அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று ’பிரயாணம்’. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் கொடிபறந்த நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகட்ட அடையாளம்.
மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் உள்ளது. அதற்காக பல்லாயிரம்பேர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். தன் வாழ்நாளெல்லாம் அதற்காக ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டவர் இந்த குரு. ஆனால் கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை– என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை
சாதாரணத்துவமே என்றும் அசோகமித்திரனின் கலையின் இயல்பு. சர்வசாதாரணமான மானுடர்களின் சர்வசாதாரணமான வாழ்க்கைக் கணங்கள். ஆனால் மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் கதைகளையும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்
இது அத்தகைய கதை ’பிரயாணம்’