அன்பு ஜெயமோகன்,
முதலில் உங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி. என்னுடைய மனைவியும் உங்கள் தளத்துக்கு அன்றாடம் வருபவர். ‘ஏன் ஜெயமோகன் உனக்குக் கடிதம் எழுதுவதில்லை?’ அவருடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று நான்கைந்து முறையாவது கூறியிருப்பாள். இன்று உங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். முகமெல்லாம் புன்னகை. :-)
வங்கிப் பெண்மணி பற்றி நீங்கள் எழுதியிருந்தது நிச்சயம் எரிச்சலின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்பதை நானும் உணர்ந்தேன். என்னுடைய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல, “நேற்றுக்கூட” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததிலிருந்து, அந்தக் கருத்தை ஒருவேளை ‘இம்பல்சிவாக’ எழுதிவிட்டீர்களோ என்றும், அதனாலேயே அந்தப் பெண்மணியின் நோய்மையை உணர்ந்துகொள்ள கால அவகாசம் வாய்க்காமல் போய்விட்டதோ என்றும் தோன்றியது. உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்கிற முறையில் எனக்கு அது உங்கள் மொழியாகவே தெரியவில்லை. அது ஒருவேளை நான் உங்களுடன் இயல்பான மொழியில் உரையாடியிராதவன் என்பதால் இருக்கலாம்.
முந்தைய கடிதத்தில் Impulsive என்பதற்கு பதிலாக Repulsive என்று எழுதிவிட்டேன். கருத்தே மாறிவிட்டது. அதற்கு மன்னிக்கவும். நானுமே அப்போதுதான் வாட்சேப்பில் தவறான தகவல் ஒன்றை பகிர்ந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால், உங்களுக்கு அதே அவசரத்துடன் எழுதிவிட்டேன். இருந்தாலும், செய்த செயலில் உண்மையாகவே தவறிருப்பின் மன்னிப்பு தெரிவிப்பதற்கும், விளக்கமளிப்பதற்கும் பெரிய மனமும், துணிவும் வேண்டும்
மாதவன் இளங்கோ
அன்புள்ள மாதவன்
உங்கள் கடிதத்தின் தொனி புரிந்தது. சாதாரணமாக நான் வாசகர்களின் உணர்ச்சிகளைப் பொருட்படுத்துவதில்லை. பி ஏ கிருஷ்ணனின் கடிதம் ஆணையிட்டது, ஏற்றுக்கொண்டேன். இது முன்பும் பலமுறை நடந்துள்ளது. நமக்கு அப்படி சில நங்கூரங்கள் தேவை
ஆனால் வாசகர்கள் எழுத்தாளர்களை ‘சான்றோர்’ ஆக கருதுகிறார்கள். சமநிலையை எதிர்பார்க்கிறார்கள். அதை எழுத்தாளன் நிறைவேற்றப்புகுந்தால் அவன் சான்றோன் ஆவான், எழுத்தாளன் அல்லாமலாவான்.
இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ஆன்றவிந்த கருத்துக்களைச் சொல்பவன் அல்ல எழுத்தாளன். உணர்வுநிலைகளால், நுண்ணுணர்வால் மட்டுமே சமூகத்தை வாழ்க்கையைப் பார்ப்பவன். அதில் சமநிலை இருக்காது. ஆனால் ஆன்றவிந்த ஆய்வாளர்கள் காணாதவை காணக்கிடைக்கக்கூடும். அதுவே அவன் இடம்
உணர்வுரீதியாக சமூகத்தில் ஒருவனாக ஆகிநின்றிருக்கும் வரைத்தான் எழுத்தாளன் எழுதமுடியும். நம் அரசு நிறுவன ஊழியர்கள், குறிப்பாக எதையும் கற்காமல் மாறாநிலையில் இருக்கும் நடுவயதான பெண் ஊழியர்கள் மற்றும் குடிகாரர்கள் குறித்த என் எண்ணங்களில் கசப்பில் எந்த மாற்றமும் இல்லை
ஜெ,
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
இன்னமும் புரியவில்லை. மன்னிப்பெதற்கு? யாரிடம் கேட்கிறீர்கள்? தான் செய்யும் தொழிலில் எவ்வித ஈடுபாடுமற்று காணப்படும் அந்த வாங்கி ஊழியரிடமா? பாரதி சொன்னதுபோல் ‘தேடி சோறு நிதம் திண்ணும்’ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த சமூகத்திடமா? ஔவை சொன்ன நல்லோர் ஒருவரிடமா? அல்லது உங்களிடமேவா?
உங்களிடமே என்றால் நான் ஒப்புக்கொள்வேன். நீங்கள் எழுதிய வார்த்தைகள் ஏதோ ஒருவகையில் உங்களின் மனதை உறுத்தும்பட்சத்தில் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்.
வேறு யாரிடமாவதென்றால் நிச்சயம் தேவையில்லை.
உங்களிடமெழும் இந்தக் கோபம், நீங்கள் எழுதிய அறத்தின் வெளிப்பாடேயன்றி வேறென்ன? கெத்தேல் சாகிப்பையும் யானை டாக்டரையும் வணங்கானையும் எங்கள் கண் முன்னே காட்டிவிட்டு இந்தக் கோபம் கூட வரவில்லை என்றால் தான் பிழை!
ஒருவேளை எஸ் ரா அவர்கள் சுகா அவர்களிடம் சொன்னது உண்மை தான் போலும்!
என்றும் அன்புடன்,
லெனின்
கள்ளக்குறிச்சி
அன்புள்ள லெனின்
ஒரு விஷயத்தை கோபமாக அல்லது எரிச்சலாகச் சொல்லும்போது அந்த நோக்கம் அடிபட்டுப்போகிறது. ஆகவே சிலசமயம் எல்லைமீறிய கோபத்துக்காக மன்னிப்பு கோரவேண்டியதுதான்
அதிலும் பி.ஏ.கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியபின் அதில் மாற்று எண்ணமே இல்லை. ஒருவேளை என் தரப்பே சரி அவர் தவறாகச் சொல்கிறார் என்றாலும்கூட. அவருக்கு நான் அளிக்கும் இடம் அது
ஜெ
எனினும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், அந்த உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்களையும், அப்பணியாளரின் உண்மை நிலையையும் அறிந்தபோது, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது…
உங்கள் கருத்தை எதிர்த்து கருத்திட்டிருந்தவர்களில் பலர் உங்கள் நண்பர்களே, உங்கள் வாசகர்களே என்பதைக் கண்டபோது, உங்கள் வாசகர் வட்டத்தின் சுய விமர்சனத் தன்மை வியப்பையளித்தது.
“ஒரு மன்னிப்பு” என்று தலைப்பு, உங்கள் மீதான மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தி விட்டது… அப்பதிவைப் படிக்கத் துணிவில்லையாயினும், உங்கள் இதயம் அடைந்த வருத்தத்தை தலைப்பிலேயே உணர முடிந்தது.
மன்னிப்பு என்பது மிகப்பெரிய சொல். கிராதம் உங்களை வேறு நிலைகளுக்கு இட்டுச் செல்லட்டும். செல்லும். நன்றி.
செ.அருட்செல்வப்பேரரசன்