‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20

[ 27 ]

காலத்தின் இருள் தேங்கிய கரிய அரண்மனையின் அறைகளினூடாக விதிர்ப்புகொண்டு அசைந்த உயிர்த்தசைகளினாலான தரைமேல் கால்வைத்து உயிர்ப்புக் காற்றின் அலைகளால் குழலும் ஆடையும் அசைய அர்ஜுனன் நடந்தான். சித்ரபுத்திரர் அவனுக்கு வழிகாட்ட யமி துணைவர பின்னால் ஔதும்பரனும் சண்டாமிருகனும் சம்பரனும் சார்த்தூலனும் உடன்வர இருளில் புதைந்து புதைந்து அவ்வறைகளைக் கடந்து அரசமண்டபத்தின் முகப்புக்கு வந்து நின்றான்.

அங்கிருந்த காவலர் அவனை வணங்கி வாயில் திறந்து உள்ளே கொண்டு சென்றனர். பெருந்திரளென எழுந்து குவிந்து வளைந்து கூரையாகி சூழ்ந்திருந்த மானுட உடல்களால் ஆன மண்டபத்திற்கு நடுவே விண்ணிலென நின்றது ஒரு துலா. அதன் நடுவே முள் என அசையாதிருந்தது கூரிய வாள். அதன் கீழே அமைந்த அரசமேடையில் தன் தேவி தூமார்ணை இடம் அமர்ந்திருக்க முகங்கள் விழிதிறந்து இதழ்களில் நுண்சொல் உறைந்திருக்க பதிந்த ஏழடுக்கு மணிமுடி சூடி காலதேவன் அரியணை வீற்றிருந்தான்.

அனல் ஒளிரும் விழிகளும், எருமைக்கொம்பு போன்ற மீசையும் , புலிவிழிகளும் மான்விழிகளும் கொண்டு கோத்த இளநீலமணியாரங்கள் பரவிய மார்பும், பல்கோத்து அமைத்த வெண்மணியாரம் சுற்றிய பெருங்கைகளும், இருள்நெய்த ஆடையும், குருதியொளி கொண்டிருந்த கழல்கள் வளைத்த கால்களும் கொண்ட காலதேவன் அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனுக்குக் கீழே நிழலுருவ கணதேவர்கள் தரையில் படிந்தும் சுவரில் மடிந்தும் நின்றிருந்தனர். அவன் விழிதிரும்பியதும் உடல்கொண்டெழுந்து வணங்கி ஏவல் காத்தனர்.

அர்ஜுனன் அவன் முன் சென்று வணங்கினான். “அஸ்தினபுரியின் குருகுலத்து பாண்டுவின் மைந்தன் அர்ஜுனன் நான். தென்திசை ஆளும் அரசனை பார்க்க வந்துள்ளேன்” என்றான்.  மீசையை நீவியபடி விழிகளில் புன்னகையுடன் காலன் கேட்டான் “நான் பிறிதொரு அரசன் என்கின்றீர் அல்லவா?” அவன் விழிகளை சந்தித்து அர்ஜுனன் சொன்னான் “ஆம்.” “நன்று, அவ்வெண்ணம் போற்றற்குரியது” என்றபின் திரும்பி “அவருக்கொரு பீடம் அளியுங்கள், அமைச்சரே” என்று சித்ரபுத்திரரிடம் சொன்னான்.

அவர் ஒருகணம் தயங்க “ஆம், இங்கு இதற்கு முன் ஒருவர்  என் முன் பீடத்தில் அமர்ந்ததில்லை. ஆனால் இவர் அதை கோரிப்பெற்றிருக்கிறார்” என்றான். கணத்தோர் இருவர் நிழல் புடைத்து எழுந்து அமைத்துச் சென்ற பீடம் மழலைக் குழந்தைகளை கைகளையும் கால்களையும் ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து அமைத்ததாக இருந்தது. இளமார்புகள் மூச்சில் எழுந்தமைந்தன. குழைந்த வயிறுகள். தொப்புள்கள். பால்திரை மாறா கண்கள். சுவைதேடும் சிற்றுதடுகள். அர்ஜுனன் கையால் தொட்டு அவற்றின் மென்மையை உணர்ந்தபின் அமர்ந்து கைகளை பக்கவாட்டில் வைத்து நன்கு சாய்ந்து கொண்டான்.

“அவர்கள் உங்கள் குலத்தில் வாழ்வு முற்றாதிறந்த மைந்தர்கள்” என்றான் காலன். அர்ஜுனன் “இவ்வுடல்கள் அல்ல அவர்கள்” என்றான். காலன் “இவ்வுடல்களில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் உதிர்த்துச் சென்ற பொருட்கள் இவை. இவற்றில் எஞ்சியிருப்பது எதுவென்றாலும் அவர்களுக்கு உகந்ததல்ல என்றே கொள்வேன். என் மூதாதையர் அறம் பிழைக்காத கோல் கொண்ட அரசர்கள் அளித்த அன்னத்தாலும் நீராலும் விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு அறமீறல் ஒன்றுக்காகவே துயர்கொள்வார்கள்.”

காலன் அவனை நோக்கி சில கணங்கள் அமர்ந்திருந்தபின் “இன்நீர் அருந்துக!” என்றான். “ஆகுக!” என்றான் அர்ஜுனன். ஒரு கணத்தவன் கொண்டுவந்த தாலத்தில் இருந்த தலையைப் பார்த்து அர்ஜுனன் விழி சுருக்கினான். யுதிஷ்டிரரின் விழிகள் அவனை துயருடன் நோக்கிக்கொண்டிருந்தன. அவர் இதழ்கள் அசைந்தன. வெட்டி வைக்கப்பட்ட அந்தத் தலையைத் தூக்கி கீழே ஒழுகிய குருதியை பொன்னாலான கிண்ணத்தில் ஊற்றி அவனிடம் நீட்டினான் கணத்தான். “பார்த்தா, அது என் துயர்” என்றார் யுதிஷ்டிரர்.

காலன் நகைத்து “அது விழிமயக்கல்ல. இங்கு நாங்கள் உண்பது கீழே வாழ்பவர்களின் குருதியைத்தான். மானுட உடல்களில் கணம் ஒழியாது ஊறும் குருதி எங்கு செல்கிறதென்று எண்ணுகிறீர்?” என்றான். “ஆம், அவற்றை காலம் உண்கின்றது என்றே உயிர்வேதம் சொல்கிறது” என்றபடி அவன் அக்குவளையை எடுத்தான். யுதிஷ்டிரர் “பார்த்தா, அது என் தனிமை” என்றார். அவன் அதை அருந்தியதுமே சோர்வெல்லாம் மறைந்து புத்துணர்வடைந்தான். “சுவையானது” என்றான் யமன். “ஆம், என் சுவை” என்றான் அர்ஜுனன்.

“சொல்க, நீர் வந்த நோக்கம் எது?” என்று எமன் கேட்டான். “அதை முன்னரே அறிந்திருப்பீர்கள், காலரே. மண்ணில் ஒன்பது மைந்தர்களை பறிகொடுத்த ஜாதவேதன் என்னும் அந்தணனுக்கு சொல்லுறுதி அளித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். அவன் இறுதி மைந்தனை உயிருடன் பெற்ற பின்னரே மீள்வேன்” என்றான் அர்ஜுனன். “அது இன்றுவரை புவியில் நடந்ததில்லை என்று அறிய மாட்டீரா? பிறப்பும் இறப்பும் நிகர் செய்யப்பட்ட அவ்வுலகில் ஒரு துளி சொட்டி நீர் உதிர்வதன் நெறியும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்ட ஒன்று. நானல்ல, பிற திசைத்தேவர்கள் அல்ல, மூன்று முதல்வர்கள் அல்ல, முழுமுதல் பிரம்மமே எண்ணினாலும் அதை மாற்றமுடியாது” என்றான் காலன்.

“ஆம், அவ்வாறே எனக்கு சொல்லப்பட்டது. ஆனாலும் வாக்களித்த ஒன்றின் பொருட்டு  தன்னை முழுதளிப்பது வீரனின் கடமை” என்றான் அர்ஜுனன். காலன் தொடைதட்டி உரக்க நகைத்து “நீர் முன்னரே உயிர் துறந்துவிட்டீர், பாரும்” என்று இடப்பக்கம் கை நீட்டினான். அங்கு தன் உடல் ஒரு பீடமென போடப்பட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இரு கைகளையும் கால்களையும் ஊன்றி மல்லாந்து வளைந்து வயிறு மேலே பரந்திருக்க  நின்றிருந்த அவன் உடல்மேல் தூமக்கலம் இருந்து புகைந்துகொண்டிருந்தது. “யமுனைக்கரையின் புதர்க்காடு ஒன்றுக்குள் உம் சடலத்தின் மீது காகங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று அறத்தோன் சொன்னான். “அவை என்னை உண்ணட்டும்” என்றான் அர்ஜுனன்.

“இறப்புக்கு என்றே எழுந்தேன். இறந்து இங்கு வந்திருக்கிறேன். இங்கு ஏதேனும் நான் இழப்பதற்கு இருந்தால் அதையும் கூறுக! இழந்து இழந்து சென்று எல்லையில் பெற்றுக்கொள்கிறேன் நான் விழைவதை” என்றான் அர்ஜுனன். “ஒரு சொல்லின்பொருட்டு வந்துள்ளேன். அது ஒன்றே நான் நிலைகொள்வது.”  யமன் “இங்கு நீர் இழப்பது  மறத்தால் அறத்தால் அளியால் நீர் ஈட்டிய விண்ணுலகங்களைத்தான். இந்நற்செயலுக்கென உமக்கு வந்தமையும் அருட்கொடையையும் நீர் இழப்பீர். உம் மைந்தர் அளிக்கும் அன்னமும் நீரும் இங்கு வந்து சேர்வதில்லை. முடிவிலி வரை இங்கு ஒளி எழுவதில்லை” என்றான்.

“இளைய பாண்டவரே, முடிவிலியில் வாழ்வதென்பதே நரகம். அங்கு செல்வதற்கு மட்டுமே பாதை உள்ளது” என்று யமன் தொடர்ந்தான். “நரர்களினால் ஆனது அது. நீர் வெறுப்பவர்கள் மட்டுமே சூழ்ந்திருக்கும் முடிவிலா இருள்வெளி.” அர்ஜுனன் விழிமாறாது “அவ்வாறே ஆகுக!” என்றான். “நான் கடந்து வரவேண்டிய இடங்கள் அவை என்றே கொள்கிறேன். என் எல்லை எதுவென அறியும் வாய்ப்பு இது. எழுந்துவரும் ஒவ்வொரு எல்லையையும் கடக்கிறேன். கடக்க முடியாத எல்லையில் அழிகிறேன். எங்கும் நின்றிருக்க மாட்டேன்.”

“நீர் அஞ்சவில்லையா?” என்றான் யமன். “நான் எனக்கென என்றும் அஞ்சியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “என் சொல்லை நெஞ்சில் அணிந்து அங்கொரு அந்தணன் எனக்காகக் காத்திருக்கிறான். இங்கு நான் தோற்பேன் என்றால் உங்களில் ஒரு கணத்தோன் சென்று அவனிடம் சொல்லட்டும், வீழ்ந்தான் இளைய பாண்டவன் என்று.” காலன் திகைப்புடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தான் அவனைச் சூழ்ந்து பல்லாயிரம் திகைத்த விழிகளாக நரகம் அவனை நோக்கியிருந்தது.

“இளையவரே, எதன் பொருட்டு இங்கு நீர் வந்தீர்? மண்ணில் நிகரற்ற வீரன் என்ற சொல்லை நிலை நிறுத்தவா? அதன்பொருட்டா இந்நரகங்களை எதிர்கொள்கிறீர்?”  என்றான் காலன். “இல்லை. காலம் என்பது சித்தம் சென்றுதொடாப் பெருக்கு. இன்று இவ்வுலகில் நிகரற்றவனாக இருந்தென்ன பொருள்? நாளை எழும் காலத்தின் அலைகளில் எத்தனையோ மாவீரர்கள் எழுவார்கள். அவர்களில் ஒருவனாகவே நான் நின்றிருப்பேன். எனவே ஒருபோதும் அச்சொல் என்னை தருக்கி நிமிரவைத்ததில்லை”  என்றான் அர்ஜுனன்.

“பிறகென்ன? உம் தோழனால் அவ்வந்தணன் புறக்கணிக்கப்பட்டான் என்பதனாலா? அவனுக்கெதிராகவா இங்கு கிளம்பி வந்தீர்?” என்றான் யமன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவனில் கூடியிருக்கும் தெய்வமேதென்று அறியேன். அது இறங்கியபின் அவ்வந்தணனைப் பழித்து துரத்தியமைக்காக அவன் நாணக்கூடும். அன்று அவன் காலடியில் அமர்ந்து அவன் தவறியவற்றை ஆற்றும் பொறுப்பில் நான் இருந்தேன் என்று அப்போது அவனிடம் சொல்லவேண்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். “காலத்திற்கிறையே, அவனை வென்று செல்வதற்காக அல்ல, அவன் விட்டுச் சென்றதை நிறைவேற்றவே வந்தேன்.”

அரியணைவிட்டு எழுந்து ஓர் அடி வைத்து முன்னால் வந்து குனிந்து விழிகூர்ந்து நோக்கி யமன் கேட்டான் “காலத்தின் மறுமுனையையும் காண விழிகொண்டவன் நான். ஒருநாள் அவனை நீர் மறுதலிப்பீர். உம் நாவால் அவனைப் பழிப்பீர். உளம் வெறுத்து அவனிடமிருந்து விலகிச் செல்வீர். அதை அறிவீரா?” சித்ரபுத்திரர் நீள்மூச்செறிந்தார்.

“ஆம், அறிவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “தன் முழு விடுதலையை தன்னந்தனியாகவே எவரும் ஏறிக்கடந்து அடையவேண்டும். அத்தனிமையில் கற்றதும் உற்றதும் முற்பிறப்பில் பெற்றதும் உடனிருக்காதென்று நூல்கள் சொல்கின்றன.” காலன் பெருமூச்சுடன் திரும்பி அமர்ந்துகொண்டான். “இன்று நீர் வெல்ல வந்தது எவற்றை என்றறிவீரா? இருபத்தியெட்டு நரகங்களால் ஆனது இவ்வுலகம். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு ததும்பிச் சொட்டும் மானுடர்கள் இறுதி ஆழத்தில் இருக்கும் இருளுலகில் சென்றமைகிறார்கள். அவ்வுலகங்களை வென்று வருபவன் இறப்பை வென்று நின்று சொல்கோர முடியும்.”

“இக்கணமே எழுகிறேன். நான் வந்தது அதற்காகவே” என்றான் அர்ஜுனன். பெருமூச்சுடன் கால்களைத் தளர்த்தி அமர்ந்து “இன்றுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. எனவே நிகழப்போவது என்னவென்று நான் அறியேன். உமக்கென என் உள்ளம் துயர்கொள்கிறது” என்றான் காலதேவன்.

[ 28 ]

அறத்துக்கிறைவனின் நான்கு உதவியாளர்களும் வந்து அர்ஜுனனின் அருகே நின்றனர். சித்ரபுத்திரர் தலைவணங்கி “வருக, இளைய பாண்டவரே! தங்கள் வழியை காட்டுகிறேன்” என்றார்.  அவன் திரும்பியதும் யமி அவன் கையைப் பற்றி “வேண்டாம், இளையவரே. அது மீளமுடியாத பாதை” என்றாள். அர்ஜுனன் “அனைத்துப் பாதைகளும் மீளமுடியாதவைதான், இளையவளே. மீளுதலென்பது ஒரு நம்பிக்கையன்றி வேறல்ல” என்றான். அவள் விழிநீருடன் “எதற்காக இது?” என்றாள். “நான் வீரன் என்பதற்காக. என் உள்ளிருக்கும் பிறப்பியல்பு இதைச் சொல்கிறது என்பதற்காக” என்றபின் புன்னகையுடன் அவள் தோளைத் தொட்டுவிட்டு திரும்பி நடந்தான்.

“இளையவரே…” என அவள் அழைத்தாள். அவன் அக்குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். “நான்தான்” என்றாள் கரிய பேரழகி. அவன் உளம் விம்ம திரும்பி அவளை நோக்கி நடந்தான். அவள் பின்னால் விலகவில்லை என்றாலும் நடுவே இருந்த தொலைவு குறையவில்லை. “நான்தான்” என அவள் சொன்னபோது கரிய ஒளிகொண்ட முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவற்றின் கூர்காம்புகளில் விழிநோக்கிருந்தது. “நான்தான். என்றும் உங்கள் காமம் நின்றிருந்தது என்மீதுதான்.”

“நீ என்னை விரும்பியதில்லை” என்று அவன் சொன்னான். “உன்னை அணுகும்போதெல்லாம் குறையாத இடைவெளியையே உணர்ந்தேன்.” அவள் புன்னகைத்து “மண்ணிலுள்ள எவருடனும் அவ்விடைவெளி எனக்கு உள்ளது” என்றாள்.  அவன் மேலும் முன்னகர அவள் அதே தொலைவுக்கு அப்பால் ஒரு குளிர்ந்த நீர்த்துளி என இருளின் ஒளி சூடி நின்றாள். “நான் அளிக்க விழைந்தேன். வெல்லப்படுவதை அல்ல” என்றாள். “வெல்லாது ஒன்றைக் கொள்வது எனக்குப் பழக்கமில்லை.” அவள் நீள்மூச்சுடன் “ஆம், இரு ஊசல்களில் நாம் ஆடிக்கொண்டிருந்தோம். தொட்டுத் தொட்டு விலகினோம்” என்றாள்.

“நீ என்னை விலக்கினாய். அணுக்கத்தின் உச்சத்தில் ஆண்மட்டுமே உணரத்தக்க ஒரு விலக்கம் அது” என்றான் அர்ஜுனன். “அவ்விலக்கத்தை நீ பிறருக்கு அளித்தாயா? உண்மையைச் சொல்!” அவள் விழிதிருப்பி “இல்லை” என்றாள். அவன் நெஞ்சு எழுந்தமைந்தது. “ஒருவருடன் என் கல்வி கலந்தது. பிறிதொருவரிடம் என் உடல் கலந்தது. இருவரிடம் இருமுலைகள். அவற்றுக்குத் தடைகள் இல்லை.” அவள் நெஞ்சக்குமிழிகள் விம்மித்தளர்ந்து மீண்டும் விம்முவதை அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

“உங்கள் முன் வந்து நின்றது என் இருத்தல். ஆணவமென்றும் உணர்வுக்குழம்பல் என்றும் மாற்றுருக்கொண்டு ஆடியது அது. அறிவீர் இளையவரே,  இருத்தலை அறிதல் எவருக்கும் இயலாது. அறிதல் என்பது ஆதல், கடந்துசெல்லல். அமைதலே இருத்தல். பாறையை காற்று அறியமுடியாது.” அவள் குரல் தழைந்தது. “நான் கொந்தளித்துக்கொண்டிருந்தேன், இளையவரே. அணுக்கத்தில் அகற்றியும் அகன்றபின் எண்ணி ஏங்கியும். அரசியென்றும் தேவியென்றும். வாளென்றும்  வெண்பட்டென்றும் ஒளி மாறிக்கொண்டிருந்தேன்.”

அவன் பெருமூச்சு விட்டு “ஆம், அதை நானும் எங்கோ உணர்ந்திருந்தேன்” என்றான். “கரியநதி யமுனை. அது இந்திரன் நகரைச் சூழ்ந்தோடுகிறது. அதற்குமேல் நான் சொல்வதற்கேதுமில்லை.” அவன் அவளை நோக்கி மீண்டும் ஓர் அடி வைத்தான். சித்ரபுத்திரர் அவன் தோளைத் தொட்டு “திரும்புகிறீர்களா, பாண்டவரே?” என்றார். “இல்லை, நான் திரும்புவதில்லை” என்றபின் அவன் அவள் விழிகளை விலக்கி முன்னால் சென்றான்.

உகிரெழுந்த கால்களுடன் ஆடி நடந்த சிம்மமுகம் கொண்ட சார்த்தூலன் திரும்பி “களம்பட்டு நீங்கள் விழுந்தால் மண் உங்களை அணைக்கையில் உயிர்கொண்டு செல்ல வரவேண்டியவன் நான். நூறு களங்களில் உங்களுக்கு வலப்பக்கம் நின்றிருக்கிறேன். உங்கள் கைத்திறனும் விழித்திறனும் உளக்கூர்மையும் நன்கறிந்தவன். வேண்டாம், பாண்டவரே! இருபத்தெட்டு பெரு நரகங்களைக் கடந்து வருவது எவருக்கும் இயலாது. ஏனெனில் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு நழுவி கீழே மட்டுமே செல்ல முடியும். அம்முடிவிலி ஆழத்திலிருந்து மேலே வரும் பாதையென ஏதுமில்லை. இப்புடவி அமைக்கப்பட்டபோதே அவ்வாறுதான் உருவாகியுள்ளது” என்றான். அவனை நோக்கி புன்னகை செய்து “நான் ஒற்றை இலக்கை மட்டுமே எப்போதும் நோக்கக் கற்றவன்” என்றான் அர்ஜுனன்.

மான்தலையுடன் அவன் அருகே வந்த சம்பரன் விழிகளில் ஈரம் மின்ன “உங்களுக்கு வில்தொட்டு அளித்த ஆசிரியர்களை விண்ணேற்றம் செய்ய கடமை கொண்டவன் நான். இது துரோணரின் சொல்லெனக் கொள்க! இது ஒழியாப்பெருநரகம். விண்ணுளோர் கொண்ட மாட்சிக்கெல்லாம் நிகரான கீழ்மைவெளி. என் மன்றாட்டு இது. பாண்டவரே, இக்கணமே மீள்க!” என்றான். “துரோணர் இச்சொல்லை ஒருபோதும் சொல்லமாட்டார். இலக்கு என்பது எப்போதும் ஒன்றே என்று கற்பித்தவர் அவர்” என்றான் அர்ஜுனன்.

அவனுக்குப் பின்னால் வந்த ஔதும்பரன் “எண்ணித்துணிக, பாண்டவரே. சொல்லளிக்கையில் இவற்றை நீங்கள் எண்ணியிருக்கவில்லை போலும்” என்றான். “இதனால் நீங்கள் அடைவதென்ன? இப்பெருந்துயருக்கு நிகராக ஏழு விண்ணுலகங்களை ஏழு முறை அளித்தாலும் துலாக்கோல் நிகர் காட்டுமா என்ன? இப்புடவியில் அனைத்தும் நிகர்கொண்டவை. அளித்துப் பெறப்படாதவை எங்கோ நின்று தவிக்கின்றன. நம்மை அவை வந்தடையாது இச்சுழல் முடிவுறுவதில்லை.”

“இது வணிகமல்ல, ஔதும்பரரே. வீரத்தில் கணக்குகளில்லை” என்றான் அர்ஜுனன். “விளைவெண்ணிப் போரிடுபவன் வில்லெடுத்து ஓர் அம்புகூட எய்வதில்லை.”  ஔதும்பரன் “கணிக்கப்படாது கடந்துசெல்லும் ஒரு காலத்துளியும் இல்லை, பாண்டவரே” என்றான். “ஆம், ஆனால் துலாக்கோல் அல்ல வில். இதன் கணிப்புகள் வேறு” என்றான் அர்ஜுனன்.

சண்டாமிருகன் கழுதைத்தலையுடன் அணுகி அவன் தோளைத் தொட்டு சிறிய விழிகளால் நோக்கி “பிறருக்காக வாழ்பவன் கையகப்படுவது ஏதுமில்லை. அந்த அந்தணன் எவருடைய படைக்கலம் என்று அறிவீர்களா? உங்களை இவ்விருள் உலகுக்கு அனுப்பி புவியை வெல்ல துரியோதனன் செய்த சூதல்ல அது என்று சொல்லலாகுமா? இல்லை, துவாரகையின் தலைவன் பொருட்டு வந்த வஞ்சகனல்ல அவன் என்று உறுதி கொள்வீரா?” என்றான்.

“ஐயம் கொள்பவன் வீரனல்ல. அரசுசூழ்பவன் களம் நிற்க முடியாது” என்றான் அர்ஜுனன். “வீரர்கள் ஆடற்களத்தில் வீரத்தையே முன்வைக்கிறார்கள். சிறுமதியை அல்ல. பெருவழியே அவர்களின் பாதை. விலகுக!” “ஆனால் வஞ்சத்தால் வீழ்ந்த வீரர் பலர் உண்டு” என்றான் சண்டாமிருகன். “ஆம், ஆனால் அவர்களுக்கே புகழுலுகுக்கான எளிய வழி அமைகிறது. அவர்களை விண்ணேற்ற தேவர்கள் வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் இருபத்தெட்டு வாயில்கள் கொண்ட பெரிய அறை ஒன்றை வந்தடைந்தனர். அவ்வாயில்கள் அனைத்தும் உள்ளிருந்து உந்தப்பட்டவைபோல விம்மி அதிர்ந்துகொண்டிருந்தன.  சித்ரபுத்திரர் புன்னகைத்து “இருபத்தெட்டு நரகங்களுக்கும் இங்கிருந்து வழியுள்ளது. இதன் பெயர் பரிச்சேதம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அதை வென்றுகடந்து மட்டுமே செல்லமுடியும். இங்கு நீங்கள் உங்கள் வழியை தெரிவுசெய்யலாம்” என்றார்.

மூடிய அந்த வாயில்களின் தாழ்கள் பொன்னாலானதாக இருந்தன. அர்ஜுனன் அதை நோக்குவதைக் கண்ட சித்ரபுத்திரர் “நரகங்களின் தாழ்கள் அனைத்துமே பொன்தான்” என்றார். “வாயில்களைத் தெரிவுசெய்யும் உரிமை நரகு செல்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதோ, உங்களுக்காக இருபத்தெட்டு வழிகள்.”

ஏழு அடிக்கு அப்பால் இருந்தன அவ்வாயில்கள் அனைத்தும். “ஏழுமுறை எண்ண உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது, இளைய பாண்டவரே. உங்கள் தொல்குலத்தை, உடன்பிறந்தவரை, மைந்தரை, நற்பெயரை, வரும்புகழை, மூதாதையரை, விண்ணுலகை ஒவ்வொரு அடிக்கும் எண்ணிக் கொள்ளுங்கள். ஒன்று தடுத்தால்கூட பின்னடி எடுத்து வைக்க வாய்ப்புள்ளது” என்றார் சித்ரபுத்திரர். “எண்ணத்தால் ஓர் அடி பின்னால் வைத்தால்கூட அங்கே யமுனைக்கரை நாணல்கள் நடுவே விழித்தெழுவீர்கள்.”

அர்ஜுனன் அவற்றில் ஒரு வாயிலை நோக்கி கால்களை எடுத்து வைத்து “என் குலத்தை இதோ கடக்கிறேன். என் உடன்பிறந்தாரை மிதித்து இதோ கடக்கிறேன். என் மைந்தரை இதோ கடந்து செல்கிறேன். என் நற்பெயரை இதோ உதறுகிறேன் என் வருபுகழை வீசுகிறேன். என் மூதாதையரை மறுப்புரைக்கிறேன். இதோ, விண்ணகங்கள் அனைத்தையும் விலக்குகிறேன்” என்று அணுகி பொற்தாழில் கைவைத்து அதைத் திறந்தான்.

ஊன் உண்ணும் விலங்கொன்றின் வாய் திறந்ததுபோல் கெடுநாற்றம் எழுந்து கணத்தோரையே  மூக்கு பொத்தி முகம் சுளிக்க வைத்தது. “அது தாமிஸ்ரம் என்னும் உலகு” என்றார் சித்ரபுத்திரர். “ஒவ்வொருவரும் தங்கள் உள்ளாழத்தில் தங்களுக்குரியதை அறிந்திருப்பார்கள். எண்ணிக் குழம்பியோ எண்ணாது முந்தியோ அவர்கள் தெரிவுசெய்வதே அவர்களுக்கு உரியதாக முன்னரே இங்கு வகுக்கப்பட்டிருக்கும்.”

KIRATHAM_EPI_20

“தாமிஸ்ரம் பிறர் குழந்தையை கொன்றவர்களுக்குரியது” என்றார் சித்ரபுத்திரர். “கொன்ற மைந்தரை எண்ணுக! அவர்களின் அன்னையர் விழிநீர் சொரிந்து சொன்ன தீச்சொற்கள் நிறைந்தது அவ்விருள்வெளி.” இருளுக்கு அப்பால் நோக்கிய அர்ஜுனன் பல்லாயிரம் எலிகள் முட்டி மோதும் ஓர் ஆழத்தைக் கண்டான். “எலிகள்!” அவன்மேல் குனிந்து முத்தமிட்டது மாலினியின் மூச்சு. “துயில்க இளவரசே, அது வெறும் கனவு.” அவன் இருமுறை விதும்பி “மிகப்பெரியவை. மின்னும் கண்கள்” என்றான். “நினைப்பொழிக! அது கனவு. காலையில் விழித்துக்கொள்வீர்கள்.”  நினைப்பளவும் தயங்காமல் அதற்குள் பாய்ந்தான்.

முந்தைய கட்டுரைசில சிறுகதைகள் -1
அடுத்த கட்டுரைதீபாவளி, கடிதங்கள்