பகுதி நான்கு : மகாவாருணம்
[ 1 ]
“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.”
“குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து வாழ்ந்தான்” என்றான் சண்டன். “காமம் முடிந்ததும் காமம் எழுந்தமையால் அவனால் சித்தம் மீளவே முடியவில்லை. ஒருநாள் பத்து துணைவியருடன் அளகாபுரியிலுள்ள பிரமோதம் என்னும் வேனில்காட்டில் மலர்மரங்களுக்கு நடுவே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த சிறிய நீர்க்குட்டை ஒன்றில் பொற்துகள்போல ஓர் எறும்பு நீந்திக்கொண்டிருப்பதை கண்டான். குனிந்து அந்த எறும்பை சுட்டுவிரலால் தள்ளி கரையேற்ற முயல்கையில் அவன் காதில் அவ்வெறும்பு வேண்டிக்கொண்ட ஓசை விழுந்தது.”
இருகைகளையும் கூப்பி எறும்பு கூவியது “பேராழிகளின் தலைவனாகிய வருணனே, இக்கடலை நான் கடக்க எனக்கு உதவுக!” திகைப்புடன் அவன் சுட்டுவிரலால் ஒற்றி அந்த எறும்பை மேலெடுத்தான். அதன் விழிகளை தன் விழிகளால் தொட்டு “நீ சென்றுகொண்டிருந்தது கடலென எவர் சொன்னது?” என்றான். “என் மூதாதையரின் அறிதல், என் விழிகளின் காட்சி இரண்டையும் என் நுண்ணறிவின் வழியாக இணைத்துக்கொண்டேன்” என்று எறும்பு சொன்னது. “அலையடிப்பது, திசைகள் அற்ற எல்லைகொண்டது, சென்றடையமுடியாத ஆழம் கொண்டது.”
அர்ஜுனன் அவ்வெறும்பை கீழே விட்டுவிட்டு எண்ணத்திலாழ்ந்தான். அவனருகே சிரித்தபடி ஓடிவந்து அமர்ந்து மூச்சிரைத்த மீனாட்சி அவன் முகம் மாறிவிட்டிருப்பதைக் கண்டு “என்ன?” என்றாள். “நான் செல்லவேண்டிய திசை ஒன்று எஞ்சியுள்ளது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. “செல்கிறீர்களா?” என்றாள். “நான் சென்றாகவேண்டியவன் என்று நீ அறிவாய்” என்றான். “ஆம், ஆயினும் உள்ளம் மாயைகளையே விழைகிறது” என்றாள்.
அவளைத் துரத்தி ஓடிவந்த ஒன்பது கன்னியரும் கூட்டுச்சிரிப்போசையுடன் அருகே அமர்ந்தனர். பதுமை “நெடுந்தூரம் ஓடிமீண்டோம் இன்று” என்றாள். சங்கினி “ஆம், மறு எல்லையில் அந்தப் பொன்முகில்வரை” என்றாள். அவர்கள் இருவரும் இருந்த நிலையைக் கண்டு பிறர் சிரிப்பழிந்தனர். நந்தை “என்ன ஆயிற்று?” என்றாள். “கிளம்புகிறார்” என்றாள் மீனாட்சி. அனைவர் முகங்களும் வாட விழிகள் நீரொளி கொண்டன.
“நான் வருணனை வென்றாகவேண்டும்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து நான் செல்லவேண்டிய திசை அதுவே.” அவர்கள் விழிதாழ்த்தி துயரெடை கொண்டனர். “கடந்துசென்றுகொண்டே இருப்பவன் நான், என் இயல்பை நீங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள். என் மேல் சினம்கொள்ளவேண்டாம்” என்றான் அர்ஜுனன். “ஆண்களுக்கு கடந்துசெல்லலையும் பெண்களுக்கு நிலைகொள்ளலையும் வகுத்த நெறியை அன்றி எதையும் குறைசொல்ல விழையவில்லை” என்றாள் மீனாட்சி.
“நாளை காலை நான் இங்கிருந்து மீள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “வீரரே, இங்கு நீங்கள் வந்து மானுட ஆண்டு நூற்றெட்டு கடந்துவிட்டது. ஆனால் உங்களை நீங்கள் இவ்வுலகுக்குள் புகுந்தகணத்தின் மறுகணத்தில் கொண்டு சென்று அமர்த்துகிறேன்” என்று மீனாட்சி சொன்னாள். “இங்கிருந்து நீங்கள் விழையும் செல்வம் அனைத்தையும் கொண்டு செல்லலாம்” என்றாள் நந்தை. “வடக்கின் அரசன் அளித்த அம்பு அன்றி வேறேதும் கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.
“வீரரே, நீரின் தலைவனை வென்றுகடக்கும்பொருட்டு கிளம்புகிறீர்கள். நீரின் உண்மை இரண்டு. ஒளிப்பரப்பாக அலையடிக்கும் மேல்தளம் அதன் முகம். இருண்டு இருண்டு செல்லும் அசைவற்ற ஆழம் அதன் அகம்” என்றாள் மீனாட்சி. “நீர்முகத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் தேவி பதுமை. நீராழத்தில் படிந்திருக்கும் சங்குகளின் அரசி சங்கினி. சங்கு ஆழத்து வெண்தாமரை. வெண்தாமரை அலைமேல் மலர்ந்த சங்கு.”
“சங்கும் தாமரையும் ஏந்திய வருணன்” என்றாள் மீனாட்சி. “அவனை மூன்று முதல்தெய்வங்களன்றி எவரும் முழுமையாகக் கண்டதில்லை. கதிரவனுக்குரிய ஒளிமலரென அவனைக் கண்டவர்கள் சங்கிலமர்ந்து குளிர்ந்த அவனை கண்டதில்லை. சங்கிலெழும் ஆழிப்பேரோசையாக அவனை அறிந்தவர்கள் ஓசையற்ற மலர்வென அவனை உணர்ந்ததில்லை. மலர்நாடி வருபவருக்கு ஆழத்தையும் சங்கென எண்ணுபவர்களுக்கு மலர்ந்த வெண்நகைப்பையும் அளிப்பது அவன் ஆடல்.”
“இவர்கள் இருவரும் உங்களுடன் வரட்டும்” என்றாள் மீனாட்சி. “உங்கள் இரு கைகளின் கட்டைவிரல்களிலும் மலர் வடிவிலும் சங்குவடிவிலும் வரிச்சுழியாக அமைந்திருப்பார்கள். தேவையானபோது உங்கள் அருகே எழுந்து வழிகாட்டுவார்கள்.” அர்ஜுனன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அங்குள்ள சுனை ஒன்றில் அவர்கள் அவனை இறங்கிச்செல்லும்படி சொன்னார்கள். நீரில் மூழ்கிய அவன் அலைகளுக்கு அப்பால் அவர்களின் உருவங்கள் வண்ணங்களாகி நெளிந்து கரைவதைக் கண்டான்.
“விழித்தெழுந்தபோது அவன் குபேரதீர்த்தத்தின் அருகே இருந்தான். எழுந்து அமர்ந்து எண்ணிநோக்கியபோது அனைத்தும் கனவென்றே இருந்தது. நினைவுகூர்ந்து அருகே கிடந்த தன் ஆவநாழியை எடுத்து நோக்கினான். அதில் இரும்புவளையம் கொண்ட அம்பு ஒன்று இருப்பதைக் கண்டான். அதைத் தடவிநோக்கியபடி நீள்மூச்சுவிட்டான்” என்றான் சண்டன்.
அவர்கள் தண்டகாரண்யத்தின் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். பைலன் “குபேரனின் படைக்கலம் அர்ஜுனனுக்கு உதவக்கூடும். அந்தர்த்தானையைவிட பெரிய துயில்தெய்வம் ஒன்றுண்டு. வேள்விகளில் துயிலும் வைதிகரிடம் கேட்டு அவரது எதிரிகள் பெற்றுக்கொண்டு விடக்கூடும்…” என்றான். சண்டன் உரக்க நகைத்தான். ஜைமினி “இது வீண் கேலி. வேள்விகளில் எவர் துயிலமுடியும்?” என்றான். “ஆம், புகை ஒரு பெரிய தொல்லையே” என்றான் பைலன்.
“பைலரே, இது அத்துமீறல். வேள்விக்களத்தில் அவிபெறும்பொருட்டு தெய்வங்கள் வந்து சூழ்ந்துள்ளன. அவற்றின் அருகே அமர்ந்திருக்கும் வைதிகர் அனலெழும் காட்டில் நாணல்கள் போன்றவர்கள்…” என்றான் ஜைமினி. பைலன் “அப்படியென்றால் அவி கொள்ளும்பொருட்டு அந்தர்த்தானையும் நித்ரையும் வந்திருக்கக்கூடுமோ?” என்றான். ஜைமினியின் கண்கள் நனைந்தன. தொண்டை ஏறி இறங்கியது. அவன் “நான் தனித்துச்செல்கிறேன்…” என்று முன்னகர்ந்தான்.
“சரி, இல்லை. சினம் கொள்ளாதீர்” என்று அவன் கையை எட்டிப்பற்றினான் பைலன். “இதற்கெல்லாம் சினம் கொள்ளக்கூடுமா? இது எளிய சொல்லாடல் அல்லவா?” ஜைமினி “எனக்கு வேதம் எளிய சொல் அல்ல” என்றான். “ஆம், அது புகையின் எடைகொண்டது” என்றான் சண்டன். “சண்டரே, போதும்” என்றான் பைலன். ஜைமினி தலைகுனிந்து நடந்தான்.
அவர்கள் பிறகு நெடுநேரம் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது சண்டன் பைலனின் கண்களை சந்தித்தபோது அவற்றில் புன்னகையின் ஒளி இருந்தது. ஜைமினி நின்று “நீர்” என்றான். சண்டன் தன் குடுவையை எடுத்து தலைகீழாகக் காட்டி “தீர்ந்துவிட்டது” என்றான். ஜைமினி பதற்றத்துடன் “இந்நிலம் வறண்டிருக்கிறது. குரங்குக்குரல்களும் குறைந்திருக்கின்றன. நீர்மரங்களும் கண்ணுக்குப்படவில்லை” என்றான். “ஆம், இன்னும் நெடுந்தொலைவுக்கு நீரூற்று என ஏதுமிருக்க வாய்ப்பில்லை” என்றான் சண்டன். “என்ன செய்வது?” என்று ஜைமினி பதறியபடி கேட்டான். “அந்தணரே, நீங்கள் வருணனை வேதம்கூவி அழைத்து நீர்பொழியக் கோரலாமே?” என்றான் சண்டன்.
“தன்னலத்திற்காக வேதம் ஓதுபவன் கீழ்மகன்” என்றான் ஜைமினி. “நான் இக்காட்டில் நீரில்லாது விடாய்கொண்டு இறப்பதாக இருந்தாலும் இறுதித்தருணம் வரை எனக்கென வருணனை வேண்டமாட்டேன்.” அவன் உறுதியைக் கண்ட சண்டன் புன்னகைத்து “நன்று. தொல்வேதகாலத்தின் அதே உணர்வுடன் அந்தணர் சிலர் இன்னுமிருப்பதனால் வருணன் மானுடருக்கு கட்டுப்பட்டவனே” என்றான்.
பைலன் “மானுடருக்கு தேவர்கள் எப்படி கட்டுப்படமுடியும்?” என்றான். ஜைமினி “தேவர்களில் மானுடனின் ஆணைக்கேற்ப அமையவேண்டிய பொறுப்புள்ளவன் வருணனே. முனிவர், வேதியர், கற்புடைப்பெண்டிர், சொல்தூய்மைகொண்ட கவிதை, இலக்கண முழுமைகொண்ட இசை ஆகிய ஐந்து அழைப்புக்கும் அவன் வந்தாகவேண்டும். மழைக்குருவி, வேழாம்பல், தவளை ஆகிய மூன்றின் அழைப்பையும் ஏற்றாகவேண்டும். வருணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் வரைதான் இங்கே வாழ்க்கை. அவன் தன் விடுதலையை அடைந்தானென்றால் மண் வறண்டு உயிர்கள் அழியும்” என்றான்.
அவன் ஊக்கம்கொண்டு மேலே சொல்லிக்கொண்டே சென்றான். “அறிந்திருப்பீர் பைலரே, எங்கள் ஜைமினிய குருமுறை மிகமிகத் தொன்மையானது. வேதங்கள் எழுந்து செறிந்த காலகட்டத்தை மூன்றென வகுப்பதுண்டு. முதல் கட்டத்தில் வருணனே முழுமுதற்தெய்வம். பின்னர் இந்திரன் தெய்வமானான். இன்று பிற தெய்வங்கள் முதன்மைகொண்டு எழுந்து வருகின்றன. எங்கள் குடி வாருணவேதம் இங்கு திகழ்ந்த அக்காலத்திலேயே வேதமுதன்மைகொண்டிருந்தது.”
அவன் விழிகளை பைலன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை சிறுவருடையவை என பளபளத்தன. “அன்று இருந்த வாருணவேதத்தின் ஒரு கைப்பிடி அளவே நாலென வகுக்கப்பட்ட வேதத்தில் உள்ளது என்பார்கள் எங்கள் குலமூதாதையர். அன்று தந்தை தன் மடியில் மைந்தனை வைத்திருப்பதுபோல வருணன் தன் நீரால் மண்ணை வளைத்து அருள்செய்திருந்தான். வருணனுக்கான பாடல்களை மட்டும் ஜைமினிய குருமுறைமையில் தனியாகத் தொகுத்து வைத்திருக்கிறோம். அவற்றை நாங்கள் பாடி மழை வரவழைப்பதுண்டு.”
“மேற்கே சோனகநாட்டு பெருமணல்உலகை நோக்கிச் செல்லும் வழிகளினூடாகச் சென்றால் வறண்ட மலையடுக்குகள் வரத்தொடங்குகின்றன. கூர்முட்களையே இலைகளாகக்கொண்ட குட்டைப்புதர்களும் எலிகளும் கீரிகளும் மட்டும் வாழும் அம்மலைகளில் தொன்மையான வாருணக்குடிகள் வாழ்கின்றனர். அனல்சுட்ட கல் என செந்நிற மக்கள். குழல் செந்நிறம். விழிகள் பச்சைக்கற்கள்போன்றவை. அவர்களின் ஆலயங்களில் தவளைகள் சூழ வருணன் அமர்ந்து அருள்புரிகிறான்” என்றான் சண்டன்.
“புழுதியின் நிலம். பெருங்காற்றுகளின் நிலம். செடிகளுக்கு கசப்பும் விலங்குகளுக்கு நஞ்சும் மானுடருக்கு சினமும் மிகுதி அங்கு. அணுகமுடியாத முட்புதர்கள் என அம்மக்களைச் சுட்டுவர் வணிகர். ஆண்டுக்கு மூன்று மழை என்பதே அங்குள்ள கணக்கு. பன்னிரு மாதங்களும் அந்த நீர்த்துளிகளைக்கொண்டே அவர்கள் வாழவேண்டும். அவர்களின் பாடல்கள் அனைத்தும் வான் நோக்கிய மன்றாட்டுகளே” என்று சண்டன் சொன்னான். “தொல்வேதம் வாருணத்தை அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டது.”
ஜைமினி சினத்துடன் “வேதம் அந்த அசுரகுடிகளிடமிருந்து எழுந்ததா? என்ன சொல்கிறீர்?” என்று சீறினான். “அந்தணரே, தொல்வேதத்தின் தெய்வங்கள் அனைத்தும் அசுரர்களிடமிருந்து பிறந்தவர்களே. குபேரன் ஓர் அசுரன் என்றே சொல்கின்றன நூல்கள். இலங்கையாண்ட ராவணனும் உடன்பிறந்தாரும் அவன் இணைக்குருதியினர். வருணனும் அசுரபிறப்பு கொண்டவன் என்று வேதம் சொல்கிறது. வேதம்கேட்டும் அவிகொண்டும் அவன் தேவர்களுக்கு தெய்வமாக ஆனான் என்கின்றன. நீர் வேதம் கற்றிருக்கிறீர், முழுதாக அல்ல.”
அந்தக் குரலில் இருந்த கூர்மை ஜைமினியை சொல்லமையச் செய்தது. அவன் விழிகளில் சீற்றம் தெரிந்தது. அதுவரை இருந்த எள்ளல்முகம் மறைய சண்டனின் குரல் மன்றமர்ந்து மெய்யுசாவும் ஆசிரியனுக்குரியதாக மாறியது. “வருணன் அசுரன் என்று கூறும் ரிக்வேதப்பாடல்கள் பல உள்ளன. அசுரர்களின் தலைவன், அசுரருக்கு அருளும் தெய்வம். விருத்திரனை அழிக்க இந்திரன் எழுந்தபோது இந்திரனுக்குத் துணைநின்றமையால் வருணன் தேவர்களுக்கும் தெய்வமாக ஆனான்.”
ஜைமினி நெடுநேரம் தலைகுனிந்து ஒன்றும் சொல்லாமல் வந்தான். பின்பு தொண்டையைச் செருமியபடி “வருணனும், மித்ரனும், அர்யமானும், பகனும், அம்சனும் அதிதிதேவிக்கு பிறந்தவர்கள். அவர்களை ஆதித்யர்கள் என்று கொள்வது வேதமரபு. வேதங்களில் பகனுக்கும் அம்சனுக்கும் வாழ்த்தும் இறைஞ்சலும் இல்லை. மித்ரனும் வருணனும் இணைந்தே தெய்வங்களாக சொல்லப்படுகிறார்கள். அவ்வப்போது அர்யமானும் சேர்த்துக்கொள்ளப்படுவதுண்டு” என்றான்.
அவன் தான் கற்றவற்றை சொல்ல விழைகிறான் என உணர்ந்த பைலன் சண்டனை நோக்கினான். புதியதாக கேட்பவனைப்போல அவன் விழிகூர்ந்தான். அந்தக் கூர்தலே அவனை அறிஞனாக்குகிறது என பைலன் எண்ணிக்கொண்டான். “மண்ணில் உள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் கொண்ட பேருருவன் என்பதனால்தான் வருணன் அசுரன் என்று சொல்லப்படுகிறான். வேதச்சொல் அறிந்து நுண்மைகொண்டவன் என்பதனால் கவிதமன் என்றும் விண்வடிவாக எழுபவன் என்பதனால் மாயாவான் என்றும் அவனை சொல்கிறார்கள். மண்ணிலுள்ளவர்களுக்கு அரசன் என்றும் விண்ணவர் வணங்கும் தேவன் என்றும் அவனைச் சொல்கின்றனர் முன்னோர்.”
“மித்ரனும் வருணனும் வேதங்களில் நரர்கள் என்று சுட்டப்படுவதுண்டு என அறிந்திருக்கிறீரா?” என்றான் சண்டன். “ஆம்” என்றான் ஜைமினி. “அவர்கள் மண்ணில் வாழ்ந்த அரசர்கள். விண்புகுந்தபின் தெய்வமானவர்கள். அவர்கள் அரசர்கள் என்றால் எவருடைய அரசர்கள்?” என்று சண்டன் கேட்டான். ஜைமினி அவன் மேலே பேசட்டும் என காத்திருந்தான். “மேற்குமலைக்குடிகள் கடலோரம் வாழ்ந்தவர்கள். மூதாதையரை கடலில் விடும் வழக்கம் கொண்டவர்கள். உயிருடன் கொந்தளிக்கும் கடல் அவர்களின் மூதாதையரின் உயிரின் பெருந்தொகை என அவர்கள் எண்ணுகிறார்கள். மழையை கடல்தேவனின் ஆடை என்கிறார்கள். வரமளிப்பவனாகையால் அத்தேவன் வருணன்.”
“பருவம் தவறாது மழைபொழிவதும் பனிஎழுவதும் வெயில் விளைந்து மூத்து கனிவதும் இப்புடவியின் தாளம் என்று அவர்களின் தொல்பாடல்கள் சொல்கின்றன. அதை அவர்கள் ருதம் என்கின்றனர்” என்றான் சண்டன். “ஆம். அச்சொல் வேதங்களில் அறமென்னும் பொருளில் அமைந்துள்ளது” என்றான் பைலன். “ருதத்தைக் காப்பவன் வருணன் என்று வேதங்களும் சொல்கின்றன. ஓயா தாளம் திகழும் கடலே நிலத்தின் உயிர்களிலும் விசைகளிலும் திகழும் தாளங்கள் அனைத்துக்கும் அடிப்படை.”
“வருணனை வேதம் போற்றுகிறது” என்றான் சண்டன். “நெறிகளின் தலைவன். பலிவிலங்கின் தோல் என புவியை வான் நோக்கி விரித்தவன். ஆதித்யர்கள் புவியை சுற்றிவரும்படி அமைத்தான். சூரியனால் பூமியை அளக்கிறான். அவன் செல்ல பாதையை அமைத்தளிக்கிறான். ஆண்டு, மாதம், நாள், பகல், இரவு என அதை பகுத்தான். யக்ஞம் ரிக் என அதை செலுத்தினான். மரங்கள் மேல் வெளியை கவித்தவன். குதிரைக்கால்களில் ஆற்றலையும் பசுக்களில் பாலெனும் கனிவையும் உள்ளங்களில் ஊக்கத்தையும் நீரில் நெருப்பையும் வானில் கதிர்களையும் மலைமுகடுகளில் ஊற்றுக்களையும் அமைத்தவன்.”
“மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவனால். வருணனின் ருதத்தின்படியே நதிகள் தேங்காமல் ஓடுகின்றன. ஆற்றுநீர் கடலை நிரப்புவதில்லை. வருணன் எல்லைகளை காக்கிறான்” என்று ஜைமினி தொடர்ந்து பாடினான். “பிறர் பிழைகள் எங்கள் மேல் படராதொழிக! மூதாதையர் பிழைகளுக்கும் நாங்கள் பொறுப்புகொள்ளாமல் ஆகுக!” என்றான் பைலன். ஜைமினி புன்னகை செய்தான். “மித்ரனும் வருணனும் எளியோனை அறிவனாக்குகிறார்கள். அறிவனை மெய்மையுணரச் செய்கின்றனர். வழிகாட்டி அழைத்துச்செல்கிறார்கள்.”
“ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் சண்டன். பைலன் “இத்தனைக்கும் பிறகு நமக்கு நீரூற்றை காட்டியாகவேண்டும் வருணன்” என்றான். சண்டன் புன்னகைத்து “அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “எப்படி சொல்கிறீர்கள்?” என்றான் ஜைமினி. “கருங்குரங்கின் ஓசை…” என்று சொல்லி சண்டன் சிரித்தான். “வருணனின் முழவல்லவா அது?”
[ 2 ]
இமயப்பனிமலைகளில் இருந்து மேற்கே சென்று புழுதிபடிந்து குளிர்ந்து உயிரசைவின்றிக் கிடந்த அரைப்பாலை நிலத்தில் இறங்குவதற்கு வணிகப்பாதை ஒன்றிருந்தது. வேனிலில் கீழ் நிலத்தில் இருந்து உப்புவணிகர்கள் படைக்கலங்களும், மரவுரியும், உலோகப்பொருட்களும் பிறவும் சுமக்கும் அத்திரிகளையும் கழுதைகளையும் ஓட்டியபடி மேலேறி வருவார்கள். மலைக்கம்பளியும், அருமணிகளும் கொண்டு கீழிறங்கிச் செல்வார்கள். சுழன்று காற்றிலிறங்கும் கருமணிமாலை என அவர்களின் குழுக்கள் தோற்றமளிக்கும். அவர்களுடன் வரும் சூதர்களின் பாடலோசையும் முழவொலியும் அந்த மணிகளை இணைக்கும் பொற்பட்டுநூல் என தோன்றும்.
மலைவணிகர்களுடன் அர்ஜுனன் கீழிறங்கிச் சென்றான். அவன் வில்லவன் என்று அறிந்ததுமே வழிப்பணமும் உணவும் அளித்து காவலுக்கு அமர்த்திக்கொண்டனர் வணிகர். ஒருமுறை மலையிடுக்கு ஒன்றிலிருந்து தொல்குடிக் கள்வர் சிலர் தலையெடுத்ததும் அர்ஜுனன் தன் நாணொலியை எழுப்பினான். அக்கணமே அவர்கள் அஞ்சிச் சிதறி ஓடி மறைந்தனர். “வெந்நீரில் எறும்புகள் போல ஓடுகிறார்கள். எதைக் கண்டனர் இவர்கள்?” என்றான் பெருவணிகன் மார்த்தாண்டன். “நான் தேர்ந்த வில்லவன் என அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அச்சம் அனைத்தையும் எளிதில் புரியவைக்கும் ஆற்றல்கொண்டது” என்றான் அர்ஜுனன்.
“வீரரே, நீங்கள் பாண்டவனாகிய அர்ஜுனனை அறிவீரா?” என்றான் நிகும்பன் என்னும் இளவணிகன். “அவர் இப்போது விண்ணுலகில் உலவிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.” அர்ஜுனன் புன்னகை செய்தான். “அவர் வில்லின் புகழ்கேட்டே இங்கே இளமைந்தர் வளர்கிறார்கள்” என்றார் முதுவணிகனாகிய கருணன். “அறத்தின்பொருட்டு கானேகியவர்கள். வெற்றியின்பொருட்டு விண்ணேகியிருக்கிறார்கள்” என்றான் நிகும்பன். “விண்ணேகிய பின் அங்கிருந்து அம்புகளையா பெற்று மீளவேண்டும்?” என்றான் மார்த்தாண்டன்.
“வில் என்பது உள்ளம். அம்பென்பது எண்ணம். கூரிய அம்பென்பது ஆற்றல்கொண்ட எண்ணம். மாபெரும் அம்புகள் மெய்யறிதல்களேயாகும்” என்றார் கருணன். “இறுகியும் வளைந்தும் நாணொலித்தும் தளர்ந்தும் அம்புகளை ஏவிக்கொண்டே இருக்கும் உள்ளம் இடைவிடாது வானத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறது என்பார்கள் கவிஞர்கள்.” நிகும்பன் “அவர் மெய்யறிந்து முனிவராகவே மீண்டு வருவார்” என்றான்.
மலையிறங்கி புழுதிக்குளம்போலிருந்த சிற்றூர் ஒன்றுக்கு அவர்கள் வந்தனர். பிங்கலம் என்னும் அச்சிற்றூரில் இருபது குடில்களே இருந்தன. அவையும் மலைக்காற்றில் வந்த சருகுகளும் புழுதியும் மூடி தொலைவிலிருந்து நோக்கினால் இல்லங்களென்று தெரியாதபடி தோன்றின. ஊர்முகப்பில் நாட்டப்பட்ட பெரிய மூங்கிலில் பறந்த பச்சைநிறமான கொடி ஒன்றே அங்கு மானுடர் இருப்பதற்கான சான்றாக இருந்தது.
அத்திரிகளின் குளம்போசை கேட்டதும் அவ்வூரிலிருந்து கூச்சலிட்டபடி ஏழெட்டுபேர் அவர்களை நோக்கி ஓடிவந்தனர். புழுதியடர்ந்த கம்பளியாடை அணிந்து கம்பளியாலான தலையுறையும் அணிந்திருந்தமையால் காட்டுக்கழுதைகள் என்றே அவர்கள் தோன்றினர். பொதிவண்டிகளை அணுகி அவற்றின் கடிவாளங்களை பற்றிக்கொள்ள முண்டியடித்தனர். “பெருவணிகர்களே, இனிய நீரும் வெம்மையான படுக்கையும்” என்று ஒருவன் கூவினான். “தளரா இளமுலைகொண்ட பெண்கள். இன்னுணவு” என்று இன்னொருவன் சொன்னான்.
“விலகுங்கள்! அகலுங்கள்!” என்று வணிகர்கள் அவர்களை தள்ளிவிட்டனர். “வணிகர்களே, நான் முதலில் வந்தேன். நானே முதலில் அழைத்தேன்” என்றான் ஒருவன். “என் இன்னுணவை வணிகர் விரும்புகிறார். வணிகரே, மலையணிலை உயிருடன் வைத்திருக்கிறேன். நீங்கள் நோக்கியபின் அதை சுடுவேன்” என்றான் இன்னொருவன். “இனிய கீரி… உடும்பு” என்று ஒருவன் அர்ஜுனனின் கையை பற்றினான். “வெம்மையான தோள்கள் கொண்டவள் என் மனைவி. இனிய சொல்லாடல் கற்றவள்.” மேலும் மேலும் ஊரிலிருந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் ஊரை அணுகியதும் பெண்களும் குழந்தைகளும் ஓடி வெளியே வந்துவிட்டார்கள். பெண்கள் குளம்போசை கேட்டதுமே முகம் கழுவி குழல் திருத்தி ஆடை மாற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. அங்கிருந்த பாறைகள்போல செம்மஞ்சள் நிறமான தோல். சிறிய நீலப்பச்சை விழிகள். விழிகளைச் சூழ்ந்தும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் செறிந்திருந்தன. மிகச்சிறிய உதடுகள் உள்ளிழுத்துக்கொண்டவை போலிருந்தன.
வணிகர்கள் பெண்களை தழுவிக்கொண்டார்கள். அவர்களை அப்பெண்கள் தோள்வளைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். பணியாளர் அத்திரிகளையும் கழுதைகளையும் அழைத்துச்சென்று ஊர்மன்றில் நிறுத்தி பொதிகளைக் கழற்றி கீழிறக்கினர். அவற்றை மையத்தில் ஒன்றாகக் குவித்து கயிறு செலுத்தி சேர்த்துக்கட்டினர். அத்திரிகளை அங்கிருந்தவர்கள் அழைத்துச்சென்று மரத்தொட்டிகளிலிருந்த நீரை அளித்தனர். பெருமூச்சுவிட்டு உடல்சிலிர்த்தபடி அவை நீர் அருந்தும் ஒலி கேட்டது.
“நம்மவர் ஒரு காவலர் இங்கிருந்தால் போதும், வீரரே” என்றார் கருணன். “இவர்களே காவல் நோக்குவர். இவர்களில் விழைவுகொண்ட சிலர் இருக்கக்கூடும் என்பதனால் நாமும் ஒரு நோக்கு கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான்.” அர்ஜுனன் “நான் இங்கிருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. நீங்கள் இளைப்பாறலாம். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமானவை” என்றான் வாகுகன் என்னும் இளவணிகன். “தாழ்வில்லை. நான் இங்கேயே இளைப்பாற முடியும்” என்றான் அர்ஜுனன்.
“நானும் உடனிருக்கிறேன்” என்றான் வாகுகன். பிறர் நீர் அருந்தவும் இளைப்பாறவும் அங்கிருந்த சிற்றில்களுக்குள் சென்றனர். குழந்தைகள் அவர்களைச் சூழ்ந்து நின்று வேடிக்கை நோக்கின. மூக்கு கூர்ந்த குழந்தைகள் செந்நிற உருளைக் கற்கள் போலிருந்தன. அவற்றின் நீலவிழிகளை நோக்கிய அர்ஜுனன் “இவர்கள் யவனரா?” என்றான். “யவனரும் இவர்களும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் இவர்களை பிங்கலர் என்பதே வழக்கு.”
அச்சிற்றூரின் மேற்கு மூலையில் இருந்த சிறிய தெய்வப்பதிட்டையை அர்ஜுனன் கண்டான். அருகே சென்று அதை நோக்கினான். நீளமான சப்பைக்கல் மேல் செந்நிறத்தில் ஒரு குத்துக்கல் நிறுத்தப்பட்டு விழிகள் வரையப்பட்டிருந்தன. அருகே பிறிதொரு விழிதிறந்த கல். “இது வருணன். துணைவி வருணையுடன்” என்றான் வாகுகன். வருணன் அணிந்திருந்த மாலையை அர்ஜுனன் குனிந்து நோக்கினான். “முதலைப் பல்லால் ஆன மாலை” என்றான் வாகுகன். “வருணை சங்குமாலை அணிந்திருக்கிறாள்.”
“இங்கு மழைபெய்வதுண்டா?” என்றான். “பெய்வதுண்டு, ஆனால் மழைக்காலம் என்று ஒன்றில்லை. மேலே பனிமலைகளில் என்ன நிகழ்கிறதென்பதே மழையை வருவிக்கிறது” என்றான் வாகுகன். “இவர்களே அதை நோக்கி சொல்வார்கள். மேலே வடமேற்குமூலையில் புகை எழுந்தால் மழை வரும் என்பார்கள்.” அர்ஜுனன் “வடமேற்கிலா?” என்றான். “ஆம், இவர்களின் மழை என்பது தென்கிழக்கில் இருந்து வந்து மலைமேல் சுழன்று இங்கே இறங்குவது” என்றான் வாகுகன்.
பிங்கலமுதியவர் ஒருவர் அருகே வந்து “வருணனின் அருள் உண்டு” என்றார். அர்ஜுனன் “எப்போது?” என்றான். “நேற்று முன்நாள் என்மேல் ஏறிவந்து அவன் தன் வருகையை சொல்லிவிட்டான். நாளையோ மறுநாளோ மழை விழும்” என்றார் அவர். “அகிபீனா இவர்களின் உணவுபோல. இவர்களின் உள்ளம் இயங்குவதே அக்களிமயக்கில்தான்” என்றான் வாகுகன்.
அர்ஜுனன் “மழைபெய்வதை உறுதியாகச் சொல்வீரா?” என்றான். “வருணன் நெறிகளுக்கு கட்டுப்பட்டவன். இங்கு வீசும் ஒவ்வொரு காற்றும் அவன் தாளத்தின்படியே” என்றார் பிங்கலமுதியவர். அர்ஜுனன் அவரை சிலகணங்கள் நோக்கியபின் “பொதிகளை தோலுறையால் நன்கு மூடுவோம்” என்றான். “இவர் அகிபீனா மயக்கில் பேசுகிறார். இப்போது மழையெழும் குறியே இல்லை” என்றான் வாகுகன். “இவ்வூரில் எவருமே நம்மை எச்சரிக்கவில்லை.”
“நாம் பொதிகளை மூடுவோம். நான் இவரை நம்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்கள் ஆணை!” என்றான் வாகுகன். அவர்கள் மெழுகுபூசப்பட்ட தோலுறையை எடுத்து பொதிகளை நன்றாக மூடி மழைநீர் புகாதபடி செருகினர். அவ்வழியாக கையில் மதுக்குடுவையுடன் சென்ற கருணன் “மழைபெய்யப்போகிறதா என்ன? அகிபீனா அருந்திவிட்டீர்களா அதற்குள்?” என்றபடி சென்றார். “மழை வரும்” என்றார் பிங்கலமுதியவர்.