தி.ஜானகிராமனின் சிறுகதைகளே அவரது சாதனைகள் என்பது என் எண்ணம் [இலக்கியமுன்னோடிகள் வரிசையில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன் -தமிழினி பிரசுரம்]
ஜானகிராமனின் சிறுகதைகளின் சிறப்பியல்பு என்ன? பொதுவாக கனகச்சிதமாகச் சொல்வதற்குரிய இலக்கியவடிவம் சிறுகதை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். ஒரு சொல் மிகாது. ஆனால் நேர்மாறாக இசைப்பாடலைப்போல வளைந்து வளைந்து தன்போக்கில் செல்கின்றன ஜானகிராமனின் சிறுகதைகள்.
சொல்லவந்ததை பாதிசொல்லி மீதி சொல்லாமல் ஊகிக்க விடுவது உலகமெங்கும் சிறுகதைகளின் சிறப்பியல்பு. அதற்கும் அசோகமித்திரனே உதாரணம். ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல. தேர்ந்த பாடகனின் சங்கதிபோல இயல்பாக, தன்னிச்சையாக நிகழ்வதுபோல, அவை கதையில் வருகின்றன
ஜானகிராமனின் கதைகளின் இயல்பை இவ்விரண்டு கூறுகளின் அடிப்படையில் வகுக்கலாம். சொகுசு, தற்செயலாக உருவாகும் அழகு. அந்த தற்செயல் என்பது அபாரமான கதைத்தொழில்நுட்பம் மூலம் உருவாகக்கூடியது என்பதை இலக்கியநுட்பம் அறிந்தவன் உணரமுடியும்.
இக்கதையின் ஓட்டம் அவரது சொகுசுக்கு உதாரனம். சாமநாதுவின் மனசிக்கலை அவர் சொல்லவில்லை. ஆனால் கதை முழுக்க அது வழிந்துகொண்டே இருக்கிறது. தீமையும் தன் தீமையை தானே உணரும் மேன்மையுமாக அவர் மனம் ஓடுகிறது.
தற்செயல்நுட்பத்துக்கு முடிவு சிறந்த உதாரணம். அவரது மகளின் பார்வையில் சாமநாது தன்னை அறியும் தருணம். அது தன் மனைவியை மறுபடியும் காணும் கணமும் கூட