நடுங்கும் நட்சத்திரங்கள்

 

ஆதிப்படிமங்கள் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு கவிஞனும், ஒவ்வொரு கவிதையும் அவற்றை பொருள்மாற்றம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒருவரின் சூரியன் அல்ல பிறிதொருவரது. ஒருவரின் கடல் அல்ல பிறிதொருவர் காண்பது. ஆயினும் அனைத்துக் கவிதைகளுக்கும் பொருள் அளித்தபடி வெளியே கடல் அலையடித்துக்கொண்டிருக்கிறது

 

Sugumaran-Photo

கடலினும் பெரிது

சுகுமாரன்

 

விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்

காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
‘வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்’ என்றார்கள்.

உப்பை ருசித்தபடி கேட்டேன்
‘ஏழினும் பெரிய கடல் இல்லையா?’

 

என்னும் கவிதையை வாசித்ததும் நினைவுகள் வாசித்த அனைத்து கவிதைகளையும் தொட்டுக்கொண்டன. ‘ஏழாம் கடலினக்கரே’ என்னும் மலையாளச் செம்படவப்பாடல்.

 

சுகுமாரனின் கடல் கடந்துசெல்வதற்குரியது.  பிறருக்கு அது அரியது, ஆனால் கவிஞனால் கடக்கத்தக்கது. அலையலையாக கரையில் அறைந்து அறைகூவிக்கொண்டிருப்பது அது.

 


download (1)

 கொண்டுவந்த கடல்

யுவன் சந்திரசேகர்

 

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

 

யுவனின் கடல் நேர்மாறாக அள்ளி கொண்டுவந்து உடைமையாக்கப்படவேண்டியது. சிப்பி போல சோழி போல கையில் அகப்படுவது. அகப்படாத ஒன்றாக அப்பால் விரிந்திருப்பது.

 

பிறிதொரு கடலை தற்செயலாக வாசித்தபோது கண்டடைந்தேன். இந்தக்கடல் அச்சுறுத்துகிறது. அள்ளமுடியாததாக, அறியமுடியாததாக, விண்மீன்களை நடுங்கச்செய்வதாக விரிகிறது

photo (1)

கடலைக் களவாடுபவள்

 

சுஜாதா செல்வராஜ்

 

கடலாடி மகிழும் மகள்

நம்ப மறுக்கிறாள்

கடலை

உடன் எடுத்துச்செல்லுதல்

இயலாதென்பதை

தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்

குடிபுக முடியாதென்பதையும்

ஆமை ஓட்டிற்குள் மழைக்கு

ஒதுங்கமுடியாதென்பதயும்

 

 

பதறப் பதற

கிளிஞ்சல்களைப்

பொறுக்கத் தொடங்குபவள்

அரற்றிக்கொண்டு வருகிறாள்

வீடுவரை

உணவை மறுதலித்து

விழிகளை நிறைத்தபடி

உறங்கிப்போகுமவள்

விரலிடுக்கில் உறுத்தும்

மணலும்

உள்ளங்கைக்குள் புதையும்

கிளிஞ்சல்களும்

கடலுக்கு

வலைவீசிக்கொண்டிருக்கும்

நடுநிசிப் பொழுதில்

நடுங்கும் நட்சத்திரங்கள்

இமை தாழ்த்தி

உறைகின்றன

 

பெண்ணின் பார்வையில் விரிவைப்பார்த்த மறுகணமே எல்லைகளை உணர்ந்து பின்வாங்கி சுருங்குவதாக கடல்காணும் அனுபவம் அமைகிறதோ என்று தோன்றியது. அன்னையின் பார்வையில் மகளுக்குச் சொல்லப்படுகிறது இக்கவிதை.

 

தமிழ்க்கவிதை மரபில் செவிலிக்கூற்று எனப்படும் கவிதைகள் ஒரு நிரை. நற்றாய் என்று செவிலி சொல்லப்படுகிறாள். சங்கப்பாடல்களில் இருந்து ஆழ்வார் பாடல்களுக்குக் குடியேறிய ஓர் அழகியல் அது. உலகை அறிந்த அன்னை மகளுக்குச் சொல்லும் வரிகள் அவை. இயல்பாக அம்மரபில் சென்றமைகின்றது இக்கவிதை

 

சொல்லப்படமுடியாதவற்றை எவ்வண்ணமோ சொல்லிவிடும்போதே அது கவிதை. நடுநிசிப் பொழுதில் நடுங்கும் நட்சத்திரங்கள் என்னும் வரி நெடுநேரம் உடனிருந்தது என்னுள். இயல்பாக எளிய விஷயமொன்றைச் சொல்லிவிட்டதனாலேயே நிறைவளித்தது இது

 

முந்தைய கட்டுரைசில சிறுகதைகள் -3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22