பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
இரு மாதங்களுக்கு முன் கேஜ்ரிவால் பற்றிய எனது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு முடித்திருந்தீர்கள்-
ஆனால் நாளுக்குநாள் கேஜ்ரிவால் அவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம்மூர் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விட மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறதே?.முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் சம்பந்தமாக ஒரு ஓய்வுபெற்ற வீரர் தற்கொலை செய்துகொண்டதை வைத்து இவர் நடத்தும் நாடகங்கள் எல்லை மீறி செல்கின்றனவே? இவரும் சராசரி அரசியல்வாதி போல் உண்மை நிலையை பற்றி சற்றும் தெரிந்துகொள்ளாமல் மோதி அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,அந்த வீரரின் உடல் இருக்கும் மருத்துவமனையில் அத்து மீறி பிரவேசித்து கைதாவதும், உடனே ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்போவதாக அறிவிப்பதும் (அந்த வீரர் ஏற்கனவே மோதி அரசின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் ரூ.45,000/- வரை வாங்குவதாகவும், பின் தேதி இட்டு!தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு முன்னாலேயே! இறந்துவிட்டதாகவும் செய்திகள் உலவும் நிலையில்..) – ஒரு படித்த, அரசாங்கத்தில் உயர்பதவியில் முன்பு வேலைபார்த்தவரின் செயலாக இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறதே.
இதே போல் சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் தீவீரவாதிகளுக்கு எதிராக நமது ராணுவம் நடத்திய “துல்லிய அடி”(Surgical Strike) பற்றிய காணொளி காட்சி ஆதாரத்தை வெளியிடவேண்டும் என்றும் JNU இல் நடைபெறும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதும் உங்களுக்கு ஏற்புடையதாகத் தெரிகிறதா?.இவருக்கு தில்லி மக்கள் வழங்கிய அமோக ஆதரவை வீணடித்துக் கொண்டு வருவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?
அன்புடன்,
அ.சேஷகிரி
*
அன்புள்ள சேஷகிரி
பல சிக்கல்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஒன்று டெல்லி என்னும் சிக்கலான பிரம்மாண்டமான நகரத்தை விரும்பியபடி நடத்தவோ சீரமைக்கவோ தேவையான அதிகாரம் கேஜ்ரிவாலிடம் இல்லை. ஏனென்றால் அதன் பெரும்பகுதி மத்திய அரசின் கீழுள்ள துணைராணுவப்படைகளின் கீழ் உள்ளது. ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அதிகம். அவருக்கு காவல்துறைமேலேயே அதிகாரமில்லை
கேஜ்ரிவாலின் வெற்றி குறியீட்டு ரீதியாக மட்டுமே முக்கியமானது. அவருக்கு உண்மையான அதிகாரமேதும் கிடைக்கவில்லை. அதை இப்போதுதான் அவர் புரிந்துகொள்கிறார் என நினைக்கிறேன். ஆகவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோற்றுப்போன ஆட்சியாளர் என்னும் சித்திரம் தனக்கு வராமலிருக்க அவர் முயற்சி செய்கிறார். அது ஒன்றே அவரது அரசியல் எதிர்காலம் கருதி அவர் செய்யக்கூடுவது
அதற்கு மூர்க்கமான மத்திய அரசு எதிர்ப்பு அரசியலைச் செய்யவேண்டும் அவர். மத்திய அரசு எதிர்ப்பை மோடி எதிர்ப்பு என்னும் பேரில் செய்தால் மோடி எதிர்ப்பு – வெறுப்பு – தரப்புகளின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடியும். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார். அது மெல்ல அத்துமீறிச் செல்கிறது
அவர் டெல்லியில் இருக்கிறார். டெல்லி நம் ஊடகங்களின் மையம். ஆகவே ஊடகம் முன்னால் நின்றுகொண்டிருப்பதே அவருடைய முதல் ஈடுபாடாக உள்ளது. அவர் உண்மையில் கோவா அல்லது பாண்டிச்சேரி போன்ற ஒரு சிறிய நிலப்பகுதியின் ஆட்சியாளர். ஆனால் அவருக்கு எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத முக்கியத்துவம் அவர் டெல்லியில் இருப்பதனாலேயே கிடைக்கிறது. அதில் அவர் திளைக்கிறார்
அதனால் அவருக்கு அரசியல் இலாபமும் உண்டு. அவர் ஒரு அரசியல் பிரமுகராக ஊடங்களால் நிலைநிறுத்தப்படுகிறார். அப்படி நின்றிருக்க அவருக்கு என்ன தகுதியிருக்கிறது, ஆட்சியாளராக அல்லது அரசியல்தலைவராக அவர் சாதித்தது என்ன என்னும் வினா எஞ்சியிருக்கையிலேயே அவர் ஊடகங்களில் பெருகிக்கொண்டே செல்கிறார்.
இதன் எதிர்விளைவுகளையும் அவர் அனுபவிக்கிறார். அவர் ஊடகங்களில் வளர வளர அவரது தோழர்கள் அதிருப்தி அடைகிறார்கள். ஏனென்றால் அவர் தொடங்கியது ஓர் இயக்கம், தனிநபர் பிரச்சார அமைப்பு அல்ல. அந்த இயக்கத்தின் முகமாக அவர் முன்னே எழ எழ பிறர் சலிப்புற்று விலகுகிறார்கள். அந்த அமைப்பு வீழ்ச்சி அடைகிறது
கேஜ்ரிவால் ஒரு நம்பிக்கை. ஒரு சாமானியன் மக்களை நோக்கிப் பேசமுடியும், அதன் வழியாக அதிகாரத்தை அடையமுடியும், அதற்கு ஜனநாயகத்தில் இடமிருக்கிறது என்ற நம்பிக்கை. அதை அவர் அழித்துக்கொண்டிருக்கிறார். தெருச்சண்டை அரசியல்வாதியாக, இன்னொரு லல்லுப்பிரசாத் ஆக, மாறிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். லல்லு இதேபோல மாபெரும் நம்பிக்கையாக, சாமானியனின் வெற்றியாக அரசியலுக்கு வந்தவர்.
ஆனால் இத்தகைய சரிவுகள் நமக்குப் புதியவை அல்ல. வி.பி.சிங், சந்திரசேகர் அதற்கு முன்பு சரண்சிங் ராஜ்நாராயணன். எத்தனை முகங்கள். மனிதர்கள் வரலாற்றின் மேல் ஆரோகணிக்கும்போது தங்கள் எல்லைகளை மறந்துவிடுகிறார்கள். தங்கள் உடல் ஊதிப்பெருக்கக் காண்கிறார்கள். வெடித்து அழிகிறார்கள்.
இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பைப்பற்றி கேஜ்ரிவால் பேசியிருக்கும் அபத்தத்தைப் பார்க்கையில் பெரும் வருத்தம் எஞ்சுகிறது. எந்த ஆதாரமோ தர்க்கமோ இல்லாத வெற்றுக்கூச்சல். முட்டாள்களை, மோடி எதிர்ப்பு ஊடகங்களை மட்டுமே நம்பி செய்யும் கழைக்கூத்து
இந்த கோமாளி இப்படியே அரசியலில் இருந்து அழிந்தால் நாட்டுக்கு நல்லது. ராஜநாராயணன் போல இவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்குமென்றால் அது தேசத்தின் தீயூழ்.மீண்டும் மீண்டும் இத்தகையவர்களால் ஜனநாயகத்தின் அடிப்படைநம்பிக்கைகள் அழிகின்றன.
யானைமேல் ஏறுவதைவிட அமர்ந்திருப்பது கடினம் என்று ஒரு பழமொழி உண்டு. வரலாற்றின் அலைமேல் சமநிலையுடன் நிற்பது எளிதல்ல
ஜெ