தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி

download

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

 

தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி  தங்களுடைய கருத்தினை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

 

சமகால நவீன இலக்கியத்தில் சிறந்தவற்றை நானும் தேடி வருகிறேன். என்னுடைய ரசனை சற்று மாறுபடக் கூடும். மகம்மது கதீர்பாபு (Mohammed Khadeerbabu) “போலேரம்ம பண்ட கதலு”, “தர்கா மிட்ட கதலு” இவை இரண்டுமே முஸ்லிம் பின்னணியில் அவர் எழுதிய கதைகள். ஆர்.கே. நாராயணன் எழுதிய “மால்குடி டேஸ்” க்கு இணையாக இவற்றை சொல்ல முடியும். அதே சுவையுடன்  மொழி பெயர்க்ககூடியவர்கள்  இதனை தமிழில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

 

போய ஜங்கய்யா (Boya Jangayya) அவர்களின் “ஜாதர” என்ற படைப்பு, ஏறக்குறைய “மாதொருபாகன்” கதையின் கருத்தை மையமாக கொண்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி உள்ளது.

 

ரங்கநாயகம்மா அவர்களின் படைப்பில் ஜாதி வேற்றுமைகளை கருத்தாக கொண்ட நாவலான  “பலிபீடம்”,  பெண் விடுதலை மையமாகக் கொண்ட “ஜானகி விமுக்தி” குறிப்பிடத்தக்கன. 1962-63ல் வெளிவந்த “பலிபீடம்”  1975ல் திரைப்படமாகவும் வந்து பாராட்டை பெற்றுள்ளது. அவருடைய சுமாரான படைப்பு “பேகமேடலு”. அதன் தமிழாக்கம் தான் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்கள். அவருடைய சமீபத்திய படைப்பான “கள்ளு தெரிசின சீதா” ஒரு பெண்மணியின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது

 

 தான் எழுதிய கதைகளையே, தனக்கு இப்போது உடன்பாடு இல்லாத விஷயங்களை  மாற்றி அமைத்து (அதற்கான விளக்கத்துடன்)     புதிதாக வரும் பதிப்புகளில் வெளியிட்டு வருகிறார் ரங்கநாயகம்மா.

 

கடந்த இருபது ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு இலக்கியத்தில்  (தெலுங்கிலிருந்து தமிழ் மற்றும் தமிழிலிருந்து தெலுங்கு) ஈடுபட்டு வருகிறேன்.

 

நான் முதல் முதலில் மொழிபெயர்த்தது எண்டமூரி அவர்களின் அந்தர்முகம் என்ற புதினம். அதே தலைப்பில் தமிழில் வெளியாகி உள்ளது. (அல்லயன்ஸ் பதிப்பகம்) இவர்   குடும்பம், விஞ்ஞானம், மாந்த்ரீகம் என  பல தரப்பட்ட தளங்களில் எழுதி உள்ளார். இவரது நாற்பது நாவல்களை நான் மொழிபெயர்த்துள்ளேன்.

 

“நாவல் ராணி” என்று போற்றப்படும் யத்தனபூடி சுலோசனா ராணி குடும்பப் பின்னணியில் எழுபது நாவல்கள் எழுதியுள்ளார். அதில் ‘செகரட்ரி’ என்னும் நாவலின்  தொன்னூறாவது பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இவர் நாவல்கள் 16 என் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளன.

 

பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் என்று முத்திரை இருந்தாலும், சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதி வருபவர் ஒல்கா. “விமுக்தா” என்ற அவருடைய கதைத் தொகுப்பு, சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட ராமாயணக் கதைகள். வனவாசத்தின்போது  அரண்மனையில் யாரையும் சந்திக்காத ஊர்மிளை மற்றும்  அகலிகை, சூர்பனகை, ரேணுகா ஆகியோரை  சந்தித்து உரையாடியதால் ஏற்பட்ட அனுபவங்கள் பின் வரும் நாளில் சீதைக்கு  ஏற்படுத்திய புரிதலை விளக்கும் விதமாக கதைகள் அமைந்துள்ளன, “விமுக்தா” என்ற இந்த படைப்பிற்காக 2015 சாஹித்ய அகாதமி விருது அவருக்குக் கிடைத்துள்ளது.   இதன் தமிழாக்கமான “மீட்சி” அதே ஆண்டில் எனக்கு சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்றுத் தந்தது.

 

அவருடைய மற்ற படைப்புகளான சுஜாதா, தொடுவானம் தொட்டு விடும் தூரம், ஒரு பெண்ணின் கதை ஆகியவற்றையும்  பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (PEOPLE’S WAR GROUP ஸ்தாபகர் சீதாராமய்யாவின் மனைவி) தனது தொன்னூறாவது வயதில் எழுதிய  தன்வரலாறு, “ஆளற்ற பாலம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

கவனசர்மா, P.சத்யவதி, விவின மூர்த்தி, முஹம்மது கதீர் பாபு, பெத்திண்டி அசோக் குமார், டி. காமேஸ்வரி, சிலகலூரி தேவபுத்திர, ஸ்ரீவல்லி ராதிகா போன்றவர்களின் சமீபத்திய   சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன்

 

வணக்கத்துடன்

கௌரி கிருபானந்தன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25
அடுத்த கட்டுரைசிறுகதைகள் – விமர்சனங்கள் 5