சிறுகதைகள் – விமர்சனங்கள் 6

photo

சிறுகதைகள் வரிசையில் வந்திருக்கும் கதைகளில் சிவாகிருஷ்ணமூர்த்தி, செந்தில், கேஜேஅ, தூயன் ஆகியோரின் கதைகளை அவை வெளிவந்த சமயத்திலோ,பிறகோ படித்திருக்கிறேன்.

செந்திலண்ணனின் கதையில் வரும் நயன்தாரா இதுநம்மாளு போன்றவைகளில்  இது நம்ம ஆளை  அப்படியே வைத்து நயன்தாராவுக்குப் பதிலாக ஷோபனா ரசிகராக  மாற்றியிருந்தால் இன்னும் பொருந்தியிருக்கும் எனத் தோன்றியது.

சிவாகி அவர்களின் கதைகளில் அவர் எப்போதும் எடுக்கும் ‘மினி’ அல்லது ‘மைக்ரோ’ கும்பமுனி அவதார சாயல் இதிலும் இருந்தது. அவரது கதைகளில் சம்பத், வெகுளாமை, யாவரும் கேளிர் ஆகியவற்றிற்குப் பின் இதை வைக்கலாம். ( ஒருவேளை அதுக்கப்புறம்தான் இதைப் படிச்சேனோ)

பாம்பு வேட்டை கதையும் நாயகனின் ஏமாற்றமும்  எழுத்தில் சிறப்பானதாக இருந்தன. எலியை ராஜநாகம் தொடர்வது எலியைப் படிக்க அல்ல அது பாம்பு வேட்டை என்ற பஞ்ச் ம்..

தூயனின் தில்லையம்மா சிறுகதைகள் வாராந்தரிகளில் வரும் சிறுகதைகளின் சாயல் கொண்டிருந்த தது.  அவருக்கு நன்றி தெரிவித்து நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலளிக்கையில், அந்தக் கதை ஆறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். தினமணிக் கதிரில் வந்திருக்கும் கதை என்பது அந்த லிங்க் மூலம் அறிந்து கொண்டது. அவர் சமீபத்திய சிறுகதை ஒன்றை அனுப்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

சுனிலின் கதை பற்றி பேசுகையில் ஷிமோகா ரவி அவர்கள் ‘ சுனில் ஆரம்ப எழுத்தாளர்கள் நிலையைக் கடந்து இரண்டு மூன்று படிகள் ஏறி விட்டார் என்றார்.’ அதுவே என் கருத்தும்..

இவர்கள் தவிர, இதுவரை நான் படித்திராத மாதவன் இளங்கோ வின் work pressure வழியாக சொல்லப்பட்ட கதையில் (ஐடி மக்கள் தினந்தோறும் காணும் )மேலதிகாரியின் மறுபக்கமும் இறுதிவரியும் ஓரளவு யூகிக்க முடிந்திருந்தாலும் அவரது எழுத்து நடையும் கதை சொல்லும் விதமும் கச்சிதமாக இருந்தன. மகேந்திரன் மற்றும் மோனிகா மாறனின் கதைகளும் அதுபோல மிகக் கச்சிதமான நடைகளே, மேலும் அவை கொண்ட கவித்துவம் இன்னும் அழகு. குறிப்பாக தச்சனின் கருணை.  தருணாதித்தனின் அங்கதமும் எள்ளலும் கொண்ட இரு கதைகளும் இந்த மொத்தச்  சிறுகதைகளிலுமே மிகவும் தனித்து நிற்கின்றன. அவைகளுக்கு முறையே ஒரு சலாமும் ஒரு சபாஷும் போட்டேன்

அன்புடன்
R.காளிப்ரஸாத்

 

 

அன்புள்ள ஜெ

 

கதைகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். அனேகமாக எல்லா கதைகளில்ம் உள்ள முக்கியமான குறை என்பது லௌகீகவாழ்க்கையின் ஒரு தருணத்தைக் கதையாக ஆக்குவது என்பதாகவே உள்ளது. லௌகீக வாழ்க்கை முக்கியம்தான். ஆனால் அது கதையை கீழேயே அமரவைத்துவிடும். அந்த  தருணத்தில் இருந்து மேலெ போய் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாசித்தெடுக்கும் வாய்ப்பு அந்தக்கதைமேல் அமையவேண்டும். அந்தக்கதை நமக்கு தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும் அர்த்தப்படவேண்டும். அது நிகழாத கதைகளை நாம் நினைவில் நிறுத்துவதில்லை

 

ஆர். கணேஷ்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- அற்புதமான உலகம்
அடுத்த கட்டுரையானைமேல் அமர்ந்திருப்பது…