தனிமையும் பயணமும்

IMG_2463

அன்புள்ள ஜெயமோகன்,

வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் தன்னை அறியும் தேடலுக்காக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே.

உங்களின் புறப்பாடுஅனுபவங்களைப் படித்தேன். இலக்கற்ற பயத்தில் கிடைக்கும் சுதந்திரம் ஒரு Planned Tour-ல் கிடைப்பதில்லை. இலக்கை நிர்ணயித்து ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வர வேண்டும் என எண்ணும் தருணத்திலிருந்தே அதில் ஒரு செயற்கைத் தன்மையும் மனச் சோர்வும் ஏற்பட்டுவிடுகிறதாக கருதுகிறேன். நாம் அந்த இடத்திற்கு ஸ்தூலமாக செல்லும் முன்பே மனம் அங்கு தன் பயணத்தை தொடங்கி விடுகிறது செல்லுமிடம் நிர்ணயிக்கப்படுதில் இருக்கும் சிக்கலாக இதைப் பார்க்கிறேன்.

புறப்பாடுகால பயண அனுபவங்களுக்கும் தற்போதய தங்களின் பயணங்களுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? குழுவாக செல்லும்போது சூழ்நிலைகளால் உங்களின் தனியுலகம் சுருக்கப்படாமலிருக்க என்ன செய்வீர்கள்? பராரியாக சுற்றித்திரிந்த பயணம் போய் இப்போது உடை முதல் இருப்பிடம் வரை முன்னேற்பாடு செய்து செல்வது சுமையாக இல்லையா? என் அறிதலுக்காக தங்களின் தற்போதய பாணி பயண முன்னேற்பாடுகளையும் அனுபவங்களையும் பகிறவும்.

காவியுடை அணிந்த தங்களின் புறப்பாடு அனுபவங்களையும் படிக்க ஆவலுறுகிறேன்..

ஜெ. விஜய்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்.

wpid-wp-1475575107835.jpeg

அன்புள்ள விஜய்,

வீடுதுறத்தலும் அலைதலும் ஒரு பருவத்திற்குரியவை. அந்தப்பருவத்தில் நாம் பிருடைய வீட்டில் இருக்கிறோம். நம்முடைய வீட்டை நாம் உருவாக்கிக்கொண்ட பின் அந்நிலைமை வேறு. நான் என் வீட்டுக்குத் திரும்பி வந்தவன். நிரந்தரமாக வீடுதுறக்க வேண்டுமென்றால் முழுமையான துறவை நோக்கிச் செல்லவேண்டும்.

இப்போதைய பயணங்கள் எவையும் முழுமையாகத் திட்டமிட்டுச் செய்யப்படுபவை அல்ல. நாங்கள் கிளம்புவதும் திரும்புவதுமே திட்டமிடப்பட்டிருக்கும். செல்லும் ஊர்களைப்பற்றிய மிகக்குறைவான தகவல்களே எங்களிடம் இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஊர்களின் பக்கத்து ஊர்களிலேயே அந்த ஊர்களைப்பற்றி ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்

உதாரணமாக இப்போது வேலூர் அருகே அருகர்மலைக்குச் சென்றிருந்தோம். அந்த ஊரைத்தேடிச்செல்லவே பலமணிநேரம் ஆகியது. ஆடுமேய்ப்பவர்தான் வழிகாட்டினார். அங்கு என்ன இருக்கும் என்று தெரியாது. அப்படிச் சென்று கண்டடைவது ஒரு பெரிய அற்புதம், ஒரு ஊர் அப்போது பிறந்ததுபோல நம் முன் எழுந்து வருவது. அதுதான் பயணத்தின் முதல்பேரின்பம்

புதிய ஊர்களில் சென்று இறங்கி தங்க இடம் தேடுவது இன்னொரு மகிழ்ச்சி. அன்றிரவு எங்கு தங்குவோம் என்பது அக்கணத்திலேயே முடிவாகும். அறியப்படாத ஊர்களில் காலை எழுந்து அன்றைய நாளைத் தொடங்குவது ஒரு பெரிய கொண்டாட்டம். இன்றும் அப்படியே நீடிக்கிறது

தனிமை ஓரு காலத்தில் ஒருவகையான வதையாக, ஒரு பயிற்சியாக நீடித்தது. இன்று அது ஓர் இயல்பான நிலை. இன்று அத்தனிமைக்குள் வாழவும் அதேசமயம் சமூகமனிதனாகவும் இருக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலையே என்னுடைய முதல் இலக்கு.

ஆனால் உள்ளூர நான் எப்போதுமே தனியன். வீட்டில் எழுதும்போது முழுமையான தனிமைதான். தனித்திருத்தல் சற்றே சலிக்கும்போதுதான் பயணம். உடன் அத்தனிமைக்குள் நான் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டும்தான். அது வேறுவகையான அனுபவம்

மேலும் இன்று எனக்குப் பயணம் தேவைப்படுவதே நான் தனித்து அலையும் புனைவுவெளியில் இருந்து வெளிவருவதற்காகத்தான். எழுதும்போதிருக்கும் அந்த உச்சநிலையை அப்படியே நீட்டித்துக்கொள்வதற்கு. நிலக்காட்சிகளை உள்ளே நிறைத்துக்கொள்வதற்கு. தொலைந்துபோவதற்கு அல்ல. அதற்கு மொழிநிலம் இருக்கிறது

நண்பர்களுடன் சேர்ந்து போவதில் உள்ள மிகப்பெரிய வசதி சாப்பாடு தங்குமிடம் போன்ற அன்றாடச்செயல்களை முழுக்க அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நாம் நம் அந்தரங்க உலகில் திளைக்கமுடியும் என்பது

தனித்தும் பயணம் செய்வதுண்டு. அப்பயணங்களைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை, தனிமை கலையக்கூடாதென்பதற்காக.

ஜெ

முந்தைய கட்டுரைமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39