‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22

[ 31 ]

செல்லுந்தோறும் சிறகுகொண்டது தண்டகாரண்யப் பெருங்காடு. அதன் வடபுலச்சரிவில் இலை வெளுத்து, கிளைதேம்பி தனித்து சோர்ந்து நின்றிருந்த மரங்கள் மறையலாயின. வேர்கள் மண்கவ்வி நரம்புகள் என கொடிகள் பின்னிப்புடைத்த அடிமரங்கள் எழுந்து கிளை பருத்து விரிந்து தழைத்து வான்மூடி பறவைக்குரல் சூடி நின்றிருந்த பெருமரங்களின் காடு வரலாயிற்று. கீழிருந்து பாறையில் படரும்  செந்நிறக் கொடி என மலைச்சரிவில் பற்றி வளைந்து மேலேறிய பாதை இலைத்தழைப்புக்குள் புகுந்து குகை வழியென ஆயிற்று.

KIRATHAM_EPI_22

அதன் மறுமுனையில் ஒளி தெரியாமல் ஆனபோது பைலனின் கையை பற்றிக்கொண்டு ஜைமினி “அடர்காடு. இங்கு கொடு விலங்குகள் உண்டா?” என்றான்.  “விலங்குகள் எங்குமுள்ளன” என்றான் பைலன். “விலங்கில்லாத காடு இமயமலையின் உச்சியில் கூட இல்லை என்கிறார்கள். நான் இருமுறை யானைகளை எதிர்கொண்டிருக்கிறேன்” என்று ஜைமினி சொன்னான்.  “கண்களை மூடிநின்று வேதச்சொல் எடுத்து ஓதினேன். அவை விலகிச் சென்றுவிட்டன.”

முன்னால் சென்றுகொண்டிருந்த சண்டன் திரும்பி  “அவை ஊனுண்ணிகள் அல்ல. பசித்த புலி ஒருவேளை எவற்றையும் சுவைத்து உண்ணக்கூடும்.” என்றான். ஜைமினியின் முகம் சுருங்கியது.  தன் கைகளால் காற்றில் தாளமிட்டபடி உடலில் மெல்லிய நடனத்துடன் முன்னால் சென்ற சூதனை நோக்கி திரும்பி பைலனிடம் மெல்லிய குரலில் “நான் இவனை வெறுக்கிறேன். இவ்வுலகில் இவனுக்கு அனைத்துமே நகைப்புக்குரியதாகத் தெரிகிறது” என்றான்.

“ஆம்” என்று பைலன் சொன்னான்.  “ஆம், அது ஒரு தத்துவம். தொல்காலம் முதலே அதையும் நம் எண்ணமுறைமையில் ஒன்றெனப் பயின்று வருகிறார்கள்.” ஜைமினி  “அந்த இளிவரலுடன் இவன் எங்கு அமரமுடியும்? எதை ஏற்க முடியும்? எதை சூடி நின்றிருக்க முடியும்?” என்றான்.  புன்னகையுடன் “அவர் அமர்ந்திருப்பவர் அல்ல. சென்று கொண்டிருப்பவர்” என்றான் பைலன்.

ஜைமினி எரிச்சலுடன் “இச்சொற்கள் எனக்கு சலிப்பூட்டுகின்றன. மானுடர் அனைவரும் தங்கள் பிறவி ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். விண்புகும் வழியொன்றே அவர்கள் தேடுவது” என்றான்.  “அவர் விழையும் விண் சொல்லுக்குள் உள்ளது. அதற்குள் செல்லும் ஏணி ஒன்றும் அவரிடம் உள்ளது. யாரறிவார்? நானும் நீங்களும் அழிந்த பின்னரும் மானுடத்தின் சொல்வெளியில் அவர் வாழக்கூடும்.”

“இவ்வெளிய சூதனின் பெயர் வரலாற்றில் வாழுமா என்ன?” என்றான் ஜைமினி. “விண்மீன்கள் செறிந்த வான்பரப்புபோல மொழி நம்மை சூழ்ந்திருக்கிறது. அறிந்த விண்மீன்கள் சில, அறியாதவை கோடி.  நாம் அவற்றைப் பார்க்காதபோது அவை ஒவ்வொன்றும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றன” என்று பைலன் சொன்னான். “அவர் இருப்பார். அவர்கள் என்றும் வாழும் ஒரு பெருக்கு.”

ஜைமினி “நீர் சொல்வதை என்னால் உணரமுடியவில்லை. உண்மையில் நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதில் பெரும்பகுதி எனக்கு புரியவில்லை. பொருளுறுத்துவதைவிட களியாடுவதற்கே சொற்களை கையாள்கிறீர்கள். உங்கள் நடுவே பகடைகளென உருண்டுகொண்டிருக்கும் சொற்கள் வேதத்திலிருந்து எழுந்து வந்தவை என்று உணர உணர என் உள்ளம் சினம் கொள்கிறது” என்றான். சொன்னபோது எழுந்த அந்த உணர்வு வளர்ந்து “உங்கள் இருவரையும் நோக்கி கூச்சலிட்டு வசைபாடவேண்டும் என்று தோன்றுகிறது” என சேர்த்துக்கொண்டான்.

“அவ்வசைபாடும் சொல்லும் வேதத்திலிருந்து எழுந்ததல்லவா?” என்று முன்னால் நின்று இடையில் கைவைத்து சூதன் கேட்டான். ஜைமினி விழிகளை திருப்பிக்கொண்டு நிற்க பைலன் நகைத்தான். “வசைவேதம் என்று ஒன்றை நாம் உருவாக்குவோம், அந்தணரே. அது வேதநிழலெனத் தொடரட்டும்” என்றபின் சண்டன் கைகளை வீசி வேதத்தின் அனுஷ்டுப்பு சந்தத்தில் இழிவசைகளால் ஆன பாடலொன்றைப் பாடியபடி முன்னால் சென்றான். பைலன் நகைக்க முற்பட்டு ஜைமினியின் விழிகளை கண்டபின் அடக்கிக்கொண்டான்.

“நாம் பேசுவது இவனுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறதா?” என்று ஜைமினி பைலனின் காதில் கேட்டான். “அவர் கேட்காத ஒன்றுமில்லை. வேண்டாதபோது காதுகளை மூடிக் கொள்ளவும் கற்றிருக்கிறார்” என்று பைலன் சிரித்தபடி சொன்னான். “எப்படி நாம் பேசிக்கொள்வது?” என்றான் ஜைமினி. “நீர் அவர் நம்முடன் இருக்கிறார் என்று எண்ண வேண்டியதில்லை. நினைப்பெழுந்ததை பேசலாம். அவர் எச்சொல்லாலும் துயரோ சினமோ உறப்போவதில்லை. சொல் அனைத்தும் மகிழ்வூட்டுவதே என்று எண்ணும் சூதர் அவர்” என்றான் பைலன்.

அவர்கள் பசுமை இருள் சற்று விலகி வெற்றுப்பாறை ஒன்று தெரியும் இடத்தை கண்டனர். “சொல்லின் இடைவெளி. காவியத்தின் தெய்வங்கள் இளைப்பாறுவதற்கான இடம்” என்றபடி சண்டன் அதை  நோக்கி சென்றான். பாறை இடுக்கில் எழுந்த அரச மரம் ஒன்று பசுமைக்குடை என நின்றது. அதன் கீழ் இருந்த பாறையில் சென்று அமர்ந்தபடி “உணவருந்துவதற்கு உகந்தது. உணவு இருந்தால் மேலும் இனிமைகொள்ளக்கூடும்” என்றான்.

பைலனும் ஜைமினியும் கால் சோர்ந்து வந்து அவனுக்கருகே அமர்ந்தனர். ஜைமினி சூதன் அமர்ந்த பாறையில் தொற்றி ஏறி சூதனுக்கு மேல் தன் கால் அமையும்படி அமர்ந்துகொண்டான். சூதனின் காலடியில்  அமர்ந்த பைலன் விழிதூக்கி ஜைமினியை நோக்கியபின் சூதனின் கண்களை சந்தித்து புன்னகைத்தான்.

“அந்தணரே, தங்களிடம் உணவு இருக்கிறதா?” என்றான் சண்டன். எரிச்சலுடன் “அந்தணரை உத்தமரே என்றுதான் கீழ்க்குலத்தோர் அழைக்கவேண்டும் என்கிறது கர்த்தம ஸ்மிருதி” என்றான் ஜைமினி. “உணவுக்காக எவரையும் எப்படியும் அழைக்கலாம் என்பது சூத ஸ்மிருதி. உணவிருக்கிறதா, உத்தமரே?” ஜைமினி சினத்துடன் தன்னிடமிருந்த உலருணவுப் பொதியை எடுத்து முன்னால் இட்டான். சண்டன் “அதை எடுத்து சூதன் உண்ணப்போவதால் அதில் தூய்மையற்றிருக்கும் பகுதியை எனக்கு அளிக்கலாமே” என்று பைலனிடம் சொன்னான்.

பைலன் சிரித்துக்கொண்டே அந்தப் பொதியை எடுத்து பகிர்ந்து பாதியை சண்டனுக்கு அளித்தான். ஜைமினி இன்னொரு சிறிய பொதியை எடுத்து பிரித்து தான் உண்ணத்தொடங்கினான். “உத்தமரை இப்போது ஒரு புலி வந்து அடித்து உண்ணும் என்றால் அது நோன்புணவை உண்ணுவதன் நலன்களைப் பெறும் அல்லவா?” என்று சூதன் கேட்டான். ஜைமினி உண்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். பைலன் சிரித்துக்கொண்டு “அந்தப் புலியை  அது இறந்தபின் உண்ணும் புழுக்களும் நோன்புணவை அருந்தும் பயன்களைப் பெறுகின்றன” என்றான்.

ஜைமினி எழுந்து அப்பால் சென்றான். சூதன் அதை அறியாதவன்போல “இப்புவியிலுள்ள அனைத்தையும் உண்கின்றன புழுக்கள். காலத்தின் வடிவம் அவை” என்றான். பைலன் “சமண அன்னநிலையில் நீங்கள் பாடிய அந்தக் காவியம் முடிவுறவில்லை, சூதரே” என்றான். “ஆம், அது மேலும் பல பகுதிகள் கொண்டது” என்றான் சண்டன். “நான்கு திசைகளையும் வென்றெழுந்த பெருவில்லவனின் கதை அது. நான்காவது திசை வென்றதை இரண்டாம் பகுதியாகவே ஆசிரியர் எழுதியிருக்கிறார்.”

ஆர்வத்துடன் அங்கிருந்தே “இரண்டாவது திசை எது?” என்று ஜைமினி கேட்டான். சூதன் திரும்பி நோக்க மேலும் அணுகியபடி “கிழக்கா மேற்கா?” என்றான். “வடக்கு” என்று சண்டன் சொன்னான். “அதெப்படி தெற்கிலிருந்து கிழக்கு அல்லது மேற்குக்குத்தானே செல்ல முடியும்?” என்று ஜைமினி அவனருகே வந்து நின்றபடி கேட்டான். “அது தொட்டுத் தொடரும் பாதை. இது ஊசலின் மறு எல்லை. இப்பயணம் இவ்வாறே அமைய முடியும்” என்றான் சூதன்.

“வடக்கின் அரசன் குபேரன் அல்லவா?” என்று ஜைமினி கேட்டான். “ஆம், குபேரனிடமிருந்து அர்ஜுனன் பெற்றுக்கொண்ட மெய்மையை சொல்லும் பகுதியைச் சொல்கிறது  சம்விரதர் சொல்கோத்து அமைத்த  அர்ஜுனேந்திரம் என்னும் காவியத்தின் மறுபகுதி” என்றான் சண்டன். ஜைமினி சிரித்தபடி “அர்ஜுனன் பெருஞ்செல்வன் ஆகிவிட்டானா?” என்றான். “பெறுபவன் எப்படி செல்வனாக ஆகமுடியும்?” என்றான் சண்டன்.

[ 32 ]

யமபுரியிலிருந்து மீட்டெடுத்த இளமைந்தனின் உடலுடன் அர்ஜுனன் யமுனைக்கரையில் எழுந்தான். விழிதிறந்த அம்மைந்தன் பசித்து கைகால் உதறி அழத்தொடங்கினான். தன் சுட்டு விரலை அவன் இதழ்களில் கொடுத்து உளம் கனிந்து “நிறைக!” என்று அர்ஜுனன் சொன்னபோது அதில் பாலூறியது. மைந்தன் உடல் எம்பி எழுந்து துள்ளும் சிறு கைகளை விரல் சுருட்டி ஆட்டி, உள்ளங்கால்கள் உட்சுருங்கி விரிய இதழோசையுடன் அவ்வமுதை சப்பி உண்டான். அவன் இதழ்க்கோடியில் பால்நுரை மெல்ல எழுந்து வந்து கன்னவளைவில் வழிந்து மென்கழுத்தை நனைப்பதை அர்ஜுனன் குனிந்து பார்த்தான்.

ஜாதவேதனின் இல்லத்திற்கு  அவன் சென்று சேர்ந்தபோது  அர்ஜுனனின் உடலெங்கும் அமுது நிறைந்திருந்தது. விரல் நுனிகள் அனைத்தும் பால் நிறைந்த முலைக்காம்புகள் என தரிப்பு கொண்டன. தித்திப்பில் திளைக்கும் நாவென ஆகிவிட்டிருந்தது அவன் உடல். எண்ணங்கள் அனைத்தும் தேனில் புழுவென நெளிந்து வழுக்கிக்கொண்டிருந்தன. மைந்தன் அவனுடன் இணைந்து அன்னையென அவனை எண்ணத்தொடங்கிவிட்டிருந்தான்.

இல்லத்து முற்றத்தில் மைந்தனுடன் அவன் கால் வைத்ததுமே திண்ணையில் அமர்ந்திருந்த ஜாதவேதன் எழுந்து இரு கைகளையும் விரித்து கூவி அழுதபடி அவனை நோக்கி ஓடி வந்தான். அவ்விரைவிலேயே கால்தடுக்கி முகம் அறைபட மண்ணில் விழுந்து இரு கைகளையும் நீட்டி அர்ஜுனனின் கால்களை பற்றிக்கொண்டான். “எந்தையே! என் குலதெய்வமே!” என்று கதறி அழுதான். சொல் விக்கி அவன் உடல் வலிப்புகொண்டது. குருதியும் கண்ணீரும் புழுதியுடன் கலந்து அவன் முகத்தில் வழிந்தன.

அவனை தோள் தழுவி எழுப்பி அமரச்செய்து அவன் மடியில் மைந்தனை படுக்கவைத்து “இதோ உன் மூதாதையர் மீண்டு வந்திருக்கின்றனர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம். நான் இறந்து மீண்டு வந்திருக்கிறேன். இனி எனக்கு இறப்பில்லை. அமுது நிறைந்துள்ளது என் மடியில்! ஆராவமுது!” என்று கூவி  அள்ளி மைந்தனை உடல் சேர்த்து வெறி கொண்டு முத்தமிட்டான். முத்தமிட்டு முத்தமிட்டு ஆற்றாமல் மூச்சிரைத்து நெஞ்சு விம்மினான். அவனாக மாறி அம்முத்தங்களை தானுமிட்டு நின்றான் அர்ஜுனன்.

“இனி இவன் பெயர் அமிர்தன். இறப்பற்றவன். அமிர்தன்! ஆம் அமிர்தன்!” என்று சொல்லி அவனை தூக்கி வானோக்கி நீட்டி “எந்தையரே, இனி மகிழுங்கள். இனி நிறைவடையுங்கள். என் குருதி இனி வாழும்” என்று கூவினான். அப்படியே மயங்கி பின்னால் சரிந்தான். அவன் கைகால்கள் மீண்டும் வலிப்பு கொண்டன. அவன் மடியில் குழந்தை அள்ளிப்பற்றியபடி அமர்ந்திருந்தது. தந்தையின் மணத்தை அது அறிந்துவிட்டிருந்தது. அவன் ஆடையை கைபற்றிச்சுருட்டி வாயில் வைத்து கவ்வியபடி கால்சுழித்தது.

ஓசை கேட்டு இல்லத்தின் இருளுக்குள்ளிருந்து பரல் மீனென வெளிறிய அவன் மனைவி தோன்றினாள். நெடுநாள் ஒளிகாணாதவள்போல அவள் கண்கள் சுருங்கின. வெறித்த நோக்குடன் அங்கு என்ன நிகழ்கிறது என்பதை பார்த்திருந்தாள். அக்காட்சி அவள் உள்ளத்தைச் சென்றடைய நெடுநேரமாயிற்று. எண்ணியிரா கணம் ஒன்றில் எண்ணத்தில் அனல் பற்றிக்கொண்டு விலங்குபோல அலறியபடி பாய்ந்து வந்து ஜாதவேதனின் மடியில் நெளிந்த மைந்தனை அள்ளிச்சுழற்றி மார்போடணைத்தாள். பெருங்கூச்சலுடன் பாய்ந்து இல்லத்திற்குள் ஓடினாள்.

அர்ஜுனன் அந்தணனை மெல்ல தூக்கி அழைத்துச்சென்று இல்லத்துக்கு முன் கால்கழுவ வைத்திருந்த கலத்துநீரை அள்ளி அவன் முகத்தில் அறைந்து நினைவு மீளச்செய்தான். ஜாதவேதன் “என் மைந்தன் என் மைந்தன்” என்று  கைகள் பதைக்க நீட்டியபடி  கூவினான். மைந்தனை மீண்டும் பறிகொடுத்துவிட்டோமா என அஞ்சி எழுந்து “என் மைந்தன் எங்கே? என் மைந்தனை எவர் கொண்டுசென்றார்கள்?” என்றான். அனைத்தும் உளமயக்கோ என்று தோன்ற “பாண்டவரே! பாண்டவரே” என்று கூவினான்.

“நலமாயிருக்கிறான் குழந்தை. உங்கள் மனைவியிடம் இருக்கிறான்” என்று அர்ஜுனன்  கூறினான். ஜாதவேதன் பெருமூச்சுகளும் விம்மல்களுமாக மெல்ல அடங்கினான். கண்களை துடைத்துக்கொண்டு “வருக இளவரசே, என் இல்லத்தில் ஒருவாய் நீர் உண்டு என் குலத்தை வாழ்த்துக!” என்று கண்ணீருடன் அர்ஜுனன் கைகளை பற்றினான்.

அச்சிறு புல்வீட்டிற்குள் நுழைந்து ஜாதவேதன் இட்ட தோலிருக்கையில் அர்ஜுனன் அமர்ந்தான். ஜாதவேதன் அடுமனைக்குள் சென்று என்ன இருக்கிறது என்று அறியாமல் அனைத்துக் கலங்களையும் துழாவி ஒரு மூங்கில் குவளையில் ஆறிய பாலுடன் வந்து “இது ஒன்றே எனக்கு அளிப்பதற்கென்று இருக்கிறது. ஏழை நான். உணவென்றாகி வந்த வேதத்தையும்  இத்தனைநாள் மறந்துவிட்டிருந்தேன். சற்று பொறுங்கள், அரசே! நான் உணவாக்குவேன்” என்றான்.

“ஆகட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். மீண்டும் ஓர் அலையென நினைப்பெழ “எங்கே என் மைந்தன்?” என்று கூவியபடி ஜாதவேதன் உள்ளே சென்றான். இல்லத்தின் சிற்றறைக்குள் மைந்தனுடன் புகுந்து கதவை உள்ளிருந்து மூடிவிட்டிருந்தாள். “பாரதி, என்ன செய்கிறாய்? கதவைத் திற” என்று அவன் கூவினான். கதவை ஓங்கித் தட்டியபடி “என்ன செய்கிறாய் என் மைந்தனை? பிச்சி, பேதை, திற கதவை!” என்று கூச்சலிட்டான்.

உள்ளிருந்து உறுமல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. அவன் செவிகூர்ந்துவிட்டு அஞ்சி அர்ஜுனனிடம் ஓடிவந்து  “பாண்டவரே, கதவை திறந்து கொடுங்கள். அவள் பிச்சி. என் குழந்தையை அவள் கொன்றுவிடுவாள்” என்றான். “எந்தப் பிச்சியும் தன் குழந்தையை கொல்வதில்லை” என்று அர்ஜுனன் சிரித்தான். அறைக்குள் இருந்து நெஞ்சில் அறைந்து அழும் பேரொலி கேட்டது. “அழுகிறாள். குழந்தை இறந்துவிட்டதென்று தோன்றுகிறது. அழுகிறாள்” என்று ஜாதவேதன் கண்ணீருடன் அர்ஜுனனின் கைகளைப்பற்றி இழுத்தபடி கூறினான்.

“நாம் அவ்வுணர்வை புரிந்துகொள்ள முடியாது, அந்தணரே. இளமைந்தர் நமக்குரியவர்கள் அல்லர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணையட்டும்” என்று அர்ஜுனன் அமர்ந்தபடியே சொன்னான். “அஞ்சுகிறேன், பாண்டவரே. அவளை நான் அறிவேன். ஊனுண்ணி விலங்கென என்னை உறிஞ்சி உண்ட பிடாரி அவள்” என்று கூறியபடி மூடிய கதவின் வாயிலின் முன்னாலேயே ஜாதவேதன் அமர்ந்து அழுதான்.

அன்று முழுக்க அன்னையும் மைந்தனும் அச்சிற்றறையின் இருளுக்குள் இருந்தனர். வாயிலுக்கு வெளியே தந்தை தலையில் அறைந்து அழுதபடியும் தவித்தபடி எழுந்து அமர்ந்தும் சோர்ந்து மீண்டும் விழுந்தும் காத்திருந்தான். மறுநாள் புலரியில் அறைக்கதவு திறந்து அன்னை தன் மைந்தனுடன் வெளிவந்தாள். சோர்ந்து விழிமயங்கி இருந்த ஜாதவேதன் அவ்வோசை கேட்டு துடித்து எழுந்து நோக்கியபோது அவன் முன்பென்றோ கண்டு மறந்திருந்த அவள் கன்னிமுகத்தை கண்டான். சொல் மறந்து இரு கைகளையும் கூப்பினான்.

அவள் இடையில் இருந்த மைந்தன் ஒரு முலை பற்றி அருந்த மறுமுலையில் இருந்து பால் ஊறி பீறிட்டு நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தது. ஓசை நிறைந்த காலடிகளுடன் எவரையும் பார்க்காதவள்போல நடந்து அவள் வெளியே சென்றாள். ஜாதவேதன் எழுந்து அர்ஜுனனிடம் ஓடிவந்து “மீண்டும் அவள் முலை ஊறியிருக்கிறது. இது எவ்வண்ணம் என்று தெரிந்திலேன்” என்றான். “மண் செழிக்க மழையை அனுப்பும் பெருநெறியின் ஆணை அது” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்களை மறந்துவிட்டேன், பாண்டவரே. உணவருந்துங்கள்” என்று அடுமனை நோக்கி ஓடினான் ஜாதவேதன்.

அவ்வில்லத்தில் அர்ஜுனன் ஆறு நாட்கள் தங்கியிருந்தான். ஒவ்வொரு நாளும் பகல் முழுக்க அக்குழவியை மாறி மாறி முலையூட்டியபடி அன்னை இல்லத்தைச் சுற்றிய குறுங்காட்டில் அலைந்தாள். மானுட விழிகள் எதையும் அவள் விழிகள் சந்திக்கவில்லை. இரவில் மீண்டு வந்து அடுமனைக்குள் அமர்ந்து மாதப்பசி கொண்ட ஓநாய் என அனைத்து உணவையும் அள்ளி விழுங்கினாள். மைந்தனை தன் முலைகளுக்கு நடுவே அணைத்தபடி விழுந்து துயின்றாள். அவன் ஒவ்வொருமுறை அசையும்போதும் விழித்தெழுந்து உறுமியும் முத்தமிட்டும் தழுவியும் ஆற்றுப்படுத்தினாள்.

ஜாதவேதன் அர்ஜுனனுக்கும் அவளுக்கும் உணவு சமைத்தான். பித்து எழுந்தவன்போல அவன் பேசிக்கொண்டே இருந்தான். பிறந்து மறைந்த அத்தனை பிள்ளைகளையும் அவன் ஒவ்வொரு நாளென கணமென காட்சியென நினைவில் மீட்டுக்கொண்டுவந்தான். அத்தனைபேரும் ஒரு மைந்தன் என வந்து தன் முன் நின்றிருப்பதுபோல. அவன் மனைவியோ அனைத்து மைந்தர்களையும் மறந்து முதல் குழவியை ஈன்றவள் போலிருந்தாள்.

ஏழாவது நாள் அவள் மெல்ல மீண்டு வந்தாள். தோட்டத்திலிருந்து அவள் வருகையில் வில்லுடன் எதிரே சென்ற அர்ஜுனனை நோக்கி கைகளைக் கூப்பி விழிதாழ்த்தி நின்றாள். அர்ஜுனன் அருகே நின்று புன்னகை செய்து “உன் மைந்தன் மீண்டுவிட்டான், அன்னையே” என்றான். “ஆம், இனி இப்புவியில் நானடைவதற்கொன்றுமில்லை” என்று அவள் சொன்னாள். “நான் இன்னும் ஏழு பிறவி எடுத்து தங்கள் தேருக்குப் புரவியாக வேண்டும். அது ஒன்றே என் வேண்டுதல்” என்றபின்  எழுந்த அழுகையை அடக்கியபடி மைந்தனை அணைத்து இல்லத்திற்குள் புகுந்தாள்.

மறுநாள் ஜாதவேதன் அர்ஜுனனிடம்  வந்து “அவள் மீண்டுவிட்டாள். இன்று என்னிடம் சொல்லாடினாள். இளவரசே, அவளிடம் இயல்பாக சொல்லுரைத்து எத்தனையோ நாளாகிறது. இத்தனை காலம் அவளில் இருந்த கொலைத்தெய்வத்தின் முகம் விலகி சில கணங்களிலேயே அவள் இயல்முகம் மீண்டு வந்ததை எண்ணி வியக்கிறேன். அவளுக்குள் இருந்திருக்கிறதா அது?” என்றான். உவகையுடன் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் திரிந்தான். “அதைவிட அந்த வெறிமுகத்தை எப்படி இத்தனை விரைவில் நான் முற்றிலும் மறந்தேன் என்று எண்ணுகையில் விந்தையால் என் உள்ளம் திகைக்கிறது” என்றான்.

“மானுடர் தங்கள் விழைவால் உருவாக்கிக்கொண்ட உலகம் இது” என்று அர்ஜுனன் புன்னகை செய்தான். பின்னர் குரல் தழைந்து முகம் திருப்பி “இத்தனை நாள் நான் இங்கிருந்ததே மீண்டும் அம்மைந்தன் என் கைக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். அவனைத் தழுவி முத்தமிட்டு வாழ்த்தி மீள்கிறேன். என் உடல்நிறைந்திருக்கும் அமுதை அவனுக்களிக்காமல் இங்கிருந்து நான் செல்ல முடியாது” என்றான்.

“அவ்வண்ணமே” என்று சொல்லி உள்ளே சென்று மனைவியுடன் மைந்தனை அழைத்து வந்தான் ஜாதவேதன். அவள் அருகே வந்து மண்டியிட்டு அர்ஜுனனின் மடியில் தன் மைந்தனை வைத்தாள். ஓயாது முலையுண்டதனால் உடல் ஒளிபெற்று விழிகள் கூர்கொண்டிருந்த மைந்தன் “ந்தை” என்ற ஒலியெழுப்பி காலுதைத்து மெல்ல புரண்டு அர்ஜுனனின் மார்பிலிருந்த ஆடையை பற்றிக்கொண்டான்.

குனிந்து அவன் நெற்றியில் கன்னங்களில் இளந்தோள்களில் முத்தமிட்ட அர்ஜுனன் அவனைத் தூக்கி அண்ணாந்து மென்வயிற்றில் தன் மூக்கையும் வாயையும் புதைத்து அசைத்தான். கைகால்கள் நெளிய துள்ளிக் குதித்து மைந்தன் நகைத்தான். இரு கைகளையும் கூப்பி அன்னை அமர்ந்திருந்தாள்.

மைந்தனை அன்னையிடம் அளித்து அர்ஜுனன் எழுந்தான். “இது முடியாத சுழல் என்றுணர்ந்தேன், அன்னையே. என்னுள் நிறைந்த அமுதனைத்தையும் இவனுக்கு அளித்து இங்கிருந்து கிளம்பலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஒரு துளி அளிக்க ஓராயிரம் துளி பெருகும் ஊற்று அது என்று அறிந்தேன். இவ்வொரு மைந்தனை அமுதூட்டியே இப்பிறப்பை இங்கு கழித்துவிடுவேன். என் கடன்கள் என்னை அழைக்கின்றன. செல்லும் தொலைவு காத்திருக்கின்றது. வழி அளிக்கவேண்டும்” என்றான்.

ஜாதவேதன் “இன்னும் ஒரு வாரம் இங்கிருக்க வேண்டும், பாண்டவரே. இக்குடில் தாங்கள் தங்குமிடமல்ல என்றறிவேன். என்றாலும் என் மைந்தனுக்கு இடையணி அணிவித்து பெயர் சூட்டும் விழா ஒன்று ஒருக்கியிருக்கிறேன். வரும் முழுநிலவுநாளில் அவனுக்கு மெய்ஆசிரியனாக தாங்கள் அமர்ந்து அச்சடங்கை செய்ய வேண்டும். அருள வேண்டும்” என்றான்.

அச்சொல்லுக்கு முன்னரே தன்னால் உடனே கிளம்பமுடியாதென்று அர்ஜுனன் அறிந்திருந்தான். அது ஒரு நிமித்தம் என அமைய “ஆம், அவ்வாறே” என்றுரைத்தான்.

முந்தைய கட்டுரைநடுங்கும் நட்சத்திரங்கள்
அடுத்த கட்டுரைநீர் நிலம் நெருப்பு – ஆவணப்படம் பதிவுகள்