[ 25 ]
“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல் உடுத்து நீறாடி சிவப்புகை இழுத்து பித்துகொண்டு ஆடிவந்த இருளெதிர்வரை கண்டான். “நில்லும்!” என்று தன் காண்டீபத்தைக் காட்டி ஆணையிட்டான். “சொல்லும், நான் தென்றிசையாளும் தலைவனைச் சென்று காண விழைகிறேன். அவனை அடையும் வழி எது?”
“நன்று நன்று” என அவர் நகைத்தார். “வாழும் வழிதான் மானுடருக்கு தெரிவதில்லை என்று இதுகாறும் எண்ணினேன். நீத்துச்செல்லும் வழியுமா தெரியாமலாகிவிட்டது? அந்தப் பள்ளத்தில் குதி. அதோ, அந்த நாகத்தின் முன் கைநீட்டு. அந்த நச்சுச்செடியை உண். எத்தனை வழிகள்!” அர்ஜுனன் “நான் அவனை காலரூபனாக கண்முன் காணவிழைகிறேன்” என்றான். அவர் கண்கள் இமைப்பதை நிறுத்தின. “ஏன்?” என்றார்.
“அவனை வென்று ஓர் இளமைந்தனை மீட்டுக்கொண்டுவர விழைகிறேன்.” அவர் கண்களில் புன்னகையின் ஒளி எழுந்தது. “நன்று, அவ்வாறு மானுடர் கிளம்பியாகவேண்டும். நன்று!” என்றார். “வீரனே, காலனை வெல்ல ஒரே வழி மகாகாலனை வழிபடுவதே. மார்க்கண்டன் கண்ட முறை அது. இதோ, அவன் மூச்சென மணக்கும் புகை. இழு. இருத்தலும் இன்மையும் மறையும். காலன் வந்து திகைத்து அங்கே நின்றுவிடுவான்” என்று சிவப்புகை சிலும்பியை நீட்டினார்.
“நான் கேட்டது அவனை அணுகும் வழி. அதை நீங்கள் அறிவீர்கள். ஒருமுறை இறந்துபிறக்காமல் எவரும் இருளெதிர்வர் ஆகமுடியாதென்று அறிந்திருக்கிறேன். நீர் இறந்தது எப்படி? மீண்டது எப்படி?” என்றான். அவர் “காளாமுக மெய்மையை பிறர் அறியமுடியாது, மூடா!” என்றார். செல்க என கையசைத்தபடி முன்னால் நடந்தார். “சொல்க, நான் செல்லும் வழி எது?” என்றான் அர்ஜுனன். “செல், மூடா!” என அவர் தன் கையிலிருந்த முப்புரிவேலை ஓங்கி அவனை அடித்தார்.
அவன் அதை தன் கையால் பற்றித்தடுத்தான். அவர் எழுவதற்குள் அவர் கால்களை அடித்து நிலையழியச்செய்து தன் தோள்மேல் சுழற்றி வீசி நிலத்திலறைந்தான். அவர் அவனை அறைந்து திமிற முயல சற்றுநேரத்திலேயே அவரை அடக்கி மார்பின் மேல் காலூனின்றி அமர்ந்து “சொல்க…” என்றான். அவர் தன் இடக்கையைத் தூக்கி “என் கையிலுள்ள சிதைச்சாம்பலால் உன்னை அழிக்கமுடியும்” என்றார். “நான் அழிவதற்கு அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன்.
“நீ யார்?” என்று அவர் கேட்டார். “என் பெயர் அர்ஜுனன். பாண்டவன்” என்றான். அவர் விழிகள் மாறுபட்டன. “ஆம், நீ என எனக்கு ஒருகணம் தோன்றியது. பிறர் என்னை வெல்லமுடியாது. என்னை அஞ்சாது விழிநோக்கவும் முடியாது.” அர்ஜுனன் “சொல்க!” என்றான். “நன்று, காலனை தேடிச்செல்பவர் இருளெதிர்வர் காணும் காலகாலனைக் கண்டே அடங்குவர். அச்சமில்லாதவர் செல்லும் பாதை அது” என்றார் அவர்.
“நான் சென்ற பாதையை மட்டும் சொல்கிறேன்” என்றார் காளாமுகர். அர்ஜுனன் காலை எடுக்க அவர் எழுந்தார். “நான் பிறப்பால் அசுரன். சர்மாவதி ஓடும் சாம்பபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். எந்தை அந்நிலத்தின் அரசர். நான் அவர் நோற்றுப்பெற்ற மைந்தன். என் குருதியின் இயல்பால் அச்சமற்றவனாக இருந்தேன். அச்சமின்மை என்பது கட்டின்மையே. அச்சமே மானுடன் எனும் ஒழுக்கின் கரை. பகையை, பழியை, இறப்பை, ஊழை அஞ்சாதவன் அறத்தையும் அஞ்சாதவனே.”
நான் ஆற்றியவை அனைத்தும் மானுடமீறல்களே. குலத்தின், நிலத்தின் எல்லைகளை மீறிச்சென்றேன். ஒவ்வொரு மீறலுக்குப் பின்னரும் புதியவற்றை நோக்கி விழிதூக்கினேன். உண்டு கொண்டு புணர்ந்து கொன்று அடையும் அனைத்து உவகைகளையும் அடைந்தபின் வெறுமை எஞ்சுவதைக் கண்டு மேலும் வெறிகொண்டேன்.
அன்றொருநாள் தனியாக புரவியில் யமுனைக்கரையினூடாகச் சென்றேன். இருள்பரவி விண்மீன் ஒளியில் கரிய ஆறு மின்னிக்கொண்டிருந்தது. மீன் ஒன்று செல்லும் ஒலி கேட்டது. அது ஒரு தோணி எனத் தெளிந்தேன். ஓர் இளம்பெண் தனியாகச் செல்வதைக் கண்டேன். இளங்கருமை கொண்டிருந்த வானப்பின்புலத்தில் அவள் உடல்கோடு பேரழகி என அவளைக் காட்டியது. என்னில் காமம் எழுந்தது. காமம் கொண்ட மறுகணமே அப்பெண்ணை அடைவது அன்று என் வழக்கம்.
நீரில் பாய்ந்து நீந்தி அவளை அணுகினேன். அவள் அஞ்சி எழுந்து கூவுவாள் என எண்ணினேன். ஆனால் எட்டு கை எழுந்த கொற்றவைபோல் படகில் அவள் நின்று என்னை துடுப்பால் அடித்தாள். என் மண்டையோடு உடையும் ஒலியை உள்ளே கேட்டேன். விழிகளுக்குள் ஒளி சிதறியது. குருதி வழிந்து என் வாய்க்குள் சுவைத்தது. ஆனால் அவள் சினம்கண்டு மேலும் வெறிகொண்டேன்.
கையூன்றி அத்தோணியில் ஏறிக் குதித்து குருதிவழிய அவளை பற்றிக்கொண்டேன். அவள் என்னைத் தூக்கிச் சுழற்றி அறைந்தாள். ஆனால் என் வெறி எனக்கு மேலும் மேலும் வல்லமையை அளித்தது. அவளை வென்று கீழ்ப்படுத்தி மேலே பரவி அவள் முகத்தை அணுக்கமாகக் கண்டேன்.
அத்தருணத்தில் எனக்குப் பின்னால் ஒரு சிறு தோணியை கண்டேன். அதில் முழுதுடலுடன் அமர்ந்திருந்தவள் நான் கண்டவரிலேயே பேரழகி. கன்னங்கரிய நிறம். கொழுங்கன்னங்களில், ஏந்திய இளமுலைகள் மேல் ஒளி வளைந்து வழிந்திருந்தது. ஒவ்வொன்றும் முழுமைகொண்டிருந்த உடல். அவளை நோக்கி திகைத்து நின்ற என்னை கையசைத்து அழைத்தாள். அந்தத் தோணிமேல் தாவி ஏறி அவளை பற்றிக்கொண்டேன்.
ஆனால் அக்கணமே தோணி விசைகொள்ளத் தொடங்கியது. கரைப்பச்சை வண்ணப்பெருக்காகி கண்ணிலிருந்தே மறைந்தது. அவ்விரைவு இயல்பானதல்ல என்று அறிந்திருந்தேன் என்றாலும் அச்சமின்மையாலேயே அவளை அள்ளி அணைக்க முயன்றேன். அவள் சிரித்து என்னை சுழற்றியடித்தாள். அவள் உடல்தொட்டபோது நான் மேலும் வெறிகொண்டேன். அள்ள அள்ள மீனென நழுவியது அவள் உடல். மானுட உடலுக்குரிய வெம்மை அதில் இல்லை. மீன்குளிர். அவள் விழிகளை அப்போது கண்டேன். மீனென இமைப்பற்ற மணிக்கண்கள். அவள் வாயின் பற்களைக் கண்டேன். மீனின் கூர்முள்வெண்மை.
“யார் நீ?” என்றேன். “என் பெயர் யமி. சூரியனுக்கு சம்க்ஞை என்னும் கன்னியில் பிறந்தவள். விஸ்வகர்மன் என் மூதாதை” என்றாள். என் கையிலிருந்து நழுவி நீரிலெழுந்த பெருஞ்சுழியின் மையத்தில் குதித்தாள். அவளைச் சூழ்ந்து நீர் பறந்தது. என்னை நோக்கி கை நீட்டி அழைத்தாள். பிறிதொன்றும் எண்ணாமல் நான் அவளைத் தொடர்ந்து குதித்தேன்.
நீர்க்கதவுகள் திறந்தன. நீர்த்திரைகள் விலகின. நீர்ப்பாதைகள் நீண்டெழுந்தன. அங்கே அவளை மீண்டும் கண்டேன். விடாது அவளைத் தொடர்ந்து சென்றேன். மீன் என்றும் மங்கையென்றும் என்னை அவள் அழைத்துச்சென்றாள். ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து நீளிருங்குகைப் பாதையொன்றினூடாக ஏழு அடுக்குகளாக அமைந்த ஆழுலகை கடந்து சென்றோம்.
“அங்கே நான் யமனைக் கண்டேன்” என்றார் காளாமுகர். “சினம்கொண்ட விழிகளுடன் என்னை நோக்கி எழுந்தது காலப்பெருந்தோற்றம். கைப்பெருக்கு கால்பெருக்கு விழிப்பெருக்கு இருளலைப்பெரும்பெருக்கு. நான் அதன் முன் விழியிமைக்காமல் நின்றேன். அச்சமின்மை கண்டு கனிந்தது இறப்பு. என் அருகே வந்து நான் விழைவதைக் கேட்டது.”
“நான் கேட்டதென்ன அவர் அளித்ததென்ன என்று உனக்கு சொல்லமாட்டேன். நான் கண்டதும் பிறிதொருவரிடம் சொல்லிவிடமுடியாதது. உணர்வு மீண்டெழுந்து இருளுக்குமேல் வந்தபோது யமுனையின் கரையில் கிடந்தேன். என் உடலெங்கும் நீர்ப்பாசி படிந்திருந்தது. என் தோல் மீன் போல மின்னியது. என்னைக் கண்ட செம்படவர் அஞ்சி விலகி ஓடினர். எழுந்து முழுதுடலுடன் நடந்தேன். மீண்டு ஊர்செல்லவில்லை. என் வழி சிவமொழுகும் ஆறென்றாகியது.”
“ஆம், யமுனை என உருக்கொண்டு மண்ணில் ஓடுபவள் ஆழிருளின் தெய்வமான யமியே என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்று அர்ஜுனன் சொன்னான். அவர் “ஆம், கதைகளை நான் பின்னர் அறிந்துகொண்டேன்” என்றார். “பரம்பொருளில் இருந்து பிறந்த பிரம்மனின் மைந்தர் மரீசி. அவரது மைந்தர் காசியபப் பிரஜாபதி. காசியபருக்கு அதிதியில் பிறந்தவன் சூரியன்.”
“சூரியனின் மனைவியர் இருவர். சம்க்ஞை மூத்தவள். சாயை இளையவள். நோக்கும் விழிகளால் ஒளிகொள்பவள் மூத்தவள். ஒளிகொள்பவை அனைத்தையும் தொடர்பவள் இளையோள். ஒளிர்நிறம் கொண்ட சம்க்ஞையின் கருமைவடிவம் சாயை. ஓசையற்றவள். விழியொளி சூடியவள். சூரியனுக்கு சம்க்ஞையில் பிறந்தவர் மூவர். மனு, யமன், யமி. மூத்தவனாகிய மனு மானுடரை படைத்தான். யமன் அவர்களின் உயிர்கவர்ந்தான். யமி இறப்பின் தோழியானாள்.”
“பேரொளிகொண்ட விண்ணுலாவிக்கு மூத்தவளைவிட இளையவளே இனியவள் என்பது தொல்கதையின் கூற்று. இளையவளுக்கு சூரியனின் குருதியில் ஆறு மைந்தர் பிறந்தனர். அவர்களில் ஒருத்தியான ஃபயை அச்சத்தின் தேவி. அவளை ஹேதி என்னும் இருளரக்கன் மணந்தான். அவனே நோய்களுக்கு முதல்வன். அவன் உடன்பிறந்தாரான அஸ்வினிதேவர்களே அந்நோய்களுக்கு மருந்தாகி வருபவர்கள்.”
“ஃபயை யமியின் முதன்மைத்தோழி.” என்றார் இருளெதிர்வர். “அவளை அஞ்சாதவர் முன்பு மட்டுமே யமி தோன்றுவாள். தனக்கு உகந்தவர்களை தன் மூத்தவரிடம் அழைத்துச்செல்வாள்.” அர்ஜுனன் “நான் அவளை காண்கிறேன்” என்றான். “நன்று சூழ்க!” என்றார். அவன் அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.
“இளையவனே, ஃபயைக்கு தனக்குரிய வடிவமென ஏதுமில்லை. உன்னுள் ஆழத்தில் உறையும் அச்சத்தின் முகத்தையே அவள் தானும் கொண்டு வருவாள்” என்றார். “உங்கள் முன் எழுந்த முகம் எது, இருளெதிர்வரே?” என்றான் அர்ஜுனன். “நான் எண்ணியிராதது” என்றபின் அவர் புன்னகைத்தார்.
[ 26 ]
யமுனை மீது சென்ற படகில் அர்ஜுனன் தனித்து அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த துடுப்பில் இருளென ஓடிய நீர்ப்பரப்பு நெளிந்து ஒளிகொண்டது. தொலைவில் பெருவிழியென எழுந்த அந்தச் சுழியை கண்டான். அவன் சென்ற படகை அச்சுழியின் எதிரலை வந்து பின்னுக்குத் தள்ளியது. சுழி அளிக்கும் இறுதி வாய்ப்பு அது என எண்ணிக்கொண்டான். உந்தி படகை அச்சுழியின் விளிம்பில் பொருத்திக்கொண்டான்.
அவன் படகை அள்ளித் தூக்கிச் சுழற்றிக்கொண்டது சுழி. வானும் கரைகளும் அழிந்தன. நீரே இன்மையென்றாகியது. சுழிமையமென நின்றிருந்த கருமையொளிர்புள்ளி மட்டும் அசையாதிருந்தது. அவன் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தான். அதன் விழிமணிக்குள் மின்னிய நுண்கருமைத் துளிக்குள் ஒரு சிறு வாயில். அதனுள் குளிர்ந்து செறிந்து நுழைந்து அவன் இருளுக்குள் விழுந்தான். இருளுக்குள் வெளிக்காலமிருக்கவில்லை. எனவே தொலைவும் இருக்கவில்லை. சித்தமிருந்தது. அது அறிந்த அகக்காலம் முடிவிலியென சென்றுகொண்டிருந்தது.
அவன் இடச்செவியில் ஒரு சிரிப்பொலி கேட்டது. புருவமையத்தில் ஒரு ஒளிப்புள்ளி என வெடித்தது அந்தச் சிரிப்பு. ஒளி வெடித்து துளிகளாகச் சிதறிப் பரவி இருண்டு பிறிதொரு துளி. தோல் எரியும் மணம். சீழ்மணம். தீப்பற்றிக் கருகும் உலர்மலம். முடிகருகும் வாடை. பெருமுரசின் தோல்கிழியும் ஒலி. வாள் ஒன்று வாளைக்கிழிக்கும் ஓசை. உடல் விதிர்த்து பற்கள் கிட்டித்து கைவிரல்கள் மரத்து அவன் விழுந்துகொண்டிருந்தான். அதிர்ந்து அதிர்ந்து அடங்கிய அவன் உடலுக்குள் இருந்து குமிழிகள் வெடித்து வெளியேறிக்கொண்டிருந்தன.
மெல்லிய பெண்குரலொன்று அவன் காதில் “வருக!” என்றது. “யார்?” என்றான். “வருக!” என்றது குரல். எரியும் தீயின் ஓசை. பெருமரம் பிளந்துவிழும் ஓசை. பாறைமேல் கொப்பரையை உரசும் ஓசை. பளிங்கில் துடிக்கும் ஒரு புழு. வலையில் சிக்கி அதிரும் பூச்சி. மெல்லமெல்ல கிழிபட்டுக்கொண்டிருந்தான். மென்மையாக. குருதி இனிதாக வழிந்து வழிந்து அகல கிழிந்து இரண்டானான். இரு பக்கமும் தசைக்கிழிசல்கள் கைநீட்டித் தவித்தன. நரம்புமுனைகள் புழுக்களென நெளிந்தன. இரு விழிகளும் ஒன்றை ஒன்று நோக்கின. வருக வருக வருக என காலம் ஒலித்துக்கொண்டிருந்தது. “யார்?” என்றான். வருக வருக வருக!
“யார்?” என அவன் கூவினான். “நான் ஃபயை. உன் அச்சம்” என்றது பெண் குரல். “எழுக… என் முன் எழுக!” அவள் நகைத்து “அஞ்சுவது அஞ்சுக, இளவரசே!” என்றாள். “வருக!” என்று அவன் கூவினான். “வருக வருக வருக” என்று கூவிக்கொண்டிருந்தான். இரண்டு பேர். ஒருவன் இன்னொருவனை நக்கி நக்கி குருதியுண்டான். சுவையில் சொக்கியிருந்தது ஒற்றைவிழி. “வருக! என் முன் வருக!”
அவன் முன் அவள் வந்து நின்றாள். ஆழிவெண்சங்கு ஏந்தியிருந்தாள். நீலமணியுடல் மிளிர, விழிகள் நீண்டு ஒளி சூடியிருக்க, இதழ்களில் புன்னகையுடன் ஒசிந்து நின்றாள். அவன் அவளை விழித்து நோக்கி மிதந்தான். “தெரிகிறதா?” என்றாள். அவன் கனவிலென “மோகினி” என்றான். அவன் மேல் குனிந்து மாலினி சொன்னாள் “என்ன சொல்கிறீர்கள், இளவரசே?” அவன் மீண்டும் “மோகினி” என்றான். மாலினி சிரிப்புடன் “முளைவிடும் செடியிலேயே கனிமணம் இருக்கும்” என்றாள். யாரோ நகைத்தனர்.
அவள் அவனருகே வந்து கையைப் பிடித்து “வருக!” என்றாள். அவன் நீள்மூச்சுடன் “நீ யார்?” என்றான். “ஃபயை. என் தோழி உங்களுக்காக அங்கே காத்திருக்கிறாள்.” அவள் கைகள் குளிர்ந்திருந்தன. அவன் அவளுடன் நடந்தபோது காலடிகளின் ஒலி எழவில்லை. ஆனால் சூழ்ந்திருந்த இருட்டின் நீர்மை அதிர்வுகொண்டது.
வெளியே ஒரு தேர் நின்றிருந்தது. இருளுருகியமைந்த மெல்லிய மின் கொண்டது. அதனருகே நின்றிருந்தவள் அவனை நோக்கி வந்தாள். அவள் புன்னகையின் வெண்மையும் விழிகளின் ஒளியும் அணுகி வந்தன. “வருக!” என்றாள். “என் தமையனின் நகருக்குள் உங்களை அழைத்துச்செல்லவிருக்கிறேன்.”
அர்ஜுனன் அந்தத் தேரில் ஏறிக்கொண்டான். அது காற்றின்மேல் என சென்றது. இருள் கிழிந்து கிழிந்து வழி கொடுத்தது. ஒளியால் நோக்கிய விழிகள் இருளால் உருவறியும்படி ஆகிவிட்டிருக்கின்றனவா என்ன? இருபக்கமும் இருண்டு எழுந்து நின்றிருந்தன பெரும்பாறை அடுக்குகள். கூர்ந்து நோக்கியபோது அவை முகங்களாயின. ஊழ்கத்தில் இருந்தன. புன்னகைத்தன. கூர்ந்து நோக்கின. சொல்லெடுக்கும் கணத்தில் நின்றன. நோக்க நோக்க விழி தெளிந்து வருந்தோறும் முகங்கள் முகங்களென சூழல் விரிந்தது.
பின்னர் அவன் தரையை பார்த்தான். மண்டையோடுகள் உருளைப்பாறைகளாக பரவியிருந்தன. அப்பாதை சென்று இணைந்த கோட்டை முகங்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்தது. அதன் திறந்தவாயிலுக்கு இருபக்கமும் பனிநிலவுகள் என முரசுத் தோற்பரப்புகள் தெரிந்தன. “அவைமுதல்வனையும் படைமுதல்வனையும் அவரே சென்று அழைத்துவரவேண்டுமென்பது நெறி. அவர் உருவினள் என்பதனால் நானே வந்தேன்” என்றாள் யமி.
காலபுரியின் கோட்டைமேல் காகக்கொடி பறந்துகொண்டிருந்தது. அதற்கு கதவுகள் இருக்கவில்லை. அவர்கள் நெருங்கியதும் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. உள்ளே இருந்து நால்வர் விழிகள் மின்னும் கரிய எருமைகள் மேல் ஏறி அருகணைந்தனர். பன்றித்தலைகொண்ட முதல்வன் “நான் சண்டாமிருகன். யமபுரியின் முதன்மைக் காவலன். இழிகுணம் கொண்டவர்களை அழைத்துவரும் பொறுப்பு கொண்டவன். எங்கள் நகருக்கு வருக!” என்றான்.
சிங்கத்தலைகொண்ட இரண்டாமவன் “என்பெயர் சார்த்தூலன். களம் நின்று சமராடும் வீரரை அழைத்துவருபவன். தங்கள் வருகைக்கு மகிழ்கிறேன்” என்றான். கழுதைத்தலை கொண்டிருந்த மூன்றாமவன் “என் பெயர் ஔதும்பரன். பொருள் சுமந்து வாழ்ந்து அமைந்தவருக்கு இறுதிசொல்லச் செல்பவன்… வருக, பாண்டவரே” என்றான். மானின் தலைகொண்டிருந்த நான்காமவன் “என் பெயர் சம்பரன். அறிவிலமைந்தவரின் இறுதித்துணை நான். தங்களை வாழ்த்துகிறேன்” என்றான்.
அவர்கள் அந்தத் தேரைச் சூழ்ந்து கருமுகிலெருமைமேல் மிதந்துவந்தனர். நகரின் இல்லங்கள் அனைத்தும் மண்டையோட்டுக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. நின்ற உடல்கள் தூண்களாயின. கிடந்தவை படிகள். தாங்கப்பட்டவை உத்தரங்கள். மணிகளென ஒளிவிட்டுக்கொண்டிருந்தன விழிகளும் பற்களும். மூச்சுக்காற்றால் அறைகளின் திரைச்சீலைகள் அசைந்தன.
“ஆயிரம் கோடி யமகணங்களின் வசிப்பிடம் இது” என்றாள் யமி. “அவை ஓசையற்றவை. காற்றிலேறிச்செல்லும் கால்கள் கொண்டவை.” அவன் அங்கு இருளுக்குள் நிழல்களென அசைந்த யமகணங்களை நோக்கிக்கொண்டு சென்றான். அவை ஒன்றன் மேல் ஒன்றென இறகிறகாக அடுக்கப்பட்டு ஒற்றைப்பறவையாக மாறி விண்ணில் பறந்தெழுந்தன. கால்களாகி செவிகளாகி தலையாகி வாலாகி எருதாகி நடந்தன. கரைந்து நீண்டு உருகி வழிந்து உருக்கொண்டு எழுந்து புன்னகைத்து நோக்கின.
“இவர்களை நான் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், வில்லேந்திய எவரும் கொலைக்களத்திலாடி குருதிகழுவி மதுவுண்டு துயில்கையில் இவர்களையே காண்கிறார்கள்” என்றாள் யமி. “உடல் தைக்காது மண்ணில் உதிர்ந்த அம்புகளை எடுத்து இவர்கள் வீசி விளையாடுகிறார்கள். தசையில் விழாத வாள்வெட்டுகளை கைகளால் பற்றிக்கொண்டு சிரிக்கிறார்கள். களம்புகுந்து களியாடுவதையே இவர்கள் விரும்புகிறார்கள்.”
அர்ஜுனன் அவர்களை நோக்கிக்கொண்டு சென்றான். “அரசர்களின் கனவுகளுக்குள் புகுந்து பலிகொடு என்று மன்றாடுவார்கள். நிமித்திகர் சோழிகளுக்கு நடுவே புகுந்து ஊழின் திசைமாற்றவும் இவர்களால் முடியும். முதியோர் விழிகளை மங்கச்செய்கிறார்கள். நோய்கொண்டவர் நெஞ்சை குளிர்க்கரங்களால் வருடி வருக என்று அழைப்பார்கள்.” அர்ஜுனன் “ஆம், இந்நகரில் நான் கேட்கும் ஒலியெல்லாம் வருக வருக என்றே உள்ளது” என்றான்.
“வீரரே, இங்குள்ள யமகணங்கள் அனைத்தும் சொல்வது அந்த ஒற்றைச் சொல்லையே. பாறைகளென சுவர்களென எழுந்த முகங்களின் உதடுகள் அதையே சொல்லிக்கொண்டிருக்கின்றன. இந்நகரின் சொல் என்பது அதுவே. ஈரேழு உலகங்களிலும் கனிந்து கைநீட்டி அருகழைப்பது இதுமட்டுமே.”
அவன் அந்நிழலுருக்களை நோக்கி “அச்சுறுத்தும் இருளலைகள்” என்றான். “ஆம், ஆனால் உற்றாரின் இறப்புக்குப்பின் எஞ்சுபவர்களுக்கு இவர்களே தோழர்கள். துயர்சலித்து அவர்கள் மயங்கும்போது இறந்தகால ஒளிர்நினைவுகளை அள்ளிக்கொண்டுவந்து கனவுகளில் பரப்புபவர்கள். உற்றவர்களின் முகங்களாக எழுந்து வாழ்வது இனிது என்பவர்கள். மைந்தரை இழந்த அன்னையின் முலைப்பாலை உறிஞ்சி உண்டு அவை உருமீள வைப்பவர்கள். அன்னையை இழந்த குழவியின் கட்டைவிரலை முலைக்காம்பாக ஆக்குபவர்கள்.”
“இழப்புகளை நினைவுகளாக சமைப்பவர்கள். நினைவுகள் கனிந்து இனிக்கச் செய்பவர்கள். இவர்கள் இல்லையேல் உயிர்கள் வாழமுடியாதென்று அறிக!” என்றாள் யமி. “இவர்கள் ஏன் இங்கு சொல்லின்றி இருக்கிறார்கள் என்றால் உயிர்கள் வாழும் அவ்வுலகில் புழங்கும் அத்தனை சொற்களும் அவர்களுக்குரியவையே. அவையனைத்தையும் கொண்டு மூடியும் உருமாற்றியும் எரித்தும் செரித்துமே இறப்பை கடக்கின்றனர் மானுடர்.”
நகர்நடுவே எழுந்தது நூறடுக்கு மாளிகை. அதன் அனைத்துச் சாளரங்களும் விழிகளென ஒளிகொண்டிருந்தன. அவர்களின் தேர் சென்று அதன் வட்டமான முற்றத்தில் நின்றதும் உள்ளிருந்து வெளிர்நிறத்தில் மிதந்தெழுவதுபோல வந்த அந்தணன் “வருக!” என்றார். “இவர் சித்ரபுத்திரர். இந்த நகரின் அமைச்சர்” என்றாள். அர்ஜுனன் தேரில் இருந்து இறங்கி அவருடன் நடந்தான்.
இருபுறமும் எழுந்து வந்த தூண்களாக நின்றிருந்த உடல்கள் உயிர்ப்பும் உடலுணர்வும் கொண்டிருந்தன. கொடித்தோரணங்கள் என செவிகளும் கைவிரல்களும் ஆடின. மலர்மாலைகளாக தொடுக்கப்பட்டிருந்தன இமைகளும் நாவுகளும். மணிமாலைகளென நகங்களும் பற்களும். காலடியில் அழுந்தியது வாழும் தசை.
“உயிருள்ளவை” என்று அவன் சொன்னான். “இளவரசே” என அவன் அருகே மூச்சுவெம்மையுடன் குனிந்து தலையைத் தொட்டு மாலினி அழைத்தாள். “விழி திறவுங்கள்… இளவரசே!” வேறு ஒரு முதியகுரல் “வெம்மை இறங்க நாளை காலையாகும். மருந்து உடலில் ஊறவேண்டும்” என்றது. “இரவெல்லாம் நெற்றியை குளிரவைத்துக்கொண்டிருங்கள்.” அவன் “வாழ்பவை…” என்றான். அவன் நெற்றியில் ஈரப்பஞ்சு குளிராகத் தொட்டது.
எதிரே சுவரென அமைந்த உயிர்த்தோல்பரப்பில் வரையப்பட்ட ஓவியத்தை தலைதூக்கி நோக்கி அவன் நின்றான். வலக்கையில் வாளும் இடக்கையில் கலமும் தோளில் விழிமணி மாலையுமாக புன்னகைக்கும் முகத்துடன் வேதாளத்தின்மேல் அமர்ந்திருந்தான் அந்த தேவன். தலையில் மலர்முடி. அவன் காலடியில் ஒரு நாய் படுத்திருந்தது. அவன் ஆண்குறி எழுந்து நீண்டிருந்தது.
அவன் முகத்தை அடையாளம் கண்டதுமே அவன் திரும்பிப்பார்த்தான். யமி புன்னகைத்து “என் முகம்” என்றாள். “இவர்தானா?” என்றான். “இவர் மனு. எங்கள் முதல்மூத்தவர்” என்றாள். “மானுடரைப் படைத்த விதை.” நேர் எதிரில் அதேமுகம் கொண்ட பிறிதொரு தேவன் துயர்முகத்துடன் அமர்ந்திருந்தான். “அவர் எதிர்மனு. எங்கள் தந்தைக்கு சாயையில் பிறந்தவர். மனுதேவரின் நிழலுரு” என்றாள் அவள்.
நீலப்புகையாலான வாயிலைத் திறந்து இரு காவலர் தலைவணங்கினர். “வருக இளவரசே, அரசர் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார் சித்ரபுத்திரர். அவன் காலெடுத்து வைத்து உள்ளே சென்றான்.