஓரளவேனும் சாதித்தவர்களுக்கு அது மிகத்தெளிவாகவே தெரியும். அதன்பின்னரும் அவர்கள் எதிர்வினைகளை கூர்ந்து நோக்குவது அவர்கள் அறியாத புதிய கோணங்களுக்காக. மானுட இயல்புகளை கவனிப்பதற்காக.

எதிர்வினைகளை எந்தவகையிலும் பொருட்படுத்தக்கூடாது என்று நான் எழுதவந்த காலத்தின் இருபெரும் ஆளுமைகளான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். ஜெயகாந்தன் நான் அவரை எடுத்த பேட்டியில் அதைத் தெளிவாகவே சொல்கிறார்.

சுந்தர ராமசாமியின் தரப்பு என்னவென்றால், எதிர்வினை என்பது சமகாலம் சார்ந்தது. அன்றாடம் சார்ந்தது. சராசரியிலிருந்து எழுவது. அதற்கு செவிசாய்க்கும் எழுத்தாளன் கீழே சென்றுவிடுவான். அவன் கவனிக்கவேண்டியது அவனுடைய சொந்த அழகுணர்வும் நீதியுணர்வும் நிறைவடைகின்றனவா, அவன் எண்ணிய இலக்கு நோக்கிச் செல்கிறானா என்று மட்டுமே

ஜெயகாந்தன் இன்னொரு கோணத்தில் எதிர்வினையாற்றும் சமகாலத்தவன் பெரும்பாலும் தன் சிறுமையை மட்டுமே எழுத்தாளனுக்குக் காட்டுகிறான் என்று சொன்னார். வாசகர்கடிதங்களை தான் படிப்பதே இல்லை என்றார். எதிர்வினையாற்றும் வாசகன் பெரும்பாலும் இயலாமையை அல்லது தாழ்வுணர்வைக் கொண்டு அவன் தன் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமைகளை மதிப்பிடுகிறான். அவர்கள் முக்கியமானவர்கள், தான் முக்கியமானவன் அல்ல என அவன் உணர்கிறான். அவர்கள் சாதனையாளர்கள், தான் சாமானியன் என்பதே அவனைச் சீண்டுகிறது. அவ்வுணர்ச்சியே அவன் விமர்சனத்தின் அடிப்படையாக அமைகிறது என்றார்.

அவ்வகையில் சமகாலத்துச் ‘சிறிய’ எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கு சருகுகளின் மதிப்புகூட இல்லை என்றார் ஜெயகாந்தன். படைப்பூக்கத்துடன்எழுதமுடியாதவனின் உள்ளம் ஒரு இருண்ட நரகம். அங்கிருந்து அவனுடைய புகைச்சல் மட்டுமே வெளிப்படமுடியும்.

*

உண்மையில் என் கால்நூற்றாண்டுக்கால அனுபவத்தில் எதிர்மறை விமர்சனங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே எவ்வகையிலேனும் பொருட்படுத்தத் தக்கது. விஷ்ணுபுரமோ, பின் தொடரும் நிழலின் குரலோ ,காடோ ,ஏழாம் உலகமோ வெளிவந்த காலகட்டத்தில் எழுந்த எதிர்வினைகளை இன்று வாசித்தால் அந்நாவல்கள் இன்று அடைந்துள்ள வாசகப்பரப்பை காணும் எவரும் அதிர்ச்சியையே அடைவார்கள்.

அதன்பின்னரும் விவாதம் என்பது முக்கியமானதே என்று நினைக்கிறேன். அது எழுத்தாளன் தனக்கு நிகரானவர்களாக நினைக்கும் ஆளுமைகளுடனான கருத்தாடலாக இருக்கலாம். அல்லது அடுத்த தலைமுறையிலிருந்து எழுந்து வரும் முக்கியமான புதிய குரலுடன் நிகழும் உரையாடலாக இருக்கலாம்.

வாசக எதிர்வினைகள் இருவகையில் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக, ஒற்றைத்தரப்பாக, ஒரு சராசரி அடிப்படையில் கவனத்திற்குரியவை. அவை தான் எழுதியது வாசிக்கப்பட்டதா என அறிவதற்கான சான்றுகள். இன்னொன்று வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே ஒர் அந்தரங்கமான சந்திப்புப்புள்ளி உள்ளது. அதை எழுத்தாளன் வாசகனிடமிருந்து அறியும் தருணம் அவனுக்கு தன் எழுத்தைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவது.

*

எழுதத்தொடங்கும் காலகட்டத்தில் எழுத்தளர்களுக்கு இருவகை எதிர்வினைகள் முக்கியமானவை. ஒன்று, அச்சூழலின் முதன்மையான இலக்கியவாதிகளின் நோக்கு. அது அங்கீகாரம் அல்லது தீர்ப்பு அல்ல. அச்சூழலில் அதுவரை அடையப்பட்ட தரத்தின் அளவீடு அது.

இன்னொன்று உடன் எழுதும் எழுத்தாளர்களின் மதிப்பீடு. அவர்கள் உங்களுடன் உடன் ஓடுபவர்கள். வடிவம் சார்ந்த நோக்கு முதல் தரப்பில் இருந்தும் பார்வை சார்ந்த மதிப்பீடு இரண்டாம் தரப்பில் இருந்தும் கவனிக்கத்தக்கது.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானி, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், கோமல் சாமிநாதன் எனப்பலர் தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கணிசமானவை கறாரான எதிர்மதிப்பீடுகள்.

அதேபோல நான் பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ந.ஜெயபாஸ்கரன், யுவன் சந்திரசேகர் போன்ற அன்றைய இளம் எழுத்தாளர்களுடன் தொடர்சியான உரையாடலில் இருந்தேன். பலருக்கு ஒவ்வொருநாளும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவர்கள் எழுதும் அனைத்தையும் விமர்சனம் செய்வேன். ஒருநாளுக்கு சராசரியாக பத்து கடிதங்கள் வரும் அன்று எனக்கு.

ஆகவேதான் இக்கதைகளை பிரசுரித்து எதிர்வினைகளைக் கோரினேன். எதிர்வினையாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள் என்பதைக் காணலாம். அந்த எதிர்வினைகள் எழுத்தாளர்களுக்கு முக்கியமானவை

எஸ்ரா பவுண்ட் சொன்ன ஒரு வரி எனக்கு முக்கியமானதென அடிக்கடித் தோன்றும். தன்னளவில் ஒரு நல்ல படைப்பையேனும் எழுதாத ஒருவரின் இலக்கியமதிப்பீட்டை பொருட்படுத்த வேண்டியதில்லை. நான் பொருட்படுத்துவேன், வெறும் விமர்சகர்களின் மதிப்பீட்டை அல்ல, அவர்களின் ஆய்வுக்கருவிகளை மட்டும்.

*

விமர்சனரீதியான வாசிப்பு இல்லாமல் எவரும் தன் மொழியை, வடிவை தீட்டிக்கொள்ளமுடியாது. எது தன் வல்லமை, எங்கே சரிகிறோம் என உணர முடியாது

எங்கே பிரச்சினைகள் வருகின்றன? உண்மையில் ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி, தன்னால் மேலும் நெடுந்தொலைவு செல்லமுடியும் என உணர்பவர் எதிர் விமர்சனங்களால் புண்படுவதில்லை. அவ்விமர்சனம் அவர் எழுதிய படைப்பின் நுண்மைகள் அனைத்தையும் தொட்டபின் மேலும் கோருவதாக இருக்கும் நிலையில் அவரால் அக்குரலை உதாசீனம் செய்யமுடியாது

எழுத்தாளன் புண்படுவது புறக்கணிப்பை வெளிப்படுத்தும் ஒற்றைவரி நிராகரிப்புகள் மற்றும் கிண்டல்களில். போகிற போக்கிலான சீண்டல்களில். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக படைப்பூக்கத்துடன் இருக்கும் ஒரு படைப்பாளிக்கு அதுவே கூட பழகிவிட்டிருக்கும். அதன் பின் உள்ள உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ளமுடியும்

1988ல் கணையாழியில் நான் ‘கிளிக்காலம்’ என்னும் கதை எழுதியிருந்தேன். மறு இதழில் கணையாழியில் வெளிவந்தவற்றிலேயே மோசமான கதை அதுதான் என ஒரு கடிதம் வந்திருந்தது. கணையாழியின் அன்றைய எழுத்துமுறைக்கு முற்றிலும் ஒவ்வாத கதை அது. மூன்று இளைஞர்களின் பாலியலுணர்வின் தொடக்கத்தை, ஒருவனின் பாலியல் களங்கமின்மையின் அழிவை சித்தரிக்கும் கதை. கணையாழிக்கதைகள் நடுத்தவ நகர்ப்புற வர்க்கத்தின் அன்றாடச்சிக்கல்களை மிக உள்ளடங்கிய தொனியில் செய்திநடையில் வெளிவந்துகொண்டிருந்த காலம்

நான் கடுமையாகப்புண்பட்டேன். ஆனால் நேரில் சந்தித்தபோது அசோகமித்திரன் என் உணர்ச்சிகளில் உள்ள அர்த்தமின்மையை சுட்டிக்காட்டினர். அந்த வாசகரின் அழகுணர்வு இலக்கியவாசிப்பு எதுவும் எனக்குத்தெரியாது. அவர் எதிர்பார்க்கும் கதையை நான் எழுதவில்லை என்று மட்டுமே அதற்குப்பொருள். “அது அவரோட லிமிட்’ என்று அசோகமித்திரன் சொன்னார். அது ஒரு பெரிய விழிப்புணர்வாக அன்று இருந்தது

ஆக, பொதுவான எதிர்வினைகளை எளிதில் கடந்துபோகமுடியும். உண்மையான புண்படுதல் நிகழ்வது அந்த எழுத்தாளன் தன் உண்மையான எல்லையை விமர்சகர் சுட்டிக்காட்டுவதை உணரும்போதுதான். ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

*

நான் சமகால இளம் எழுத்தாளர் எவரையும் எதிர்மறையாக விமர்சனம் செய்யவேண்டாம் என்ற கொள்கையை கடந்த பல்லாண்டுக்காலமாகக் கொண்டிருக்கிறேன். எப்போதாவது ஒருவரி தற்செயலாக, எழுத்தினூடாக வெளிவந்தால் ஆயிற்று. மற்றபடி விமர்சனமே சொல்வதில்லை . ஆனால் அனைத்தையும் வாசித்துப்பார்க்கிறேன்

தவிர்ப்பதற்கான பல காரணங்களில் முதன்மையானது அவர்கள் எவ்வகையிலும் அதை விரும்புவதில்லை என்பதே. முன்னரே அவர்கள் வரச்சாத்தியமான எதிர்மறை விமர்சனத்திற்கு எதிரான வாதங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். விமர்சனத்தின் நோக்கங்களை ஐயப்படுவது, விமர்சகனின் நேர்மையை மறுப்பது அதற்கான குறுக்கு வழி. தங்களை கறாராக அணுகக்கூடியவர்கள் என தாங்கள் நினைப்பவர்களை முன்னரே மட்டம்தட்டி தங்களை மேலெ நிறுத்திக்கொள்ளும் ஒரு பாவனையை நடித்துக்கொள்வது சமீபத்திய உத்தி.

அவர்கள் ஒரு சிறு முகநூல் வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் நூல்கள் அந்த வட்டத்திற்குள் இரண்டுமாதக்காலம் ஓர் அலையை உருவாக்குகின்றன. அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள். அது தீவிரமான வாசகர்வட்டம் என நினைத்துக்கொள்கிறார்கள். எதிர்மறை விமர்சனம் அந்த வட்டத்தை அழிக்கும் என கவலைப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருப்பதென்றால் இருக்கட்டுமே என்றே எனக்கும் படுகிறது.

ஏனென்றால் இந்த எதிர்மறை மனநிலையின் உச்சத்தில் ஓர் இளம் எழுத்தாளர் நிற்பாரென்றால் அவருக்கு எதிர்மறை விமர்சனங்களால் எந்தப்பயனும் இல்லை. அவரது வன்மமும் கோபமும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு. அவர் எழுதச் சாத்தியமானவற்றையும் அம்மனநிலை அழிக்கும். மேலும் சிற்றிதழ்ச்சூழலில் எந்த உணர்வும் ஆறப்போடப்படும். முகநூலில் வஞ்சமும் கசப்பும் மாதக்கணக்கில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இந்த எதிர்மறை மனநிலையை முகநூல்சூழல் எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதை முன்னரே சுட்டியிருந்தேன். இங்கே இன்று இலக்கியத்தில் எவரை வேண்டுமென்றாலும் எவர் வேண்டுமென்றாலும் எள்ளி நகையாடலாம், ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம். ‘உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்னும் கேள்வியே எழுவதில்லை. அனைவரும் சமம் என்பதை தரம் எவருக்கும் தேவையில்லை என ஆக்கிவிட்டிருக்கிறார்கள். மதிப்பீடுகள் இல்லை. ஆகவே மதிப்புக்குரியவர்களும் இல்லை.

பலசமயம் கருத்துக்கள் அவற்றைச் சொல்பவரின் தகுதியால்தான் முக்கியத்துவம் கொள்கின்றன. அவருடைய எழுத்துக்களின் பின்னணி அக்கருத்துக்களை முழுமையாக்குகிறது. அதை முழுமையாக நிராகரித்து அவரை சில்லறைப்பூசல்களின் இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டால் விமர்சனம் பொருளற்றதாகிறது. முகநூல் அதற்கான களம். முகநூல் இருக்கும் வரை இலக்கியவிமர்சனமே சாத்தியமில்லை என்றுகூடத் தோன்றுகிறது.

ஆகவே எதிர்மறை விமர்சனம் இன்று ஒரு வீண் உழைப்பு. எனவே எதிர்காலத்திலும் எந்த இளம் எழுத்தாளரைப்பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லும் எண்ணம் எனக்கில்லை.

பாராட்டுதலாகச் சுட்டிக்காட்டவேண்டிய ஆக்கங்களை பற்றி மட்டுமே அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறேன். அவை கவன ஈர்ப்பு மட்டுமே.

இங்கே இந்தக்கதைகளை மட்டும் விமர்சனம் செய்யலாமென நினைப்பது இவர்களே இவற்றை எனக்கு அனுப்பி கருத்து கேட்பதனால் மட்டும். ஆனால் மிக விரைவிலேயே இவர்களும் அந்த முகநூல் சூழலுக்கே செல்லப்போகிறார்கள். நக்கல்கள், கிண்டல்கள், மதிப்பின்மையை வெளிக்காட்டும் தோரணைகள், உள்நோக்கம் கற்பித்தல்கள் வழியாக தங்களை காத்துக்கொள்ள உந்தப்படலாம். ஏனென்றால் நான் தொடர்ந்து கண்பது அது. அதைத்தான் சற்று கிண்டலாகச் சுட்டினேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஇந்தியாமீதான ஏளனம் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31