«

»


Print this Post

மா.அரங்கநாதன் கதைகள் பற்றி…


maarangana4[10]

 

 

அன்பு ஜெயமோகன்,

 

இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் ‘சிறுகதை’. சிறுகதை என்றால் சிறிய கதை என்றுதான் வாசிப்பு வாசம் இல்லாத என்னுடைய நண்பர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘சிறுகதை என்றால் என்ன?’ என்று நீங்கள் உட்பட பல மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை பெரும்பாலும் வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்து நான் பெருமிதம்கொள்ளும் பொழுதெல்லாம் ‘கல்லாதது உலகளவு’ என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள்.

 

இந்த முறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த போது வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருப்பதால், ஆகஸ்டு மாதம் மீண்டும் வந்த பொழுது புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குச் செல்லாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். “உங்களுக்காக நான் எடுத்து வைத்த இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது” என்று வருத்தப்பட்டார். அவர் கொடுத்த புத்தகங்களில் ஒன்றுதான் – ‘மா.அரங்கநாதன் கதைகள்’. இதற்கு முன்பு மா.அரங்கநாதனின் ஒரே ஒரு கட்டுரையைக்கூட வாசித்ததில்லை. வாசி என்று வாசு கொடுத்திருக்கிறார் என்பதால் வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால் மா.அரங்கநாதன் கதைகள் ஏன் இவ்வளவு நாட்களாக என் கண்களில் படவில்லை? ஏன் பேசப்படவில்லை? அல்லது நான் ஏன் கேள்விப்படவில்லை? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். என் கேள்விகள் அத்தனைக்கும் அவருடைய சிறுகதை ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ‘சித்தி’ என்கிற சிறுகதை அது.

 

எனதன்பு திலீப்குமார் உட்பட பல படைப்பாளிகளை உங்களின் திறனாய்வாளன் பட்டியல் மூலமாகவே அறிந்துகொண்டேன். அதன்  பிறகு அந்தப் படைப்பாளிகளின் நூல்களை வாங்கி வாசித்தேன். ஒருவேளை, நீங்கள் மா. அரங்கநாதனை விட்டு விட்டீர்களா என்று கோபம் வந்தது. அந்தப் பட்டியலை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். தவறு என்னிடமே. நான்தான் உங்களுடைய பட்டியலில் இடம்பெற்றிருந்த மா. அரங்கநாதன் கதைகளை தவறவிட்டிருக்கிறேன். Shame on me.

 

அந்தச் சிறுகதையை தட்டச்சு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு சோம்பலாக இருந்ததால், இணையத்தில் தேடினேன். நல்லவேளையாக அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைத்தது.

 

http://azhiyasudargal.blogspot.be/2010/05/blog-post_19.html

 

இந்தக் கதையை வாசித்த பிறகு நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சில வரிகள் நினைவுக்கு வந்தது.

 

“யதோ ஹஸ்த ததோ திருஷ்டி

யதோ திருஷ்டி ததோ மனா

யதோ மனஸ் ததோ பாவா

யதோ பாவா ததோ ரசா”

 

‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும், எழுத்து உட்பட. நாம் செய்யும் செயலில் கலையில் சித்தி உண்டாக இந்த விழிப்புணர்வும், ரசனையும் முக்கியம் அன்றோ?

 

மா. அரங்கநாதன் அவர்களுடைய தளத்தைக் கண்டடடைந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு கம்பீரமான குரல்!

 

https://www.youtube.com/watch?v=AvzPDipjez0

 

ஆகஸ்டு மாதம் நான்  இந்தியாவில் இருந்தபோது, தான் அவரைச் சந்திக்க புதுவைக்குச் செல்வதாக வாசு கூறினார். நானும் அவரோடு சென்றிருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

 

தமிழ் எழுத்துலகில்தான் எத்தனை மேதைகள்!!

 

என்றும் அன்புடன்,

மாதவன் இளங்கோ

 

அரங்கநாதன் சிறுகதைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/91824

1 ping

  1. இந்தியாமீதான ஏளனம் -கடிதம்

    […] மா அரங்கநாதன் கதைகலைப்பற்றி மாதவன் இளங்கோ […]

Comments have been disabled.