https://www.youtube.com/watch?v=l_TLOCliA00&feature=youtu.be
சமகாலத் தொழில் நுட்பப் பெருக்கத்தில் குறும்படம் எனும் கலை-ஆவண வடிவம் படும் பாட்டை மனதில் நினைத்தவாறு அசிரத்தையுடன்தான் பார்க்க ஆரம்பித்தேன். உங்கள் படைப்புகள், படைப்புகளுக்கு வெளியிலான செயல்பாடுகள், தனிப்பட்டப் பேச்சுகள், கடிதங்கள் இவை சேர்ந்த மிக அணுக்கமான மனச்சித்திரம் ஒன்று எனக்குள் உண்டு. இப்படம் மிகையாகக் காட்டி, பேசி அச்சித்திரத்தைச் சற்று வெளிறச் செய்துவிடுமோ என்ற அச்சம்கூட இருந்தது.
ஆனால் தனிமையில் அமர்ந்து உங்களோடு உரையாடுவது போன்று ஒரு நெருக்கம், கடைசிவரை அப்படியே அத்தனை இயல்பாகப் படம் நகருகிறது. உங்கள் உள்ளங்கைச் சூட்டை உணர முடியும் என்பது போலக்கூட இருந்தது. இப்படம் உங்களைக் குறித்த மனச் சித்திரத்துக்கு இன்னும் வண்ணமும் கூர்மையும் சேர்த்திருக்கிறது என்று சொல்வேன். அஜிதன் சிறந்தவொரு திரைக்கலைஞனாக வருவார். பிரியங்கள் உங்களுக்கும் அஜிதனுக்கும்.
அசதா.
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அது பற்றி தோன்றியது இது..
ஜெயமோகனைப் பற்றிய இந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவருடைய மகன் அஜிதன் இயக்கி, எடிட் செய்திருக்கிறார். நல்ல முயற்சி.
ஓர் எழுத்தாளனின் படைப்புகளை ஒரு தீவிரமான வாசகன் மேலதிகமாக உள்வாங்குவதற்கு எழுத்தாளனின் பின்னணி பற்றி அறிந்திருப்பது கூடுதல் பயன். ஏனெனில் எழுத்தாளனின் இளம் மனது அனுபவங்கள் மூலம் உருவாகும் ஆழ்மன அடுக்குகள்தான் அவனுடைய ஏறத்தாழ அனைத்து பிற்கால படைப்புகளுக்கும் ஆதார சுருதியாக அமைகின்றன.
இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய இளமைக்கால பின்னணி, வாழ்ந்த இடங்கள், தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர், இளமையின் நினைவுகள், முதல் நாவல், முதல் காவியம் முதல் வெண்முரசு வரை ஜெயமோகன் விளக்கிக் கொண்டு செல்கிறார். நமக்கு சில இடங்களில் புன்னகையும், சிரிப்பும், வெடிச்சிரிப்பும் தோன்றுகின்றன. பல இடங்களில் நெகிழ்வு. ஜெயமோகனும் அஜிதனும் அமர்ந்து உரையாடும் காட்சி அத்தனை அழகாக இருக்கின்றது.
ஆவணப்படத்தின் துவக்கத்தில் இருளும் ஒளியுமான பின்னணியில் ஜெயமோகனின் உருவம் ஓர் ஓவியம் போலவே காட்சியளிக்கிறது. காட்சிகளின், உரையாடலின் கூடவே பயணிக்கும் புகைப்படங்கள் நன்று.
‘ஜெயமோகனின் கீபோர்டு மாத்திரம், எழுத்து எழுத்தாக அல்லாமல் வாக்கியம், வாக்கியமாக அடித்து தள்ளும்’ என்று அராத்து ஒருமுறை குறிப்பிட்டார். ஜெயமோகன் உபயோகப்படுத்தும் கீபோர்டை பார்த்ததும் அதுதான் நினைவிற்கு வந்தது. பாவம், எத்தனை அடிவாங்கியிருக்கும்?
கீபோர்டுகளின் ஒலி மட்டும் தொடர வேறு வேறு காட்சிகளுடன் நிறையும் இந்த ஆவணப்படம் அர்த்தம் மிகுந்ததாய் உருவாக்கப்பட்டுள்ளது.
கலையுணர்வோடு காட்சிகளை நோக்கத் தெரிந்த இளம் கண்களின் வழியாக இது பதிவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அழகியலும் பொருளும் இணைந்த காட்சிகளின் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது. ஒலித்தரம் சற்று மேம்பட்டிருக்கலாம். மெலிதான பின்னணி இசை ஆவணப்படத்தின் தேய்வழக்கு மரபு என்றாலும் அது இணைக்கப்பட்டிருக்கலாம்.
ஜெயமோகனின் வாசகர்களுக்கு அவரை இன்னமும் சற்று ஆழமாக அறிந்து கொள்ள உதவும் ஆவணப்படம்.
சுரேஷ் கண்ணன்
***
அண்ணன், சிறப்பான ஒரு ஆவணத்தை அஜிதன் எடுத்திருக்கிறான். குமரியின் அழகும் உங்கள் எழுத்தின் ஆழமும் இணைந்த கலவை. உங்கள் எழுத்து ஒளிபெற்று துலங்கும் ஒரு ஆவணப்படம் தான் இது, சந்தேகம் இல்லை. சில நகைச்சுவைக் காட்சிகள் உங்களை அருகில் பார்த்தது போல் இருந்தாலும், அஜிதன் காட்சிகளை வெட்டி இணைத்த விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. சான்றாக பலவற்றைக் கூறலாம் என்றாலும் உங்கள் தாயாரின் தற்கொலைக் குறித்த வாக்குமூலத்தை அடுத்த “அலைக்காழிப்பைக்” காண்பிக்கும் சித்திரம் அவன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை உணர்த்த போதுமானது. அஜிதனை சிறுவனாக பார்த்திருக்கிறேன், இன்று என்னைக் கவரும் ஒரு இளம் படைப்பாளியாக அவன் எழுந்து நிற்பது ஒரு பரவசத்தை அளிக்கிறது, கூடவே எதிர்கால இளைஞர்கள் குறித்த நம்பிக்கையும்.
அருட்பணி காட்சன் சாமுவேல்