தொழிற்சங்கம் தேவையில்லையா?

திரு வி க

 

 

 

அன்புள்ள ஜெ,

நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஓராண்டுக்கும் மேலாக பணிசெய்து வந்தேன். அங்கே தொழிற்சங்கங்கள் என்று ஒன்றும் கிடையாது. பெருமுதலாளிகளின்கீழ் வேலைசெய்யும் HR, Manager போன்ற சிறு முதலாளிகள் வைத்ததுதான் அங்கு சட்டம்.

என் நண்பர்கள் அங்கு ஒருநாளைக்கு பதினான்கு மணி நேரம் உழைக்கிறார்கள். விடுமுறை தினங்களில்கூட உழைக்கிறார்கள். ஊதியம் என்பதும் ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாயை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது குறைவுதான். அவனுக்கு நேரமிருப்பதே உழைக்கவும், தூங்கவும், சாப்பிடவும் மட்டும்தான். ஆண்-பெண் உறவுநிலை மேம்பாடு, சமகால அரசியல் எதுவும் அவனுக்குத் தெரியாது. இதையேதான் தொழிற்சங்க ஆதரவுள்ள பொதுத்துறை நிறுவனங்களும் கடைப்பிடிக்கவேண்டுமென நினைக்கிறீர்களா?

தொழிற்சங்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு அடிமைப்பணி செய்தல்தான் இதற்குத் தீர்வா? வங்கிகளில் உள்ள பிரச்சனைகள் அனைவரும் எதிர்கொள்வதே. அவர்களின் பணித்திறன் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டுமென்பதை சிந்தித்தலுக்கு மாற்றாக தொழிற்சங்கங்களை குற்றம் சாட்டுவது சரியாகுமா?

இந்தியாவை, முதலாளிகளின் அடிமைகளாய் வாழும் ஜனத்திரளாக மாற்றுவதுதான் இதற்கு ஒரே வழியா? உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிற இளைஞனான எனக்கு, தொழிற்சங்கம் குறித்த உங்கள் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. நான் தொழிற்சங்கமற்ற சூழலினால், மென்பொருள் துறை என்மேல் செலுத்திய அதிகாரத்தை அறிந்தவன். தனிமனித உணர்வுகளை குறைந்தபட்ச அளவிற்குக்கூட மதிக்காத சுயநலவாதிகள் அவர்கள். என் நண்பர்கள் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள். ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்திற்கும் எளிதில் மாறமுடியாது. அதற்கான திறன்களை நம் கல்விமுறை அளிப்பதில்லை. ஏதாவது ஒருவேலை கிடைத்தாலே போதும், எவ்வளவு உளவியல் பிரச்சனைகள் வந்தாலும் பரவாயில்லை என வாழ்கிறவர்கள் அவர்கள்.

அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லையா? முதலாளிகளைத் தவிர வேறெவரும் இங்கே வாழவேகூடாதா ஜெ?

அன்புடன், அகில் குமார்.

 

 

பி பி வாடியா

 

 

அன்புள்ள அகில்குமார்

ஏற்கனவே நீங்கள் பேசிய இந்த விஷயத்தைப்பற்றி இந்தத் தளத்தில் மிக விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன்

நான் தொழிற்சங்க இயக்கத்தைப்பற்றி எந்நிலையிலும் எதிர்மறையாக ஏதும் சொன்னதில்லை. நான் அதில் இருபதாண்டுக்காலம் ஈடுபட்டிருந்தவன். இந்த தளத்திலேயே தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்து பத்துக்கும் மேற்பட்டமுறை எழுதியிருப்பேன். அனைத்து தொழில்துறைகளிலும் தொழிற்சங்கம் இன்றியமையாத தேவை என்றே நினைக்கிறேன்.

இந்தியா இன்னமும் நவீன முதலாளித்துவ மனநிலைக்குப் பழகாத தேசம். இங்கே நிலப்பிரபுத்துவ மனநிலைகளே தொழில்துறையை ஆள்கின்றன. முதலாளிகளும், நிர்வாகிகளும் ஊழியர்களை தங்கள் அடிமைகள் என நினைக்கிறார்கள். ஊழியர்களை தங்கள் வீட்டு வேலைக்கு அழைத்துச்செல்பவர்கள், தங்கள் மனைவிமக்களுக்கும் வேலைக்காரர்களாக ஆக்குபவர்கள் இங்கு பலர்.

இந்நிலையில் ஊழியரின் சுயமரியாதையைப் பாதுகாக்கவே வலுவான அமைப்பு தேவை. இன்றும்கூட வலுவான தொழிற்சங்க அமைப்பு உள்ள தொலைதொடர்புத்துறை ரயில்வே போன்ற துறைகளில் இருக்கும் மரியாதையை ஊழியர் தமிழக அரசு நிறுவனங்கள் பலவற்றில் பெற முடியாது. ஊழியர்களை தன் முன் அமரச்செய்யவே தயங்கும் அதிகாரிகள்தான் இங்கு அதிகம். பெண்கள் தன்மதிப்புடன் பணியாற்றும் சூழலை இங்கே கொண்டுவந்ததே தொழிற்சங்க இயக்கம்தான்.

தொழிற்சங்கமுன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பி. பி. வாடியா, திருவிக, சிங்காரவேலர், வி. பி. சிந்தன்,கெ. டி. கெ. தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் போன்ற தமிழகத் தொழிற்சங்க முன்னோடிகளை நினைவுகூரும் கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன்

இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. தொழிற்சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குள், அந்த தொழிலுக்குரிய தனித்தன்மைகளைக் கருத்தில்கொண்டு அமையவேண்டியது. நிர்வாகத்துடன் முரண்பட்டு தொழிலாளரின் நலன்களைப் பேணவேண்டிய பொறுப்பு அதற்குண்டு. கூடவே அந்தத் தொழில் வெற்றிகரமாக நிகழும்பொருட்டு நிர்வாகத்துடன் ஒத்துழைக்கவேண்டியதும் அதன் கடமை

பலதொழில்துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக ஒற்றை அமைப்பாக இணையலாம். சேர்ந்து முடிவுகள் எடுக்கலாம். போராட்டங்களில் ஒத்துழைக்கலாம். ஆனால் அனைத்துத் தொழில்துறைகளையும் கட்டுப்படுத்தும் ஒற்றைத்தொழிற்சங்க அமைப்பு என்பது மிகமிக ஆபத்தான அதிகாரக்குவிப்பு

அந்த அமைப்பை அரசியல்கட்சி சார்ந்து உருவாக்கிக்கொள்வதென்பது மேலும் அபாயகரமானது. அந்த அரசியல்கட்சிக்கு தொழில்துறை முழுக்க ஒரு வகை எதிர்மறை ஆதிக்கத்தை அது உருவாக்கி அளிக்கிறது. நான் இடதுசாரிகள் தொழிற்சங்கத்துறையில் அளித்த பெரும்பங்களிப்பை வணங்குபவன். இன்றும் அவர்கள் இல்லையேல் தொழிற்சங்க இயக்கம் இல்லை என்பது உண்மை. ஆனால் தொழிற்சங்கங்களை கட்சியரசியலின் பகுதியாக ஆக்கியதன் மூலம் நீண்டகால அடிப்படையில் அவர்கள் தொழிற்சங்க இயக்கத்துக்கே தீங்கிழைத்தார்கள் என்பதே வரலாற்று உண்மை

தொடர்ந்து அத்தனை அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்கள் அமைத்து அவற்றை தொழில்துறைகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைத்து அதிகார அமைப்புகளாக ஆக்கிக்கொண்டன. இன்று தொழிற்சங்கம் மீது தொழிலாளர்களுக்குக்கூட எந்த கட்டுப்பாடும் இல்லை. அவை பல்வேறு அரசியல்கட்சிகளின் துணையமைப்புக்கள். அந்த அரசியல்கட்சியின் அரசியல்செயல்திட்டங்களையே அவை அமல்படுத்துகின்றன.

 

vpc
வி பி சிந்தன்

இன்று தொழிற்சங்கம் என்பது அரசியல்கட்சிகள் தொழில்துறையை மிரட்டிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தும் கருவி. தொழிலாளர் அந்தக் கருவியின் ஓர் உறுப்பு. எந்த நோக்கத்திற்காக தொழிற்சங்க அமைப்பு உருவானதோ அது பெரும்பாலும் இன்று நடைமுறையில் இல்லை.

இன்று அரசியல்கட்சிகளுக்கும் தொழில்துறைக்குமான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஆயுதமாகப் பயன்படுகின்றன, அந்த தொழிலே முழுமையாக அழிக்கப்பட்டாலும் தொழிற்சங்கங்களும் அவற்றை கையாளும் அரசியல் கட்சிகளும் சற்றும் கவலைப்படுவதில்லை. கேரளத்தின் மிகப்பெரும்பாலான தொழில்கள் தொழிற்சங்கத்தின் அரசியலாடல்களால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லமுடியும்

அரசுத்துறைகளைப்பொறுத்தவரை இது இன்னமும் மோசமான சூழல். அரசுத்துறைகளின் ஊழியர்பிரச்சினைகள் பல. ஊழல் முதன்மையானது. மக்களை வெறும் சோற்றுப்பட்டாளமாக நடத்தும் மேட்டிமை நோக்கு இன்னொன்று. எவ்வகையிலும் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் தேங்கியிருப்பது மூன்றாவதாக.

இக்காரணங்களால் அரசூழியர்கள் இன்று வரிகொடுக்கும் மக்களுக்கு மிகப்பெரிய சுமை. ஆனால் எந்த நிர்வாகியும் அரசூழியர்கள் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கமுடியாது. அவர்களுக்குத் தொழிற்சங்கப்பாதுகாப்பு உண்டு. ஆகவே நடைமுறையில் அயோக்கியத்தனத்தை, திமிரை, சோம்பலை தொழிற்சங்கம் பாதுகாக்கிறது. தொழிற்சங்கம் இல்லையேல் இந்த அளவுக்கு அரசுத்துறைகள் சீரழிந்திருக்காது என்பதே இன்றைய நிலைமை

என் அனுபவத்தில், பாரம்பரியமான இடதுசாரித் தொழிற்சங்கங்கள் எண்பதுகள் வரைக்கும்கூட தங்கள் ஊழியர்களை நிர்வாகத்தில் இருந்து பாதுகாக்கும்போதே அவர்களை ஓரளவு கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றன. அன்று நேர்மையும், உண்மையான இலட்சியவாத நோக்கும் கொண்டவர்களே இடதுசாரித் தொழிற்சங்கங்களில் தலைவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் இருந்தனர்.

எண்பதுகளில் நிலைமை மாறலாயிற்று. அனைத்துத் துறைகளிலும் இன்று அத்தனை கட்சிகளும் சங்கம் வைத்துள்ளன. சாதிசார்ந்த தொழிற்சங்கங்களும் ஏராளமாக உள்ளன. எனவே தொழிலாளரை ‘பிடித்துப்போட’ அத்தனை சங்கங்களும் முண்டியடிக்கின்றன. தொழிலாளர் என்ன செய்தாலும் சரிதான் தொழிற்சங்கம் அதை ஆதரிக்கும். நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

தொழிற்சங்கம் எந்த தவறையும் கண்டிக்காது. கண்டித்தால் தொழிலாளர் இன்னொரு சங்கத்துக்குச் சென்றுவிடுவார். சங்கத்திற்கு ஓர் ஊழியர் இழப்பு. பலசமயம் ஓரிரு ஊழியரின் ஓட்டு வேறுபாட்டால் அங்கீகாரத்தையே சங்கம் இழக்கவேண்டியிருக்கும்.

இந்நிலை உருவானதும் இதற்கேற்ற தொழிற்சங்கத்தலைமை உருவாகி வந்தது. தொழிலாளர்களை இலட்சியவாத நோக்குடன் அணுகிய, அவர்களை வழிநடத்திய தலைவர்கள் காலாவதியானார்கள். அவர்களுக்கு ‘வேண்டியதை’ செய்து அவர்களைத் திரட்டி அதிகாரத்தை உருவாக்கும் தலைவர்கள் வந்தனர். இன்றைய இடதுசாரிச் சங்கங்களின் நிலை இது. அவர்களை விட மோசம் மற்ற தொழிற்சங்கங்கள்.

இன்று நிகழ்வது நுணுக்கமான ஒரு பேரம். தொழிலாளரின் பொறுப்பின்மையையும் ஊழலையும் சங்கம் ஆதரிக்கும். பதிலுக்கு சங்கத்தின் அரசியல் விளையாட்டையும் உச்சநிலையில் நிகழும் பேரங்களையும் தொழிலாளர் அங்கீகரிப்பார்.

இச்சூழலில் மேலும் சிக்கலைச் சந்திப்பவை வங்கிகள் போல தனியார்த்துறையின் அறைகூவலைச் சமாளித்து வணிகரீதியாக வென்றாகவேண்டிய நிலையில் உள்ள நிறுவனங்கள். ஊழியர்களை எவ்வகையிலும் மாற்றியமைக்க முடியாது, திறன் மேம்படுத்த முடியாது. மூர்க்கமான ஒர் எதிர்ப்புதான் அவர்களிடமிருந்து எழும். வேலையைவிட்டு தூக்குவதை விடுங்கள், நடவடிக்கைகள்கூட எடுக்கமுடியாது

பல நிறுவனங்களில் மூத்துப்பழுத்த குடிகாரர்கள் வெளியே அதேவேலை செய்யும் ஒருவர் வாங்குவதைவிட மூன்றுமடங்கு சம்பளம் பெற்றபின் வேலை என்றே ஏதும் செய்யாமல் பல ஆண்டுகளாக இருந்துவருகிறார்கள். எப்போது வேலைக்கு நுழைந்தார்களோ அன்றே கற்றுக்கொள்வதை, ஏன் மூளைசார்ந்த அனைத்துச்செயல்பாடுகளையும், முழுக்க நிறுத்திக்கொண்ட நடுவயதான பெண்கள் எந்த அக்கறையுமே இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

வணிகக்கட்டாயத்தால் இந்தக் கரும்பாறையில் மண்டையை முட்டிக்கொண்டிருக்கின்றது நிர்வாகம். பயிற்சிமேல் பயிற்சி அளிக்கிறது. சலுகை ஊதியம் அளிக்கிறது. ஒன்றுமே நிகழ்வதில்லை. இதைக்குறிப்பிட்டு ஏதேனும் சொன்னால் உடனே ஜனநாயகம், சோஷலிசம், உழைப்பவர் உரிமை என்னும் கூச்சல்கள் எழுகின்றன

 

parvathi_1764449h
பார்வதி கிருஷ்ணன்

 

தன் தொழில்துறைமேல் அக்கறையும், இலட்சியவாத நோக்கும் இல்லாத இன்றைய தொழிற்சங்கங்களை அப்படிச் சொல்வதே சங்கடமானது. அவற்றை மிரட்டல் குழுக்கள் என்றே சொல்லவேண்டும். ஒருவகையான சிண்டிக்கேட்டுகள் அவை.

கணிப்பொறித்துறை போன்றவற்றில் சங்கம் தேவையா? கண்டிப்பாகத் தேவை என்பதே என் எண்ணம். அதைப்பற்றி நான் எழுதி பல எதிர்வினைகளுடன் நீண்ட விவாதம் இந்தத் தளத்தில் நடந்துள்ளது. தொழிற்சங்கம் இல்லாத சூழலில் பணிப்பாதுகாப்பு இல்லை. பணியறம் என்பது இன்னமும் வந்துசேராத நம் பழமைவாதச் சூழலில் நிர்வாகிகளின் கருணைக்கு ஊழியர் விடப்பட்டால் சுரண்டலும் அவமதிப்புமே எஞ்சும்.

இயல்பான நிலை என்பது திறமைக்கு மட்டுமே இடமிருக்கவேண்டும் என்பது. தேவையும் அளிப்பும் முரண்பட்டு உருவாகும் சமநிலை அனைத்தையும் தீர்மானிக்கவேண்டும் என்பது. அதுதான் சந்தையின் விதி. அதுதான் திறமை உடையவர்களுக்கு மேலும் வாய்ப்ப்பை அளிப்பதாகவும் பிறர் தங்களை திறமையானவர்களாக ஆக்கிக்கொள்ள கட்டாயப்படுத்துவதாகவும் இருக்கும்

ஆனால் இதெல்லாம் அசலான திறமைகொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்துபவை. பெரும்பாலான உழைப்புகள் அப்படி அல்ல. ஒருவருக்குப் பதிலாக அதே திறன் கொண்ட நூறுபேர் காத்திருக்கும் சூழல் இந்தியாவில் உள்ளது. அதைப் பயன்படுத்தி உழைப்புச்சுரண்டலும் உணர்வுரீதியான அவமதிப்புமே நிகழும். அங்குதான் தொழிற்சங்கம் தேவையாகிறது

ஆனால் அது இங்குள்ள பிறதுறைகளில் உள்ள தொழிற்சங்கம் போல ஆகுமென்றால் நாளடைவில் கணிப்பொறித்துறையே அழியும். தொழிற்சங்கங்கள் வழியாக அரசியல்கட்சிகள் அத்தொழிலுக்குள் ஊடுருவி பிடுங்கித்தின்ன ஆரம்பிப்பார்கள். தங்கள் சுயநலத்திற்காக அத்துறைக்குள் ஊழலையும் திறமையின்மையையும் சாதியநோக்கையும் வளர்ப்பார்கள்.

நவீனத் தொழில்நுட்பத்துறைகளிலும் திறமைக்குப்பதிலாக பணிக்காலம் மட்டும் அளவீடாகக் கொள்ளப்பட்டு பணியுயர்வு அளிக்கப்படும் சூழலை எண்ணிப்பாருங்கள். இன்னும் மோசமாக, திறமையற்றவர் அரசியல் அடாவடி வழியாக மெலே செல்லக்கூடும் என்னும் நிலை என்றால் என்ன ஆகும்?

கணிப்பொறித்துறையிலும் அரசுத்துறைகளைப்போல ஊழியர் வேலை செய்யாவிட்டாலும், வாடிக்கையாளரை வசைபாடினாலும், அலுவலக நிதியை கையாடல் செய்தாலும் எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை வருமென்றால் என்ன ஆகும்?

ஆக, நான் தொழிற்சங்கம் தேவை என்கிறேன். தொழிற்சங்கம் என்னும்பேரால் இன்று நடக்கும் அரசியல் அடாவடியை எதிர்க்கிறேன். அது நம் அரசுத் துறைகளை, அரசுசார் தொழில்களை உள்ளிருந்து அழிக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறேன். அவ்வளவுதான்

ஜெ

உலகத்தொழிலாளர்களே

உயர்தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கம் தேவையா?

நவீன அடிமைமுறை

நவீன அடிமைமுறை கடிதம் 1

நவீன அடிமைமுறை கடிதம் 2

நவீன அடிமைமுறை கடிதம் 3

நவீன அடிமைமுறை கடிதம் 4

தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை

 

முந்தைய கட்டுரைஅறம் – மனிதரும் எதிரீடும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16