இந்த இணையதளத்தின் வாசகர்கள்…

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளம் இப்போது பலராலும் வாசிக்கப் படுகிறது.தமிழின் முக்கியமான இணையதளங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால் இந்த வளர்ச்சி உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்களா? உருப்படியான ஒரு விஷயமும் இல்லாமல் வெறும் சவடாலும் சினிமாவுமாக வெளிவரும் சாரு நிவேதிதாவின் இணையதளம் அலெக்ஸா ரேட்டிங்கில் உங்ளைவிட அதிகமாக இருக்கிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த எண்ணிக்கையை கூட்ட என்ன செய்யபோகிறீர்கள்?

சிவராம் கருணாகரன்

அன்புள்ள சிவராம்,

இந்த இணையதளம் கவனிக்கப்பட்டது விகடன் உருவாக்கிய அக்கப்போரின்போது. அன்றெல்லாம் தினம் முப்பதாயிரம்பேர் இதற்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்போதே ஒரு விஷயத்தை நான் முடிவுசெய்தேன். இதன் இயல்பு இன்னதுதான் என தெரிவித்தாகவேண்டும் என்றும் தொடர்பற்றவர்கள் உள்ளே வருவதை தடுக்கவேண்டும் என்றும். ஆகவே அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தினமும் தரமான கட்டுரைகளையே வெளியிட்டேன். செறிவான மொழியில் எழுதப்பட்டவை. வந்தவர்களில் அவற்றில் ஆர்வமுடையவர்கள் மட்டும் எஞ்சினார்கள் – கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கினர். அவர்களே என் வாசகர்கள். அவர்களே என் இலக்கு.

இந்த இணையதளத்தின் பேசுபொருட்கள் என சில உள்ளன. தத்துவம்,வரலாறு, இலக்கியம்,சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் புனைகதைகள். அவற்றில் ஆர்வம் உடைவர்கள் மட்டுமே இதை வாசிக்க முடியும். அந்த ஆர்வம் இல்லாதவாசகர்கள் உள்ளே வருவது பெரிய சுமை. அவர்களை தவிர்ப்பதே முக்கியமானது. இந்த தவிர்ப்பு உத்தி உலகமெங்கும் எல்லா அறிவுசெயல்பாட்டுத்தளங்களிலும் இருப்பதைக் காணலாம். மேனாடுகளில் பல நூல்களின் அட்டை வடிவமைப்பேகூட சம்பந்தமில்லாதவர்களை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும்

அவ்வாறு கடுமையாகத் தவிர்த்தபின்னரும்கூட தினம் இத்தனைபேர் வாசிப்பதென்பதை தமிழில் நிகழும் அற்புதங்களில் ஒன்று என்றே நினைக்கிறேன். இதன் மூன்றில் ஒரு பங்கு வாசகர்கள் ஆர் எஸ் எஸ் ஓடை வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் வாசிக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தமாக எண்ணிக்கை தமிழுக்கு சற்று பெரியதே. தமிழில் இது சமீபகாலம்வரை எதிர்பார்க்கக்கூடியதாக இருந்ததில்லை.

ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள். சிற்றிதழ்சார் அறிவுலகின் அறிமுகமே இல்லாமல் இந்த நடைக்குள் சட்டென்று நுழைவது கடினம். தினமும் இதில் பதிவேற்றங்கள் வந்து தினம்தோறும் வாசிக்கமுடிவதனால்தான் அவர்கள் என் எழுத்துக்கு பழகினார்கள். மாதவெளியீடுகளான சிற்றிதழ்களில் பல வருடம் எழுதினால்கூட இந்த விளைவை உருவாக்க இயலாது. ஆகவே இந்த இணையதளத்தின் பயனை நான் அடைந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.

என்னுடைய நடை தமிழின் சிற்றிதழ்சார் அறிவுத்தளத்தில் உருவாகி வந்த நடையின் வளர்ச்சி வடிவம். இதற்கென தனிக் கலைச்சொற்கள் உள்ளன. சிறப்பான சொற்றொடரமைப்பு உள்ளது. தமிழில் தொடர்ந்த அறிவார்ந்த விவாதங்கள் மூலம் உருவாகியிருக்கும் இந்த நடைக்கு ஐம்பதாண்டுக்கால மரபுண்டு. செறிவாகவும் கச்சிதமாகவும் சொல்லுவது இதன் இலக்கு. வாசிப்பார்வத்தை மேம்படுத்துவது அல்ல. மேனாட்டுமொழிகளில் எண்ணூறுகளிலேயே உருவாகி விட்ட இந்த அறிவுத்தள மொழி நமக்கு சிலபத்தாண்டுகளாகவே உருவாகியிருக்கிறது.

இந்த மொழியை சிற்றிதழ்களுக்குள் மட்டும் கையாண்டுகொண்டிருந்தபோது இதன் தொடர்புறுத்தும்தன்மையில் பல சிக்கல்கள் இருந்தன. இதன் வளர்ச்சி தேக்கமுற்றிருந்தது. ஏனென்றால் இந்தமொழியை தாங்களும் கையாள்பவர்களே இதை வாசித்தார்கள். ஆனால் இணையத்தில் இது இடம்பெற ஆரம்பித்தபோது இது நேரடியாக வாசகர்களிடம் உரையாட ஆரம்பித்தது. எதிர்வினைகளைப் பெற ஆரம்பித்தது. ஆகவே இதன் தொடர்புறுத்தும்தன்மை மேம்பட்டது, மேலும் மேலும் தெளிவு கைகூடியது. இதை என் நடையில் நானே உணர்கிறேன்.

மேலும் சிற்றிதழ்ச்சூழல் ஒரு சிறிய அந்தரங்க வட்டத்துக்குள் இருந்தது. இணையத்தில் வேறுபல அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்களும் இதனுடன் உரையாட ஆரம்பித்தனர். அது மிகச்சாதகமான விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்பட்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன.

இவையெல்லாம் இணையதளம் அளித்த வசதிகள். இந்த இணையதளத்தை என் கட்டுப்பாட்டில் நானே நடத்தும் வரை இந்த இயல்கைகள் எனக்கு தென்படவில்லை. அதற்கு முன்னர் இணையதளங்களில் கட்டுரைகள் எழுதியபோது அந்த இணைய இதழ்களில் கட்டற்ற தன்மை காரணமாக அவை உடனடியாக சில கசப்புற்ற பொறுப்பற்ற எதிர்வினையாளர்களால் வெற்றுச்சண்டைகளாக மாற்றப்பட்டன. ஒரு நல்ல கட்டுரைக்கு ஒன்பது வசைகள் என்ற நிலை உருவாகியது.

அந்த வசைகளுக்கு பதில் சொன்னபோது அந்த ஒட்டுமொத்த விவாதமே வாசகர்களிடமிருந்து மறைவுண்டது. வசைகளை பொருட்படுத்தாதபோது அவை மறுக்கப்படாத தரப்புகளாக எஞ்சின. அவ்வசைகளுக்கு வாசகர்களை இழுக்கும் கொடியடையாளங்களாக நம் எழுத்துக்கள் அமைந்தன. இந்த இணையதளம்மூலம் அந்த இயல்புகள் களையப்பட்டன. இந்த இணையதளத்தின் தொடர்ச்சித்தன்மை வாசகர்களிடம் என் எழுத்தையும் சிற்றிதழ் சார்ந்த தமிழ் அறிவியக்கத்தையும் சீராக அறிமுகம் செய்கிறது.

ஆகவே இவ்விணையதளத்தின் வெற்றியைப்பற்றி எனக்கு பெருமிதமும் வியப்புமே உள்ளது. இதன் இயல்புக்கு மாறான வாசகர்கள் இதற்குள் வரவேண்டாமென்றே விரும்புகிறேன். சாரு நிவேதிதாவின் இணையதளம் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் அவரது இணையதளத்தைவிட ஜாக்கி சேகர் என்பவரது இணையதளம் அலெக்ஸா மதிப்பீட்டில் உயர் இடத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். தமிழ் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சினிமா மற்றும் வம்புகளிலேயே ஆர்வம் இருக்கிறது. அவற்றை மட்டுமே அவர்கள் விரும்பி வாசிக்கிறார்கள்.

என்ன காரணம்? எந்த விதமான அறிவுப்பயிற்சியும் பண்பாட்டுப்பயிற்சியும் இல்லாதது நம் கல்வியமைப்பு. நம் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரைத்தான் சற்றேனும் சுதந்திரமாக வாசிக்கிறார்கள். அதிகபட்சம் வாரமலர் இணைப்புகள், குமுதம், விகடன். சென்னைபோன்ற நகர்களில் சில ஆங்கில காமிக் நூல்களும். அத்துடன் இக்காலகட்ட வாசிப்பு முடிகிறது.மிகமிகச்சிலரே மேலே சென்று ஏதேனும் வாசிக்கிறார்கள் இப்பருவத்தில். ஒன்பதாம் வகுப்புக்குப் பின்னர் பள்ளிப்பாடப் படிப்பு தவிர எதையுமே கவனிக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அப்படியே கல்லூரிப்படிப்பு. உடனே வேலை. அதன்பின் இம்மாதிரி பொதுவெளிக்கு வருபவர்களின் அறிவுநிலை என்பது அவர்கள் கற்ற தொழில்கல்விக்கு வெளியே அதே எட்டாம் வகுப்புத்தரம்தான். அவர்களேகூட சிறுபான்மையினர்தான். இவ்வாறு வருபவர்களுக்கு ஒரு நூலை வாசித்து புரிந்துகொள்ளும் பயிற்சி இல்லை. அவர்களுக்கு ஒர் அடிப்படை அறிவியக்கத்துக்கு தேவையான அளவுக்கு வரலாறோ மதமோ அரசியலோ மொழியோ தெரிந்திருப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் தொடக்கம் இருக்கிறதென்றால் வணிகசினிமாவில் மட்டுமே. அவர்களின் ஆர்வம் அங்கே மட்டும் குவிகிறது. அவர்களின் சராசரித்தரத்துக்கான இதழ்களும் இணையதளங்களும் அவர்களைக் கவர்கின்றன.

இந்த தரத்தையே நாம் இணையதள எழுத்துக்களில் காண்கிறோம். மிகமிகச்சில இணையதளங்களில் மட்டுமே குறைந்தபட்ச முதிர்ச்சி காணப்படுகிறது. பெரும்பாலும் அக்கப்போர்கள், சண்டைகள், வம்புகள், வசைகள். இந்த சில்லறைச் சண்டைக்கு ஒரு நிறம் கொடுப்பதற்காக ஏதேனும் தீவிர அரசியல் நிலைபாடு என்னும் பாவனை. ஏதாவது எழுதினால்கூட சில்லறைத்தனமான அரட்டை நடைக்கு அப்பால் செல்ல முடிவதில்லை. இத்தனை இணையதளங்கள் இருந்தும் புத்தகங்களைப்பற்றி ஏதாவது எழுதப்படும் பதிவுகள் சில பத்துகள் மட்டுமே என்பது பீதியூட்டும் உண்மை.

இந்த இணைய தளத்தில் தரமான இலக்கிய இணையதளங்களான அழியாச்சுடர்கள், சிலிக்கான் ஷெல்ஃப், நாஞ்சில்நாடன் தளம், அ.முத்துலிங்கம் தளம் போன்றவற்றுக்கு மீளமீள இணைப்பளித்துவருகிறேன். ஆனாலும் அங்கே சென்று வாசிப்பவர்கள் சிலரே. அப்படி இருந்தும்கூட இத்தனைபேர் வந்து என் இணையதளத்தை வாசிப்பது இது இலக்கியத்துடன் வரலாறு தத்துவம் மதம் என்று விரிவதனாலும் என்னுடைய பெயருக்கிருக்கும் மெல்லிய பிரபலத்தாலும் மட்டுமே.

ஒரு கட்டத்தில் இந்த இணையப்பதிவை நிறுத்த வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஓர் அறிமுகதளம் மட்டுமே. இதற்கு இயல்பாகவே ஓர் எல்லை உள்ளது. இதற்கான தேவை முடிவடையும்போது இது வெறும் சம்பிரதாயமாக ஆகக்கூடும். எழுதவேண்டியவற்றை முழுக்க எழுதியபின் இதில் இருந்து விலகியாகவேண்டும்.

ஜெ

விகடன் பற்றி இறுதியாக….

ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்

விகடனை எண்ணும்போது…

அச்சு ஊடகங்கள், கடிதம்

ஆனந்தவிகடனின் அவதூறு

சிலகேள்விகள்

மைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்


வாசகனும் எழுத்தாளனும்


அந்த பார்வையாளர்கள்

முந்தைய கட்டுரைதீபாவளி
அடுத்த கட்டுரைசுஜாதாவுக்குப் பிடித்தவை