மடத்துவீடு, புத்தரின் கண்ணீர் – விமர்சனங்கள்

 

senthil
ராம் செந்தில்

 

அன்புள்ள ஜெ

நீங்கள் சுட்டி காட்டி இருந்த இரண்டு சிறுகதைகளையும் வாசித்தேன் .(http://www.jeyamohan.in/91963#.WCCXgNV96M8) .நான் கூற விரும்புவதை மிக சுருக்கமாக கீழே எழுதியுள்ளேன் .

1.ராம் செந்திலின் மடத்து வீடு: சிறுகதையின் ஆரம்பத்தில் இருந்தே சீர்கேடு வீழ்ச்சி தொடர்பான படிமங்களும் ,குறியீடுகளும் காணக்கிடைக்கின்றன .இடிந்த வீடு ,வீழ்ச்சி அடைந்த குடும்பம் ,நொறுங்கி போன சமையலறை ,வாழ்க்கையோடு தன்மானத்தை இழக்காமல் போராடும் மூன்று திருமணமாகாத பெண்கள் ,அவர்களை போக பொருளாக ,அதுவும் எளிதில் கிடைக்கும் ,கேட்பாரற்ற போக பொருளாக கருதும் மூன்று இளைஞர்கள் ,கைகால் பேச்சு எல்லாம் இல்லாமல் போனாலும் குளிக்கும் பெண்களை பார்க்க விரும்பும் கிழ தந்தை ….இவை இணைந்து சொல்லும் விஷயம் மிகவும் நுட்பமானது .அந்த பெண்கள் விகல்பமில்லாமல் பழகுகின்றனர் .ஒரு வேளை அருணை தங்கள் பாது காவலனாக கூட அவர்கள் கருதி இருக்க கூடும் .அனால் அருணோ அவனது நண்பர்களோ அவ்வாறு எண்ணவில்லை .பிரசாத்துக்கு மட்டும் தான் சிறிதளவாவது குற்ற உணர்ச்சி இருக்கிறது .

 

இந்நிலையில் ராவ் வாசலுக்கு போக வேண்டும் என ஆடம் பிடிப்பது தான் கதையின் முக்கிய பகுதி .மூன்று இளைஞர்களுக்கும் ஒரு வித anagnorisis வரும் பகுதி .”எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்..”    என்னும் வார்த்தைகளை கேட்டதும் அவர்கள் மூன்று பேர்களுக்கும் தங்களை தாங்களே ஒரு உடைந்த கண்ணாடியில் பார்த்தது போல் இருந்திருக்கும் .அவர்களது கீழ்மை முகத்தில் அடித்திருக்கும் .இந்த தருணம்  தான் இக்கதையை ஒரு சிறந்த சிறுகதையாக மாற்றுகிறது என எண்ணுகிறேன் .

 

இன்னொரு விஷயமும் இருக்கிறது .சமீப காலங்களில் சிறுகதைகளில் பிராமணர்களை ,குறிப்பாக ப்ராஹ்மண மகிளிரை ஒரு வித fetish உடன் தான் பலரும்(அந்த சமூகத்தை சார்ந்த எழுத்தாளர்கள் உட்பட ) சித்தரித்து வந்தனர் .ஆனால் இக்கதை அப்படி இல்லை .ஆசிரியர் மொழி மற்றும் வடிவத்தை சிறிது செம்மை செய்ய வேண்டும் என எண்ணுகிறேன் .மொத்தத்தில் உங்கள் வழியாக மற்றொரு நம்பிக்கை நட்சத்திரத்தை )) கண்டு கொண்டதாக எண்ணுகிறேன்

 

 

2.புத்தரின் கண்ணீரை பொறுத்த வரையில் எதிர் தரப்பை கருத்தில் கொண்டு எழுத பட்டிருப்பது தான் ஒரே சிறப்பு .ஆனால் எளிய நீதி கதையாக முடிந்து விட்டதோ என தோன்றுகிறது .குறிப்பாக பவுத்தத்தில் அதுவும் சிங்கள பவுத்தத்தில் இருந்து ஒரு  எளிய விவசாயி தமக்கான அறத்தை உருவாக்கி இருக்க முடியுமா எனக்கு தெரியவில்லை .பவுத்த பிக்ஷுக்கள் தற்கொலை படையாக மாறிய வரலாறு அங்கு உண்டு .எனவே புத்தரின் கண்ணீரை அதன் அரசியல் சரிக்காக ,அன்பின் மீது மானுடத்தின் மீது உள்ள நம்பிக்கைக்காக போற்றலாமே தவிர்த்து இலக்கிய ரீதியாக கொண்டாட முடியாது என்று தோன்றுகிறது .

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன்

அனிஷ் க்ருஷ்ணன்

 

Siththanthan-2

திரு. ஜெ,

உங்கள் வலைதளத்தில் கொடுத்த சொடுக்கியின் படி, இரண்டு சிறு கதைகளையும் படித்தேன்,

மடத்துவீடு :

கதை எந்த மையமும் இல்லாமல் சுற்றி வருவதாக படுகிறது. கதை மாந்தர்கள்
உரையாடல் ஒரு சீர் இல்லாமல் இருக்கிறது. தேவைக்கு அதிகமாக வீட்டின் உள்
விவரணைகள் உள்ளது. வீட்டின் முன்னால் உள்ள பெண்கள் சிலையையும் அந்த
வீட்டின்  பெண்களுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த போதுமான  முயற்சி
செய்யப்படவில்லை.

இது திரு செந்தில் அவர்களின் முதல் கதை எனில் முயற்சியை  பாராட்டலாம்,
நல்ல எழுத்தாளர் ஆக கதையில் இன்னும் செறிவு, கதை மாந்தர் இயல்புகள், நுண்
தகவல்கள் அவசியம். கதையின் மையச்சரடு இன்னும் சற்று தெளிவாக பின்ன
பட்டிருக்க வேண்டும்.

புத்தரின் கண்ணீர்:

கதையில் சம்பவங்களில் சற்று நாடக தன்மை உள்ளது, பெரும் பகுதி சம்பவங்கள்
வெறும் உரைநடையாக வருகிறது. நான் என் நண்பரிடம் கேட்டு அறிந்தது வரை
பேசப்படும் தமிழ் சிங்களருக்கானது அல்ல, அது வலிந்து திணிக்க
பட்டிருப்பதாக படுகிறது.

கதையில் பல  இடங்களில்  முரண்பாடுகள் தென்பட்டாலும், கதையின் நடையினை
மாற்றி உயிரோட்டம் கூட்டி இருக்கலாம்.

திரு ஜெ, என்னுடைய விமரிசன நோக்கு சரியா எந தெரியவில்லை ,  தங்களை
மட்டுமே பல மாதங்களாக வாசிப்பதனால் உண்மையில் சற்று அதிகப்படியாக எதிர்
பார்த்து  விட்டேனா ?

நன்றி,

அன்புடன்,

இப்ராஹிம் அலி பாதுஷா

 

 

இனிய ஜெயம்,

 

புத்தரின் கண்ணீர்.

 

”மூளைக்குள் ஒரு முள்மரம் முளைத்து வளர்வதைப் போல” என்றொரு வர்ணனை வருகிறது,தந்தையின் தவிப்புக்கு நேரான வர்ணனை.  இந்த வர்ணனை தவிர்த்து  கதையின் எந்த எல்லையிலும், அப்பாவின் தவிப்போ, மகனின் குற்ற உணர்வோ, தாய் தங்கையின் தகிப்போ வாசகனுக்கு  உணர்வாக கடத்தப் படாமல் தகவலாக சொல்லிச் செல்லப் படுகிறது.

அதுவும் மிக மிக எளிமையாக, மிக மிக நேரடியாக,  மகன் எனும் எதிர்கால நம்பிக்கை, மானுட வீழ்ச்சியின் பெருக்கில் ஒரு துளியாக அந்த நம்பிக்கை சிதறும் நிலையை எதிர்கொள்ளும் தந்தை.  ஆழமான கரு. ஆனால் அதில் ஒரு  இம்மியும் திரளாத கதை.   தேய் வழக்கான தலைப்பு உட்பட இதில்  என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதை மட்டும் வாசித்துக் கொண்டால் போதும். அனைத்தையும் அதுவே சொல்லி விடுகிறது.

 

 

மடத்து வீடு.

 

 

வறுமைக்கு எதிராகப் போராடி வாழும் மூன்று இளம் பெண்கள், உடல் இயலாத நிலையிலும் அவர்களை வேலை வாங்கும், தினமும் சோடா குடிக்கும் சொகுசு வாழ்க்கை வாழும், அவர்களின் உழைப்பை சுரண்டி எஞ்சும் தந்தை.  அந்த பெண்களை நுகர அவர்களின் வீட்டு ஹால் வரை வரும் மூன்று யுவன்கள்.  இந்த மூன்று  யுவதிகளும்  ”தாங்கள் நினைத்தவர்கள்” போன்றவர்கள் அல்ல என மூன்று  இளைஞ்ர்களும்  ”உணரும்” தருணம்.   இக் கதை  மிக பலவீனமான கதைத் தருணம் காரணமாக கலையாகத் திரளவில்லை.

 

மிக இயல்பாக மூவராலும் அந்த வீட்டுக்குள் நுழைய முடிகிறது.  ராஜேஷின் இரட்டை அர்த்த பேச்சுக்கு ராஜ்ஜியின்  எதிர்வினை, வித்யா  அரைகுறை ஆடையுடன் எந்த சலனமும் இன்றி அவர்களை கடந்து செல்வது, இலக்கை நோக்கி மட்டுமே பேசும் ராஜேஷ்க்கு  வித்யா தண்ணீர் எல்லாம் கொடுத்து உபசரிப்பது, என இக் கதையின் உள்ளடக்கத்தை உருவாக்கும் இந்த க்ரே ஏரியா  மிக மிக பலவீனமாக உருவாகி வந்திருக்கிறது. ஆகவே இக் கதை முடிகையில் வாசகனுக்கு  மானுட அகம் எனும்  விசித்திர வெளியில்  சில பகுதிகளை கண்ட துணுக்கு ஏற்ப்படாமல்  இலக்கிய வடிவுக்குள் சொல்லப்பட்ட ஒரு சமூக நன்னெறிக் கதை  வாசித்த உணர்வே மிஞ்சுகிறது.

 

கடலூர் சீனு

 

இனிய ஜெயம்,

 

இதுவரை நான் நமது நண்பர்கள் யாருடைய கதையையும் விமர்சித்ததில்லை. செந்தில் ஜி  ஏதேனும் வருத்தம் கொள்வார் எனில், கடிதத்தில் என் பெயரை எச்சி தொட்டு அழித்து விடவும்

முந்தைய கட்டுரைதீபாவளி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசில சிறுகதைகள் 2