கெய்ஷா -கடிதங்கள் -4

17

அன்புள்ள ஜெயமோகன்

கதையை படித்தவுடன் தங்களின் ‘எத்தனை பாவனைகள்!’ (http://www.jeyamohan.in/90572#.WCf_aC197IU) பதிவும் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டுமே ஒன்றுதான். ஒரு சேவை தொழிலாளி போல, சாதாரணமாக வந்து அமரும் கெய்ஷாவை தான் அறிவாளி என்னும் அகங்காரத்துடன் அணுகும் ஆணின் பார்வையில் தொடங்குகிறது. எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள் என அவள் அவனுடைய அகங்காரத்தை திருப்தி செய்கிறாள்.

ஆனால் ஒரு மாயகணத்தில் எல்லாம் புரண்டு விடுகிறது. அவன் எதிர்பார்க்கும் குற்றவுணர்ச்சியையும் தன்னிரக்கமும் கண்டு கொள்கிறாள். அவனுள்ளும் அது அந்த அறிவு பாவனைக்குள் தளும்பிகொண்டுள்ளதா.

கதையை படிக்கும்போது ஒரு இந்திய ஆணின் மனவமைப்பை, பெண்ணின் மீது எப்போதும் ஆதிக்கும் கொள்ளும் அகங்காரத்தை காட்டுகிறது என்று நினைத்தேன். ஆனால், எங்கோ உலகின் மற்ற மூலையிலிருந்து மற்ற கலாச்சாரத்திலிருந்து வரும் ஒரு ஆணை, அவ்வளவு சுலபமாக அவள் மதிப்பிடுகிறாள் என்றால், ஆண்களின் வகைமாதிரிகள் சிலவேதானா.

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் படித்தேன். 2000ல் விஷ்ணுபுரம் படித்தபின் நான் தங்களை பற்றிகொண்டேன். அப்பொது இருந்த மிகபெரிய மன உளைச்சலின் மிக பெரிய வெற்றிடத்தை நிரப்ப. அன்றிலிருந்து ஒருநாளும் தங்களின் எழுத்து இல்லாமல், தங்களை பற்றி பேசாமல் நாள் சென்றதில்லை. ஆம் நானும் வயதடைவதில்லை, உங்களின் எழுத்தை தொற்றி கொண்டபின்.

அன்புடன்
ஆனந்தன்
பூனா

***

அன்புள்ள ஜெ

கெய்ஷா கதையை மிகவும் பிந்தித்தான் வாசித்தேன். வெண்முரசு மனநிலையிலேயே இருப்பதனால் வேறு கதைகளை வாசிக்க ஒரு மனத்தடை எப்போதும் என்னிடம் இருந்தது. அத்துடன் கெய்ஷா என்றபேரும் ஈர்ப்பாக இருக்கவில்லை

ஆனால் கதையை வாசிக்கவைத்தது ஒரு வாசகி எழுதிய வசைக்கடிதம். உடனே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். நேரடியான கதை. நேரடியான சித்தரிப்பு. வெண்முரசுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஸீரோ நெரேஷன் பாணி. வர்ணனைகள் விவரணைகள் மன ஓட்டம் ஒன்றும் இல்லை

கதைமுடிந்ததும்தான் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஒருவன் தனக்கு சமானமான அறிவுள்ள ஒரு பெண்ணைக் கண்டுகொண்டதும் என்ன செய்வான் என்பதுதான் கதை. தன் மூளையை பலவகையில் அவள் மேல் உரசிப்பார்ப்பான். அவள் அவனைக் கண்டுபிடிக்கவேண்டும் என நினைப்பான். கண்டுபிடித்ததும் உருகி  அனைத்தையும் அவனே அள்ளி அள்ளி முன்வைப்பான்

அவனுடைய ஆண் எனும் அகங்காரத்தை அவள் கண்டுகொள்கிறாள். மோசமான மணவாழ்க்கை. ஆகவே நல்ல பாலுறவே இல்லை. அவனை ஆணாக ஒருத்தி பார்க்கிறாள், பாலுறவில் லயித்து அவனுடன் இருக்கிறாள் என்பதே அவனை அவனுக்குக் காட்டிவிடுகிறது

அவள் அந்த ஆழ்மன விருப்பத்தை ஒரு நுணுக்கமான நாடகம் வழியாகக் கண்டுபிடிக்கிறாள். கவபத்தாவின் கதையை அவள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறாள் என்பது ஒருபக்கம். ஆனால் அவன் ஏன் அதை அங்கே நினைவுகூர்கிறான் என்பது மேலும் முக்கியம். அந்த க்ளூ வழியாக அவள் அவனைக் கண்டுபிடித்துவிட்டாள்

அவள் அவனை ஜெயித்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவன் இனி அவளைப்போன்ற ஒரு பெண்ணுக்காகத் தேடிக்கொண்டே இருப்பான் இல்லையா?

எஸ்.ஆர்.ரவி
கெய்ஷா கதை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34
அடுத்த கட்டுரைசலபதியின் ஆங்கிலம்