‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14

[ 18 ]

இரவுணவுக்குப் பின்னர் கொட்டகையில் வணிகர்களும் வைதிகர்களுமாக நாற்பத்தெட்டுபேர் கூடினர். மென்மழைச்சாரலிருந்தமையால் கதிரொளி முன்மாலையிலேயே மறைந்துவிட்டிருந்தது. ஆனால் நீர்ச்சரடுகள் வழியாக வானொளி மண்மேல் ஊறி இறங்கிக்கொண்டிருந்தது. தேங்கிய நீரின் படலங்கள் ஒளியுடன் கசங்கி அதிர்ந்து கொண்டிருந்தன. சாரல் கலந்த காற்றின் குளிருக்கு மரவுரிகளைப் போர்த்தியபடி கட்டில்கள் மேல் கால்மடித்து அமர்ந்துகொண்டு இயல்பாக எழுந்த நினைவுகளையும் வேடிக்கை நிகழ்வுகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

சண்டன் தன் முழவை எடுத்து அதன் தோல்வட்டம் காய்ந்துவிட்டதா என மெல்ல தட்டிப்பார்த்ததும் அத்தனை தலைகளும் திரும்பின. “சூதரே, வருக! அமர்ந்து பாடுக! இன்றிரவு நீண்டது” என்றார் ஒரு பெருவணிகர். சண்டன் “என் முழவுத்தோல் இன்னமும் காயவில்லை” என்றான். “தாளமில்லாது பாடும்…” என்றார் ஒரு வயதான வைதிகர். “மழைத்துளித்தாளம் போதாதா?” என்று ஒரு வைதிக இளைஞன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

சண்டன் எழுந்து சென்று அவர்கள் நடுவே நின்று தன் குழல்புரிகளை அள்ளி பின்னாலிட்டு “நானும் பாடவே விழைகிறேன். நன்கு துயின்றுவிட்டேன். இனி விழியயர நெடுநேரமாகும்” என்றான். “பாடுக… இங்கு கள் கிடைக்காத துயரை அகற்றுக!” என்று ஒரு வணிகன் சொல்ல இளையோர் சிரித்தனர். “வணிகர்கள் சென்றகாலக் கதைகளைக் கேட்க விழைகிறார்கள். ஏனென்றால் அதில் அவர்களுக்கு இடமே இல்லை” என்றார் ஒரு வைதிகர். “ஆகவே இழப்பும் இல்லை. பதற்றமில்லாது கேட்கலாமே” என்றார் முதிய வணிகர்.

“இளைய பாண்டவர் குறித்து பாடும்” என்றான் சிறியதலைமேல் கொண்டையாக குழலைக் கட்டிவைத்திருந்த வணிக இளைஞன். முதிய வைதிகர் “பாண்டவரின் கானேகலைப்பற்றிய காவியங்கள்தான் எங்கும் பாடப்படுகின்றன. யுதிஷ்டிரனின் எரிபுகுந்தெழல் குறித்து கிருஷ்ணபாகம் நாகசேனர் என்னும் கவிஞர் பாடிய கந்தமாதனவிஜயம் என்னும் காவியத்தை நாங்கள் வரும் வழியில் ஒரு சூதர் பாடினார். எரிபுகுந்து அறச்செல்வர் எழும் காட்சியில் நான் அழுதுவிட்டேன்” என்றார். “எங்கோ கேட்டிருக்கிறேன், இருமுறை பிறந்தவன் சாவதில்லை.”

கொண்டைமுடிந்த இளையவன் “நான் அர்ஜுனரைப் பற்றித்தான் கேட்க விழைகிறேன்” என்றான். “அவர் வெல்வதுதான் உண்மையான வெற்றி” என்றான். “ஏன்?” என்றான் பிறிதொருவன். “நினைத்ததைச் செய்ய ஆற்றலுடையவனைப்பற்றி மட்டும் நாம் பேசினால் போதும்” என்றான் அவன். “ஆம்! உண்மை!” என்றன குரல்கள். ஒருவன் “விழைவில் உச்சம் கண்டவனே அதை வெல்லவும் முடியும்” என்றான்.

கைகளைத் தூக்கி குரல்களை அவித்து “வைதிகர்களே, வணிகர்களே, அயோத்திநாட்டுக் கவிஞர் கௌண்டின்ய பெருங்குலத்து சம்விரதர் யாத்த அர்ஜுனேந்திரம் என்னும் காவியத்தை நான் பாட முடியும்” என்று சண்டன் சொன்னான். “ஆம், பாடுக!” என்று குரல்கள் எழுந்தன. “அர்ஜுனவிஜயம் என்று ஒரு காவியம் உண்டு அல்லவா?” என்றது ஒரு குரல். “அது அர்ஜுனனின் திசைசூழ் செலவு குறித்த நூல். அவர் நான்கு துணைவியரை வென்றதைப்பற்றியது” என்றான் சண்டன். “இது அவர் மெய்மை தேடிச்சென்றதைப் பற்றிய நூல்.”

பைலனின் அருகே கட்டிலில் கால்களை மலரமைவாக அமைத்து ஜைமினி அமர்ந்திருந்தான். அவர்களுக்கு நேர்பின்னால் தூணின்மேல் ஏழு நெய்த்திரிகள் எரிந்த சிப்பிவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. சுடர்களுக்குப் பின்னாலிருந்த முத்துச்சிப்பிகள் ஒளியை அள்ளிப் பெருக்கி அறைக்குள் பரப்பின. ஜைமினி மிகவும் களைத்திருந்தமையால் அடிக்கடி விழிகள் மயங்கி சரிந்துகொண்டிருந்தன.

வெளியே இருந்து கைகளைக் கூப்பியபடி அருகநெறியர் எழுவர் உள்ளே வந்தனர். பிறர் எழமுயல அவர்களை கையமர்த்தியபின் தரையிலேயே கால்மடித்து அமர்ந்து சண்டனின் சொற்களை கேட்க செவிகூர்ந்தனர். “இது செல்வர் நிறைந்த அவை என்பது எனக்கு நிறைவளிக்கிறது. திருமகளின் அவையிலேயே சொல்லெடுக்கவேண்டும் என்பது நூல்நெறி. ஏனென்றால் அங்கே கலைமகள் இருக்கமாட்டாள். நம் சொல்லில் அவள் எழும்போது அவளை அஞ்சி பொன் நாணயங்களை எடுத்து அவள் மீது எறிந்து துரத்துவார்கள்” என்றான் சண்டன். வணிகர் சிலர் சிரித்தனர். கைகளிலேயே தாளமிட்டபடி அவன் காவியத்தின் வணக்கங்கள், புகழ்தொடக்கம், பெறுபயன் ஆகியவற்றை பாடினான். அர்ஜுனனின் புகழ்பாடும் பாடலை பாடி நிறுத்தினான்.

“கிளம்பிச் செல்வதென்பது எப்போதுமே அர்ஜுனனுக்கு இனிதானது. வீரர்கள் அனைவருக்கும் அது உவகை அளிப்பது. கிளம்பிச்செல்லும் வீரன் தன் முதல் காலடி முதல் வளரத்தொடங்குகிறான். முதல் மூச்சை இழுத்து நெஞ்சுள் நிறைக்கையில் அவன் அறியும் ஓர் உண்மை உண்டு, வீரன் என்பவன் கடந்துசெல்பவன். வீரன் கடந்துசெல்வது தன்னைத்தான். தன் கடந்தகாலம் மீது மிதித்து அவன் மேலேறுகிறான். அவனை அழைத்துச்செல்லும் இலக்கு எப்போதும் அடிவானில் ஒளியுடன் நின்றிருக்கிறது. அது அவனை வளர்க்கிறது. அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது.”

மெல்ல அவன் குரலில் இசைவு எழுந்து அது நீள்பாடலாக ஆகியது. “எரியுமிழும் கந்தமாதன மலைக்கு அப்பாலிருந்தன ஏழு மலைகள். குளிர்ந்துறைந்த சுஃப்ரமுகி, முகில்கள் அமையும் ஜ்வாலாசிரஸ், வானில் மறைந்திருக்கும் சூசிசிருங்கம், கந்தர்வர்கள் வந்திறங்கும் கனகசீர்ஷம், அதற்குமேல் எழுந்த பூர்வசிரஸ், அதற்கும் அப்பால் புகைவடிவெனத் தெரியும் நீலாக்ரம். அதற்குமப்பால் இருந்தது எப்போதும் ஏழுவண்ன மழைவில் சூடியமைந்திருக்கும் இந்திரகீலம். ஆறு மலைகளையும் ஏறிக்கடந்து ஏழாம் மலையை அடைபவன் மண்ணுடலுடன் விண்ணொளியை அடைந்தவனாவான் என்கின்றன நூல்கள்.”

தன்னந்தனிமையில் மலைகளை அடைந்த அர்ஜுனன் சுஃப்ரமுகியை ஒரு மாதத்தில் கடந்தான். ஜ்வாலாசிரஸை இரண்டு மாதங்களில் ஏறிச்சென்றான். சூசிசிருங்கத்தைக் கடக்க நான்கு மாதங்களாயின. கனகசீர்ஷத்தை எட்டு மாதங்களில் ஏறி முடிதொட்டு மறுபக்கம் சென்றான். பதினாறு மாதங்களில் பூர்வசிரஸை அடைந்து முன்சென்றான். முப்பத்திரண்டு மாதங்களில் நீலாக்ரத்தை அடைந்து, இந்திரகீல மாமலை அதுவரை வந்த தொலைவை கூட்டினாலும் ஏழுமடங்கு வரும் உயரத்துடன் எழுந்து வான் புகுந்து நிற்பதைக் கண்டான்.

அதன் மேல் முகில்கள் செறிந்திருந்தன. அவை மழையாகப் பெய்து அருவியென வழிந்து கீழே இறங்கி மறைந்தன. அந்நீர்ப்புகை மேலெழுந்து பாறைகளை கனிந்துருகி வழியச் செய்தது. அதன் அடிப்பகுதியில் தேவதாருக்கள் செறிந்திருந்தன. அதற்குமேல் பசும்புதர்கள். அதற்குமேல் மென்பச்சைப்பாசி எனத்தெரிந்த புல்வெளிகள். அதற்கும் மேல் கரிய உருளைக்கற்கள் நீர்வழிய தவமிருந்தன. அதற்கும் மேல் முகில்களுக்கும் அப்பால் எழுந்து ஒளிகொண்டிருந்தன பனிக்குவைகள்.

இந்திரகீல மலையை மானுடர் எவரும் ஏறி உச்சி கண்டதில்லை என்று அவன் அறிந்திருந்தான். ஏறலாகுமா என்று எண்ணிய கணமே இயலாது என்று அவன் அகம் ஆணையிட்டுக் கூவியது. அவன் உள்ளம் ஒவ்வொரு கணமும் நுரைக்குமிழிகள் உடைந்து மறைவதுபோலச் சுருங்கி இன்மையென்றாகியது. அவ்வெறுமையில் அணுவளவாகச் சுருங்கி அலைக்கழிந்தான். தன்னை உணர்ந்து நீள்மூச்செறிந்து அவன் எண்ணம் திரும்பியபோதும் உடல் திரும்பவில்லை.

“ஆனால் மானுடரில் ஒருவன் இதை ஏறியாகவேண்டும்” என்னும் எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்ததுமே உடல் பெருகி பேருருவம் கொண்டவனைப்போல் உணர்ந்தான். “ஏறுதல் என்னும் செயலை மானுட உடலுக்கு அமைத்தளித்த வல்லமைகளின் ஆணை அது. ஏறுக, மேலும் ஏறுக என்பதே அவர்களின் மொழி. அவர்கள் நிகழ்த்தட்டும் இதை. இவ்வுடல் அவர்களின் கருவி. இதில் ஊரும் ஆன்மா அவர்களின் பிறிதுவடிவம்.”

அவனுள் சொற்கள் பெருகிக்கொண்டிருந்தன. உள்ளத்தாலன்றி கால்களால் கைகளால் நெஞ்சால் தோள்களால் தலையால் அச்சொற்களை அவன் எண்ணுவதாகத் தோன்றியது. முதற்காலடியை எடுத்து வைத்ததும் மலைமடிப்புக்குக் கீழிருந்து பெருகி எழுந்துவந்த குளிர்காற்று அவனைச் சூழ்ந்து வீசியது. அவனை அதன் பெருஞ்சுழி அள்ளிக்கொண்டு சென்று திசைவெளியில் வீசிவிடும் என்பதுபோல. அதனுடன் இணைந்துகொண்டது பனிமழை. திசைகள் எட்டும் இடியென முழங்கின.

ஒரு கணமும் தயங்காமல் அறுபத்துநான்கு காலடிகளை வைத்து அவன் நின்றபோது வெண்பனி சூழ்ந்த இந்திரகீல மலையின் உச்சியில் இருந்தான். திகைப்புடன் திரும்பிப்பார்த்து அது எவ்விடம் என மீண்டும் மீண்டும் உறுதிசெய்துகொண்டான். கீழே மிக ஆழத்தில் பள்ளத்தாக்கின் எளிய மண்குவியல்களென பிற ஆறு மலைகளும் தெரிந்தன. அவற்றின் நடுவே ஓடிய ஆறுகள் வெள்ளிநூல் என மின்னி வளைந்தன. தேவதாருக்கூட்டங்களில் காற்று கடந்துசெல்வது புல்மேல் அலை எனத் தெரிந்தது.

அங்கே பனிப்பாளங்கள் மேலிருந்து விழுந்த பனியின் எடையால் அடித்தளம் நொறுங்கி உறுமலோசையுடன் மெல்ல சரிந்திறங்கிக்கொண்டிருந்தன. பிளந்து முழக்கமிட்டபடி சரிவுகளில் விழுந்து மேலும் மேலும் பனியடுக்குகளை நொறுக்கி சேர்த்துக்கொண்டு வெண்பேரருவி என இறங்கிச் சென்று வெண்புகையென மாறிப் பொழிந்து கீழே மறைந்தன. நீலாக்ரத்திற்கு வரும் வழியில் கொன்றுரித்த காட்டெருதின் தோல் போர்த்தியபடி அவன் அங்கே நின்றான். கடுங்குளிரில் அவன் உடல் உயிரிழந்ததென ஆயிற்று.

KIRATHAM_EPI_14 (1)

வலக்காதில் அவன் வெம்மையை உணர்ந்தான். அவ்வழியே செல்லச்செல்ல வெம்மை ஏறி ஏறிவந்தது. ஒரு பனிப்பாறைஅடுக்குக்கு அப்பாலிருந்து நீர் ஊறி கொப்பளித்து வருவதைக் கண்டான். அந்த நீரோடையில் வெம்மையின் ஆவி எழுந்தது. அதன் விளிம்புகளில் பனி உருகி பளிங்குக்கல் என உடைந்திருந்தது. அவன் அதிலிறங்கியதும் கால்கள் வழியாக உடலே வெம்மையை அள்ளி உண்டது. விழிப்பரப்பிலேயே வெம்மை பரவுவதை உணர்ந்தான்.

அடுமனைப் பெருங்கல் என வெந்நீர் கொப்பளித்துக்கொண்டிருந்த ஊற்று ஒன்றை அவன் சென்றடைந்தான். அவ்வூற்றின் அடிப்பாறைகள் வெம்மைகொண்டிருக்க சூழ்ந்திருந்த பனி அதில்பட்டு உருகி குமிழியிட்டு மிகைகொண்டு ஓடையாகி பாய்ந்துசென்றது. நீராவி எழுந்து மேலே சென்று பனிப்பாறைகளை உருகி உடைந்து அதன்மேல் விழச்செய்தது. அதற்கப்பால் சிறிய குகை ஒன்று விழியெனத் திறந்திருந்தது. அவன் அதற்குள் நுழைந்ததுமே இனிய வெம்மையை உணர்ந்தான். அங்குள்ள பாறைகளில் வெம்மை படர்ந்திருந்தது.

இருநாட்களுக்கொருமுறை விழிதிறந்து அந்த ஓடைநீர் தேங்கிய பன்னிரு சுனைகளில் திளைத்த சிறிய மீன்களைப் பிடித்து உண்டபடி அவன் அக்குகைக்குள் ஊழ்கத்தில் அமர்ந்தான். விழிமூடியதுமே கீழே விட்டுவந்த ஒவ்வொன்றும் மிதந்து வந்து அவனுடன் இணைந்துகொண்டது. அன்னையும் உடன்பிறந்தாரும் துணைவியரும் மைந்தரும் பகைவரும் குடிகளும் நகரும் காடுகளும் முழுதுருக் கொண்டன. அவை வெளியே இருப்பவை அல்ல என்று அவன் அறிந்தான். அவையனைத்தையும் அள்ளி அந்த உயரம்வரை கொண்டுவந்த தன் உள்ளம் எனும் மாயத்தை எண்ணி வியந்தான்.

வலையிழை சிக்கு நீக்கும் மீனவன்போல ஒவ்வொன்றாக தொட்டுப்பிரித்து அடுக்கி சீரமைத்தான். சீரமைந்ததுமே அவை அச்சம் அளிக்காதவை ஆயின. அச்சம் மறைந்ததுமே அவை ஆர்வமளிப்பதையும் தவிர்த்தன. எளிய பொருளற்ற நிகழ்வுகளும் காட்சிகளுமாக நின்றன. புகைப்படலம்போல அவற்றைத் தொட்டு கலையவைக்க முடிந்தது. ஒவ்வொன்றாக உதிர்ந்து மறைய அவன் முழுவெறுமைக்குள் அங்கு அமர்ந்திருந்தான். நீர்த்துளி சொட்டும் ஒலி ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு சொல்லாக இருந்தது. அச்சொல் அவன் விழைவை மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.

“ஊழ்கமென்பது தன் உண்மையான விழைவென்ன என்று ஒருவன் அறிந்துகொள்வது மட்டுமே. அதை உண்மையில் தான் யார் என அறிந்துகொள்வதென்று விளக்குகிறார்கள். அறிவர்களே, வைதிகர்களே, வணிகர்களே, தன்னை அறிந்துகொள்ள ஒருவன் தன்னை ஆக்கியவர்களை அறிந்துகொள்ளவேண்டும். அவர்களை அவன் அறியமுடியாதென்பதனால் அவர்களை முழுமையாக புறக்கணிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றான் சண்டன்.

[ 19 ]

எவரோ நடந்துவரும் ஒலியை அர்ஜுனன் கேட்டான். அது நீர்த்துளி சொட்டும் ஒலியென உருமாறியது. தொலைவில் பனிப்புயலின் ஓலம் எழுந்தும் அமைந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது. தாடியும் குழலும் நீண்டு சடைக்கற்றைகளாக மாறி தொங்க பித்து பழுத்த கண்களுடன் குகைக்குள் அவன் அமர்ந்திருந்தான். மெலிந்த உடலில் சுனைநீர்ப்பரப்புமேல் இளங்காற்று என மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

அங்கு அமர்ந்த நூற்றெட்டாவது நாள் முதல் அவன் அதுவரை அறியாதவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முதலில் வந்தவன் ஒரு கந்தர்வன். அவன் தன்மேல் நோக்கை உணர்ந்து விழிதிறந்தபோது கந்தர்வனை பார்த்தான். பெரிய வெண்பனிப்புகைச் சிறகுகளுடன் மின்னும் நீலக்கண்களுடன் அவன் குனிந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தான். “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். “நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மகன். என் பெயர் அர்ஜுனன்.” கந்தர்வன் அவனருகே மேலும் குனிந்து “இங்கு ஏன் வந்தாய்?” என்றான். “இங்கு மானுடர் வரமுடியாது. நான் காணும் முதல் மானுடன் நீ. நான் இப்பனிக்குகையின் காவலனாகிய பிரபாஹாசன்.”

“நான் இந்த மலைமேல் குடிகொள்ளும் எந்தை இந்திரனைத் தேடிவந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், இது தேவர்க்கரசரின் மலையே. ஆனால் அவர் பன்னிரு நிலவுகளுக்கு ஒருமுறைதான் இங்கு வருகிறார். மானுடருக்கு அது பல்லாயிரமாண்டுகாலம். அவரை நீ இங்கு பார்க்கமுடியாது.” அர்ஜுனன் “நான் இங்கு திகழும் காலத்திலேயே இருக்கிறேன். நெடுந்தொலைவில் உள்ளன மானுடகாலங்கள்” என்றான்.

“நீ அவரை எதன்பொருட்டு பார்க்கவேண்டும்?” என்று கந்தர்வன் கேட்டான். “படைக்கலங்களுக்காக. மண்ணில் எவருக்கும் நிகரென நான் நின்றிருக்கவேண்டும்.” கந்தர்வன் புன்னகைத்து “படைக்கலங்களில் வல்லமைகொண்டது சொல். சொல்லிச்சொல்லி வல்லமை ஏற்றப்பட்ட சொல் கொலைக்கருவி. சொல்லாமலேயே திரட்டப்பட்ட சொல்லோ புவியைப் பிளக்கும் வல்லமைகொண்டது” என்றான். “ஆம், அனைத்து அம்புகளும் சொற்களால் ஆனவையே” என்றான் அர்ஜுனன்.

“நீ என் விருந்தினன். நானோ உன் தந்தை இந்திரனுக்கு உரியவன். நான் உனக்கு நீ விரும்பும் அம்புகளை அளிக்கிறேன்” என்றான் கந்தர்வன். “நீ அளிக்கும் அம்புகளை வாங்கிக்கொள்கிறேன். நான் விழைவது எந்தையின் அருளை மட்டுமே” என்றான் அர்ஜுனன். “யாழ்நரம்பென வில்நாணை மாற்றும் ஒரு நுண்சொல்லைச் சொல்கிறேன் உனக்கு. அது உன் அம்புகளை இசையதிர்வுகளென ஆக்கும். உன்னால் மலர்களின் புல்லிவட்டங்களைக்கூட இரண்டாகப்பிளக்க முடியும். எதிர்நிற்பவர்களின் நரம்புகளைத் தொட்டு அவர்களை பித்தர்களாக ஆக்கமுடியும்.”

அர்ஜுனன் “வணங்குகிறேன்” என்றான். அவன் கைவிரல்நுனிகளைத் தொட்டு கந்தர்வன் அச்சொல்லை அவனுக்களித்தான். “வண்டுகள் அறியும் ஒலி இது” என்றான். அர்ஜுனன் “வணங்குகிறேன், கந்தர்வரே” என்றான். “நீ இங்கே விழைவதென்ன?” என்றான். “அழகிய மாளிகையை இங்கே உனக்களிக்கிறேன். இளநங்கையரும் மதுவும் இசையும் களியாட்டுமென நீ இங்கிருக்கமுடியும்.” அர்ஜுனன் “இல்லை, நான் அவற்றைக் கடந்துவிட்டேன்” என்றான். “நீ விரும்புவதென்ன என்று உன்னுள் நுழைந்து காண்கிறேன். அதை உனக்களிக்கிறேன்” என்றான் கந்தர்வன்.

அர்ஜுனன் தன்னை உணர்ந்தபோது சதசிருங்கத்தில் இருந்தான். பாண்டுவின் கைகளைப் பற்றிக்கொண்டு மலைக்காற்று வீசும் பாதையில் ஏரியின் ஒளியை இலைகளுக்கு நடுவே பார்த்தபடி நடந்தான். “தந்தையே, ஒளியை எய்வது எந்த வில்?” பாண்டு விழிகள் நகைக்கக் குனிந்து “தொடுவான் வளைவு” என்றார். அவர் தோள்களில் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். “தந்தையே, விண்ணில் பறக்கும் பறவைகளை ஏவும் வில் எது?” பாண்டு “மரக்கிளைகள்” என்றார்.

பல்லாண்டுகளுக்குப் பின் அவன் விழிதிறந்தபோது அவனருகே கந்தர்வன் சிரித்துக்கொண்டு நின்றான். “நீங்கள் விழையும் பிறிதொரு உலகத்தை அளிக்கிறேன், இளவரசே” என்றான். அவன் பதைப்புடன் மறுசொல் எடுப்பதற்குள் பசுந்தழை செறிந்த சோலை ஒன்றில் இளைய யாதவருடன் இருந்தான். அன்று முழுநிலவு. அவர்கள் பகலெல்லாம் வழக்கம்போல அக்காட்டுக்குள் உலவிக்கொண்டிருந்தனர். இருவரின் காலடிகள் சொற்களென்றாகி உரையாடிக்கொண்டிருந்தன. இருவரின் உடல்களும் விழிகளென்றாகி நோக்கிக்கொண்டிருந்தன.

அர்ஜுனன் மீண்டும் மீண்டும் அம்புக்குறி தேர்ந்துகொண்டிருந்தான். நுண்மை நுண்மை என செல்லும்தோறும் வெளியிலக்கை கூர்ந்து கூர்ந்து செல்லும் தன் உள்ளத்தின் முடிவின்மையை உணர்ந்தான். செதுக்கும்தோறும் முனைகூரும் ஓர் அம்பு. அம்புகூரும்தோறும் தன்னைக்காட்டும் புதிய இலக்குகள். வென்று செல்லும் கணத்தில் தன் பெருமையை அறிந்து எழுந்தும் மறுகணமே இன்னொரு இலக்கைத் தேடும்போது தன் சிறுமையை உணர்ந்து விழுந்தும் முடிவிலா ஊசலில் ஆடிக்கொண்டிருந்தான்.

யாதவர் சொற்களில் அந்நுண்மையை தேடிக்கொண்டிருந்தார். சொல்லும் ஒலிகள் மறைக்கும் பொருள் கொள்வது எவ்வாறு? மறைத்தலே சொல்வதென ஆவது எவ்வாறு? சொல்லப்பட்டவற்றை உதறிக் கடந்துசெல்லும் மானுடம் மறைக்கப்பட்டவற்றை நோக்கி முடிவிலாது சென்றுகொண்டிருப்பதுதான் என்ன? சொல்லில் அமையாதது சொல்லப்படாததில் வந்தமையும் விந்தைதான் என்ன?

“அழியாச்சொல் என்று வேதத்தை நிலைநிறுத்தியவர் யார், பார்த்தா?” என்றார் இளைய யாதவர். அம்பு எடுத்து பறக்கும் இறகொன்றை கூர்ந்த அர்ஜுனன் வில் தாழ்த்தி அவரை வெறுமனே நோக்கினான். அப்போது அவன் தனுர்வேதத்தைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அதை அழியாச்சொல் என பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் படைப்பயிற்சிக் களங்களில் நிலைநிறுத்தியவர் யார் என்று.

“அதன் பொருளின்மை கண்டு அஞ்சியவர்கள்” என்ற இளைய யாதவர் தொடர்ந்து “இப்புவிநிகழ்வுகள் அனைத்தையும் போல, இருள்பெருகிய கடுவெளி போல அவையும் பொருளெனக் காட்டி மருளென எஞ்சி முடிவிலாது விரிபவை. மயலே வேதமென்க! மறைந்திருக்கையிலேயே அது முகம் காட்டலாகும்” என்றார்.

அர்ஜுனன் “ஆம், பிரசேதஸின் முதற்பெரும் தனுர்வேதநூலின் ஆயிரத்துநாநூறு நுண்சொற்கோவைகளில் நாநூறு மட்டுமே குருநிலைகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆயிரம் அறிந்தமையால் துரோணர் மாவில்லவர். அவரைவிட சில கூடுதலாக பீஷ்மருக்கு தெரிந்திருக்கலாம். பரசுராமர் மேலும் சில அறிந்திருக்கலாம். ராகவராமன் இன்னும் சற்று கடந்துசென்றிருக்கலாம் முற்றறிந்தோரில் மானுடர் எவருமில்லை என்கின்றன நூல்கள்” என்றான். “உள்ளேசெல்லும்தோறும் பொருள்செறிந்து பொருளின்மைகொண்டு இன்மையென்றே ஆகி வெறுமையில் நிறுத்தி மீளும் தொன்மையான சொற்சேர்க்கைகளால் ஆனது அது.”

“வேதத்தின் கலைவடிவங்களே உபவேதங்கள்” என்றார் இளைய யாதவர். “சொல்லியும் உணர்ந்தும் கடந்தும் துறந்தும் அமைந்தும் முனிவர் வேதமென அறிந்தவற்றை பன்னிருகளங்களில் கண்டனர் நிமித்தவேதியர். சூரியரின் காரண்யோபவேதம் அவ்வறிதலின் பெருந்தொகை. ஏழுசுரங்களில் அதை உணர்ந்தவர் நாரதர். அவருடைய ஸ்வரானுவாதம் அதன் மொழிவடிவம். முக்குணங்களில் அதை உசாவிய சனகரும் சனாதனரும் ஆயுர்வேதத்தை அமைத்தனர். ஐம்புலன்களில் அதை வகுத்தார் காமநூல் கண்ட குணாதர். அம்பிலும் வில்லிலும் உணர்ந்தனர் வில்வேதியர். பிரசேதஸின் பெருநூல் அதன் செறிவே.”

“உபவேதங்கள் வேதங்களின் ஆடிப்பாவைகள். முதலுருவம் கொண்ட முடிவின்மையை தாங்களும் சூடிக்கொண்டிருக்கின்றன அவை” என்று அவர் தொடர்ந்தார். “இவ்வழிகளில் எதைத் தொட்டுத்தொடர்ந்தாலும் வேதமெய்மையை சென்றடைந்துவிடலாம் என்பதே நூலோர் கூற்று.” அர்ஜுனன் “ஆம், நான் வில்தொட்டு எடுத்த முதல்நாளில் எனக்கு அதுதான் சொல்லப்பட்டது. வேதப்பசு ஈன்ற இளம்பசுக்கள் அனைத்தும் கறப்பது ஒரே அமுதைத்தான்” என்றான். இளைய யாதவர் சிரித்து “சொல்வேதாந்தம் பாதுகாப்பானது. செயலின்மை கொண்டால் அவைநடுவே நெடுமரம். வில்வேதாந்தம் அப்படி அல்ல. சிதையிலெரியவேண்டியிருக்கும்” என்றார். அர்ஜுனன் வாய்விட்டு சிரித்தான்.

மீண்டும் இளைய யாதவர் முகம் கனவுகொண்டது. “அறியமுடியாமையைக் கறந்து அறிபடும் ஒன்றை எடுப்பது எப்படி? பார்த்தா, வேதம் விளங்க இன்று எழுந்தாக வேண்டிய நூல் ஒன்று உண்டு. அது முற்றிலும் தெளிவானது. சொல்லெண்ணிப் பயிலவும் உகந்தது. கடலில் திசைமானி போலவும் பாலையில் நீர் போலவும் கொண்டுசெல்ல ஏற்றது.”

அவர் சுட்டுவிரலைத் தூக்கி தன் முன் எழுந்த பெருங்கூட்டத்திடமென சொன்னார் “முடிவிலி எழும் சில சொற்கள். இமயமலைத்தொடர்களின் திசைநிறைக்கும் அலகின்மையை உள்ளங்கையில் அமைந்த சிறு வைரக்கல் தன்னுள் சுருட்டி வைத்திருப்பது போன்றது. பெருமலையின் கல்லெடுத்து சிவக்குறியென ஆலயக்கருவறையில் நாட்டுவதுபோன்றது. ஆம், ஒருசிறு நூல்…”

அவர் தன் உளஎழுச்சியால் அர்ஜுனனின் கைகளை பற்றிக்கொண்டார். “அது ஒரு கூற்றாக அறிவுறுத்தலாக ஆற்றுப்படையாக இருக்கவியலாது. அது பாடல். ஆம், யாழும் குழலும் இயையும் மெய்மை அது.” அவர் கைகள் வெம்மைகொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். “சிலசமயம் அதை மிகத்தெளிவாக கேட்கிறேன். துயில்கையில் செவியருகே வந்து அன்னை சொல்லும் அன்புமொழி போல. உளம் எழுந்து உவகைகொண்டு அதை மேலும் கேட்கப்போனால் வாடைக்காற்றில் வந்த குயில்பாடல்போல.”

இளைய யாதவரின் உடல் ஒளிகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். தன் கைகளை தூக்கிப் பார்த்தான். அதுவும் இளநீல ஒளிகொண்டிருந்தது. இல்லை பச்சையா? வெறும் விழிமயக்குதானா? இல்லை, இது ஒளிரும்காடு. இக்காட்டிலிருந்துதான் இக்குருநிலைக்கே சாந்தீபனி என்று பெயர் வந்தது. இளைய யாதவர் தன் கைகளைத் தூக்கி நோக்கி “நிலவெழத்தொடங்கிவிட்டது. காடு ஒளிகொள்கிறது” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

“வேதங்கள் ஏன் பொருளின்மையைச் சென்று தொடுகின்றன என்று நான் முன்பு என் ஆசிரியரிடம் கேட்டேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவை கொண்டிருக்கும் பொருளின்மை நம் அறியமுடியாமையினாலேயே என்று அவர் சொன்னார். அவை இன்றில் தொட்டிருக்கும் ஒரு புள்ளியையே நாம் காண்கிறோம். நாளையென்னும் முடிவிலியில் சென்று மறையும் கடுந்தொலைவை அறியமுடியாமல் திகைக்கிறது நம் சித்தம் என்றார். உண்மை எனறு நானும் உணர்கிறேன். நாளை நாளை என்று எழும் காலத்தில் பொருள்மேல் பொருளெனக் கொண்டபின்னரும் அவற்றில் பொருள்சுட்டாச் சொல் மிச்சமிருக்கக்கூடும்.”

“இளைய பாண்டவனே, வேதப்பெருக்கில்தான் அத்தனை முடிவின்மை அமையமுடியுமா என்ன? அது வேதத்தின் இயல்பென்றால் வேதச்சொல் ஒவ்வொன்றிலும் அம்முடிவின்மை எழவேண்டாமா? இல்லையேல் அது வேதத்தின் இயல்பல்ல, அந்தத் தொகைமுறையின் தன்மை என்றல்லவா பொருள்?” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லில் வந்தமைக முடிவிலி! ஒவ்வொரு சொல்லிலும் முடிவிலி வந்தமைக! முடிவிலியெனத் திறக்கும் சொற்களால் ஆன ஒரு வேதம். கையளவே ஆன கடல்…”

“அது எழுதப்பட்டுவிட்டது, மொழிவழிப்படவில்லை” என்று அவர் தனக்குள் என சொன்னார். மறுகணமே அவனை நோக்கி திரும்பி “ஆம், அதை நான் முழுமையாகவே காண்கிறேன். சொல்லென ஆகாத நூல் எத்தனை கூரியது!” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று அறியாமல் பார்த்தன் நோக்கி நின்றான். “இங்கிருந்து நீங்கள் நாளை கிளம்பவிருக்கிறீர்கள் என்றார் யுதிஷ்டிரர்” என இளைய யாதவர் உடனே மீண்டுவந்து நிலத்தமைந்தார். “ஆம்” என்றான் அர்ஜுனன்.

“எங்கு செல்லவிருக்கிறீர்கள்?” என்றார் இளைய யாதவர். “அறியேன். இங்கிருந்து கிளம்புவதைப்பற்றி மட்டுமே அவர் பேசினார். இப்பயணத்தில் கிளம்பிச்சென்ற பிறகே இலக்குகளை தெரிவுசெய்கிறோம்” என்றான் அர்ஜுனன். “நன்று. அனைத்தையும் பிணைக்கும் இடத்திலிருந்து அனைத்தையும் தொகுக்கும் இடத்திற்கு நீங்கள் செல்லக்கூடும்” என்றார் இளைய யாதவர். “இளைய பாண்டவனே, அது உன் மூத்தவரின் பயணம்தான். உன் வழிகள் வேறு.” அர்ஜுனன் “ஆம், அதை உணர்ந்தபடியே இருக்கிறேன்” என்றான்.

“உன் வழியை நீ தெரிவுசெய்துகொள்க!” என்றார் இளைய யாதவர். “என் வழி உங்களுடன் அமைவதே” என்றான் அர்ஜுனன். “இல்லை, நான் என் வழியை இன்னமும் முற்றும் தேரவில்லை. இங்கு வந்தபோதிருந்த உள்ள அலைக்கழிப்பு இப்போதில்லை. ஆனால் இங்கிருந்து நான் திரும்ப துவாரகைக்கு செல்லப்போவதில்லை.” அர்ஜுனன் “ஏன்?” என்றான். “என்னை அங்கு ஆயிரம் முகங்களாகப் பரப்பி வைத்திருக்கிறேன். அவையனைத்தையும் கடந்து முகமின்மை ஒன்றைச் சூடி நான் அடையவேண்டிய சொல் ஒன்று உள்ளது.”

அவன் விழிதிறந்தபோது எதிரே விதுரர் அவனை நோக்கிக் கொண்டிருந்தார். “அமைச்சரே, தாங்களா?” என்றபடி அர்ஜுனன் எழப்போனான். உடலுக்கும் உள்ளத்துக்கும் தொடர்பே இருக்கவில்லை. “மூடா, நீ உளமயக்கில் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “இக்குகைக்குள் முளைத்துச்செறிந்துள்ள காளான்கள் எழுப்பும் நச்சுப்புகையை உள்ளிழுக்கிறாய். இவையனைத்தும் உன் கலைந்த சித்தம் அளிக்கும் சித்திரங்கள் அன்றி வேறல்ல.”

“ஆம், இந்தப் பனிக்குகையும் நீர்சொட்டும் ஒலியும் அந்த வெண்புகையும்… அவை வெறும் சித்திரங்கள்” என்று அவன் சொன்னான். விதுரர் பல்லைக் கடித்தபடி வந்து அவன் தலையில் ஓங்கி அறைந்தார். “தந்தையே” என்று கூவியபடி அவன் பின்னால் சரிந்து விழுந்தான். “உன்னை நான் அஞ்சினேன். உன் விழிகளை நான் தவிர்த்தேன். அதுதான் நான் செய்த பிழை. தந்தையால் அஞ்சப்படும் மைந்தர் நிலையழிந்து சிதறுண்டு மறைகிறார்கள்.”

அவன் கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்து அவர் காலடிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் சினத்துடன் நடந்து வெளியே சென்று மறைந்தார். “வா வெளியே, கிளம்புவோம்” என்று அவரது குரல் கேட்டது. “இல்லை தந்தையே, நான் இங்கே மடிகிறேன்.” அவர் மீண்டும் குகைவாயிலில் தோன்றி “என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய், அறிவிலியே? அங்கே உன் அன்னை காத்திருக்கிறாள் உன்னை” என்றார். “ஆம், ஆனால் எந்தையின் அருளின்றி நான் எழப்போவதில்லை” என்றான்.

“இந்திரன் அல்ல உன் தந்தை. உன் குருதித்தந்தை வில்லேந்திய முனிவர் ஒருவர். அதை நீயே அறிவாய்.” அவன் “நான் இந்திரனின் மைந்தன்” என்றான். “மண்ணில் இந்திரன் கொண்டிருந்த ஆற்றலை எல்லாம் அவன் அழித்துவிட்டான். உன் தோழன்” என்றார் விதுரர். “ஆனால் அவள் இந்திரனைத்தான் உளம் மணந்துள்ளாள்” என்றான் அர்ஜுனன்.

சற்றுநேரம் நோக்கி நின்றபின் விதுரர் “உன் ஊழ் அதுவென்றால் அவ்வாறே” என்று திரும்பிச்சென்றார். அவன் அவரது காலடிகள் அகல்வதை பலநூறாண்டுகாலம் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான். “இல்லை இல்லை இல்லை” என்றன அவை. “இரு இரு இரு” என்றன பின்னர். “இனி இனி இனி” என உருமாறின. அவன் அவ்வொலிகளை சிவந்த தாமரைமலர்கள் என பார்த்தான். தித்திப்பான சிவப்பு. உடலை வாள்முனை என வருடிச்செல்லும் நறுமணம். அவன் சிரித்தான். குகையின் பல்லாயிரம் முகங்கள் அவனுடன் சேர்ந்து சிரித்தன.

முந்தைய கட்டுரைஅழியா இளமைகள்
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் கொற்றவையும்