சிறுகதைகள் – விமர்சனங்கள் 5

1

 

அன்புள்ள ஆசானுக்கு,

மடத்து வீடு சிறுகதையை நான் படிக்கும் முன்பே சிலர் விமர்சனமிட்டிருந்தனர், தரமான விமர்சனங்களான அவைகளை விட சிறப்பாக நான் சொல்ல எதுவும் இல்லை,  அதனால் பிடித்த வரியினை மட்டும் குறிப்பிடுகிறேன் .
//வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.//
கதையின் இரண்டாம் முறை வாசிப்பில் மொத்த கதையும் இந்த வரியில் உச்சம் கொள்வதை உணர்ந்தேன், அந்த மொத்த வீட்டில் இருண்டு, உடையாமல், பாசியில்லாமல், கரி படியாமல் நிறத்தை தக்க வைத்திருப்பது பொம்மையின் ரவிக்கை என்பது முக்கியமான குறியீடு, அவ்வீட்டு பெண்கள் மானத்தோடு, கற்போடு வாழ்கிறார்கள் என்ற கதையின் முடிவை இவ்வரியில் உணரமுடியும் .
மிக எளிதாக புறந்தள்ள கூடிய, கதையே உணர நேரமெடுக்கும் வகையில் சிறுகதை உள்ளது தான் இக்கதையின் பலவீனம், கதையின் தளத்தில் அத்தகைய விமர்சனங்கள் காணப்பட்டது . கதை ஆசிரியர் படிமங்களை, வர்ணனைகளை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார்,  அதுவே இக்கதையின் தளத்தை உயர்த்தியிருக்கிறது .
நன்றி
சிவா

 

ருசி

 

ருசி மீதுள்ள மோகம் மனிதனைச் சுயநல வாதியாக மாற்றும். புலன் சார்ந்த வாழ்க்கை (ருசி குறியீடாக அமைகிறது) மனிதனைத் தன்னலம் மட்டுமே கருதும் ஒட்டுண்ணியாக்கக் கூடும்.

 

ஏமாற்றியவனைத் தேடிச் செல்கையில் ரயில் பயணத்தில் இதைக் கண்டடைகிறான். தேடல் அடங்கிவிடுகிறது. இதுதான் கதையின் மையம் என்று நினைக்கிறேன்.

 

ஆனால் ரயிலில் நிகழ்வது சாதாரணமான சம்பவம். It is too weak to carry the weight of this theme.அதனால் “slice of life” கதை போல நின்றுவிடிகிறது.

 

முடி

 

எழுத்து இயற்கையாக உள்ளது. நகைச்சுவையும் சுய ஏளனமும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் மிக வெளிப்படையான, எளிதில் ஊகிக்கக் கூடிய கதைக்கரு. நல்ல blog post எனலாம், சிறுகதையாக ஏற்க முடியவில்லை.

ப்ரியம்வதா

 

8

 

அன்புள்ள சார்,

 

செளந்தர் தன் யோகாசென்டரில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்திருந்தார். அதில் சில பாசுரங்களை தனித்தனியாக ஓதவேண்டும். அதில் எனக்கென வாய்ந்த ஒன்று அரியைத்தொழுது மனம்வருந்தி பின் சிவனடி பணிவது போல் பொருள் கொண்டது.( அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேன் ).
விஷ்ணுபுரத்துக்காரனை இப்படிப்பாட வைக்கலாமோ என நினைத்து உளம் கலங்கினேன். ஆனால் அதன்பின் கிராதம் வரை சிவதரிசனமாகவே இருக்கிறது.

(

முற்றோதலில், காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலியே.. என்பதை கபாலியே என வாசித்துமுடித்துவிட்டு நெருப்புடா என ஹம்செய்த அருணாசலம் பற்றி இப்போது சொல்ல ஏதுமில்லை )

 

பிறகு, ரேஷன்கார்டு விஷயமாக திருச்சி சென்ற போது உத்தமர் கோயில் என்னும் வைணவ திவ்யதலத்திற்கு சென்றிருந்தேன். அதிலும் கபாலத்தை ஏந்திய பிச்சாண்டவர். அந்தக்கோநிலுமே, பிச்சாண்டவர் கோயில் என்றும் பிரம்மா கோயில் என்றும்தான் அழைக்கப்படுகிறது. ஏகப்பட்ட சிவன் கோயில்களுக்கு சென்றிருந்தாலும், பிச்சாண்டவரை காண்பது இதுவே முதல் முறை.  கிராதம் படிக்கையில் பிச்சாண்டவர் நேரில் வறாரே என ஏவிஎம் ராஜன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட போது, “நவீன நாவலுக்கெல்லாம் இந்தளவு பொங்கக்கூடாது.. எதானாலும் ஒரு இனிய ஜெ. கடிதம் எழுதி நேரடியாக பொங்கிக்கொள்ள சுரேஷ்பாபு அறிவுறுத்தினார்..”  எழுதிப்பார்த்தபோது,   சரியாக வராததால்  நானும் நிறுத்திவிட்டேன்.

 

கவிஞர் குமரகுருபரன் பற்றி நீங்கள் சொன்னபோது, இளையவர்கள் இயற்கையாக மரணிக்கும்போது எழும் பதட்டம் பற்றி விளக்கினீர்கள்..நேற்று இரவு என் சித்தப்பா மரணச்செய்தியை கேட்டுத்தவித்த அப்பா பெரியப்பா வைக் கண்டபோது, அதை நேரடியாக அனுபவிக்கும் போதுதான் நன்றாக புரிந்துகொண்டேன்.

 

இந்தச் சிறுகதை முயற்சியும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஒரு சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதையை நான்  இப்போதுதான் உணர்கிறேன்.

 

நேற்று இரவு சித்தப்பா வீட்டில் இருக்கும் போது எனது விடிவு சிறுகதையை நீங்கள் தளத்தில் சுட்டி அளித்திருந்த்து கண்டு அந்தநேரத்திலும் மிக உணர்ச்சிகரமாகவும் சற்று பெருமையாகவும்  உணர்ந்தேன் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

 

 

ஒரு உரையாடலில் இதை கதையாக எழுதச்சொன்னவர் சுரேஷ்பாபு, கதை பிரசுரமாவதற்கு முன், நட்பாஸ், துரைவேல்சார் ஆகியோர் இது பற்றி பேசினார்கள். முதலில் கதை எழுதும் போது அது மனதுக்குள் கொண்ட வடிவத்தை எழுத்தில் கொண்டுவரவில்லை என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர். எழுதுபவனுக்கு தெரிவது வாசகனுக்குத் தெரியவாய்ப்பில்லை. எனவே சற்று விளக்க வேண்டும் என்பது போல..அதன் பிறகு அதைச் சரிசெய்த பிறகே சொல்வனத்தில் வெளியானது.

 

இந்தக்கதை சொல்வனத்தில் வந்தபோது நம் நண்பர்கள் இதுபற்றிப் பேசினார்கள்… அக்டோபர் இரண்டு அன்று வந்ததால்  எல்லோரும் உண்மையையே கூறினார்கள்..

 

ராகவ், இது பற்றி நான் உங்களுக்கு எழுதிய கடித்த்தையுமே நினைவு வைத்திருந்தான். கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் பேரு வைத்து கதாபாத்திரமாக்கியது அளித்த குழப்பத்தை ஜாஜா, தனா, கிருஷ்ணன் ஆகியோர்  தெரிவித்தார்கள்.

 

 

சுரேஷ் வெ, அருணாசலம், சுனில், ஷிமோகா ரவி, செந்தில், கவிதா ஆகியோர் என் மனம் புண்படக்கூடாது என கவனமாக இது நல்ல கதைதான், முதல்முயற்சி வீண்போகலை.. ம்ஹூம் அழப்பிடாது  என ஆற்றுப்படுத்தினர்..

 

டாக்டர் வேணு வெட்றாயன், survivor’s guilty என்பதையும் தாண்டி இதில் உள்ள முக்கியமான தருணங்களைக் கூறி இதையெல்லாம் நிரப்பியிருந்தால் பின் நவீனத்துவ பாணியாகியருக்கும் ஆனால் இப்போது இது நவீனத்துவ பாணிபோல் உள்ளது எனக் கூறினார். கவர்னர் ஸ்ரீநிவாசன் அவர்களும் இதையே கூறினார்.

 

கதை யதார்த்தத்திற்கு சற்று அருகில் இருப்பதாலேயே உண்மையாக இருக்கிறது. ஆகவே தொடர்ந்து எழுதவும் எனச்சொல்லி, சில குறைகள் உள்ளன அவற்றைத் தவிர்க்கவும் உறவுமுறையை கடலூர் சீனு கூறினார்.

 

கடைசிவரி ஓரளவு காப்பற்றியதாக அனைவரும் சொன்னார்கள்.

 

இவ்வாறு எனக்கு தனியாக போனில் அழைத்தும் கடிதமெழுதியும் அளித்த பின்னூட்டங்களால் சிறுகதை பற்றி எனக்குமே ஒரு தெளிவு இப்போதுதான் உண்டானது.(கெய்ஷா கதை அருணாசலத்தின் பரிமேலழகர் உரை இல்லாமலேயே ஓரளவு புரிந்த்து)

 

இது சார்ந்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

 

இத்துணை பணிகளுக்கிடேயேயும் இதையும்  வாசித்து சுட்டி அளித்த உங்களைப் பணிவுடன் வணங்குகிறேன். பாதம் பணிகிறேன். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்.

 

எல்லா, போற்றுதல்களையும்  தூற்றுதல்களையும் சிவா கிருஷ்ணமூர்த்திக்கே அர்ப்பணிக்கிறேன்….

 

 

இதன் முதல் வடிவத்திற்கு, துரைவேல் அவர்களின் கடிதம்,

/

 

//அன்புள்ள காளி
கதையைப் படித்தேன். இதைப்போன்ற கதைகள் அடங்கிய தொடர் ஒன்றை சுஜாதா எழுதியிருந்தார். தூண்டில் கதைகள் என்றுவ் பெயரிடப்பட்டிருந்த தொடர். அது.  கதையின் முடிவு வாக்கியத்தில் கதையை முழுவதுமாக தலைகீழாக திருப்பிவிடும்.  அந்த முடிவு வாக்கியத்துக்ககாகவே முழு கதையும் எழுதப்பட்டிருக்கிறது என நம்மை உணரவைக்கும்.    அதைப்போன்ற கதை இது.

 

 

கதை ராஜாவின் இறப்பின் பின்னான  நிகழ்வுகளைசொல்லிச் செல்கிறது.  ஆனால் ராஜா விபத்தில் இறந்துவிட்டான் என்பது கதையின் இறுதிப்பகுதிக்கு சற்று  முன்தான் உறுதிப்படுத்தப்படுகிறது. இது கதையின் முற்பகுதியில் ஒரு மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்தத் தகவல் தெரியாமல் நாம் படிக்கையில் பலவேறுபட்ட  தகவல்கள் பொருத்தமற்ற வகையில் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் முதல் முறை படிக்கும்போது நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது. பின்னர் கதையை இரண்டாம் முறை படிக்கையில் அனைத்தும் சரியாக பொருந்திவருவதும் அனைத்து தகவல்கள், நிகழ்வுகளுக்கு அர்த்தமிருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் கேட்டால் நான் மூன்றாவது முறை படித்தபின்தான். அனைத்து வாக்கியங்களும் எவ்வளவு அவசியமானவை என உணரமுடிந்தது.  இந்த கதை கூறல் முறையே கதையின் பலமாக இருக்கிறது.
 

ஆனால் அதுவே கதையின் பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும் என நினக்கிறேன்.   ராஜாவின் அம்மா ரவியை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பது.  ஆனால் கதையின் போக்கு ஏதோ முதலில்  ஒரு பிரச்சினை, காவல் நிலையத்தோடு தொடர்புடையது, ரவி அலுவலகம் சம்மபந்தப்பட்டது, ரவியும் சம்பந்தப்பது,  ராஜா சம்பந்தப்பட்டது, எனச் சென்று இறுதியில் ராஜாவின் சாலை விபத்தில் மரணம் பற்றியது என கதையின் இறுதிப்பகுதியில் முந்தைய பகுதியில் சொல்லப்படுகிறது. அதுவரை வாசகன் என்ன நடக்கிறது என யூகித்துக்கொண்டே படிக்கவேண்டியிருக்கிறது.  அதனால் என்னால் முதல் முறை படிக்கையில் கதை பாத்திர உருவாக்கங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.  இன்னமும் என்னால் ராஜா ரவி இருவரும் ஒரே வண்டியில் சென்றார்களா? தனித்தனி வண்டியில் சென்றார்களா? என்ற குழப்பம் இருக்கிறது. அல்லது ராஜா தன் காதலியுடன் தனியாக சென்று வரும்போது விபத்து ஏற்பட்டு அதை ரவி மறைக்க முயல்கிறானா என்றுகூட ஒரு குழப்பம் ஏற்பட்டது.
 

ஆனால் இந்த சிறிய  கதையிலேயே ஒரு இளைஞன் ஒரு குடும்பத்துடன் கொள்ளும் நட்பு,  தனித்து வாழும் இளைஞனின் குடும்ப நினைவு, குடும்பத்தின் கண்காணிப்பில் வாழும் இளைஞன் அதை மீற நினைக்கும் உளவியல், குற்றவாளிக்கூண்டில் நிற்பவனின் தவிப்பு ஆகியவை நன்றாக கூறப்பட்டிருக்கிறது.  ரவி தன் நண்பன் ராஜாவின் மரணம் அவனுக்கு அளிக்கும் துயரத்தை ராஜாவின் அன்னை அவனுக்கு அளிக்கும் விடுவிப்புக்கு பின்னரே உணரவும் அனுபவிக்க முடிகிறது என்பது சிறப்பான உளவியல்.
முடிவாக கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ராஜாவின் மரணம் முன்னரே சொல்லப்பட்டிருந்தால் கதை ஒரே குறிக்கோளுடன் தெளிவாக பயணித்திருக்கும் என நினக்கிறேன். விமோசனம் என்பது பழைய தேய்வழக்கான சொல்.  வேறு தலைப்பு பற்றியும் காதாசிரியர் யோசித்துப்பார்க்கலாம்.
11 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:41 ///

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

 

 

முந்தைய கட்டுரைதெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி
அடுத்த கட்டுரைகூண்டு