https://www.youtube.com/watch?v=l_TLOCliA00
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே . நேற்று தங்களின் ஆவணப்படம் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. அஜிதனுக்கு வாழ்த்துக்கள். அஜிதன் டெர்ரென்ஸ் மாலிக்கின் ரசிகர் என்று முன்பு எழுதியிருக்கிறீர்கள். இந்தியாவிற்கு ஒரு டெர்ரென்ஸ் மாலிக் கிடைப்பாராக. அலுவகத்தில் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அந்த சத்தம் உங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
தத்தா
***
அன்புள்ள ஜெ\\
ஆவணப்படம் கண்டேன்
சில வரிகளுக்கு சிரித்துவிட்டேன்
அப்ப நான்லாம் விவேகானந்தர் ஆகமுடியாதா? சிக்காகோவிலே உரையாற்றலாம்னா விடமாட்டாங்க போல
அப்ப ஒரு டால்ஸ்டாய் ஆனா போதும் இல்லியா?
ஒரு லவ்டெட்டர காச்சி விட்டேன்
அந்த உரையாடல்தான் இந்த ஆவணப்படத்தின் டாப் மேட்டர்
சிவா
***
அன்புள்ள ஜெ ,
நலம் தானே?
எங்கள் இந்தியப் பயணத்தின் போது இது பற்றி அருணா அக்காவிடம் கேட்டோம். அஜிதனின் கணினியில் இருப்பதாகச் சொன்னார்கள். விரைவில் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.
ஆவணப்படத்தின் நேரடித்தன்மை மிகவும் கவர்ந்தது. வழக்கமான ஆவணப் படங்களில் உள்ள பின்னணி வர்ணனையோ, படத்தின் மைய ஆளுமை குறித்த பிறரின் சொல்லாடல்களோ இல்லாதது மிகப்பெரிய நேரடித்தன்மையை அளித்து. உங்களுக்கும் எங்களுக்கும் இடையே குறுக்கீடாய் எவருமில்லை. ‘புறப்பாடு’ பகுதிகளை காட்சிப்படுத்த நேர்ந்தால் இந்த வடிவம் கச்சிதமாய் பொருந்துமென்று நினைத்துக்கொண்டேன்.
உங்களின் நேரடி அறிமுகமில்லாதவர்கள் நகைச்சுவை நீங்கலான உங்கள் எழுத்துக்களைப் படித்து, உங்கள் மேடை உரைகளைக் கேட்டு அவற்றின் நுண்ணிய தீவிரத் தன்மையால் தங்களையும் மிகத் தீவிரமான, ஆசிரிய வடிவில் காணும் வாய்ப்புகள் அதிகம். உங்களின் குறும்பும், நகைச்சுவையம் மிக்க பக்கத்தைக் காணும் வாய்ப்பு தங்களின் நண்பர்களுக்கும், நேரடியாய் உரையாடியோருக்கு மட்டுமே கிடைத்திருக்கும். படத்தில் நீங்கள் அஜிதனின் அருகில் காலை மடித்தமர்ந்து குறும்பும் தீவிரமும் நுணுக்கமும் கலந்து பேசும்போது பலரும் அந்த இன்னொரு முகத்தையும் பார்த்திருக்க முடியும். எந்த பூச்சுக்களும் அலங்காரங்களும் இல்லாத நிர்மால்ய வடிவம்!
இந்த முறை பார்வதிபுரம் வந்திருந்தது, அருணா அக்காவை சந்தித்தது மறக்க முடியாத தருணம். அதுவும் உங்களின் புத்தக அலமாரிகளை, அமர்ந்து எழுதும் மாடி அறையை, அசோகாமித்ரன் படத்தை, நடை போகும் பாதையை, பாதையோரத்து அல்லி குளத்தை, கூடவே தொடரும் வேளி மலையை, செல்ல டோராவை அருகிருந்து பருவடிவில் கண்டது ஆனந்தம். அருணா அக்காவுடன் உங்களுக்கு அணுக்கமான திருவட்டார் கோவிலுக்குச் சென்றது உணர்வெழுச்சி மிக்க தருணம். ‘திருமுகப்பில்’, ‘மத்தகம்’ கதைகளின் மற்றும் பல கட்டுரைகளின் கதை மாந்தர்களும், நீங்களும் உலவிய இடம். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் அன்னத்திற்கு அபிநயம் பிடித்த அந்தக் கதகளி மண்டபம். உங்களைப் பார்க்க முடியாததில் ஏமாற்றம். ஆனால் நீங்கள் பார்த்த உங்களுக்கு அணுக்கமான இடங்களை அருணா அக்காவுடன் பார்க்க முடிந்ததில் ஆனந்தம். ஆவணப் படம் அதே நேரடியனுபவத்தை அளித்தது. அதுவும் உங்களுக்கே உரிய கவித்துவமான ஊகிக்க முடியாத படிமங்களுடன். நோயுற்ற யானையாய் சரிந்து கிடந்த அந்தப் பெரிய கல்லுரல் மனதில் காட்சியாய் விரிந்தது.
படத்தில் காட்சிகள் கோர்க்கப்பட்டிருந்தது தொய்வின்றி இருந்தது. பின்னணி இசையின்றியும் உணர்ச்சி பூர்வமாய் இருந்தது. பின்னணி இசையின்றி பறவைகளின் ஓசையும், இலைகளின் சலசலப்பும் என்னளவில் இப்படத்தின் பலமே. நீங்கள் படிக்கட்டில் நீர்பரப்பை பார்த்தபடி அமர்ந்திருக்கும் காட்சிகள் கச்சிதம். நீரை விட சிறப்பாய் அனைத்தையும் எதிரொளிக்க எதனால் முடியும்? முப்பது நிமிடங்கள் போவது தெரியவில்லை. நிற்காமல் ஒழுகிச்செல்லும் நதி போன்ற உங்கள் வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ‘நிலம், நீர், நெருப்பு’ ஒரு நாள் காற்றாய் வானம் வரை நிறைக்க எனது வேண்டுகோள். அஜிதனுக்கு எங்களது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். அருணா அக்காவிற்கும் சைதன்யாவிற்கும் எங்கள் அன்பு.
அன்புடன்,
பழனி & மஹேஸ்வரி
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நேற்றே யூடியூபில் உங்களின் ஆவணப்படம் பார்த்துவிட்டேன் . நண்பர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்கள். மிக நெருக்கமாக நேரடியாக உரையாடுவதுபோல் இருந்தது அதற்கு காரணம் அஜிதனின் நுட்பமான படப்பிடிப்பே. 5 டி காமிரா மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது. ஆச்சர்யம்தான். இங்கு குறும்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் ஆகும் கால விரயங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.
ஒலிப்பதிவுத்தரம் முக்கியமான குறையாகப் படவில்லை. சில இடங்களில் மட்டுமே அக்குறை தோன்றுகிறது. வெறும் ஆவணமாகக் காட்டிவிடாமல் கலைத்தன்மை கூடியிருப்பதே இதன் வெற்றி. அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
தூயன்.
***
அன்பு ஜெயமோகன்,
அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
ஏன் இந்த ஆவணப்படத்தை இன்னும் நீங்கள் உங்களுடைய தளத்தில் பகிரவில்லை?
“ஜெயமோகன் – நீர், நிலம், நெருப்பு”
……………………………………………………………….
ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.
அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.
அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இதில் அவர்களுடைய முடிவைப் பற்றியும், ரப்பர் தோட்டத்துக்குள் தடயமற்றுப் புதைந்து போன தந்தையாரின் வீட்டைப் பற்றியும் சொல்லும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது சற்று உணர்ச்சிவசப்பட்டேன். கட்டிலின் மீதமர்ந்து அவர் அஜிதனுடன் உரையாடும் காட்சிகளைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. நானும் என் தந்தையும் அருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அதிலும் தன் மகனிடம் அவன் அன்னைக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி பேசும் இடம் கொள்ளை அழகு. வருங்காலத்தில் என் மகனுக்கு அவன் அன்னையுடனான என் காதலைப் பற்றி சொல்லும் பொழுது அவன் இவ்விதமே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்.
அவர் சிந்திக்கும், வாசிக்கும் காட்சிகள் நெருக்கத்திலிருந்தும், நடந்து செல்வது போன்ற காட்சிகள் தூரத்திலிருந்தும் அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் மீது அமர்ந்து ரஷ்யாவின் பனிப்பொழிவை கற்பனை செய்தபடி ரஷ்ய இலக்கியங்களை வாசித்தது பற்றி கூறிய இடம் என்னுடைய சிறுவயது நினைவுகளைக் கிளறியது. இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட ஒரு குளிர்காலத்தில் இரவு வேளைகளில் கட்டிலின் மீதமர்ந்து மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது தேநீர் போட்டுக் கொடுக்கும் என்னுடைய தாயைப் பற்றி எழுதினேன்.
அழகான இயற்கைக் சூழல், நீர்நிலைகள், கோயில்களின் பின்னணியில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள், இடையிடையே செருகப்பட்டிருந்த பொருத்தமான புகைப்படங்கள், இலையுதிர் காலத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்குப் பொருத்தமாக விழும் இலைகள் என்று பேச்சுக்குப் பொருத்தமான காட்சிகள், நாயுடன் கொஞ்சி விளையாடுவது, இப்படி இயல்பான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.
ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஹரிதம் இல்லத்தில் குறைந்த ஒளியில் தன்னுடைய இசைக்குறிப்புகளை சரிபார்க்கும் ஒரு அமைப்பாளராகத் தெரிந்தவர், அதன் இறுதிக் காட்சியில் அவர் தட்டச்சு செய்யும் இசைப்பின்னணியில் வேளிர் மலையின் மீது தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்டபோது, தன்னுடைய இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பியானோ கலைஞராக எனக்குத் தெரிந்தார்.
பின்னணி இசை என்று எதுவும் சேர்க்காமல் விட்டதற்கு அஜிதனுக்கு நன்றி.
ஜெயமோகனுக்கு இன்னும் நெருக்கத்தில் நான் இருப்பதாக என்னை உணர வைத்திருக்கிறது அஜிதன் தீட்டியிருக்கும் இந்த உயிரோவியம்.
அன்புடன்,
மாதவன் இளங்கோ
***
ஒரு அப்பங்காரன் தன் காதலியை எப்பொழுது முதன்முதலில் கண்டேன் என்பதையும் அவள் எப்படி தனக்கானவள் என முடிவுசெய்து காதலில் விழுந்தேன் என்பதையும் வெட்கம் ததும்ப சுருங்கச் சொல்வதை தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகன் கேட்க வாய்ப்பது ஒரு கொடுப்பினை. அது ஒரு “குடும்பம்” பலப்பல செய்திகளை செல்லாமல் சொல்லும் ஒரு தருணம் :)
பல பிரபலங்கள் தன் தனித்துவத்துக்காக தோல்வியுரும் குடும்ப அமைப்பில் ஜெயமோகன் வெற்றிகொண்டிருப்பது அவர் கனவுலகில் தடுமாறாமல் நிலைத்திருக்க அவர் வீட்டிலிருக்கும் அந்த நடுத்தரவயது பெண்மணி ஒரு சின்ன நூல்கட்டி இந்த யானையை வீட்டோடு இணைத்திருக்க வேண்டும். அதற்கு ஜெயமோகன் முழு விருப்பத்தோடே அனுமதித்திருக்க வேண்டும். எல்லா கனவுலக சஞ்சாரிகளுக்கும் இந்த குடும்பம் கொடுக்கும் பலம் எனும் கொடுப்பினை கிடைக்காது.
மத்த சேதியெல்லாம் பெரிய பிரமிப்பில்லை. அவர் இலக்கிய வாசகர்களுக்கு அந்த ஒரு விரலால் தட்டச்சும் சத்தம் இசை :)
நல்லா வந்திருக்கு அஜிதன். நல்ல டீம் அமைய வாழ்த்துகள் :))
இளவஞ்சி
***
“காலச்சுவடு” கண்ணனை எனக்கு நிரம்பப் பிடிக்கும். அவர்க்கு இயற்பெயர் என்னுடைய முதற்பெயர்தான் என்பதினாலன்று. அவருடைய காரியார்த்த வெளிப்படை காரணமாகப் பிடிக்கும். அவற்றிலொன்று, தன் தந்தைபால் அவர்க்குள்ள பற்று. விட்டுத்தராத அப்படியொரு மகன் ஒரொரு தந்தைக்கும் வாய்க்கவேண்டும். அப்படியொரு காவல்மகன் வாய்ப்பது, இக்காலத்தில், ஒரு கனா.
அஜிதன். வெல்லப்படமுடியாதவன். “விஷ்ணுபுரம்” நாவலின் நாயகன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மகன். இவரையும் இவர் குழந்தையாய் இருந்த காலத்திலிருந்தே அறிவேன். சென்னையில் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில், இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக இருப்பதாகச் சொன்னார்.
இந்த ஆவணப்படம், இவரல்லாமல் வேறு யாராவது ஆக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ‘அம்மா தனியாக’, ‘, தன்னோடும் தங்கையோடும்’ முதலிய படிமங்களைத் தேர்ந்த வகையில் ஒரு வாஞ்சை தெளிகிறது. மட்டுமல்ல, தந்தை ஓர் ஆளுமை என்றபோதும் அதை அடக்கி வாசிக்கிறது படம். வேறு யாராவது ஆக்கியிருந்தால் புகழாரமாய்ப் போயிருக்கும்.
இப்போதிருக்கும் நாகர்கோவில்–பார்வதிபுரம் வீட்டில் நுழைகிற கேமரா, படிக்கட்டுகளில் ஏறி, அங்கே ஒரு வாசலில், ஜெயமோகனுடைய செருப்புகளில் வலது நேராகவும் இடது கவிழ்ந்தும் கிடக்கிறதைக் காண்பிக்கிறது. எனக்குச் சிரிப்பாணியா வந்தது. அவ்வளவு தடிமனான “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலை இவ்வளவுக்கு சுருக்கித்தர ஏலுமா? சத்தியமாக, பகடிபண்ணவில்லை. என் முன்னாள் கம்யூனிசமூளை அப்படி.
நம்மைவிட்டு அகல்பவராக ஜெயமோகனைக் காட்டி பின்னால் நிற்கும் கேமரா, ஒரு ‘ரயில்வே க்ராஸிங்’கில் அவரை நம்மைநோக்கி வருபவராகக் காண்பித்திருப்பதையும் ரசித்தேன்.
படத்திலுள்ள செய்திகள் எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவைதாம் என்றாலும் திருவட்டார் கோவிலின் யானை நுழைகிற வாயில், அடுத்திருந்த அப்பத்தா வீடு, கதகளி மண்டபம் எல்லாம் காட்சியில் வருகையில்; எங்களுக்கு உரியவர் இல்லை அவர், அவர்க்கு உரியவர்கள் நாங்கள் என்று ஜெயமோகன் குரல்தணிகையில் உள்ளம்தொடுவதாக இருந்தது.
வள்ளல் ஆய்அண்டிரனின் வழிவந்தவர்களாக தன் தாய்வழி முன்னோர்களை ஆய்ந்தறிகிறார் ஜெயமோகன். இது ராஜராஜன் வழிவந்தவர்களாக தங்களை முன்னிறுத்தும் பல சாதிப்பெருமைபோல எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இயல்பாகவே வள்ளல்குணம் உள்ளவர் ஜெயமோகன். செய்ததை வெளியே சொல்பவரும் அல்லர். அவர் அந்த ரப்பர் தோட்டத்தின் வேலிக்கு வெளியே நின்று தன் தாய்தந்தையர்தம் செருக்கு, அழிவு பற்றிப் பேசுவது ஒரு வரலாற்று அவலம். “ரப்பர்” நாவல் வாசித்திருந்தால் இன்னும் உணர்த்தும்.
சில ஏரியல் ஷாட் வைத்திருக்கலாமே என்று தோன்றியது. வசதி இருந்திருக்காது. நூற்றாண்டுப்பழைய படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்து, தான் ரஷ்ய, வங்க இலக்கியங்கள் வாசித்த இடம் அது என்று ஜெயமோகன் சொல்கிற அந்த ஒரு ஷாட் போதும்; அப்புறம் ரப்பர்தோட்ட வேலிக்கு வெளியே என்று முந்திய பத்தியில் சொன்னேன் அல்லவா அது, இப்படி அஜிதன் சினிமாக்கலை தெரிந்தவர்தான்.
இது செய்திப்படம். வாய்ப்பிருந்தால் அஜிதன் எழுதி இயக்கி பகுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிற “காப்பன்” என்னும் குறும்படம் பாருங்கள்! இவருடைய திரைக்கலைத்திறன் இன்னதென்று விளங்கும்.
அஜிதன் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
ராஜ சுந்தரராஜன்
***
காப்பன் குறும்படம்