ஓர் ஆவணப்படம் – என்னைப்பற்றி

சென்ற வருடம் எனக்கு கோவை ரோட்டரி அமைப்பு அவ்வருடத்தைய துறைச்சாதனையாளர் விருதை வழங்கியது. அப்போது அவ்விழாவில் காட்ட ஒரு 7 நிமிட பேட்டி ஒன்றை என்னைப்பற்றி எடுத்துக்கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவர்கள் அதற்கு அளித்த நிதியைக்கொண்டு ஒரு ஆவணப்படமே எடுக்கலாமே என்று நான் சொன்னேன்.

 

அஜிதனிடம் மணிரத்னம் கூறிய ஒன்றை அவன் அடிக்கடிச் சொல்வதுண்டு. சினிமாவைப் பயில அதன் அனைத்துத் துறைகளையும் தானே செய்து படங்களை எடுத்துப்பார்க்கவேண்டும் என்று. அதை இங்கே செயல்படுத்தலாம் என்று தோன்றியது. அவ்வாறுதான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது

 

இதன் சிறப்புகள் இவை. அஜிதனுக்குச் சொந்தமான ஒரு  5 டி காமிரா மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்ட கருவி. ஒலிப்பதிவும் அதில்தான். வேறு விளக்குகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. காமிரா முழுக்கமுழுக்க கையாலேயே கொண்டுசென்று இயக்கப்பட்டது. ஆகவே இதில் படப்பிடிப்புக் குழுவே இல்லை. நான் இதில் நடிகன், அஜிதன் படப்பிடிப்பு. வேறு எவருமே உடன் இல்லை

 

மொத்தப்படப்பிடிப்பும் இரண்டே நாளில் முடிந்தது. ஒருநாள் திருவரம்பும் பத்மநாபபுரமும். இன்னொருநாள் பார்வதிபுரம். அதற்குமேல் எனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டேன். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களைக்கொண்டு அஜிதனே படத்தொகுப்பையும் ஒலிச்சேர்ப்பையும் செய்தான். எங்கும் பிற எவரும் பங்கேற்கவில்லை

 

படப்பிடிப்பு உட்பட இந்த ஆவணப்படத்தின் மொத்தச்செலவே 1800 ரூபாய்தான். அதாவது ஒருநாள் காருக்கு டீசல் போட்டதும் மதியம் சாப்பிட்டதும் மட்டும். ஆவணப்படம் எடுத்து முடிக்க ஆனது வெறும் ஆறுநாட்கள்.

 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஆவணப்படம், குறும்படம் எடுப்பது மிகமிக எளிதானதாக ஆகிவிட்டது. இந்த ஆவணப்படத்தில் சில குறைபாடுகள் உள்ளன. ஒலிப்பதிவுத்தரம் முக்கியமான குறை. தனியான ஒரு ஒலிப்பதிவுக்கருவி இருந்திருக்கலாம். அப்படி பல நுட்பமான குறைகளைச் சொல்லலாம். ஆனால் ஓர் ஆவணப்படம் எடுப்பது இத்தனை எளிது. ஆர்வமும் கொஞ்சம் பயிற்சியும் இருந்தால்போதும்

 

கவிஞர் ஞானக்கூத்தன் இறந்தபோது விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவிற்காக நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஒரே ஒரு ஆவணப்படம் மட்டுமே அவரைப்பற்றி எஞ்சியது என்பதை உணர்ந்தோம். அதை எடுக்கவேண்டும் என்று தோன்றியமைக்காக மகிழ்ச்சி அடைந்தோம். குறைந்த செலவில் குறைந்தபட்ச தொழில்நுட்ப உதவியுடன் எடுத்த படம் அது.

 

இன்று ஒரு ஆப்பிள் செல்பேசியும் ஒரு கணிப்பொறியும் இருந்தால் நீங்கள் மாதம் ஒரு ஆவணப்படம் வீதம் எடுக்கமுடியும். யூடியூபில் பதிவிடவும் முடியும். நம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றி எத்தனை ஆவணப்படங்கள் எடுக்க முடியும் என எண்ணிப்பாருங்கள். இங்கே பெரும்பாலானவர்களைப்பற்றி எளிய அளவில்கூட பதிவுகள் இல்லை. கேட்டால் ‘ஃபண்ட் இல்லை’ என்பதே பதிலாக இருக்கும். பணமே தேவையில்லை என்பதே உண்மை

 

அரிய நிகழ்வுகள் பற்றி, ஆலயங்கள் பற்றி, முக்கியமான மனிதர்கள் பற்றி ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கலாம். நாம் பதிவுசெய்ய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவையெல்லாம் நாளை முக்கியமான செல்வங்களாக ஆகிவிடும். இன்று நிறுவனங்கள் நிறுவன மனிதர்களை மட்டுமே  பொருட்படுத்துகின்றன. பிறரைப்பற்றி இதேபோன்ற தனியார் முயற்சிகள் தான் செய்யவேண்டும்.

 

https://www.youtube.com/watch?v=l_TLOCliA00

https://www.youtube.com/watch?v=9JVjWxUD9e8

 

காப்பன் – நூறுநாற்காலிகளின் சிறுவனை படிமமாகக் கொண்டு அஜிதன் எடுத்த குறும்படம்