‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24

[ 3 ]

பொன்னொளிர் குழந்தை வளர்ந்து ஆண்மகன் என்றாகியது. ஆயினும் அதன் உடல் நடைதிருந்தாக் குழவிபோன்றே இருந்தது. அன்னை அதை பேருருவ மகவென்றே எண்ணினாள். நெஞ்சுகுழைந்து அமுதூட்டினாள். குழல் அள்ளிக்கட்டி மலர்சூட்டிக் கொஞ்சினாள். தூக்கி தோளில் வைத்து விண்ணகப் பாதைகளில் நடந்து ஆறுதிசை காட்டி மகிழ்வித்தாள். முகில் அள்ளிக் களித்தும் விண்மீன்களை வாரிச் சிதறடித்தும் விளையாடியது அது. தான் ஓர் இளைஞன் என்றே அது அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் விண்வழி ஒன்றில் அது ஆடிக்கொண்டிருக்கையில் அவ்வழியே காசியப முனிவர் சென்றார். அவர் அணிந்திருந்த சடைமகுடத்தைக் கண்டு நகைத்த குழந்தை விண்மீன்களை அள்ளி அவர்மேல் எறிந்தது. தன் மேல் வழிந்தொளிர்ந்து விழுந்த விண்மீன்களைக் கண்டு சினந்து திரும்பிய முனிவர் குழவியுடல் கொண்ட இளைஞனைக் கண்டு  “நீ யார்?” என்றார்.

“தேவவர்ணினியின் மைந்தன்.  விஸ்ரவஸுக்குப் பிறந்தவன். பிரம்மனின் கொடிவழி வந்த தேவன்” என்றான் குபேரன். “நன்று! பொன்னுடல் கொண்டிருக்கிறாய். அன்னையால் இன்னமும் குலவப்படுகிறாய் என்று எண்ணுகிறேன். என்று எழுந்து கைகால் கொண்டு ஆண்மகனாகப்போகிறாய்?” என்றார் காசியபர். “ஆண்மகனாவது எதற்கு?” என்றான் குபேரன்.

“இளைஞனே, குழவிப்பருவத்திற்கும் மானுடனுக்குமான வேறுபாடென்ன என்று அறிவாயா?” என்று முனிவர் கேட்டார். “அறியேன்” என்றான் குபேரன். “குழவி பிறிதொருவர் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கொஞ்சப்படினும் கொண்டாடப்படினும் அது அடிமையே.  மானுடன் பிறர் மேல் ஆட்சி செய்கிறான். எப்பருவத்திலாயினும் பிறர் ஆட்சிக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முழு வளர்ச்சி கிடையாது. எத்தகையவராய் இருப்பினும் அவர்கள் குழந்தைகளே” என்றபின் அவர் நடந்து சென்றார்.

அவ்வெண்ணம் கணம்தோறும் எடைகொள்ள தன் அன்னையிடம் மீண்டு வந்த குபேரன் தனித்திருந்து நெஞ்சுலைந்தான். அன்னை அவன் உள்ளத்திலமைந்தது என்ன என்று நூறுமுறை கேட்டும் அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.  ஏழிரு நாட்கள் தன்னுள் இருண்டு அமர்ந்திருந்த பின் எழுந்து வந்து அன்னையிடம் “அன்னையே, இன்னும் எத்தனை நாள் உங்களுக்கு குழந்தையாக இருப்பேன்?” என்று கேட்டான்.

“வாடாத் தளிருடல் உனக்கு வேண்டுமென்று எண்ணினேன். அதன்பொருட்டே உன்னை குழவியெனப் பெற்றேன். என்றும் நீ எனக்குக் குழவிதான்” என்றாள் அன்னை. “ஆம். உங்கள் நோக்கில் மட்டும் என்றும் குழந்தையாக இருக்கிறேன். ஆனால் இப்புடவியை நான் ஆளவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

அன்னை திகைத்தாள். “புடவியை ஆள்வதென்பது எளிதல்ல மைந்தா, ஆள்பவன் ஒவ்வொரு நாளும் இழந்துகொண்டிருப்பவன்” என்றாள். “அவ்வாறென்றால் இழப்பதுதான் ஆள்வதற்கான வழியா?” என்றான் மைந்தன். அவன் என்ன புரிந்துகொள்கிறான் என்றுணராமல் “ஆம், தன்னை முற்றிழப்பவன் முற்றதிகாரத்தைப் பெறுகிறான்” என்றாள் அன்னை. “அவ்வண்ணமே” என்று எழுந்து குபேரன் தென்திசைக் கடல் நோக்கி சென்றான்.

கடல் ஆழத்தில் மூழ்கி இறங்கி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். கடல்மேல் சென்ற கலங்கள் இருண்ட ஆழத்தில் ஒளிர்ந்த பொன்னைக் கண்டன. மீன்கள் அதை அணுகி பொன்னொளி பெற்று திரும்பி வந்தன. கடல் ஆழத்தில் குடிகொள்ளும் அந்தப் பொன் தப்தகாஞ்சனம் எனப்பட்டது. அதைப்பற்றிய கனவுகள் மண்ணில் பரவின.

தவம் முதிர்ந்து கனிந்தபோது குபேரன் பொன்னலையென உருகி பரவி கடலாழத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தவம் கண்டு மூதாதை பிரம்மன் இரங்கினார். அவன் முன் தோன்றி கைதொட்டு சுட்டுவிரலில் ஒரு பொன்னிறப்பொட்டு என மேலெடுத்தார். “என்ன வேண்டும்? கேள், இளமைந்தா!” என்றார். “இப்புடவியை நான் ஆளவேண்டும், எந்தையே” என்றான் குபேரன். “நீ பொன்னுக்கு இறைவன். புவி அனைத்தும் செல்வத்தால் ஆனது, செல்வமனைத்தையும் நீயே ஆள்க!” என்றார் பிரம்மன்.

“தனியொன்றை ஆள நான் விரும்பவில்லை. புடவியின் அனைத்தையும் ஆளும் ஆற்றலையே நான் கோருகிறேன். பிறிதொன்றும் எனக்குத் தேவையில்லை…” என்றான் குபேரன். “சிறுமைந்தர் போல பேசாதே. இது வாழ்வறிந்தவனின் விழைவு அன்று” என்றார் பிரம்மன். “எனக்கு திசைநான்கும் வேண்டும். வானும் மண்ணும் வேண்டும்…” என்று குபேரன் கைகளை உதறி காலால் நிலத்தை உதைத்தான். “மைந்தா புரிந்துகொள், நீ செல்வத்தின் தெய்வம். புடவியின் அனைத்தையும் ஆள செல்வத்தை அமைப்பதென்பது பேரழிவை விளைப்பது” என்றார் பிரம்மன்.

“எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்” என்று குபேரன் சிணுங்கினான். “நான்கு இழைகளால் நெய்யப்பட்டது இப்புவி வாழ்க்கை. நான்கு திசைகளென அவை அமைந்துள்ளன. தென் திசையை இறப்பு ஆள்கிறது. வடதிசையை நீ ஆள்க! இறப்பும் செல்வமும் துலாவின் இரு தட்டையும் நிகர் செய்க!” என்றார் பிரம்மன்.

“இப்புவியை ஆளும் வல்லமை பெறும்வரை இக்கடல்விட்டு நான் வெளிவருவதில்லை” என்றான் குபேரன். “மைந்தா, ஒருபோதும் நிகழாததற்கு விழைவு கொள்கிறாய்” என்று பிரம்மன் திரும்பினார். “அவ்வண்ணமெனில் இன்னும் பல்லாயிரம்கோடி வருடங்கள் இன்பதுன்பம் இருத்தல் இன்மையென அனைத்தையும் துறந்து வாழ்கிறேன். நன்று” என்றபடி அவன் நீர் புகுந்தான்.

உளம் கேளாது எட்டி அவனைப்பற்றி இழுத்து நெஞ்சோடணைத்து பிரம்மன் சொன்னார் “உன்னை அவ்வண்ணம் விட உன் முதுதந்தையின் உள்ளம் ஒப்பவில்லை. ஒன்று சொல்கிறேன். புவியை ஆளும் தேவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் அனைவரையும்விட மேலாக நீயே வழிபடப்படுவாய். எளிய மாந்தர் உன்னையே அவர்கள் என காண்பார்கள். உன் பொன்னொளியை மீறிச்செல்லும் அகவிழி கொண்டவர் மட்டுமே பிறரை காண்பார்கள். இப்புவியில் பிறந்திறந்து மாயும் பலகோடி மாந்தரில் மிகச்சிலரே நீயன்றி பிறரைக் காண்பார். நீயே இப்புடவியை ஆள்வதற்கு நிகர் அது.”

முகம் மலர்ந்த குபேரன் “ஆம், அது போதும்” என்றான். “நீ வடதிசையில் அமர்க! உன் நகர் அங்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். வெற்றிக் களிப்புடன் குதித்துக் கும்மாளமிட்டபடி அன்னையிடம் ஓடிவந்தான் குபேரன். நானே அனைத்தையும் ஆள்வேன். நானே ஆள்வேன்” என்று கூச்சலிட்டான். அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி நடனமாடினான்.

குபேரன் வடக்கு திசையில் அமைத்த நகரம் அளகாபுரி என்று அழைக்கப்பட்டது. இரும்பாலானது அதன் புறக்கோட்டை வட்டம். செம்பால் ஆனது உட்கோட்டை. வெள்ளியாலான நகர்க்கோட்டைக்குள்  சந்திரனின் வெண்குளிர் ஒளி எப்போதும் நிறைந்த வானம் கவிந்திருந்தது. வெண்பட்டு என மெல்லிய தரை அங்கிருந்தது. நகரக்கட்டடங்கள் அனைத்தும் ஆடகப்பொன்னால் ஆனவை. பொற்சுவர்கள். பொற்கட்டிகளால் ஆன படிகள். பொற்தூண்கள். பொற்பாளக் கதவுகள். கிளிச்சிறைப்பொன்னால் ஆனவை இல்லங்களின் உட்பகுதிகள். மாடமுகடுகள் சாதரூபப் பொன்னுருக்கிச் செய்தவை. மணிகள் மணல் பெருக்கென இறைந்து கிடந்தன.

அங்கே மரங்களும் செடிகளும் பொன்னே. மலர்களும் தளிர்களும் பொன்னே. வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும் பொன்னால்  அமைக்கப்பட்டு மரங்களில் பதிக்கப்பட்டிருந்தன. குபேரபுரியின் காவலரும் ஏவலரும் தவிர அங்கு உயிரசைவென ஏதுமில்லை. பொன்னே ஒளியென்று நிறைந்திருந்தது. பொன்னே நறுமணமாக வீசியது. பொன்னே இன்னிசையாக சூழ்ந்திருந்தது. விழிகளுக்குள் புகுந்து சித்தமாக ஆனதும் பொன்னே.

குபேரனின் கருவூலங்கள் பதினாறாயிரத்தெட்டு. அவற்றில் அருமணி முதல் அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அள்ளப்படுவது அக்கணமே ஊறிநிறையும் தன்மைகொண்டிருந்தது அது. அங்கு உலவியவர்களின் நிழல்களும் பொன் நிறத்தில் விழுந்தன. அங்குள்ள இருட்டும் அடர்பொன்னிறமே.

பொன் விழைந்து இறந்தவர்கள் அங்கு வந்தனர். ஊழிக்காலம் அங்கு பொன்னை உண்டு பொன்னில் படுத்து பொன்னை உயிர்த்து பொன்னில் எண்ணம்கொண்டு பொற்கனவுகளில் ஆடினர். பொன் திகட்டி பொன்னை வெறுத்து அங்கு ஒருகணமும் வாழமுடியாமலாகி கால்வைக்கக் கூசி எண்ணஎண்ண துயர்கொண்டு கண்ணீர் உதிர்த்து அழுது மேலும் ஒரு ஊழிக்காலம் அங்கே தவம் செய்தபின்னர் மண்ணில் மீண்டும் பிறந்தார்கள். அவர்களுக்கு கலையோ கவிதையோ ஊழ்கமோ முதன்மையாக இருந்தது. பொன்னை பொன்னின் பொருட்டே அவர்கள் வெறுத்தார்கள்.

குபேரனுக்கு அளகதளம் என்னும் மணியாலான சிம்மாசனம் இருந்தது. அவன் மணிமுடி சுவர்ணஜ்வாலா எனப்பட்டது. அவன் செங்கோல் காஞ்சனகீர்த்தி. அவன் கொடி சோனஜிஹ்வா. அவன் அரியணையை பொன்னிற ஆமைகள் தாங்கியமர்ந்திருந்தன. அவன் இலச்சினை வெள்ளி உடலும் பொன்னாலான கொம்புகளும் கொண்ட வெள்ளாடு. அவன் அரண்மனை பொன்னில் எழுந்த நுரை என பன்னிரண்டாயிரம் பொற்கும்மட்டங்களும் பொற்கோபுரங்களும் கொண்டிருந்தது. அதனுள் பதினாறாயிரத்தெட்டு பொற்தூண்களால் ஆன ஆட்சிமண்டபத்தின் நடுவே அரியணையில் கையில் பொன்நிற கதாயுதத்துடன் அமர்ந்து அவன் இப்புவியாளும் பெருவிழைவுகளை அளந்தான்.

ஒவ்வொருவர் கனவிலும் வந்து பொன் காட்டி உயிர்ப்பை எழுப்பி மறைந்தான். பொன் பொன் என விழைந்த மானுடர் துழாவித்தவித்து  அலைக்கும் கைகளுக்கு அப்பால் எட்டி எட்டிச் சென்று நகைத்தான். தெய்வங்களுக்காக புவி மானுடர் வணங்கி அள்ளியிட்ட மலர்களில் பெரும்பகுதியை அவனே பெற்றுக்கொண்டான். அவர்களின் வாழ்த்துரைகள் ஓரிரு சொல்லன்றி பிற அனைத்தும் அவனையே சென்றடைந்தன. அவர்கள் முன் திசைத்தேவர்களாக மும்முதல்வர்களாக அன்னையராக தேவியராக உருக்கொண்டு அவனே தோன்றினான். வேள்விகளில் தேவர்கள் அனைவரின் உருவமும் தானேகொண்டு வந்து அவிபெற்று மீண்டவன் அவனே.

எனினும் அருள் புரியும் கனிவு அவனில் கூடவில்லை. பொன்மேல் அமர்ந்து பொன்னென ஆகிய அவன் உள்ளம் மலர் மென்மையை அறியவே இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையாக, அனைத்தையும் விழைபவனாக, பெற்றுக்கொள்ளமட்டுமே எண்ணுபவனாக அவன் இருந்தான்.  அள்ளக்குறையாது பொருள் நிறைந்திருந்தபோதும் ஒரு துளியை இழந்தால் அதையே எண்ணி அவன் ஏங்கினான். ஒற்றைப்பொன்னின் ஒலியையே அவன் செவி இசையென எண்ணியது.  செல்வமென்பது செல்லக்கூடியதென்றே அவனுக்கு பொருள் பட்டது. அளிப்பதென்பது இழப்பதென்றே அவன் உணர்ந்தான்.

அவனிடமிருந்து அருள் பெற்றவர்கள் அவனை வணங்கியவர்கள் அல்ல. அவனைக் கடந்து பிற தெய்வங்களை வணங்கி அவர்களிடமிருந்து அருள் பெற்று அவனிடம் வந்வர்களே. அத்தெய்வங்களின் ஆணையை மீறமுடியாமல் மட்டுமே தன் உறுதி இறங்கி அவன் தன் கருவூலத்தை திறந்தான். அள்ளி பொருள் கொடுக்கையில் ஒவ்வொரு மணிக்கும் நாணயத்திற்கும் தன்னுள் கணக்கு வைத்தான். அளித்தவற்றை எண்ணி எண்ணி சினந்து ஏங்கினான். அளித்த பொருள் உள்ளத்துள் பெருக  பெற்றவர்களால் தான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுவதாக எண்ணினான்.

[ 4 ]

ஜாதவேதனின் இல்லத்திலிருந்து கிளம்பிய அர்ஜுனன் உளம் தளர்ந்திருந்தான். வடக்கு நோக்கி செல்லவேண்டும் என்னும் ஆணையை அவனறியாமலேயே சித்தத்திலிருந்து கால்கள் பெற்றுக்கொண்டன. வழியை அவன் விழிகள் நோக்கவில்லை. செவி அறியவில்லை. கான் வாழ்க்கையின் நெடும்பழக்கத்தால் ஊர்களுக்குள் செல்லும் வணிகப்பாதைகளைத் தவிர்த்து காட்டுக்குள் ஊடுருவிச்செல்லும் மேய்ச்சல்பாதையை அவன் தேர்ந்தான். அவனை ஊர்களும் ஆயர்மன்றுகளும் ஓசையின்றி நழுவவிட்டுக்கொண்டிருந்தன.

மூன்று நாட்கள் சென்றபின்னரே தான் செல்ல வேண்டிய இடம் என்னவென்று அவன் சித்தத்தில் வினா எழுந்தது. அதன் பின்னர் அவன் குபேரனைப்பற்றி என்ணலானான். அந்நிகழ்வுகளுக்கோர் ஒழுங்கும் இலக்கும் இருப்பதை அப்போது உணர்ந்தான். ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் “குபேரனுக்கான ஆலயம் எங்குள்ளது?” என்றான். “குபேரனுக்கு ஆலயம் கட்டுவதில்லை, வீரரே. அனைத்து ஆலயங்களும் குபேரனுக்குரியவையே” என்றார் அவர் நகைத்தபடி. “வேளாண்மூத்தோரிடம் குபேரனைப்பற்றி கேட்கலாமா? வணிகர்களிடம் கேளுங்கள்.”

ஊர்பாதை ஒன்றின் முனம்பில் தன் ஏவலர் எழுவருடனும் காவலர் மூவருடனும் பொதிவிலங்குகளை அவிழ்த்து நீர் அருந்தவிட்டு, தோல்விரிப்பைப் பரப்பி பஞ்சுத் தலையணை இட்டு குடபண்டி எழுந்திருக்க கொழுவிய கன்னங்கள் தொங்க அரைத்துயிலில் என விழிகள் புதைந்து  படுத்திருந்த பெருவணிகன் ஒருவனை அர்ஜுனன் கண்டான். அவனை அணுகி வணங்கி “தங்கள் சொல்லிலிருந்து செல்வழி பெற வந்தவன். அயலூர் வழிப்போக்கன். என் பெயர் சரபன். வில்லறிந்த ஷத்ரியன்” என்றான். “சொல்க!” என்றான் வணிகன்.

“தாங்கள் இப்பெருநிதியை பெற்றது குபேரனின் அருளால் என்று எண்ணுகிறேன். குபேரனை காணும் வழி எது? எங்கேனும் எவ்வண்ணமேனும் தாங்கள் அவனை அறிந்துளீரா?” என்றான் அர்ஜுனன். கண்கள் சிரிப்பில் விரிய “அமர்க, வீரரே!” என்றான் பெருவணிகனாகிய மித்ரன்.  அர்ஜுனன் அமர்ந்ததும் இன்னீரும் உணவும் கொண்டுவர ஆணையிட்டான். தன்னைப்பற்றி சொன்னான்.

நான் உஜ்ஜயினியை சேர்ந்தவன், ஷத்ரியரே. இளமையில் நான் அறிந்தது வறுமையை மட்டுமே. ஒருவேளை உணவுக்காக, மழையில் கூரைக்காக, ஆண்டிற்கொருமுறை கிடைக்கும் ஆடைக்காக பிறிதொரு வணிகனின் கடையாளாக இருந்தேன். அவன் கைகளால் நாளும் அடிவாங்கினேன். அவன் உறவினர்களால் சிறுமை செய்யப்பட்டேன். நான் எனக்குரிய நற்பொழுது எழும் என்பதை நம்பினேன். ஒவ்வொரு நாளும் அதை கனவு கண்டுகொண்டிருந்தேன்.

ஒரு நாள் முன்புலரியில் ஆற்றில் இருட்டிலேயே நீராடி கடை திறப்பதற்கு முன்பே அங்கு செல்லும்பொருட்டு வந்துகொண்டிருந்தபோது தரையில் ஒரு வெள்ளி நாணயம் கிடப்பதை பார்த்தேன். இரவில் ஆற்றுநீரில் பரல்மீன் மின்னுவதுபோல அது சாலையில் கிடந்தது. அகம் படபடக்க அதை எடுத்து என் கண்ணில் வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதை என் ஆடையில் பதுக்கியபடி அவ்வணிகனின் கடை முன் சென்று நின்றேன்.

அதைக்கொண்டு மூவேளை உணவருந்தலாம். புதிய ஆடை ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இனிய கனவுகள் ஒவ்வொன்றாக என்னுள் எழுந்தன. அதை என் ஆடைக்குள் மேலும் மேலும் பொதிந்து ஒளித்து வைத்தபடி கடையருகே ஒரு சிறு பொந்துக்குள் உடலொதுக்கி படுத்துத் துயின்றேன். என் கனவில் நான் அந்த ஒரு நாணயத்தை முடிவில்லாமல் செலவழித்துக்கொண்டே இருந்தேன். உலகையே அதைக்கொண்டு வாங்கினேன். விழித்துக்கொண்டதும் தெரிந்தது, அந்நாணயம் என்னிடம் இருப்பதுவரை மட்டுமே அந்தக் கனவுகளுக்கு பொருளுண்டு என. எந்நிலையிலும் அதை இழக்கலாகாதென்று முடிவுசெய்தேன். அதை அதைவிடப் பெரிய நாணயத்தால் மட்டுமே ஈடுவைக்கவேண்டும் என உறுதிகொண்டேன்.

அந்த நாணயம் விழுந்தகிடந்த இடம் என் நினைவில் மீண்டும் எழுந்தது. மிதித்து பதிந்துசென்ற காலடி ஒன்றில் கிடந்தது அந்த நாணயம் என்று அப்போதுதான் தெளிந்தேன். அக்காலடிகளை மீண்டும் மீண்டும் என் நினைவில் ஓட்டிக்கொண்டிருந்தேன். கனவுகளில் மீளமீளக் கண்டேன். நெடுநாட்ளுக்குப்பின் ஒரு  புலரிக்கனவில் அதைத் தொடர்ந்து சென்றபோதுதான் பொன்னிறமான இரு கால்கள்  புழுதியை மிதித்துச் செல்வதை கண்டேன். வளர்ந்தும் குழந்தையென உடல் கொண்ட ஒருவன்.

வீரரே, அவனை குபேரன் என்று நான் உணர்ந்தது மேலும் நெடுங்காலம் கழித்துதான். அன்று முதல்நாள் விழித்தெழுந்ததும் நான் செய்ய வேண்டியதென்ன என்று தெரிந்தது. அந்த வெள்ளி நாணயத்தைக்கொண்டு எளிய தின்பண்டங்களை வாங்கிக்கொண்டேன். படைவீரர்கள் இடங்கள்தோறும் சென்று அவற்றை விற்றேன். அன்று மாலை என் எளிய வயிற்றுப்பசிக்கு மட்டும் எடுத்துவிட்டு எஞ்சியதை சேர்த்தேன். என் நாணயம் அப்படியே கையில் இருப்பதை கண்டேன். செல்வம் என்பது தீ போல படர்ந்து பெருகுவது என உணர்ந்தேன்.

இங்குள்ள எளிய மக்கள் செல்வமென்றால் பொருட்குவை என்று எண்ணுகிறார்கள். கருவூலம் என்கிறார்கள் அரசர்கள். தெய்வத்திடம் அது உள்ளது என்று சொல்கிறார்கள் வைதிகர்கள். அல்ல, செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். அதை அறிந்ததே என் வெற்றி. நான் கண்ட குபேரன் அவனே.

“ஆனால் அது வணிகர்களின் குபேரன். அரசர்களின் குபேரன் அவன் அல்ல” என்றான் வழியில் அவன் சந்தித்த ஒரு சூதன். “வீரரே, சூத்திரரும் அந்தணரும் குபேரனை அறியாதவர்கள். வணிகர்களிடம் அவ்வண்ணம் தோன்றிய குபேரன் அரசர்களிடம் வேறுமுகம் காட்டியிருக்கக்கூடும் அல்லவா?” உணவுநிலையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தபடி கையிலிருந்த ஒழிந்த தொன்னையை வீசிவிட்டு எழுந்தான்.

“இங்கே கமலதலம் என்னும் சிற்றூரில் ஊர்த்தலைவன் ஒருவன் குபேரனை கண்டுவிட்டான் என்கிறார்கள். அவன் இன்று ஒரு சிற்றரசனாக வளர்ந்துவிட்டிருக்கிறான். அவன் வழித்தோன்றல்கள் அரசனும் ஆகக்கூடும்” என்றான் சூதன். அவனிடம் விடைபெற்று கிளம்பிய அர்ஜுனன் கமலதலம் என்னும் ஊர் நடுவே புதிதாக எழுந்துவந்த ஏழுநிலை மாளிகை ஒன்றில் இருந்த ஊர்த்தலைவனை அணுகினான். அவன் ஷத்ரியன் என்று அறிந்ததும்  உள்ளே செல்ல  ஒப்பு அளித்தனர்.

வெள்ளியாலான பெரிய பீடத்தில் அமர்ந்திருந்த வியாஹ்ரதந்தன் என்னும் அந்த ஊர்த்தலைவன் அவனை வரவேற்று அமரச்செய்தான். “என்னிடம் நீங்கள் காவல்பணியாற்ற விழைந்தால் மகிழ்வேன், வீரரே. நான் வில்லவர்களையே நாடுகிறேன். நீங்கள் பெருவில்லவர் என்பதற்கு உங்கள் கைகளே சான்று” என்றான். “நான் பயணமொன்றில் இருக்கிறேன். நீங்கள் குபேரனைப் பார்த்தவர் என்றறிகிறேன். அவனை நானும் காணவிழைகிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நான் குபேரனை முழுமையாக பார்த்ததில்லை, வீரரே” என்றான் வியாஹ்ரதந்தன். “இச்சிற்றூரில் பிறரைப் போலவே எளிய வாழ்வை வாழ்ந்தேன். ஏவலரை அனுப்பி ஒவ்வொரு நாளும் இம்மலையிலிருந்து மலைப்பொருட்களைத் திரட்டி காவலர் துணையுடன் அருகிருக்கும் சந்தைகளுக்குக் கொண்டுசென்று விற்பதே என் தொழில். ஒருமுறை என் கையில் இருந்த கொம்பரக்குடன் சந்தையில் அமர்ந்திருந்தேன். அதை விற்று பணம் கொண்டுவந்தால் ஒழிய அன்று என் சிற்றூரே பட்டினியாகிவிடும் என்னும் நிலை. பட்டும் ஆடையும் அணிந்து என்னை அணுகிய வணிகனொருவன் என் கொம்பரக்குக்கு மூன்று பணம் அளிப்பதாக சொன்னான். என் தேவையும் அதுதான். பொருளைத் தருவதாக தலையசைக்கப்போகும் கணம் அவன் தலைக்கு மேல் ஒரு பொன்னிறப் பறவை கூவியபடி பறந்து செல்வதை கண்டேன்.”

அதற்கென நான் விழி தூக்கியபோது அவ்வணிகனின் கண்களை கண்டேன். அவன் நெஞ்சில் எண்ணியது ஐந்து பணம், சொல்லென எடுத்தது நான்கு பணம், நாவில் ஒலித்தது மூன்று பணம் என்று உணர்ந்தேன். “பத்து பணத்திற்கு ஒரு நாணயம் குறையாது” என்றேன். திகைத்து அவன் புருவம் விலக்கினான். “இதற்கா? இது என்ன பொன்னா வெள்ளியா?” என்றான். “கொம்பரக்கு. என் பொருளுக்கான மதிப்பை நான் அறிவேன்” என்றேன். ஏளன நகைப்புடன் கடந்து சென்றான். பிறிதொருவன் என்னை அணுகி “பத்து பணத்திற்கு கொம்பரக்கு என்றால்  உனக்கு என்ன விலை சொல்வாய், மூடா?” என்றான். “இது பத்து பணம் மட்டுமே. என் மதிப்பை நான் அறிவேன்” என்றேன். என் விழிகளில் இருந்த உறுதியைக் கண்டு திகைத்து கடந்துசென்றான்.

நான் என்ன சொல்கிறேன் என என் ஏவலருக்கு புரியவில்லை. என் முன் இருந்த பொருளை கூர்ந்து நோக்கினேன். பத்து பணம் பத்து பணம் என்று அதை நோக்கி மீளமீள சொல்லிக்கொண்டேன். ஆம், இதன் மதிப்பு பத்து பணம். இதை நான் முடிவுசெய்கிறேன், நானே முடிவுசெய்வேன். பிறிதொருவன் கேட்டபோது என் குரலில் இருந்த உறுதியைக் கண்டு “ஏழு பணம், என்ன சொல்கிறாய்?” என்றான். “பத்து பணம். சற்றும் குறையாது” என்றேன்.

அந்திப்பொழுது வந்து கொண்டிருந்தது. என்னுடன் வந்த  அனைவரும் சோர்ந்துவிட்டனர். என் உறுதியை அவர்கள் தங்களுக்குள் வசைபாடினர். சில பெண்கள் அழவும் தொடங்கிவிட்டனர். இளமைந்தர் பசித்தழுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் நடுங்கும் கைகளுடன் குளிரில் உடல் குறுக்கி அங்கு அமர்ந்திருந்தேன்.

பிறிதொருவன்  அணுகி “எட்டு பணம். கொம்பரக்கை கொடுத்துவிடு. இவ்விலை இதுவரை இங்கு அளிக்கப்பட்டதில்லை” என்றான். “பத்து பணம் அன்றி விற்பதில்லை. பொருளுடன் திரும்ப என் ஊருக்குச் செல்லவும் தயக்கமில்லை” என்றேன். மூன்று பணம் என முதலில் விலை சொன்ன அவ்வணிகனே வந்தான். “ஒரு பணம் குறைத்து ஒன்பது” என்றான்.  அக்கணமே “இதோ, உனக்காக” என்று அவனிடம் அப்பொருளைக் கொடுத்து பணம் பெற்று திரும்பினேன்.

அன்றைய செலவுக்கான மூன்று பணத்தை எடுத்து வைத்த பின் எஞ்சிய ஆறு பணத்தை கையில் வைத்து நோக்கியபடி என் ஊர்வரை நடந்தேன். நான் அடைந்தது என்ன என்று என்னிடமே கேட்டுக் கொண்டேன். மானுடனின் விழைவை! பேருருக் கொண்டு இப்புவியை மூடியிருப்பது அதுதான். குபேரனின் பொன்னொளிர் தோற்றம் என்பது அதுவே. நான் வணிகம் செய்யவேண்டியது அவ்விழைவுடன்தான். என் கையில் இருப்பதென்ன? இது நான் எனக்களித்த விலை. என் விலையை பிறர் முடிவு செய்யலாகாது. ஆம், அதுவே குபேரனின் ஆணை. வீரரே, அந்த இரு அறிதல்களிலிருந்து எழுந்ததே இப்பெருஞ்செல்வம்.

“குபேரனை முழுமையாகக் கண்ட எவரேனும் உள்ளனரா என்று நானறியேன். செல்வத்தை அடைந்தவர் அனைவரும் குபேரனை தங்கள் சிற்றறிவுகொண்டு சற்றே கண்டறிந்தவர்களே” என்றான் வியாஹ்ரதந்தன். “வீரரே, உங்கள் மேல் பொன்மழை பெய்ய அந்தச் சிறுதோற்றமே போதும்.” அர்ஜுனன்   “நான் விழைவது செல்வத்தை அல்ல. செல்வத்தின் இறைவனை மட்டுமே” என்றபடி எழுந்துகொண்டான்.

முந்தைய கட்டுரைசில சிறுகதைகள் – 5
அடுத்த கட்டுரைகெய்ஷா -கடிதங்கள்