கன்யாகுமரி வாசிப்பனுபவம்

 

untitled

 

அன்புடன் ஆசிரியருக்கு

தற்போது கன்னியாகுமரி வாசித்து முடித்தவுடன் எழுதுகிறேன் கூடவே கெய்ஷா சிறுகதை குறித்து வெளியாகி இருக்கும் வாசகர் கடிதங்களையும். சில நாட்களுக்கு முன்பு அனல்காற்று வாசத்தேன். அதற்கு சில நாட்கள் கழித்து கெய்ஷா.

டால்ஸ்டாயின் எழுத்துக்களில் என்னை ஈர்க்கும் ஒரு அம்சம் மேற்சொன்ன உங்களது புனைவுகளில் உக்கிரமாக வெளிப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. பாவனைகளைக் களைந்து கொண்டே செல்லுதல். வெண்முரசு வரலாற்றின் மீதான நம்பிக்கைகளின் மீதான பாவனைகளைக் களைந்து கொண்டே செல்கிறது.

அது போலவே காமத்தின் மீதான பாவனைகளையும் உங்கள் புனைவுகள் களைந்து செல்கின்றன. இன்று மாலை  திருச்சியில் இருந்து திரும்பி வருகையில் கன்னியாகுமரி படிக்கத் தொடங்கினேன். அரை நாளில் வெகு தூரம் கடந்து வந்து விட்டது போன்ற உணர்வு. மனம் மொத்தமாக கலைந்து கிடக்கிறது. தன்னுணர்வின் அடியாழங்களை சோதிக்கும் விவாதங்கள். உங்களை எப்படி பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. கொற்றவையின் கண்ணகியுடன் என்னால் விமலாவை இணைத்துப் பார்க்க முடிகிறது. கொற்றவையும் அலை புரளும் கன்னியாகுமரியில் வந்து முடியும் காப்பியமே. நாவலின் பல இடங்கள் கொற்றவையை நினைவுறுத்திய வண்ணம் இருந்தன. மேலு‌ம்பளிங்கறை பிம்பங்களும் ( http://www.jeyamohan.in/26472#.WCYkAMtX7qA) நினைவில் எழுந்தது. ஒவ்வொரு பாவனையாக உரித்து உரித்து வைக்கிறான் ரவி. என்னால் இறுதிவரை விமலாவின் தெளிவையும் நிமிர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு விரிசல் துணுக்குறல் என ஏங்கிக் கொண்டு தான் இருந்தது மனம்.

ஆனால் பெண்மையை அது எதிர் கொள்ளும் உச்ச எதிர்ப்புகள் வரை கொண்டு செல்லத் துடிக்கும் ஆணின் அகங்காரத்தை நினைத்து உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு கோபமென எதுவுமே எழவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குள் நடந்து முடிந்து விடும் கதை. பெரும்பாலும் கடற்கரையும் விடுதி அறைகளுமே கதைக்களம். கடை வீதிகளிலும் அறைகளிலும் கடற்பாறையிலும் ரவியின் மனதில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகப் பின் தொடர முடிந்தது. மிக சுருக்கமான ஒரு காலத்தை எடுத்துக் கொண்டு ஒரு இந்திய மனத்தில் எழும் பண்பாட்டுச் சிக்கலை நுட்பமாக ஆராய்கிறது. ஸ்தாணுமால்யனுக்காக காத்திருக்கும் கன்னி எனும் ஐதீகத் தன்மையை தலைகீழாக பிரதிபலிக்கிறது நாவல். பிரவீணா தன்னை “கன்னி” எனச் சொல்லும் இடம் மறுக்க முடியாததாக முகத்தில் அறைகிறது. கொற்றவையிலும் கண்ணகியைப் பார்த்து “கன்னி கன்னி” எனச் சொல்லும் பறவைகள்.

ரவி ஒரு கலைஞன் என்பதே இரு நாட்களை ஒரு வாழ்வாக விரித்துப் போடுகிறது. ஒட்டு மொத்தத்தில் அவனுடைய வீழ்ச்சியின் சித்திரமாக இந்நாவல் பாவனை செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதையும் மீறி ஏதோவொன்று தீண்டப்படாத ஒன்று அவனுள் இருக்க வேண்டும் என்று தான் மனம் கற்பனை செய்கிறது. மிகக் குறுகிய கால அளவும் கூர்மையான விவாதங்களும் கொந்தளிக்கச் செய்கின்றன. மனம் தெளிவடைந்த பிறகு தான் யோசிக்க வேண்டும்.

இந்நாவலின் சிக்கல்களையும் உள்ளோட்டங்களையும் கண்டு கொள்ள எனக்கு நாட்கள் தேவைப்படலாம். ஆனால் அவை என்னுள்ளும் உள்ளன என்று மட்டும் புரிகிறது.

அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
அடுத்த கட்டுரைஇந்தியா குறித்த ஏளனம் – பதில் 2