வங்கி ஊழியர்கள் – கடிதம்

 

அன்புள்ள ஜெ,

மிகவும் வருத்தமாக இருக்கிறது அந்தப் பதிவுகள் குறித்து மேன்மேலும் வரும் கருத்துகள். வேறொன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் பார்வைக்கு http://indiatoday.intoday.in/story/world-fastest-cashier-woman-viral-video-truth-about-her/1/798849.html

 

நான் மிகச் சாதாரண வாசகன். பி.ஏ.கிருஷ்ணனுக்கு நீங்கள் கொடுக்கும் இடம் அவருக்கு மட்டுமே உரித்தானது. ஆனால் மற்ற வாசகர்கள், பலர் உங்கள் மீது பெரு மதிப்புக் கொண்டவர்கள், மிகவும் அதிர்ச்சியடைந்தது தான் உண்மை. முதல் பதிவு அதிர்ச்சியளித்தது என்றால் அதன் பின் வந்தப் பதிவுகள் கண்ணைக் கட்டும் ரகம்.

அன்புடன்,

அரவிந்தன் கண்ணையன்

 

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,

 

அந்த கருத்தை நான் எழுதும்போது அந்தப்பெண்மணி நோயாளி என அறிந்திருக்கவில்லை. உண்மையில் அது நேற்றுத்தான் தெரிந்தது. நான் எழுதியது வங்கிச்சேவை குறித்துத்தான். அதை கடுமையான கோபத்துடன் எல்லை மீறி எழுதியதாகத் தெரிந்தமையால் மன்னிப்பு கோரினேன்.

 

ஆனால் அந்த வீடியோவைப் பார்த்ததுமே கோபம் வருவதற்குக் காரணம் அதே வேகத்தில், சொல்லப்போனால் அதை விட மிதவேகத்தில்தான் உண்மையிலேயே தேசியவங்கிகளில் பணியாற்றுகிறார்கள் என்பதுதான். இன்னமும்கூட இன்றுள்ள வணிகப் போட்டியை, பெருகி வந்துள்ள வாடிக்கையாளர்களை, அவர்களுக்கும் வேறுவேலைகள் இருக்கும் என்பதை, தாங்கள் சற்றேனும் நவீனத் தொழில்நுட்பத்துக்குப் பழகிக்கொள்ளவேண்டும் என்பதை நம் வங்கி ஊழியர்களில் பலர் புரிந்துகொள்ளவில்லை. அந்த வீடியோவுக்கு எழுந்த எதிர்வினை வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்குப் பொறுமையிழந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதை எவரும் உதாசீனம் செய்துவிடமுடியாது

 

இங்குள்ள நிலைமை இரண்டு. அரசு ஆதரவுள்ள வங்கிகளில் சேவை  என்பது அனேகமாக இல்லை. தாங்கள் அதிக ஊதியம்பெறுபவர்கள், ஆகவே சாமானியர்களை விட மேலான அதிகாரிகள்  என்னும் மாயையில் இருந்து நம் வங்கி ஊழியர்கள் வெளிவரவில்லை. என் அனுபவங்கள் மிகமிகக் கசப்பானவை.

 

அல்லது தனியார் வங்கிகளை நாடவேண்டும். அதில் அரசு அளிக்கும் சலுகைகள் ஏதும் கிடைக்காது.தனியார் வங்கிகள் மறைமுகக் கட்டணங்கள் வழியாகச் சுரண்டுகின்றன. ஆனால் அவை சுரண்டுவதை நன்றாகத் தெரிந்தும் கூட என்னைப்போன்றவர்கள் தனியார் வங்கிகளில்தான் நடைமுறைக் கணக்கை வைத்திருக்கிறோம். அதே வாடிக்கையாளர்கள்தானே இங்கும் வருகிறார்கள். அதே சமூகப்பின்புலம் கொண்ட ஊழியர்கள்தான் இங்கும். அதைவிடக்குறைவான ஊதியம் பெறுபவர்கள். ஆனால் பணிப்பொறுப்பு என ஒன்று இங்கே உணர்த்தப்பட்டிருக்கிறது. பணிகள் விரைவாக நடக்கின்றன. தனியார் வங்கிகளில் ஒருபோதும் சேவைக்குறைபாட்டை உணர்ந்ததில்லை.

 

என் அனுபவத்தைச் சொல்கிறேன். தனியார் வங்கி எதிலும் 10 நிமிடத்திற்குமேல் நான் காக்கவைக்கப்பட்டதில்லை. ஆனால் இரண்டு செயல்படாத கணக்குகள் இருக்கும் அரசு வங்கி எனக்கு நாள்தோறும் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது. ஆதார்கார்டின் நகலுடன் நேரில் வரும்படி. ஒருவழியாகக் கிளம்பிச்சென்றேன். 45 நிமிடம் காத்துநின்றேன். அதை வாங்கி ஒரு கிளிப்பில் போட்டுவிட்டு “ஓக்கே” என்றார்கள். ஆனால் மறுமாதம் மீண்டும் அழைப்பு. அது போதாது வேறு ஏதோ தேவை என்று.

 

ஒருமுறை செக் ஒன்றை நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் கவுண்டரில் நீட்டினேன். அதை வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் திருப்பித்தந்துவிட்டு அடுத்து நின்றவரின் செக்கை வாங்கினார். “என்ன?” என்றேன். நான்குமுறை கேட்டபின் “டேட்” என்றார். தேதி போடவில்லை. தேதிபோட்டு நீட்டினேன். மெதுவக எனக்குப்பின்னால் நின்ற நான்குபேரைப் பார்த்தபின் அதை வாங்கிப்பார்த்துவிட்டு மீண்டும் வெளியேபோட்டார். மீண்டும் “ஏன்?” என்றேன். “எழுத்தில் ஒரு திருத்தம் இருக்கிறது” என சொன்னார்

 

மீண்டும் பத்து நிமிடம். திருத்தம் அருகேகையெழுத்திட்டு மீண்டும் உள்ளே கொடுத்தேன். அதை அவர் மீண்டும் வெளியே போட்டதும் நான் பொறுமையிழந்து கத்த ஆரம்பித்தேன். வங்கி மானேஜர் என்னைத் தெரிந்தவர். அவர் ஓடிவந்து சமரசம் செய்துவைத்து செக்கை  ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் வாடிக்கையாளர்கள் இங்கே நடத்தப்படுகிறார்கள். ஒரு கிராமப்புற வங்கிக்குச் சென்று அரசுவங்கிகளின் ஊழியர்கள் நடந்துகொள்ளும் முறையை ஒருநாள் நின்று பாருங்கள், நான் சொல்வது புரியும். என் கோபம் ஏன் என்று தெரியும்.

 

அந்தக்குறிப்பை எழுதிய அன்று ஒரு சாதாரண விசாரணைக்காக அன்று அரசு வங்கிக்குச் சென்றிருந்தேன். வேறு ஊரில் உள்ள கணக்குக்கு வந்த செக்கை இங்கே போடமுடியுமா என்று கேட்க. 20 நிமிடம் வரிசை. ஒரு அம்மணி 10 கேள்விகள் கேட்டார். எழுந்துசென்று இன்னொருவரிடம் ஏதோ சொன்னார். அவர் என்னை அழைத்து அதே கேள்விகளை மீண்டும் கேட்டார். கடைசியில் அருகே இருக்கும் டப்பாவில் செக்கைப்போடும்படிச் சொன்னார்.

 

வாடிக்கையாளர்கள் வேறுவேலை இல்லாதவர்கள், தங்களுடைய  ‘சப்ஜெக்ட்ஸ்’  என்னும் அரசூழிய மனநிலையில் இருந்து வெளிவராதவர்கள் நம் அரசு  வங்கி ஊழியர்கள். அந்த எரிச்சலை அடையாத வங்கிவாடிக்கையாளர்  எவரும் இங்கே இருக்கமாட்டார்கள். என் உணர்ச்சி அதற்கு எதிராகவே ஒழிய அந்த குறிப்பிட்ட வங்கி ஊழியர் மீது அல்ல. அது என் முதல்குறிப்பிலேயே உள்ளது

 

மகாராஷ்டிர வங்கியின் அந்த ஊழியர் குறைபாடுள்ளவராக இருக்கலாம். அதைச் சுட்டிக்காட்டி மனிதாபிமானத்தின் உச்சியை நம்மவர்கள் தொட்டு மீள்வதில் எனக்கு மனநிறைவே. வங்கிச்சேவை குறித்து நான் சொன்னதை விட்டுவிட்டு   குறைபாடுள்ள ஊழியரை திட்டினேன் என அதைத் திரிப்பவர்களை நான் புரிந்துகொள்கிறேன்.அனால் அதை சாக்காக வைத்து நம் வங்கி ஊழியர்களின் சோகநிலைபற்றி அவர்கள் பேச ஆரம்பிப்பது மோசடி.

 

நான் அந்த ஊழியர் குறித்துச் சொன்னதற்காக வருந்துகிறேன். வங்கிச்சேவை குறித்த வன்மையான சொற்களை சொன்னமைக்காக வருந்துகிறேன். ஆனால் நம் அரசுவங்கிச்சேவையின் பொறுப்பின்மை  பற்றி நான் சொன்னதை  பின்னால் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் சொல்வது என் அனுபவம், நம்மில் பலரின் நேரடி அனுபவம். அவ்வளவுதான்.

 

ஜெ

முந்தைய கட்டுரைஈராக் போர் அனுபவங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13