பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்காக நானும் சுரேஷ் கண்ணனும் காசியில் திவ்யா ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தபோது சுரேஷ் கண்ணன் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த குழுவினருடன் திரும்பி வெய்ய நீராடி ,வெள்ளாடை புனைந்து ,வெண்ணீறணிந்து, அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி உணர்ந்தோதி சிவப்பழமாக அமர்ந்திருந்தார். வெண்ணீறு துலக்கமாக தெரிவதற்கென்றே படைக்கபப்ட்ட மேனி
”எங்க போனீங்க?”என்றார்.
”மணிகர்ணிகா கட்டத்துக்கு”என்றேன், சட்டையை கழற்றியபடி.
”அப்டியா? டிபன் இப்ப வந்திரும்” என்றவர் சற்று அதிர்ந்து ”அது சுடுகாடுல்லா?” என்றார்.
“ஸ்மசானம்” என்று திருத்தினேன்.
”அதுசரி” என்று அரைமனதாகச் சொல்லி ”நீங்க அங்க எதுக்கு?” என்றார்
”பதினெட்டு வருஷம் முன்னாடி இங்க பண்டாரமா வந்தப்ப பொணம் எரியறத முழுசாப்பாத்தேன். இப்ப பாக்க முடியறதான்னு செக் பண்னலாம்னுதான்…” என்று ஆரம்பிக்கவும் சுரேஷ் கண்ணன் அசௌகரியமாக அசைந்து தலையை திருப்பி பாத்ரூமைப்பார்த்துவிட்டு ”ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சார் இண்ணைக்கு ஒண்ணு சொன்னார்” என்று ஆரம்பித்தார்.
”இண்ணைக்கு மூணுமணிநேரம் அங்கேயே ஒக்காந்து பொணம் எரியறதைப் பாத்தேன்” என்றேன். ”வரிசையா வந்திட்டே இருக்கு, நாம பாத்தமே அந்தமாதிரி மஞ்சள் சரிகை துணி சுத்தி ஒத்தைமூங்கிலிலே கட்டி கொண்டுட்டு வராங்க. சைக்கிளிலே நெடுக்குவாட்டிலே கட்டிக்கூட கொண்டு வராங்க. ஆட்டோ ரிக்ஷாமேலேகூட கட்டி கொண்டு வராங்க…”
”டிபன் சாப்பிட்டுட்டு நாம ஆரியா ரூமுக்கு போவோம்…ஏன்னா…”
”வெட்டியான்கிட்டே செத்தவங்களோட சொந்தக்காரங்க பேரம் பேசறத இங்கமட்டும்தான் பாக்கலாம். நடுவிலே பொணம் ‘சீக்கிரம் பேசி முடிங்கய்யா’ ன்னு போரடிச்சுப்போய் படுத்துக்கிடக்கு. சுத்தி நின்னுட்டு கத்தி ஏலம்போடுறாங்க. பொணம் செம கனம்னு காட்டுறதுக்காக வெட்டியான் அதை தூக்கி டம்முன்னு போடுறான். அதிலே கெடந்த பொணசேட்டு சேச்சேங்கிற மாதிரி தலைய ஆட்டுறார்.”
”…கிருஷ்ண மூர்த்திசார் வந்து…”
”… ஒரு பொணம் எரியறப்ப அடுத்த பொணம் காத்திருப்பில இருக்கு. வெயிட்டிங் லிஸ்ட் உண்டு. ரிசர்வேஷன் எகன்ஸ்ட் கான்சலேஷன் உண்டான்னு தெரியல்லை. நான் பாத்தது ஒரு வத்திப்போன பாட்டி. சிதையப்பாத்தீங்கன்னா இந்தா இவ்ளவுதான் இருக்கும், சதுர வடிவமா ஒரு ·ப்ரேம் பண்ணினதுமாதிரி… மூணடி அகலம் நாலடி நீளம். தலையும் காலும் வெளியே நீட்டிகிட்டு இருக்கும். வெறகுமேலே ஒடம்பு மட்டும்தான். பாட்டியை தூக்கி வச்சப்போ அவங்க கொஞ்சம் அசௌகரியமாத்தான் படுத்திருந்தாங்க. மூக்கு எலும்பு பொடைச்சு உந்தி நின்னுது. வாய்க்குள்ள கறுப்பா நாலஞ்சு பல்லு…காலிலே ஒரு இரும்பு தண்டை… மிட்டாய்சிவப்புகலர்லே சிந்தெடிக் பொடவை…”
”மோகன்…நாம அதை அப்றமா பேசலாமே…ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திசார் என்ன சொன்னார்னா…”
‘ … அவர் என்ன பெரிசா சொல்லிடப்போறார் ? இதக் கேளுங்க…சிதைக்குள்ள நல்லா வைக்கோலைப்போட்டு வச்சிருக்காங்க. சடலத்த அவ்ச்சதுமே நல்லா மண் எண்ணைய விட்டுடறாங்க. கொளுத்தினதுமே வேண்டியவங்க போயிடறாங்க. சுரேஷ் நீங்க பாக்கணும், தீயோட ஜ்வாலை பட்டதுமே பொணம் மேல வாற மாற்றங்கள… சிந்தெடிக் பொடவை அப்டியே பொசுங்கிபோனபிறகு பொணம் நிர்வாணமாத்தான் இருக்கு. தோல் நெறம் அப்டியே மாறிட்டே வந்து தோல் காய்கறித்தோல் வெந்து வழியற மாதிரி உரிஞ்சு… தீக்கு வெளியிலே இருக்கிற பாட்டியோட மொகமும் காலும் அப்டியே மெழுகால செஞ்சது போல ஆயிடுது…”
கதவு தட்டப்பட்டது. பையன் டிபன் கொண்டுவந்தான்.
”மோகன் நீங்க வழக்கம்போல பழ உணவு சாப்பிடுங்க… நான் போய் ஆர்தர் வில்சன் ரூமிலே சாப்பிடறென். பாவம் கம்பெனி இல்லாம கஷ்டப்படுறார்…வரட்டா? ”
”நானும் வாரேன்.. எனக்கு இப்ப பசிக்கல்லை.. பழ உணவெல்லாம் லேட்டாத்தான் சாப்பிடணும்…”
”வேண்டாம் வேண்டாம்…இங்கியே சாப்பிடுதேன்.”
அமர்ந்தோம். நான் வாழைபழத்தை உரித்தபடி ”எங்கூர்லே நேந்திரம் பழத்தை சுட்டு சாப்பிடுவாங்க… தீயிலே டைரக்டா போட்டு….டேஸ்டா இருக்கும்” என்றேன்.
”சாப்பிடுங்க. தோசை இருக்கு மோகன். சாப்பிட்டுட்டு அப்றமா சில முக்கியமான விஷயங்கள் பேசலாம்.. ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திசாருக்கு உங்கமேல ஒரு வருத்தம் என்னன்னா… .”
”அப்டியே மசாலாதோசையை மடிக்கிற மாதிரி சுரேஷ்…. நடு உடம்பு வெந்ததுமே தண்ணியா விடுது…தோசை மாதிரியே சத்தம். அது நல்லா எரிஞ்சதும் குச்சியால அடிச்சு நடுவிலே மடிச்சு உள்ள தள்ளிட்டு சரக்கு மாஸ்டர் நடுவிலே மசாலா வச்சு மடிக்கிற மாதிரியே லாகவமா குச்சியால காலையும் தலையையும் எடுத்து உள்ள மடக்கிடறான்… தீ பட்டதும் பாட்டி முகத்துக்கு உள்ளே இருந்து ஒரு மண்டை ஓடு புடைச்சு வந்து மெதுவா சதையை விலக்கிட்டு வெளியே வந்து அப்டியே தனி மண்டை ஓடா மாறிடுது… மூக்குநுனியும் காதுமடலும்தான் முதலிலே உருகி போகுது… பாதம் அப்டியே மேல்நோக்கி வளைஞ்சு வலிப்பு கண்டவங்களை மாதிரி ஆயிடுது… ஏன் வேணாமா?”
”இல்ல. எனக்கு ராத்திரி தோசை சாப்பிட்டா தாகம் ஜாஸ்தியா வருது…”
” அப்ப சப்பாத்தி சாப்பிடுங்க… பொணம் கருகினதுமே தீ நல்லா எரிய ஆரம்பிச்சிருது… மண்டை ஓடுமட்டும் கொஞ்ச நேரம் எரியும்..அப்றம் டப்புன்னு ஒரு சத்தம்… அவ்ளவுதான். எரிஞ்சு முடிச்சதுமே வெறக வெலக்கி நாம பலாக்கொட்டை சுட்டா பொறுக்குவோமே அதே மாதிரி எலும்பை பொறுக்கி மரக்குடுவையிலே குடுத்திடறான்…அதே சிதையிலே இன்னும் கொஞ்சம் வெறக அடுக்கி வெயிட்டிங் லிஸ்டிலே அடுத்த சீனியரை ஏத்துறான்… ஏன் பசியே இல்லியா? நீங்க இப்பல்லாம் நல்லா சப்பிடறதே இல்லை.”
”ஆக்சுவலா நான் அப்பவே கிருஷ்ணமூர்த்தி சார்கூட பூரி சாப்பிட்டேன். அப்பதான் உங்களைப்பத்தி ஒரு விஷயம் சொன்னார்…”
”எரிக்கிற பையனுக்கு என்னவயசுன்னு நினைக்கிறீங்க? பதினஞ்சு பதினாறு… படிக்கிறானாம்… அங்க ஏகப்பட்ட நாயிங்க. எல்லாம் கால பைரவர் வாகனம்…நாயி ஏன் அங்க சுத்தணும்… எதாவது மிச்சம் மீதி திங்குமோ? நீங்க என்ன நெனைக்கறீங்க?”
”நாளைக்கு ஏர்லி மானிங் ஷூட் உண்டுண்ணு பாலா சொன்னார்…படுத்துக்கலாமா?”
”பயந்துட்டீங்களா?”
“சேச்சே…எதுக்கு பயபப்டணும்?”
”அதானே. நீங்க சைவர்லே? காசியிலே உள்ள ரெண்டு ஸ்மசானமும்தான் உண்மையான கோயிலாம். இங்க மணிகர்ணிகா கட்டத்திலே சிதை அணையவேகூடாதுன்னு ஐதீகம். சுத்துவட்டத்திலே இருநூறு மைல் எங்க இந்துக்கள் செத்தாலும் இங்க கொண்டுவந்திடறாங்க. தினம் இருநூறு பொணம் வரை எரியுதாமே?”
”…ம்ம்ம்.”
”பெரிய சமையக்கட்டு மாதிரி இருக்கு…ஒரு நாலாயிரம்பேருக்கு சமைக்கிற கல்யாணச் சமையல்…”
”ம்.”
”பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் துறவி ராத்திரி சுடுகாட்டிலேதான் தங்கணும்னு சாஸ்திரவிதி இருந்திருக்கு. யதி சரியைங்கிற நூலிலே சொல்லியிருக்கு….சைவர்களுக்கு அவங்க தெய்வமே சுடலை ருத்ரன்தான்…..சுடுகாட்டிலே உக்காந்து தியானம் பன்றது ரொம்ப நல்லது சுரேஷ். மனசு ஒருமைபப்டும். நம்ம மனசுக்குள்ள இருக்கிற சின்ன விஷயங்களெல்லாம் இல்லாம போயிரும்… என்ன சொல்றீங்க?”
”கண்டிப்பா… சித்தர் பாட்டிலே சொல்லியிருக்கே… தூங்கலாமா?”
”கிருஷ்ணமூர்த்திசார் என்ன சொன்னார்?”
”விடுங்க. இனி அதைப்போய் என்ன பேசிட்டு…”
”பயமுறுத்திட்டேனா?”
”சேச்சே…என்ன மோகன்? நான்லாம் சைவன்லா? குட் நைட்.”
நள்ளிரவில் ஒரு வீரிடல். நான் எழுந்தோடி விளக்கை போட்டால் சுரேஷ் வாய் திறந்து கண்களை ஒருமாதிரி விழித்தபடி ”போயிடுங்க போயிடுங்க…”என்றார்
”சுரேஷ், சுரேஷ்…”
”மோகன் நீங்களா? நீங்க ஊருக்குப்போகலை?”
“சுரேஷ், இங்க பாருங்க…”
“தண்ணி இருக்குமா, தாம்ரவருணியிலே?”
”சுரேஷ் என்ன ஆச்சு? இங்க பாருங்க.நாம இருக்கிறது காசியிலே திவ்யா ஓட்டல்…”
”ஆமால்ல?” என்று விழித்து ”சொப்பனம்!” என்றார்.
”என்ன சொப்பனம்?” என்றேன் ஆவலாக.
”ஒண்ணுமில்லை. கிருஷ்ணமூர்த்தி சார் கூந்தலை விரிச்சு போட்டுட்டு பக்கத்திலே வந்து உத்து பாக்கிறார்…”
”யாரை?”
”பொணத்தை.”
”அதை பாக்கிறது யாரு?”
”அந்தப் பொணம்தான்…” என்றவர் பாய்ந்து எழுந்து ஓடிப்போய் சம்புடத்தை திறந்து கைப்பிடி விபூதியை அள்ளி பட்டையாக போட்டு கொஞ்சம் வாயிலும் போட்டு ஏதோ மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.
”கனவுகளுக்கு ஒரு லாஜிக் இருக்கு சுரேஷ்… கனவிலே பொணம் வந்தாலே விசேஷம்… எனக்கு ஒருவாட்டி இப்டித்தான் ஒரு படுபயங்கரமான கனவு… என்னான்னா…”
குறட்டை ஒலி கேட்டது. வழக்கத்துக்கும் ரொம்ப உரக்க கேட்டதோ என்று இன்றுவரைக்கும் சந்தேகம்.