ஆர்வியின் கதை

ஆர்வி சிலிக்கான் ஷெல்ஃப் என்ற இலக்கிய இணையதளத்தை நடத்தி வருகிறார். அவரது அம்மாவுக்கு புரியாது கதைக்கு நான் இட்ட பின்னூட்டம் இது

ஆர்வி,

நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள்.

1. இது சுஜாதாபாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப்போன ஒன்று

என்னென்ன அம்சங்களை சுஜாதாபாணி எனலாம்?

அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது

ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு

இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் சொல்வது

உ. மனதைச் சித்தரிக்க விட்டுவிடுவது

இது ஒருநல்ல பாணி அல்ல. இந்தவகையை சுஜாதா எப்போது மீறிச்சென்றாரோ அப்போதுதான் சுஜாதாவே நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். இது எளிய வாச்கான் எளிதாக வாசிக்கக்கூடியது. ஆனால் உடனே மறந்துவிடவும்செய்வான்

ஏனென்றால் இதில் கதைமாந்தரும் சூழலும் ‘அங்கே சென்று வாழும்’ அனுபவத்தை அளிப்பதில்லை. அவை சொல்லப்படுகின்றன. உளவியல் நெருக்கடிகள் பதிவாவதில்லை. ஆகவே பண்பாட்டுச்சிக்கல்கள் நிகழ்வதில்லை. விளைவாக கதை அழுத்தம் பெறுவதே இல்லை.

2 . சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான் க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார். நீங்கள் செய்யவில்லை

உதா: நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற ’பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை’ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆகவேதான் அவரது நடை சம்பிரதாயமானதாக ஆகவில்லை. புதுமையை கடைசிவரை தக்கவைத்திருந்தது

3. கதை பேரிதழ்களுக்குரியது என ஏன் சொல்கிறேன் என்றால் மையச்சிக்கல் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால்தான். அம்மாவுக்கும் இளமையில் அதே சிக்கல் இருந்திருக்கிறது போன்ற இம்முடிவு எப்போதுமே எழுதப்படும் ஒன்றே

சிபாரிசு
======

இக்கதை சார்ந்து நான் நினைப்பது உங்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் என. அவரை தொடருங்கள். சுஜாதாவை தொடர்ந்து சென்றவர்கள் குமுதத்துக்கே செல்ல முடியும்.

அசோகமித்திரனின் முக்கியமான இயல்பு அவர் எதையும் ’சொல்வதில்லை’. அவர் வாசகனிடம் விளையாடுவதில்லை. அவரது சித்தரிப்புகள் அடக்கமானவை எளிமையானவை. அவரது சவால் கச்சிதமாகச் சொல்வதில் உள்ளது, சுவாரசியமாகச் சொல்வதில் அல்ல

அசோகமித்திரன் இதை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?1.அந்த வீட்டுச்சூழலை எளிமையான சித்தரிப்புகள் மூலம் சொல்லி நாம் அங்கே சென்று தங்கி அதை அறிந்த உணர்வை உருவாக்கியிருப்பார். நுட்பமான சில தகவல்கள் சூழலையும் கதைமாந்தரின் இயல்புகளையும் எளிதாகச் சொல்லிவிடக்கூடியவை. தன் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அவர்கள் வீட்டில் கிருஷ்ணாயிலா கரியடுப்பா என்று ஒரு பாட்டி கேட்கிறாள் ஒருகதையில். அதேபோல

2 மையப்பிரச்சினையை அவரே சொல்லாமல் அந்தக்கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் செயல்கள்மூலம் வெளிப்படச் வைத்திருப்பார்.

3 அம்மாவின் குணச்சித்திரம் இத்தனை ஒற்றைப்படையாக இருக்காது. வாழ்க்கையில் நாம் காணும் கதாபாத்திரங்களில் உள்ள ஒரு மர்மம், ஒரு விளங்காமை எங்கோ இருந்துகொண்டிருக்கும்

4 கதைமுடிவு இப்படி சொல்லப்பட்டிருக்காது. மிக மென்மையாக, முடிந்தவரை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் முடிவில் இருந்து அம்மாவின் குணச்சித்திரம் அதுவரை சொல்லப்பட்டதை மீண்டும் அசைபோட நம்மை கட்டாயப்படுத்தும். அப்போது அம்மா இன்னமும் புரியக்கூடியவளாக ஆக ஆரம்பிப்பாள். உங்கள் கதை முடிந்துவிடுகிறது. அசோகமித்திரன் கதை அங்கே தொடங்கும்

உங்களுக்கு அசோகமித்திரனின் தலைப்புபாணி அழகாக கைவந்திருக்கிறது. கதைப்பாணியும் கைவரட்டும். எல்லா எழுத்தாளர்களும் ஒரு மாஸ்டரையே முதலில் பின்பற்றுகிறார்கள். அவர் அவர்களை அவர்களின் சொந்த உலகுக்குள் கொண்டு செல்வார்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைநாஞ்சில்,கடிதங்கள்.
அடுத்த கட்டுரைகடிதங்கள்