கடவல்லூர் அன்யோன்யம்

நான் இலக்கியக்கூட்டங்களில் பங்கெடுத்து மூன்றுவருடங்கள் ஆகின்றன. கூட்டங்கள், திருமணங்கள் போன்ற பொதுநிகழ்ச்சிகளை முற்றாக தவிர்க்கலாமென்ற மனநிலையில் இருக்கிறேன்.அன்னியர்களைச் சந்திப்பது சமீபகாலமாக எனக்கு தர்மசங்கடமான தருணங்களை உருவாக்குகிறது என்பதே முதல்காரணம். நான் தவறாமல் கலந்துகொள்ளும் குருநித்யா நினைவரங்க உரைகளில்கூட சென்ற இரு வருடங்களாக பங்குபெறவில்லை.

ஆனால் சமீபத்தில் கடவல்லூர் அன்யோன்ய பரிஷத் அழைப்பின்பேரில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த அமைப்பில் ஒரு சுவாரஸியம் இருக்கிறது. அது ஒரு வேத சதஸ். கேரளத்தில் வைதீகர்களாக இருந்த நம்பூதிரிகளில் இரு மரபுகள் உண்டு. பாலக்காடு திருநாவாய மையமாக்கி நம்பூதிரிகள் வடக்கர்கள். திரிச்சூரைத் தலைமையாகக் கொண்ட நம்பூதிரிகள் தெற்கர்கள். திருவிதாங்கூரில் நம்பூதிரிகள் இல்லை — மார்த்தாண்டவர்மாவால் துரத்தப்பட்டார்கள். வடக்கர்களுக்கு கோழிக்கோடு மன்னர் சாமூதிரி காவலர். தெற்கர்களுக்கு கொச்சி மன்னர்.

இவ்விரு நம்பூதிரிக்குழுக்களும் தங்கள் வேத பாண்டியத்தை பரிசோதித்துக்கொள்ள வருடம் தோறும் நடத்திவந்த வேதஞானசபை கடவல்லூர் ராமசாமி கோயிலில் நடைபெற்றுவந்தது. இது கொச்சிக்கும் கோழிக்கோட்டுக்கும் நடுவே திரிச்சூர் மன்னரின் எல்லைக்குள் இருந்தது. குருவாயூருக்கு சற்றுவடக்காக பாரதப்புழா ஆற்றின் கரையில் உள்ள சிறிய கிராமம் இது.

 

 

இங்கே பழங்காலத்தில் நடந்த வேத சபையில் நம்பூதிரிகளுக்கும் வைதிகர்களுக்கும் மட்டுமே அனுமதி இருந்தது. காலையில் வாரம் இருத்தல் என்னும் சடங்கு. இது ஒரு வேதம் ஒப்பித்தல்போட்டி. வேத கல்வியில் வேதபாடத்தை முழுமையாக மனனம் செய்து பாடுவது பாட பஜனம். அதை உரியமுறையில் யாகங்களுக்கு பயன்படுத்துதல் பிரயோகம். போட்டிகளில் முன்வைப்பது மூன்று பயிற்சிகளின் அடிபப்டையில். அவை  வாரம், ஜட, ரத என்று இருவகை அதில் உண்டு. வேத பாடல்களை மாறி மாறி ஒப்பிக்கும் போட்டிக்கு வாரம் என்று பெயர்.வேதங்களை நேராக கடைசிச் சொல்வரை பாடுவது ஜட. கடைசிவார்த்தையில் இருந்து நேர் தலைகீழாகச் சொல்லுதல் ரத. வேதத்தின் ஒரு சொல் கூட மாறாமல் மனப்பாடம் செய்வதற்கான பயிற்சி இது.

வேதங்களைச் சொல்வதற்கு ஒவ்வொரு சாகைக்கும் [கிளை] அதற்கான மெட்டுக்கள் உண்டு. அவை சந்தஸ் எனப்பட்டன. இவை தவிர வேதம் ஓதும்போது செய்யவேண்டிய சைகைகளும் உண்டு. இவையெல்லாம் திட்டவட்டமாக பலகாலமாக வகுக்கப்பட்டவை. மாறாதவை. ஆகவே வேத அரங்குகளில் பல பகுதிகளில் இருந்து பலர் கூடி அமர்ந்து வேதம் ஓத ஆரம்பிக்கும்போது துல்லியமாக அவை இணைந்துகொள்வதைப் பார்க்கலாம். வேதங்கள் இடைச்ச்செருகல்கள் மற்றும் திரிபுகள் இல்லாத பிரதிகளாக நீடிக்க இந்த பயில்முறை உதவியது. ஆனால் வேதங்களை தத்துவார்த்தமாக ஆராய்வதை இது இல்லாமலாக்கியது என்பார்கள்.

கடவல்லூர் அன்யோனியத்தில் பின்னர் வேத தத்துவங்களை விவாதிக்கும் அரங்குகள் நடைபெற்றன. வள்ளத்தோள் நாராயண மேனன் வேதங்களை மலையாளத்தில் மொழியாக்கம்செய்தபோது அதைப்பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதைப்போன்ற ஏராளமான வேத அரங்குகள் நாடெங்கும் நடைபெற்றிருந்தன. தமிழ்நாட்டிலும் புகழ்பெற்ற வேத அரங்குகள் இருந்தன.  அவை சாதிச்சடங்குகளாக குறுகி மெல்லமெல்ல வழக்கொழிந்தன.

கடவல்லூர் அன்யோன்யமும் அவ்வாறு குறுகிச் சிறுத்து காலப்போக்கில் நின்று போனது. 1947 முதல் அது நடைபெறவில்லை. 1990ல் கவிஞர் அக்கித்தம்அச்சுதன் நம்பூதிரி , காணிப்பய்யூர் கிருஷ்ணன் நம்பூதிரிப்பாடு போன்றவர்களுடைய முயற்சியால் அது மீண்டும் தொடங்கப்பட்டது. பதினெட்டுவருடங்களாக தொடர்ச்சியாக வருடம்தோறும் பத்து நாட்கள் நடந்து வருகிறது.

மறுபடியும் தொடங்கப்பட்டபோது பல முக்கியமான மாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று வேதம் ஓதுதல் கோயிலுக்குள் இருந்து வெளியே பொதுமேடைக்குக் கொண்டுவரப்பட்டது. வேதம் கற்ற அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வேத ஆராய்ச்சி செய்யும் விரிவான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யபப்ட்டன. அவற்றில் பங்கெடுப்பதற்கு சாதி அடையாளங்கள் மட்டுமல்ல கருத்தியல் அடையாளங்களும் மத அடையாளங்களும் தேவையில்லை என்றாக்கப்பட்டது. கிறித்தவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, வேதங்களை விமரிசிக்கும் மார்க்ஸிய அறிஞர்களும் மேடையேறினார்கள். இன்று அது ஒரு முக்கியமான கலாச்சார நிகழ்ச்சி

 

 

பத்துவருடங்களாக அதையொட்டி  இலக்கிய அரங்குகளும் நடைபெறுகின்றன. மரபிலக்கியம் மட்டுமல்லாமல் நவீன இலக்கியங்களும் விவாதிக்கப்பட்டன. கடவல்லூர் இன்றும் சின்ன கிராமம்தான். ஆனால் வளமான கிராமம். இங்கே இலக்கிய அரங்குகளுக்கு நூறுபேர் வரை உள்ளூர் மக்களே கூடுகிறார்கள். கேரள இலக்கியவாதிகளில் அனைத்துத் தரப்பினரும் வந்து பங்கேற்கிறார்கள். இம்முறை எம்.டிவாசுதேவன் நாயர், இஸ்லாமிய அறிஞரான எம்.என்.காரசேரி, தத்துவ ஆசிரியரான டாக்டர் பௌலோஸ் போன்ற பல தரப்பினர் பங்குபெற்றனர்.

23-11-2008 அன்று தேசிய இலக்கிய அரங்கின் ஒரு பகுதியாக நடந்த அரங்கில் நான் கலந்துகொண்டேன். தெலுங்கு இலக்கியவாதிகள் இருவர் கலந்துகொண்டார்கள். பேராசிரியர்.யாகூப் தெலுங்கில் முக்கியமான கவிஞர். கவிஞர்களின் அமைப்பான கவிகணம் அவரால் நடத்தப்படுகிறது. மாத்யமம் என்ற இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். குப்பம் திராவிட பல்கலையில் பணியாற்றுகிறார். குப்பம் திராவிட பல்கலை ஊழியரான சீதாராம் தெலுங்கில் முக்கியமான நவீனக் கவிஞர். இருவரும் வாசித்த இரு கவிதைகள் என்னைக் கவர்ந்தன.

 .
என்னுடைய அம்மா

யாக்கூப்

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை
எல்லா அம்மாக்களையும்போல
என் அம்மாவும் என்னைப் பெற்றாள்.

ஒருவேளை அவள் என்
வலதுகையை முத்தமிட்டிருக்கக் கூடும்
ஆகவே எனது கவிதை

வெற்றுக்கால்களுடன்
கல்லையும் முள்ளையும் மிதித்து
கனத்த புல்கட்டுகள் சுமந்து
என்னை வளர்த்தாள்.
ஆகவே இந்த
ஈரமான எழுத்துக்கள்.

என்னுடைய பாசக்கயிறான
தொப்புள்கொடி
ஒரு நாட்டு அரிவாளால்தான்
வெட்டப்பட்டது
ஆகவே இந்தக் கூர்மை
என் சொற்களில்

எங்கள் அருமைக் கன்றுக்குட்டி
மந்தை தவறிச் சென்றபோதெல்லாம்
அம்மா அதை
திருப்பிக் கொண்டுவந்துவிடுவாள்
ஆகவே நான்
விடாது ஓட்டிவருகிறேன்
சொற்களை

**

குப்பத்தில் சூரிய உதயம்

சீதாராம்

ஆவாரம்பூ வயல்களில்
பாறைமுதுகுகளில்
விழுந்த
கடைசி கிரணங்களையும்
பொறுக்கி எடுத்துகொண்டு
சூரியன் எங்கே ஒளிகிறது?

அந்தியில் அந்த குடும்பப்பெண்
முற்றம் பெருக்கி போட்ட கோலத்தை
ஆர்வத்துடன் பார்க்கும் சூரியன்
அணைவதற்குத் தயங்கித் தயங்கி
கோலத்தில் ஒரு ஆவாரம்பூவாகிறது.

வயலில் மேயும் பசுக்களின் கழுத்திலுள்ள
சிவந்த மணியாக மாறி அஸ்தமிக்கிறது.

மேய்ந்து மேய்ந்து முன்னகரும்
பசுவின் முதுகில்
போக்குவெயிலின் சாய்நிழல்.
அதையும் ஒரு ஈயென எண்ணிய பசு
சூரியனை வால் சுழற்றித்துரத்துகிறது.

*

மரபும் நவீன காலகட்டமும் உரையாடி முன்னகர முடியுமென்பதே என் நம்பிக்கை. மரபை முறித்து வீசியபின்னரே நவீன சிந்தனைகள் உருவாக முடியுமென இங்கே கூறப்படும் பாழ்ச்சொற்கள் மீது எப்போதும் ஆழ்ந்த அவநம்பிக்கை கொண்டவன் நான். எனது நம்பிக்கைகளை மேலும் உறுதிசெய்தது கடவல்லூர். 
www.kadavalluranyonyam.org

வைரம்

திரிச்சூரில்

முந்தைய கட்டுரைதெய்வமிருகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதோன்றாத்துணை:கடிதங்கள்