சிறுகதைகள் – என் மதிப்பீடு -1

Siththanthan-2
உதயன் சித்தாந்தன்

 

எழுத்தை விமர்சனம் செய்தால் எதிரிகளாகி விடுகிறார்கள் என்று ஒருகடிதத்தில் சொன்னது வேடிக்கைக்காகத்தான். அதற்காகவெல்லாம் விமர்சனம் செய்யாமல் இருந்துவிட முடியாது. எந்த ஒரு இலக்கியவாதிக்கும் அவனுடைய படைப்பின் உள்மடிப்புகளை உண்மையிலேயே தொட்டு அறிந்த ஒரு வாசகனின் எதிர்மறை விமர்சனமும் கூட உள்ளூற இனிதாகவே இருக்கும். கடுமையான விமர்சனங்கள்கூட அப்புனைவை எழுதியவனை விட ஒருபடி மேலே நின்றிருக்கும் வாசகனால் சொல்லப்படும்போது ஒருவகை ரகசிய வரவேற்பையே பெறுகின்றன

சென்ற காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் மிகக் கடுமையான விமர்சனங்களின் ஒரு களம் இருந்தது. சுந்தர ராமசாமியின் மொட்டைமாடிக்கூட்டம் அல்லது தேவதச்சனின் நகைக்கடை அல்லது ஞானக்கூத்தனின் திருவல்லிக்கேணி கடற்கரைச் சந்திப்பு என படைப்புகளை உரசிப்பார்க்கும் மையங்கள் பல அன்று இருந்தன. அவையே பயிற்சிக்களங்களாகவும் இருந்தன. இன்று எழுதும் எழுத்தாளர்களை இந்தக் களங்களில் எவற்றிலிருந்து வந்தவர் என்பதை வைத்தே அடையாளப்படுத்தமுடியும்

நான் எழுத வந்த காலகட்டத்தில் எனது கதைகளை தேவதச்சனும் சுந்தர ராமசாமியும் மிகக் கறாராகவே அணுகியிருக்கிறார்கள். ’மௌனி எழுதிய பிறகு தமிழில் இந்தக்கதைக்கு என்ன தேவை?’ என்று என்னிடம் தேவதச்சன் கேட்டதை நான் நினைவு கூர்கிறேன். தேவதச்சனின் நகைக்கடையில் உள்ள ஒரு மரநாற்காலியை மின்சார நாற்காலியென்றே வேடிக்கையாகச் சொல்வது வழக்கம். கதையோ கவிதையோ எழுதியவர்களை அன்புடன் வரவேற்று அதில் அமரவைத்து சோடாபுட்டிக் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி ’ஆரம்பிக்கலாமா?’ என்று தேவதச்சன் தலையாட்டியபடி கேட்கும் காட்சியை நினைவு கூர்கிறேன். கண்ணீர் மல்க எழுந்து செல்லும் இளம் எழுத்தாளர் மசால் தோசை காபி வாங்கிக் கொடுத்து ஆறுதல் செய்யப்படுகிறார்.

ஆனால் கறாரான விமர்சனம் என்பது கலையின் அடிப்படைகள் சார்ந்த புரிதலில் இருந்து வெளிவரவேண்டும். அதற்குப்பின் பரந்த வாசிப்பும் உண்மையான அக்கறையும் ரசனையும் இருக்கவேண்டும். அப்படைப்பு வெளிப்படுத்தும் அனைத்து தளங்களையும் தொட்டெடுத்தபின் மேலே செல்ல விழைவதாகவும் இருக்க வேண்டும். ஒற்றை வரி நிராகரிப்புகள் வெறும் வசைகள் ஆகியவற்றால் எந்தப்பயனும் இல்லை. அவை இலக்கியவாதிகளை சோர்வுறவும் எரிச்சலூட்டவுமே செய்யும்.

ஒருவகையில் இணையம் பெரிய சமத்துவ வெளி ஒன்றை உருவாக்கியது. அங்கு மேல் கீழ் இல்லை. முன்பு குறிப்பிட்ட சபைகளில் சுந்தர ராமசாமியோ தேவதச்சனோ ஞானக்கூத்தனோ அவர்களுக்குரிய பீடம் ஒன்றில் அமர்ந்துதான் அந்தக் கருத்துக்களைச் சொன்னார்கள். அதற்கான படைப்பு பின்புலமும் இலக்கிய வரலாற்று இடமும் அவர்களுக்கு இருந்தது. சமத்துவம் என்ற பெயரில் இந்த இடங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு நேற்று வாசிக்க வந்த ஒருவன் கருத்துக்கு நிகராகவே ஒரு தலைமுறையை வடிவமைத்த இலக்கிய விமர்சகனின் கருத்தும் கொள்ளப்படும்போதுதான் விமர்சனம் உண்மையில் அழிந்து போயிற்று.

முதலில் இந்த சமத்துவ வெளி எவரும் பேசலாம். எதையும் பேசலாம் என்ற அளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் சாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அந்தச் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு அதுவரைக்குமான மேல் கீழ் அடுக்குமுறையால் கட்டுப்படுத்தப்பட்ட புதிய குரல்களோ புதிய கருத்துக்களோ எழுந்து வரவும் இல்லை. மாறாக பொறுப்பற்ற ஒற்றை வரிகளும் வசைகளுமே வந்தன. அக்கறையற்ற வாசிப்பே அமைந்தது

ஆகவே மெல்ல மெல்ல இணைய வெளியின் மொத்தக் கருத்துக்களையுமே எழுத்தாளர்கள் புறந்தள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைக் கவனிக்காமல் ஆனபோது அவையும் மெல்ல இல்லாமல் ஆயின. எழுத்தாளர்கள் கவனிப்பது அவர்களுடைய முகநூல் நட்பு வட்டத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களைத்தான் என்றாயிற்று. இச்சூழலில் நேற்று வெறும் ஆயிரம் பேர் வாசித்துக் கொண்டிருந்த சிற்றிதழ்களில் எழுதிய எழுத்தாளனுக்கு இருந்த எதிர்வினையும் விவாத வாய்ப்புகளும் இணையத்தில் இன்று எழுதும் எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

அதனால்தான் இணையத்தில் பத்து வருடம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் கூட எதையும் கற்றுக் கொள்ளவோ எழுத்தின் பயணத்தில் முன்னகரவோ முடியாமல் இருக்கிறது. ஐம்பது கதைகளை எழுதியபின்னரும்கூட அவர் எழுத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை.

இன்றுகூட ஒரு புனை கதையை அச்சு ஊடகம் ஒன்றுக்கு அனுப்புவது ஒரு எழுத்தாளன் அது சம்பந்தமான குறைந்தபட்ச ஒரு மதிப்பீட்டு நோக்கைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பாக இருக்கிறது. காலச்சுவடுக்கோ உயிர்மைக்கோ ஒருகதையை அனுப்பும்போது அந்தக் கதையை அங்கு வாசிப்பதற்கு எவரோ ஒருவர் இருக்கிறார் அவர் ஏற்கவோ மறுக்கவோ செய்கிறார் என்னும் ஒரு எதிர்பார்ப்பு எழுத்தாளனிடம் இருக்கிறது. அதன் வழியாக தன் எழுத்தைப்பற்றி தான் இரு புறவயமான மதிப்பை பெற முடியும் என்று அவன் நினைக்கிறான்.

இவ்விதழ்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கதையைத்தான் பிரசுரிக்க முடியும் என்ற கட்டாயம் இருப்பதனால் தான் இந்த மதிப்பீடு அங்கே இருக்கிறது. எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் பிரசுரிக்க முடியும் என்னும் வசதி இருக்கும் இணைய இதழ்களில் இப்படிப்பட்ட மதிப்பீடே இருப்பதில்லை. ஆகவே இணைய இதழ்களில் வரும் கதைகள் இன்றைய சூழலில் அனேகமாக முழுமையாகவே கவனிக்கப்படுவதில்லை.

ஆகவே இந்த சூழலுக்கு வெளியே ஒரு விவாதத்தை உருவாக்கலாம் என்பதே இக்கதைகளை சுட்டி கொடுத்ததன் நோக்கம். சிங்கப்பூர் கதைகளைப்பற்றிய விவாதத்தின்போது பலரும் தமிழில் இவ்வாறு செய்யலாம் என்று கோரினார்கள்

எனக்குப்பிடித்த கதைகளை மட்டுமே சுட்டி கொடுக்கும் வழக்கம் எனக்கு இருந்தது. ஆனால் சிறுகதைகளைப்பற்றி ஒரு பொதுவான விவாதத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே எனக்கு வந்த ஏறத்தாழ அனைத்து கதைகளையும் சுட்டி கொடுத்தேன். சாதகமும் பாதகமுமான விமர்சனங்கள் வரலாம் என்று எண்ணினேன்.

சென்ற முறை இவ்வாறு புதியவர்களின் கதைகளை விமர்சனம் செய்து எழுதிய காலகட்டத்தில் அவற்றின் மிக மென்மையான விமர்சனங்கள் செய்யப்பட்டவர்கள் கூட இரண்டு வருடங்கள் கழிந்து தாங்கள் புண்பட்டிருக்கும் தகவலை நண்பர்கள் வழியாக தெரிவித்தனர். அவர்களின் நண்பர்களும் ‘நீ ஒரு போட்டிப் பேரிலக்கியவாதியாக எழுந்து வரக்கூடாது என்று என்பதற்காக சொல்லப்பட்ட சதிகாரக் கருத்து இது’ என்று அவர்களை உசுப்பி விட்டார்கள். பலவகை கசப்புகள். ஒருவகையில் அதுவும் நன்று தாழ்வுணர்ச்சியைவிட மேட்டிமை உணர்ச்சி எழுத்தாளனுக்கு உதவக்கூடியது என்பது தான் என்னுடைய எண்ணம். அது உண்மையாக இருந்தால்போதும்.

இணைய வெளியில் பீடங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பீடங்களை நோக்கி கண்களை மூடிக்கொள்கிறார்கள். எத்துறையிலும் பீடங்கள் இருந்தே தீரும் அவற்றில் அமர்பவர்கள் சிலர் இருப்பார்கள். ஒவ்வொரு அடியிலும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டும் நெடுங்கால பயணம் வழியாகவே அவர்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். புதிய பீடங்கள் உருவாகவேண்டும் என்றும் புதியவர்கள் அங்கு அமரவேண்டுமென்றும் விரும்புகிறேன்.

*

 

senthil
ராம் செந்தில்

 

சில சிறுகதைகள் 1 ராம் செந்தில் எழுதிய மடத்து வீடு, உதயன் சித்தாந்தன் எழுதிய புத்தரின் கண்ணீர்.

ராம் செந்திலின் கதை சிறப்பு இயல்பென்பது வெறுமே நடத்தைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் உள்ளம் வெளிப்படும் தருணங்களை அவரால் சொல்ல முடிகிறது என்பது தான். தொடர்ந்து எழுதுவாரென்றால் ஒரு எழுத்தாளராக அவருடைய திறன் வெளிப்படும் புள்ளியும் இதுவாக இருக்கும். மனிதர்கள் எத்தனை நுட்பமாக சீட்டாடுபவர் ஒரு சீட்டை எடுத்து வைக்கும் பெரும் திட்டத்துடன் சொற்களை முன்வைக்கிறார்கள், அவற்றை எதிர்கொள்பவர்கள் என்னென்ன பாவனைகள் வழியாக அவற்றை பெற்றுக் கொள்ளவோ கடந்து செல்லவோ செய்கிறார்கள் என்பதை இக்கதையினூடாக பார்க்க முடிகிறது.

இளம் பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு இல்லத்திற்கு செல்லும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நடந்து கொள்ளும் நுட்பமான வேறுபாடு இக்கதையில் உள்ளது. பாலியல் புழக்கங்களில் மானசீகமாக நமது சமூகம் வகுத்த ஓர் எல்லைக்கோடு உள்ளது. ஆண் இவ்வளவுதான் செல்லலாம். பெண் இவ்வளவுதான் வரலாம் என்று. அந்த எல்லைக்கோட்டை முட்டிக் கொண்டிருப்பதில் உள்ளம் ஒரு ரகசியக் கிளுகிளுப்பை அடைகிறது. அதைக் கடந்து சென்று ஓரிரு சொற்றொடர்களைப் போட்டு விட்டு மீண்டு வந்து ஒளிந்து நின்று அச்சொற்றொடர் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதில் இருக்கும் கிளர்ச்சி இக்கதையில் இருப்பதனாலேயே இது ஒரு வாசிக்கத்தக்க கதை என்று நான் நினைக்கிறேன்.

வண்ணதாசனின் பல கதைகளில் இதன் வெவ்வேறு முகங்கள் பதிவாகியிருக்கின்றன. ஒரு உரையாடல் அந்த உரையாடலின் பொருட்டன்றி அந்த உரையாடலால் மறைக்கப்பட்ட உணர்வுகளின் பொருட்டு நிகழ்வதை இக்கதையில் காணமுடிகிறது. பெண்கள் மட்டும் இருக்கும் இல்லத்திற்குள் சென்றதே அந்தப்பையன்களை நிலையிழக்கச்செய்கிறது. அவர்கள் வழக்கமாக நடந்து கொள்ளும் முறையல்ல அங்கு நடந்து கொள்வது. அந்தப்பெண்கள் அவற்றைப்பெற்றுக் கொண்டு மெல்ல ஊக்கப்படுத்தி ஆனால் தவிர்த்துச் செல்லும் நுட்பம் அங்கு வரும் அத்தனை பேரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள், தொடர்ந்து அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனநிலை அது என்பதைக்காட்டுகிறது.

ஒரு சிற்றூரில் தையலோ பிற தொழில்களோ செய்து தங்கள் உழைப்பில் வாழும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய இக்கட்டு இது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் மாயக்காம உறுப்புகளை மாட்டிக் கொண்டு ஓயாது உரசிக் கொண்டிருக்கும் ஜென்மங்களை எதிர்கொள்வது. ஒரு மேல்மட்டத்தில் இதை எதிர் கொள்வதற்கான பயிற்சியை அவர்கள் அடைந்து மிகத் திறமையாக அதை கையாளவும் செய்கிறார்கள். ஆனால் உள்ளூர அவர்களின் பெண்மை எந்த அளவுக்கு சீண்டப்பட்டிருக்கிறது என்பது அவர்களின் தந்தையிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தெரிகிறது.

ஒரு விரிந்த கோணத்தில் உடல் தளர்ந்து கை தளர்ந்து உளம் தளர்ந்த ஒரு முதியவர் மனிதர்களை, பெண்களைப் பார்க்க விரும்புவதில் பிழை ஒன்றும் இல்லை. ஒரு வேளை அது அவரை வாழ்க்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் கொள்ளக்கூட செய்யலாம். திருமணமாகி குழந்தைகளுடன் இயல்பான இல்லற வாழ்க்கையில் இருக்கும் பெண் ஒருவேளை சற்று உற்சாகமாகக்கூட அதை புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் இப்பெண்கள் எதிர்வினை ஆற்றுவதில் இருக்கும் மூர்க்கம் அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஆண் என்னும் அடையாளத்திற்கெதிரானதாக இருக்கிறது. அது உடனடியாக அவ்விளைஞர்களுக்கு புரியவும் செய்கிறது.

இந்த ஒரு தருணத்தை சென்று தொட்டிருப்பதனால் குறிப்பிடத்தக்க சிறுகதை என்று இதை சொல்ல முடியும் சிறுகதையின் அமைப்பிலும் இயல்பான ஒரு தருணம் வழியாக உச்சம் ஒன்று வெளிப்படும் திருப்பம் அமைந்திருக்கிறது.

ஆனால் இச்சிறுகதையின் வடிவ சிதைவுகள் இதை வாசகர்கள் முறையாக வாசிப்பதை தடை செய்யக்கூடும். ஒன்று மடத்துவீடு என்ற தலைப்பும் கதையின் தொடக்கத்தில் வரும் மடத்துவீடு பற்றிய விரிவான வர்ணனையும். இக்கதை உருவாக்கும் உலகத்திற்கும் அது சென்று முடியும் உளவியல் புள்ளிக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைக்குள் எவ்வகையிலும் அது ஒரு குறியீடாக ஆகவில்லை.

மடத்து வீடு அத்தனை தூரம் கதையில் சொல்லப்பட வேண்டுமென்றால் கதையின் உச்சம் அந்த மடத்துவீடு சார்ந்ததாகவே இருந்தாக வேண்டும். வெறும் ஒரு வரலாற்று பின்னணிக்காகவோ கதையைத் தொடங்குவதற்காகவோ அவ்வளவு நீண்ட விவரணையை அளிப்பது வாசகனை சோர்வுறச்செய்யும்.

இக்கதையின் மையம் என்பது அப்பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதும் அவர்களின் உள் ஆழம் கொள்ளும் நேர் எதிர் திசையிலான நகர்வும் தான். அந்த பெண்களிடமிருந்தே கதையைத் தொடங்கியிருக்க வேண்டும் அவர்களைப்பார்க்கும் இளைஞர்களிடம் இருந்து கதை வளர்ந்து அவர்களுக்குள்ளாகவே முடிந்திருக்கவேண்டும். பிற அனைத்துமே குறைந்த பட்ச குறிப்புகளாகக் கதைக்குள் வந்திருந்தால் போதுமானது.

சிறுகதை என்பது கூர் தீட்டப்பட்ட வடிவம் எழுதப்பட்டுவிட்டதனாலேயே எத்தனை நுணுக்கமான விஷயமாக இருந்தாலும் சிறுகதைக்குள் அது இருந்தாக வேண்டுமென்பதில்லை. தன் கதையை தானே வெட்டிக் கூர்திருத்திக் கொள்ளும் வழக்கமே நல்ல சிறுகதையை உருவாக்குகிறது.

புத்தரின் கண்ணீர் மூன்று வகையில் எதிர்மறையாக என்னில் விளைவுகளை உருவாக்கியது. ஒன்று புத்தரின் கண்ணீர் என்னும் தலைப்பு. புத்தரின் சிரிப்பு என்று ஒரு போர் நடவடிக்கை சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்வினையாகத்தான் இத்தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புகள் கதைகளாகவும் சினிமாக்களாகவும் வந்துவிட்டன. ஒரு சிறுகதையின் தலைப்பு தன்னளவிலேயே ஒரு தேய்வழக்காக இருப்பது மிகவும் சோர்வுறுத்தக்கூடியது.

இரண்டாவதாக இச்சிறுகதையின் கதைக்கரு என்பது போர்க்கொடுமைகளில் ஈடுபடும் சிங்கள வீரனொருவனை அவன் குடும்பம் எப்படிப் பார்க்கும் என்ற ஒரு பொதுப்பார்வையின் அடிப்படையில் அமைந்துள்ளது அவன் குடும்பத்தால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றோ அவன் வீட்டுக்குள் பெண்கள் அவனை கற்பழிப்பவனாகத்தான் பார்ப்பார்கள் என்றோ உடனடியாகத் தோன்றும். இதுவே பொது வழிப்பார்வை எனப்படுவது

உண்மையில் அப்படித்தானா? குற்றவியல் வழக்கறிஞர்களான நண்பர் செந்தில், கிருஷ்ணன், செல்வராணி மூவருமே ஒன்றைச் சொன்னார்கள். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் கற்பழித்துக் கைதான கணவனுக்காக வழக்கறிஞரை அமர்த்துவதும், அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பதும் அவனுடைய மனைவியாகவோ தாயாகவோ தான் இருக்கிறார்கள்.

மனித இயல்பு நம்மவர் பிறர் என்று பிரியும்போது அதற்கு அடிப்படையில் அறம் சாதகமாக இருப்பதில்லை. ஒரு சிங்களப்பெண்ணை கற்பழித்த சிங்கள இளைஞனை கொடுமையாளனாக பார்க்கும் அதே சிங்கள மனம் தமிழ்ப் பெண்ணை போரில் கற்பழித்த சிங்களனை வீரனாகப் பார்க்கவும் கூடும். சட்டம் இல்லாத, சமூகக்கட்டுப்பாடு இல்லாத தருணங்களில் மனித மனம் கொள்ளும் கட்டின்மையையும், திரிபையும் அது செல்லும் இருட்டின் உச்சத்தையும்தான் கலைமனம் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதற்கு அந்த சிங்கள சிப்பாயாக தான் மாறி நின்று நோக்குவது ஒரு வழி

உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது? கலாச்சாரம் பண்பாடு போன்றவை அளிக்கும் பலவகையான தடைகளை கடந்து வெறும் மிருகமாக,மனிதனாக நிற்பதின் களியாட்டு அவனை ஆட்கொள்கிறது. சிங்கள ராணுவமாயினும் இந்திய ராணுவமாயினும் விடுதலைப்புலிகளின் ராணுவமாயினும் தமிழகக் காவல் துறையாயினும் சீருடை அணிந்த படைகள் அனைத்தும் ஒரே மனநிலையைத்தான் கொண்டுள்ளன. சட்டபூர்வமாக குற்றங்களை அவர்களால் செய்ய முடியும். அந்த வாய்ப்பு வரும்போது குற்றங்கள் செய்வதின் ஆதி மிருக உவகையில் அவர்கள் ஈடுபடுகிறார்களே ஒழிய நம்மவர் பிறர் என்று பார்ப்பதில்லை.

வாச்சாத்தியில் கற்பழித்த காவலர்கள் அவர்கள் குடும்பத்தாரால் புறந்தள்ளப்படவில்லை. தர்மபுரியில் கல்பனா சுமதி என்னும் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட்ட போது அவர்களைச் சூழ்ந்து நின்று அவர்களின் பெண்குழந்தைகளும் மனைவியரும் அன்னையரும் கதறி அழுத காட்சியை ஒளிப்பதிவில் நாம் பார்த்தோம்.

அந்த அசாதாரண எதிர்வினைகளை நோக்கித்தான் கலைஞனின் கவனம் செல்லுமே ஒழிய ஒரு பொத்தாம் பொதுவான பார்வையை வைப்பதல்ல அவன் இயல்பு. அந்தப் பொதுப்பார்வை வாசகனை சோர்வுறச்செய்கிறது. ஏனென்றால் அவன் அதை ஏற்கனவே அறிவான். அவன் எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பாதையில் கலைஞனும் சென்று ஒரு சாதாரணமான முடிவை முன்வைக்கும்போது தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அவன் உணர்கிறான்.

மானுடனின் மிருக இயல்புக்கு அப்பால் சென்று தான் பிறர் என்னும் பேதத்தைக் கடந்து அறத்தை நோக்கக்கூடியவர்கள் இருப்பார்களா? இருக்கலாம். இருந்தால் அது வேறு கதை. ஆனால் இக்கதை சமரசிங்காவில் தொடங்குகிறது. புத்தனுக்கு அணுக்கமானவன் என்பதில் ஒரு குறிப்பிருக்கிறது. சிங்கள இனவாதத்திற்கு மேல் எழுந்து நிற்கும் ஒரு புத்தரை அவன் கண்டுவிட்டான் என்றால் அது கதைக்குள் வந்திருக்க வேண்டும். கதை அவனுடையதாக இருக்கவேண்டும். அவனில் அறத்தின் உச்சம் நிகழ்ந்திருக்கவேண்டும்.

ஆனால் சமரசிங்காவிலிருந்து அவனுடைய மகனுக்கு கதை செல்கிறது. அதன் பிறகு மீண்டும் அவனுடைய மகள்களுக்கு வருகிறது. அவனுடைய மனைவிக்கு வருகிறது. ஒரு பொதுவான உண்மையை ஒரு சூழலில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும்படியாக முன்வைக்கிறது இந்தக்கதை. கதையை மிக நேரடியானதாக ஆக்குவது அந்தப்பையன் கற்பழித்த புகைப்படங்களை அனைவரும் பார்ப்பதுதான். அவன் அந்த ராணுவத்தின் செயல்களுக்கான கூட்டுப்பொறுப்பாளி என அம்மக்கள் நினைத்திருந்தால் கதையின் வீரியம் மேலும் கூடியிருக்காதா?

சமரசிங்காவின் மகனுக்குமான கதையாக அமைந்திருக்கலாம். அல்லது சமரசிங்காவிலிருந்து கற்பழிப்பாளனாக மாறி விலகிச்சென்ற அவன் மைந்தனின் கதையாக இருந்திருக்கலாம். அது அவனுக்கும் அவன் மைந்தனுக்கும் இடையே இருக்கும் அவன் பெண்களின் கதையாக இருந்திருக்கலாம். எப்படியும் அந்தக்குவி மையம் முக்கியமானது. அது சிதறிவிட்டிருக்கிறது

ஒருவேளை இக்கதை சொல்வது ஓர் அன்றாட உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அப்படியென்றாலும் கூட அனைவரும் அறிந்த பொது உண்மை அது. சாமான்ய மனம் செல்லும் பொதுவழிப்பாதை. அதுவல்ல நவின இலக்கியத்திற்கான வழி. நவீன இலக்கியம் ஒருவகை சீண்டலை ஆதாரமாகக்கொண்டது. வாசகனை அமைதியிழக்கவைப்பது. அதில் மீறல் ஒரு அவசியத்தேவை.

மூன்றாவதாக இக்கதை சிங்கள வாழ்க்கைக்குள் செல்லும்போது எந்தவிதமான நுண் தகவல்களையும் முன்வைக்காமல் சிங்கள வாழ்க்கையைப்பற்றிய ஒரு தமிழனின் பொதுப்புரிதலை சித்தரிப்பதாகவே அமைந்துள்ளது. அவர்கள் இல்லம் எப்படி இருக்கும், அவர்கள் உறவுகள் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் சமையல் என்ன அவர்களின் கூடம் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் உறவுகள் எந்த வகையானவை? அனைத்தையும் கதைக்குள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இயல்பாக வந்திருக்கவேண்டும்

ஒரு திரைப்பட இயக்குநர் தான் இயக்கும் திரைச்சூழலைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் காட்சியில் அவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக வரும் சிறு தகவல் வழியாக அவருக்கு முழுமையாகத் தெரியும் என்ற நம்பிக்கையை ரசிகனிடம் அவர் முன் வைக்க முடியும் என்பார்கள். ஒரு சிங்கள வாழ்க்கைச் சூழல் இயல்பாகவே சரியாக வந்திருந்தால் மிகக்குறைவான தகவல்களுடனேயே வாசகர்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியிருக்க முடியும்.

இம்மூன்று காரணங்களினால் இக்கதை மிகவும் குறைப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கப்பால் சென்று கதையில் சிறப்பென கொள்ளக்கூடியது ஒன்றே. சிங்கள -தமிழ் இனவாதம் மிகபெரிய முரண்பாடாக வளர்ந்து அதை உண்டு மிக எளிய வெறுப்பை திருப்பிக் கக்கும் எழுத்தாளர்கள் மலிந்துள்ள ஒரு சூழலில் அதைத் தாண்டி சென்று ஒரு மனிதத்தை தேடும் பார்வை இக்கதையில் உள்ளது.

இலங்கை எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அரசியல் சூழலுக்கப்பால் சென்று ஒரு துளியேனும் மானுட உண்மையைப்பார்க்கும் எழுத்தாளர்கள் அங்கு பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான். அரசியல் பிரச்சாரத்தை மீண்டும் செய்ய எழுத்தாளன் எதற்கு? இலங்கை இனப்பிரிவினைப்போராட்டத்தின்போது உச்சகட்ட வெறுப்பு அறப்பூச்சுடன் அங்கே முன்வைக்கப்பட்டு பிரச்சார எழுத்துக்கள் குபிந்தன. இன்று மீண்டும் ஒரு பிரச்சார அலைதான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது.

அந்த பொதுச்சூழலில் இருக்கும் வைரஸைக் கடந்து சென்று ஒரு உண்மையை தொட முயன்றதற்காக இக்கதை குறிப்பிடத்தகுந்தது என்று நினைக்கிறேன்.

=================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

 

முந்தைய கட்டுரைகெய்ஷா -கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைகலந்துரையாடல் – மார்க் லின்லே