சிறுகதைகள் கடிதங்கள் – 7

 

அன்பின் ஜெ,

முதலிலேயே சுதாரித்திருக்க வேண்டும். கிண்டலுக்குத்தான் சிறுகதைகள் சுட்டிகள் வெளியிட்டிருக்கிறீர்கள். ஆர்வத்தில் அனுப்பிவிட்டேன். எழுதும் முயற்சியில் உருவான கதைகள் தான். அரைகுறை தான் என்று எனக்கே தெரியும். நீங்கள் வாசித்து நன்றாக விளாசுவீர்கள் என்றே எதிர்பார்த்தேன். வாசிக்கவேயில்லை என்று ஒரே போடு போட்டுவிட்டீர்கள். பரவாயில்லை. அதற்காக எதிரிகள் என்றெல்லாம் ஆகிவிடவில்லை. உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் எனக்கு இதைக்கூடவா புரிந்து கொள்ள முடியாது.

காலையில் நன்றாகச் சிரித்தேன். ஜெமோவிடம் சிறுகதை அனுப்பி நன்றாக வாங்கினேன் என்று. உண்மையில் புதியவர்களின் கதைகள் அறிமுகம் செய்கிறீர்கள் என்று அதி தீவிரமாக நம்பி(!) அனுப்பிவிட்டேன்.

மலேசிய சர்ச்சை, வங்கிப்பணி போன்றவற்றில் ஏமாந்து கருத்து கூறாமல் தப்பித்து, சிறுகதையில் வந்து மாட்டிக்கொண்டேன். வழக்கம்போல கடைசியில் தான் பகடி என்று உணர்ந்தேன். ஆனால் அந்த தீவிர பாவனையை நினைத்து சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்.

நன்றி
மோனிகா.

*

அன்புள்ள மோனிகா

பகடி எல்லாம் இல்லை. கதைகளை வாசிப்பேன். என் கருத்தைச் சொல்வேன். அதற்குமுன் வாசகர்கள் சொல்லட்டும் என நினைத்தேன், அவ்வளவுதான்

நாலுபேர் சொன்னபின்னர் நான் சொன்னால் பெரிய பகை வராது என ஒரு நம்பிக்கை!

ஜெ

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருகிறேன். பல கதைகள் சாதாரணமான வார இதழ்ச் சிறுகதைகளாக உள்ளன. உங்கள் தளத்தை இவர்கள் வாசிக்கிறார்களா? வாசித்தார்கள் என்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லாத குமுத விகட நடையில் இவர்கள் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

நான் வாசித்தவரை அசங்கா வாசிக்க நன்றாக இருந்தது. ஆனால் இத்தகைய கதைகளே நிறைய எழுதப்பட்டுவிட்டன. முறைமீறிய உறவுக்கு சாட்சியாக ஆகும் குழந்தை. அதன் குறியீடாக ஒரு பொம்மை அல்லது பூனை. பூனையே பல கதைகளில் குறியீடாக வந்துவிட்டது.

ராஜாராமன்

 

 

 

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலும் சில கதைகளைப் பற்றி –

What a wonderful world

இன்றைய தினத்தில் இங்கிலாந்து பல இன மக்கள் சேர்ந்து வாழும் நாடாகத் திகழ்கிறது. இனப்பிரச்சினையை அருகில் அரிந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்; இன்னொருவர், இந்தியத் தமிழர். இடம்பெயர்ந்து, சிறுபான்மையினராக அயல் நாட்டில் வாழ்பவர்கள். பரந்த நோக்குடையவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கருப்பின மக்களைத் தாழ்மை படுத்தி (நக்கலாக இருந்தாலும்) பேசுகிறார்கள். It is so easy to do unto others what you do not want to be done unto you. இதுதான் கதைக் கூற வருவது என்றால் கதையின் தலைப்பு ஏளனம் செய்வது போல அமையும்.

ஆனால் கதையில் பேசப்படும் கால்வாய் போலக் கதை எங்கெங்கோ சுழல்கிறது. அவர்கள் பேசுவதிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் உள்ள முரண்பாடு மிக மங்கலாக உள்ளது – இன்னும் தெளிவாக்க வேண்டும். முதல் பாதியில் தேவையற்ற பல விவரணைகள். கதைக்கருவிற்கு உதவாததை நீக்கலாம் – உ. பையனைப் பற்றிய பகுதிகள். உரையாடல்களில் ஆழம் தேவை.

யாதும் காமமாகி நின்றாய்

இதைக் கதையென்று எப்படிச் சொல்ல. உணர்வுகளின் பதிவாகத்தான் இருக்கிறது. வர்ணனைகளைத் துப்பாக்கியிலிட்டு தாக்கியது போல உணர்கிறேன். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை திருத்தமாவது செய்யலாம். http://vaani.neechalkaran.com/.

இது “comment” தான், விமர்சனம் அல்ல. மன்னிக்கவும். கோபம் வருகிறது. எழுத்து இயல்பாக வருகையில் இன்னும் முயற்சிக்கலாம்.

தில்லையம்மா

நீங்கள் ஒருமுறை புனைவுகளின் உணர்வெழுச்சிகளை மெல்லுணர்வு, மிகைநாடகம், உணர்வெழுச்சி என்று மூன்று வகைகளாகப் பிரித்து எழுதியிருந்தீர்கள். தில்லையம்மா முதல் வகையைச் சேர்ந்த கதை. ஒற்றைப்படையான மனிதர்கள். கதையில் shades of grey தேவைப்படுகிறது.

இலக்கியம் இதே பிரச்சினையை வேறு கோணத்திலிருந்து, யதார்த்தத்துடன் அணுகும். உதாரணத்துக்கு இப்படி அணுகியிருக்கலாம் – பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, சுதந்திரத்தின் மீது மிகுந்த முக்கியத்துவத்தைக் குவித்திருக்கும் புதிய தலைமுறையினர், இத்தகைய எதிர்மறை நிலைப்பாடுகளால் சேர்ந்து வாழ்வதில் ஏற்படும் சிக்கல்.

ப்ரியம்வதா

***

அன்புள்ள ஜெ

யாவும் காமமாகி நின்றாய் என்னும் ஒரு கதையை வாசித்து மண்டையைப் பிய்த்துக்கொண்டேன். ஒரே பேச்சு. புலம்பல் என்று சொல்லவேண்டும். அர்த்தமில்லாத சொற்றொடர்கள். வாசகன் மேல் கருணை கொண்டு பத்தி பிரித்துப்போடுவதிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம்

மகேஷ்

 

=================================

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27
அடுத்த கட்டுரைகெய்ஷா -கடிதம்